Thursday, July 13, 2023

அலை-89

 அலை-89

“தேர்வுகள் பலவிதம்”

மருத்துவக் கல்லூரித் தேர்வு முறைகளே அலாதியானவை. ஆனால் எல்லாமே நியாயமானவையா என்று அறுதியிட்டுக் கூற முடியாது. மருத்துவக் கல்லூரியில் நுழையும் தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவருமே சராசரி மாணவரைவிட நன்கு தேறியவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனாலும் எங்கள் கல்லூரியில் ஐந்தரை ஆண்டுகால படிப்பைப் பத்து வருடங்களுக்குமேல் படித்தவர்கள் உண்டு. அவர்களின் நீடித்த மாணவப் பருவத்திற்கு அன்றைய தேர்வு முறைகளே காரணம். 


வகுப்பறைக்கு ஒழுங்காக வந்ததாலோ பாடத்திட்டத்தைத் திறம்படக் கற்றுக் கொள்வதாலோ தேர்ச்சி அடைந்துவிட முடியாது. 

தேர்வுத் தாள்கள் அனைத்தும் எங்கள் பேராசிரியர்களே திருத்தும் நிலைமைதான் அந்தக்காலத்தில். அதனால் பேராசிரியர்கள் முடிசூடா மன்னர்களாகவே  வலம் வந்த நாட்கள்.  அந்த மாண்புக்கு ஏற்ப மாணவர்களின் ஆதர்ச உதாரணங்களாகவும் வழிகாட்டிகளாகவும் நிறைய ஆசிரியப் பெருந்தகைகள் இருந்தாலும் சில கொடுங்கோல் மன்னர்களும் உண்டு. ”இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்” என்பதுபோல் துறைத் தலைவரிடம் உரசிக் கொள்ளும் மாணவர்கள்  Chronic additionals என்ற அவப்பெயருடன் அதிக நாட்கள் கல்லூரியைச் சுற்றித் திரிய வேண்டியிருக்கும். 


ஒவ்வொரு பரீட்சைக்கு முன்பும் விடுதிக்கு ஒரு பட்டியல் வரும்.  அதில் HIT LIST இல் இருப்பவர்கள் அநேகமாக அந்த வகுப்புப் பேராசியரிடம் ஏதாவது ஒரு வகையில் சேட்டை செய்திருப்பார்கள் என்று அர்த்தம். இரண்டாவது வருஷத்தில் இருந்தே என் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. என்ன சேஷ்டை பண்ணினேன் என்றே எனக்குத் தெரியவில்லை. தெரிந்தபோது அழுவதா சிரிப்பதா என்றும் தெரியவில்லை.


விடுதிக் காவலாளியின் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு கல்லூரியைச் சுற்றி வருவது எங்களுக்கு விடுமுறை நாட்களின் பொழுதுபோக்கு. அந்தமாதிரி சென்ற நாளில் எதிரில் வந்த பேராசிரியருக்கு வணக்கம் சொல்லாமலும் , வண்டியை விட்டு இறங்காமல் கடந்து சென்றுவிட்டதால் கோபத்தில் இருந்ததாகக் கேள்வி. கையைத் தூக்கி வணக்கம் வைச்சா நிலை தடுமாறி விழுந்திருப்போம். அவர்தான் தூக்கி விடுறமாதிரி இருந்திருக்கும். கீழே இறங்கிவிட்டால் மறுபடி வண்டியில் ஏறத் தெரியாது. அதனாலே மிதி மிதின்னு மிதிச்சு ஓடிட்டோம் .அந்த வருடம் எங்களைக் கண்டிப்பாக பெயில் செய்துவிடுவார் என்று வதந்தி.  எதுக்கு வம்புன்னு கடந்து போயிட்டதுக்கு இவ்ளோ கடுமையான தண்டனையா என்று புலம்பிக் கொண்டே மஹா சீரியசாக படித்தோம். 


அந்த வருஷம் வந்த வினாத்தாளில் மிக அற்பமான ஒரு பகுதியிலிருந்து வந்த சுமாரான கேள்வி என்னைக் காப்பாற்றிவிட்டது. தோழி சூரியகாந்திக்குத் தான் படித்ததை யாருக்காவது சொல்லிக் கொடுப்பதில் அலாதிப் பிரியம். நிறைய பாடங்களை நான் புத்தகத்தில் படிக்காமல் கேள்வி ஞானமாகவே அவளிடம் கற்றிருக்கிறேன். வில்வாத ஜன்னி போன்ற ஒரு நிகழ்வு நரம்பு மண்டல பாதிப்பால் ஏற்படுவதை நாய் ஒன்றின் படம் மூலம் அழகாக விளக்கியிருந்தாள். எனக்கு மனதில் சினிமா படம் போல் பதிந்துவிட்டது. அது புத்தகத்தில் கடைசி ஒரு வரியாக மட்டுமே இருந்த பாடம். அந்தக் கேள்வி வந்தபோது அட்டகாசமாக படமெல்லாம் போட்டு நன்றாக எழுதியதால் என் தலை தப்பியது, பாஸாகிவிட்டேன்.


ஆனால் அந்த வருஷ பேராசிரியருக்கு எங்கள் வகுப்பின்மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை. Ultra Filtration என்று பாதிக்கு பாதியாக பெயிலாக்கிவிட்டார். ரொம்ப ரொம்ப நல்லாப் படிக்கிற பிள்ளைகள் எல்லாம்கூடப் பெயிலாகி வகுப்பே கலகலத்துப் போய்விட்டது. எழுபத்தைந்துபேர் கொண்ட வகுப்பில் முப்பத்து ஐந்துபேர் மட்டுமே ரெகுலர் வகுப்பில் சென்றோம். இதைத் தேர்வுமுறைக் கோளாறு என்றுதானே சொல்ல வேண்டும். பாஸ் ஆனவர்களை எல்லாம் பாவிகளைப் போல் பார்த்து முறைத்துக் கொண்டே சென்றவர்களும் உண்டு.


மூன்றாவது வருடம் வந்தபோது காசிப்பாண்டி என்ற நண்பருக்கும் எனக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையில் முடிந்து, அதற்குத் துணைக்கு வந்த தோழிகளைப் பற்றித் தரக்குறைவாக சுவர்களில் எழுதி பெரிய விசாரணைக் கமிஷனே நடந்தது. சண்டையின் மூல காரணத்தை விசாரிக்காமல் ஒவ்வொருவரின் அந்தரங்கங்களை அலசுவதற்கு அதை பயன்படுத்திக் கொண்ட பெரிய தலைகளும் உண்டு.விசாரணையின் மூல காரணம் நானே என்பதால் அந்த வருடமும் பெயில் ஆயிடுவேன்னு HIT-LIST இல் சேர்த்திட்டாங்க. ஆனால் அந்த வருடப் பேராசிரியர்கள் மிகவும் பெருந்தன்மையானவர்களாக இருந்ததால் படிப்புக்கு ஏற்ப மார்க் வாங்கி பாஸ் ஆயிட்டேன். நாலாவது வருடம் எந்த தொந்தரவும் இல்லாமல் படித்துக் கொண்டிருந்தபோது முழுப் பரீட்சைக்குப் பத்து நாட்களே இருந்த நிலையில் அப்பா தவறிவிட்டார்கள். மிகப் பெரிய சோகம். கண்டிப்பாகப் பரீட்சை எழுத முடியாது பெயில்தான் என்று நினைத்திருந்தபோது ஒரு ஸ்டிரைக் வந்து பரீட்சையே தள்ளிப் போய்விட்டது. 


ஐந்தாவது வருடம்தான் எல்லாருக்குமே ஒரு கண்டம் மாதிரி. எனக்கு அதிலும் ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. எல்லா வருஷமும் மூணாவது யூனிட்டில் இருந்த நான் கடைசி வருடம் மட்டும் இரண்டாவது யூனிட் வந்துவிட்டேன். அதன் துறைத் தலைவர் மாணாக்கர்களுக்கு நன்கு உதவி செய்யும் இயல்புடையவர் என்பதால் இலகுவாக பாஸ் ஆகிவிட்டேன். இன்னொரு உள்துறைப் பேராசிரியரே என்னை பெயில் பண்ணும் நோக்குடன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது “நீ தியரியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாய் ,இப்போது கேட்கப்படும் கேள்விகள் மேலும் அதிக மதிப்பெண்கள் தருவதற்காகவே”என்று ஒரே போடாகப் போட்டு பொதுமருத்துவத்தில் இலகுவாகத் தேறவைத்துவிட்டார்.


எழுத்துத் தேர்வுகளைவிட orals என்று சொல்லப்படும் நேர்முகத் தேர்வுதான் எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். மேஜையில் பரப்பி வைத்திருக்கும் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்களில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்லிக் கேள்விகளைக் கேட்க ஆரம்பிப்பார்கள். அது சுற்றி சுழண்டு எங்கே வரை போகும்னு யாருக்கும் தெரியாது. OMIT பண்ணியும் படிக்க முடியாது ஒண்ணும் தெரியாதுன்னும் சொல்ல முடியாது. அவ்வளவு தெளிவாகப் படிக்க வேண்டும், அப்போதான் முழுமை பெற்ற மருத்துவராக முடியும். துறைத் தலைவர் உள் பரிசோதகராக இருப்பார். வேண்டாத மாணவருக்குக் கேட்கப்படும் கேள்விகளே வில்லங்கமாகத்தான் இருக்கும். பெயில் உறுதிதான்னு அப்போவே தெரிந்துவிடும்.


சமீபத்தில் நஸ்ரியா மருத்துவ மாணவியாக நடித்த படம் பார்த்தேன். முன்னால் இருக்கும் பொருட்களில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்லும்போது ரொம்ப வெகுளித்தனமாக GOOD DAY BISCUIT எடுக்கும் காட்சி அவ்ளோ காமெடியாக இருக்கும். எங்கள் சக மாணவர்கள் அதையெல்லாம் விட காமெடியாக நடந்து கொண்ட நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. கடுப்பேத்துறார் மை லார்ட் என்று சொல்லும் பேராசிரியர்களையே படுத்திவைத்த பெரிய தலைகளெல்லாம் உண்டு.


நேர்முகத்தேர்வில் சின்ன கேஸ் ஒன்றும் பெரிய கேஸ் ஒன்றும் உண்டு. ஒன்று முடிந்ததும் காத்திருந்து அடுத்த கேஸ் பற்றி விளக்கணும்.ஆனால் ஒரு கேஸ் முடிந்ததும் பரீட்சையே முடிந்துவிட்டதாக எண்ணி வீட்டுக்கு சென்று தூங்கிவிட்ட நண்பரை அட்டெண்டரை அனுப்பி மறுபடி அழைத்து வந்து அடுத்த கேஸ் முடிக்க வைத்து பாஸ் வழங்கிய நல்ல உள்ளங்களும் உண்டு. பெண் பிள்ளைகள் லேசாக அழுது செண்டிமெண்டலாக தேர்வாளர்களை நெகிழ்வுறச் செய்து பாஸ் வாங்கி விடுவதாக ஆண்கள் கூட்டம் எப்போதுமே பொரணி பேசுவார்கள். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது, என்னை மாதிரி ஆட்களுக்கு கண்ணீரே வராது. கண்ணீர் சுரப்பி பெயிலானாலும் எப்படியோ கஷ்டப்பட்டு பாஸ் பண்ணி  பயிற்சி மருத்துவராக பணி ஏற்றபோது அதுவரை பட்ட பாடுகளெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிட்ட்து.


தீர்ப்புகள் மட்டும் திருத்தப் படுவதில்லை, தேர்வுகளும் திருத்தப்பட்டுள்ளது. பொதுவான திருத்துதல் முறை , ஆன்லைன் தேர்வுகள் என மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு Chronic Additionals என்ற பதம் வழக்கொழிந்துவிட்டது.

0 Comments:

Post a Comment

<< Home