அலை-94
அலை-94
“குற்றாலம்”
சும்மா குளுகுளுன்னு இருக்குதான்னு கேட்பதற்குக் ‘குத்தால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா’ ன்னு உவமானத்தோட கேக்குறது எங்க ஊர் வழக்கம். “கோடை வந்தால் ஊட்டிக்குப் போவேன் பைத்தியம் பிடித்தால் குற்றாலம் வருவேன்”னு பாடுறது கேலிக்குரிய விஷயம் இல்லை. பொதிகை மலையில் பொங்கி வழியும் குற்றால அருவிகளுக்கு அவ்வளவு மகத்துவம் இருக்கிறது. மூலிகைத்தன்மை வாய்ந்த நீருக்கு நிறைய வியாதிகளைக் குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக ஐதீகம். குற்றால சாரலில் நனையாத தென்மாவட்டவாசிகளே இருக்கமாட்டார்கள்.
பயணம் மேற்கொண்ட எத்தனையோ ஊர்களில் பல்வேறு அருவிகளைப் பார்த்திருந்தாலும் எவையுமே குற்றாலத்துக்கு ஈடுகிடையாது. பதினைஞ்சு கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளேயே எட்டுக்கும் மேற்பட்ட அருவிகள் விதவிதமான அழகுகளுடன் அமைந்திருப்பது பேரானந்தம். தென்மேற்குப் பருவமழை கோடை விடுமுறையின் கடைசி நாட்களில் ஆரம்பிக்கும்போது குற்றால சாரலும் ஆரம்பித்துவிடும். ஜூன் மாசம் வந்தாலே திருநெல்வேலிவரைக்கும் அந்த சாரலின் தாக்கம் இருக்கும். சாரல் ஆரம்பிச்சதுமே குற்றாலத்துக்கு டூர் போக ஆட்கள் ரெடியாகிவிடுவாங்க.
60’s KIDS (நாங்கதான்) காலத்திலெல்லாம் கார், பைக் எதுவும் கிடையாது. பேருந்துதான் எங்களின் முதன்மை வாகனம். கொஞ்சம் கூட்டமா சேர்ந்திட்டா பணம் கலெக்ட் பண்ணி வேன் எடுத்துக்குவோம். அதிகாலையிலேயே பஸ் பிடித்து குற்றாலம் போயிட்டால் நடந்து போகும் தூரத்தில்தான் மெயின் பால்ஸ் (பேரருவி) இருக்கும். ஆசை தீரக்குளிச்சுட்டு அங்கிருந்து மற்ற அருவிகளுக்குப் போக டவுண் பஸ் கிடைக்கும். அல்லது தனியார் வேன் , டிரக்கர் என சொல்லப்படும் ஜீப் எல்லாம் வாடகைக்குக் கிடைக்கும். அந்த காலத்தில் ஆட்டோரிக்க்ஷா இருந்துச்சான்னு ஞாபகமில்லை. டிரக்கர்தான் பேமஸ். ஆனால் நேர விரையமில்லாமல் எந்த நேரத்திலும் சவாரி போகலாம்.
பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழத்தோட்ட அருவி, ஷெண்பகாதேவி அருவி, தேனருவி, பழைய குற்றாலம் என ஏகப்பட்ட அருவிகள் இருந்தாலும் மெயின் அருவியும் ஐந்தருவியும்தான் எப்போதும் எங்களோட இலக்கு. ரெண்டுமே ஈஸியா போகும் தூரத்தில் இருக்கும், தண்ணீரும் ஆர்ப்பரித்துக் கொட்டும். மெயின் அருவி எப்பவும் கூட்டமாகத்தான் இருக்கும். சுற்றுலா வருபவர்களுக்கு மிகவும் இலகுவாக செல்லக் கூடிய இடம் என்பதால் தண்ணீர் கொட்டும் போதெல்லாம் தள்ளு முள்ளுதான். சீசன் நேரத்தில் பேரருவி கொட்டும் அழகை நின்று ரசித்துக் கொண்டே இருக்கலாம். தண்ணீர் கம்பியைத் தாண்டி விழுகுதாம் என்று சொன்னால் சூப்பர் சீசன் என்று அர்த்தம்.
மெயின் அருவியில் கீழே தண்ணீர் விழும் முன்பு ‘பொங்குமாங் கடல்’ என சொல்லப்படும் 20 அடி ஆழமுள்ள குழியில் கொட்டி அதன்பிறகுதான் கீழே ஆர்ப்பரித்து விழும். இரண்டு நிலையில் விழும்போதுகூட அதன் வேகமும் வலிமையும் கட்டுக்கடங்காது. ஒவ்வொரு துளியும் பாறாங்கல்லில் மோதுவதுபோல்தான் இருக்கும். சில நேரங்களில் சிறு பாறைகளும் உருண்டோடி வந்து மண்டை உடையும் அபாயமும் இருக்கும். ஆபத்து இல்லாத அழகே இல்லைபோலும். அருகிலேயே குற்றாலநாதர் கோவிலும் எண்ணெய்க் குளியலுக்கான இடங்களும் இருப்பதால் அந்த இடமே எப்போதும் திருவிழாக் கோலத்தில்தான் இருக்கும். கூட்டம் பிடிக்காதவர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்கி இரவு நேரங்களில் ஆனந்தக் குளியல் போடுவார்கள். பளீரென்ற மின் விளக்குகளும் பாதுகாவலாக போலீஸும் இருப்பதால் பயமின்றி குளிக்கலாம்.
ஐந்தருவி சென்றால் இன்னும்கூட வசதியாகக் குளிக்கலாம் . ஐந்து பாகங்களாகப் பிரிந்து கொட்டும் அருவி குறைந்த உயரத்திலிருந்து விழுவதால் சுகமாகவும் குளிக்கலாம். ஆண்களின் இடையூறு இல்லாமலிருக்கக் குறுக்கே கம்பி போட்டு வைத்திருப்பார்கள். குளிப்பவர்களின் பொருட்களைப் பார்த்துக் கொள்பவர்கள் அமர்ந்து கொள்ள ஏதுவாக திண்டுகளும் இருப்பதால் பெண்களுக்கு ஏற்ற குளியல் இடம் ஐந்தருவிதான். அதுக்கு பக்கத்தில்தான் பழத்தோட்ட அருவியும் இருக்கும். ஆனால் அது சின்னதாகவும் அனுமதி வாங்கிக் குளிக்க வேண்டியதாகவும் இருப்பதால் அங்கே போறதே இல்லை.
அங்கிருந்து கிளம்பினால் நேரே பழைய குற்றாலம்தான், டிரக்கர்தான் ஈஸியா கூட்டிட்டுப் போயிடுமே. போற வழியிலே புலி அருவி இருக்குது. ஆனால் அதுவும் சின்ன அருவிதான். குழந்தைகளைக் கூட்டிட்டுப் போனால் செளகரியமாகக் குளிக்கலாம். தரையெல்லாம் மேடு பள்ளமின்றி கட்டிவிடப்பட்டிருக்கும். புலி தண்ணீர் குடிக்க வருவதால்தான் புலி அருவி எனப் பெயர் வந்ததாகச் சொல்லுவாங்க. ஆனால் புலியைப் பார்த்ததாக இதுவரை கேள்விப்பட்டதில்லை. அதிகாலையிலேயே வந்துட்டு போயிருக்குமோ என்னவோ தெரியாது. பழைய குற்றாலத்தில் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது நிறைய சுற்றுலா வாசிகள் அங்கு போவதில்லை. அதனால் ரொம்ப நேரம் குளிக்கலாம். ஆண் பெண் குளிக்க தனி இடங்கள், சமதரை, தண்ணீர் விழுந்து செல்லும் இடத்தில் சின்ன நீச்சல் தொட்டி போன்ற அமைப்பு எல்லாம் இருப்பதால் வாடிக்கையாக வருபவர்கள் பழைய குற்றால அருவியைத்தான் விரும்புவார்கள்.
இதெல்லாம் பொதுவாகக் குற்றாலத்துக்கு செல்லும் வழிமுறைகள். சாகசப் பிரியர்களுக்கு என்றும் இடங்கள் இருக்கின்றன. மெயின் அருவியிலிருந்து ட்ரெக்கிங் பண்ணி மேலே போக வழித்தடங்கள் உண்டு. ஆரம்ப கட்டத்தில் சிறிதாக சிற்றருவி வரும். மெயின் அருவியின் கசகசப்பிலிருந்து தப்பித்து இங்கு வந்து படுத்துக் கொண்டே குளிப்பவர்களும் உண்டு. இடையில் சிறு பாதை பிரிந்து பொங்குமாங் கடல் உள்ள இடத்துக்குப் போகும். அதைத் தாண்டி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மலை ஏறினால் தெரிவது ஷெண்பகாதேவி அருவி கொட்டும் அற்புதமான காட்சி. அருவி கொட்டும் இடத்தில் சின்ன நீச்சல் குளம் போல் உருவாகி இருக்கும். சாகசப் பிரியர்கள் பாறை முகட்டிலிருந்து டைவ் பண்ணி அந்தக் குளத்தில் குதிப்பார்கள். கொஞ்சம் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் அந்த நீச்சல் குளத்தில் பயமின்றி குளிக்கலாம்.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வகுப்பு கூடுகைக்காகக் குற்றாலம் போனபோது நாங்க கொஞ்சபேர் மட்டும் ஷெண்பகாதேவிக்கு ட்ரெக்கிங் போனோம். அப்போவே மேலே ஏறிச் செல்ல அநுமதி வாங்க வேண்டியிருந்தது. தில்லைதான் அதெல்லாம் வாங்கி எங்களுக்கு லீடராக வந்தார். ஆண்களெல்லாம் பாறையில் ஏறி குதித்துக் கொண்டும் பெண்களெல்லாம் குளத்தில் ஊறிக்கொண்டும் இருந்தோம். திடீர்னு எழில் கிட்டே நானும் டைவ் பண்ணவான்னு கேட்க அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. என்ன ஏதுன்னு யோசிக்காமல் நானும் அவங்ககூடப் போய் டைவ் பண்ணிட்டேன். நீச்சல் தெரியும் என்ற தைரியம், டேனியும் எழிலும் பக்கத்தில் இருந்ததால் தைரியமா குதிச்சுட்டேன். அதை அப்புறமா வீடியோவில் பார்த்த பிறகுதான் பயமே வந்துச்சு. த்ரில்லிங் அநுபவம்தான்.
அதற்கும் மேலே ட்ரெக் பண்ணலாம், ஒத்தையடி பாதை உண்டு. செங்குத்தாக ஏறிப்போனால் தேனருவி வரும். சாதாரணமா யாரும் அங்கே போக மாட்டாங்க. நான் பி.யூ.சி. படிச்சப்போ நயினார் அண்ணன் எங்களை அங்கு கூட்டிட்டு போனான். குரும்பூர் சித்தி பிள்ளைங்க செல்லமக்கா, ராஜமக்கா, சுப்பையா அண்ணன்,முருகன் அண்ணன் என்று கூட்டமாகப் போனோம். பறவைகளின் சத்தமும் அருவிச் சத்தமும் மட்டுமே கேட்கும் அமாநுஷ்யமான அமைதியான இடம். ஆனால் சுற்றித் தெரிந்த காட்சிகள் கொள்ளை அழகு. இப்போல்லாம் அங்கே முடியாதாம், தடை போட்டிருக்காங்கன்னு கேள்வி.
மருத்துவ கல்லூரியிலிருந்து மாணவர்கள் அப்பப்போ கூட்டமா சைக்கிளில் குற்றாலம் போவாங்க. அவங்க எஞ்சாய் பண்றதே தனிதான்.
எல்லா இடமும் சுத்திட்டு வந்தாலும் கடைசியா போக வேண்டியது பார்டர் பரோட்டா கடைதான். நாங்க படிக்கிறப்போ எல்லாம் அது இருந்துச்சான்னு தெரியாது. ஆனால் இப்போ குற்றாலம் போனால் கண்டிப்பாக அந்தக் கடையில் சாப்பிடாமல் வரமுடியாது. கீத்துக் கொட்டகைதான் என்றாலும் சுவையில் தனித்துவம். வெளிநாடெல்லாம் போய் நயாகரா பார்த்து “AWESOME” ன்னு சொல்றவங்களெல்லாம் ஒரு தடவையாவது சீசனில் குற்றாலத்துக்குப் போய் எண்ணெய் மசாஜ் பண்ணிட்டு அருவியில் குளிச்சுட்டு பார்டர் பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு வாங்க. ரெண்டுதரம் awesome சொல்லுவீங்க. குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதுன்னு உவமையோட பாட ஆரம்பிச்சுடுவீங்க.
0 Comments:
Post a Comment
<< Home