Friday, December 16, 2022

அலை-78

 அலை-78

 “அப்பாவின் நினைவுகள்”

பெற்றோர்களை நினைக்க சிறப்பு தினம் தேவையில்லை. தினம் தினம் நம்மைக் கடந்து செல்லும் அவர்களின் நினைவு. ஆனாலும் அப்பாவின் நினைவு நாளான இன்று அப்பாவின் உருவம் மனதில் நிழலாடிக் கொண்டே இருக்கிறது. எப்பவுமே வெள்ளை நிற ஆடைதான். நான்கு முழ வேட்டியும் ஜிப்பா ஸ்டைலில் அரைக் கை சட்டையும்தான் நிரந்தர ஆடை. கைலி கட்டியோ கலர் சட்டை போட்டோ பார்த்ததில்லை. 


உயரமான மெலிந்த தேகமும் சீரான நடையும் வெள்ளை உடையும் எந்தக் கூட்டத்திலும் அப்பாவைத் தனியாகக் காட்டும். புறங்கை கட்டிக்கொண்டு நடப்பதும் தனித் தன்மைதான். நெற்றியில் மகுடம் வைத்தது போன்று எலும்பு புடைத்து இருப்பது அந்தக் கால கம்யூனிஸ்ட்டுக்குத் திலகம் வைத்தது போல் இருக்கும். அதிர்ந்து பேசியதில்லை, எங்களை அடித்தும் வளர்க்கவில்லை. ஆனாலும் அப்பா என்றால் மரியாதை கலந்த பயம் இருந்தது. அப்பாவின் அமைதியான தீர்க்கமான நடவடிக்கைகள் நம்மைப் புடம் போடுவதாக இருக்குமே தவிர நம்மைத் தர்ம சங்கடப் படுத்துவதாக இருக்காது. 


ஒரு நாள் நானும் எழிலும் சீத்தாலக்ஷ்மி ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கும் போது எதேச்சையாக நோயாளி ஒருவரைப் பார்க்க வந்த அப்பாவும் அதே இடத்துக்குக் காஃபி குடிக்க வந்தார்கள். எங்கள் இருவரையும் பார்த்தும் எந்தவித சலனமும் இல்லாமல் காஃபி அருந்திவிட்டு சென்றுவிட்டார்கள். அதன்பிறகு விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றபோதுகூட அது குறித்து எதுவுமே கேட்கவில்லை. நானாகச் சோல்ல வேண்டிய தருணம் வந்தபோது அப்பா மறைந்துவிட்டார்கள்.


நான்காவது வருட பரீட்சைக்கு சரியாக ஒருவாரம் இருக்கும் போது திடீரென வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. அப்பாவிற்கு உடம்பு சீரியஸாக இருப்பதால் உடனடியாகக் கிளம்பி வருமாறு சொன்னார்கள். அந்த சமயத்தில் எழில் நண்பர் எபிநேசர் விடுதிக்கு ஏதோ வேலையாக வந்திருந்தார்கள். ஊருக்குச் செல்ல கையில் பணம்கூட இல்லை. எபிதான் நண்பர் ஒருவரிடமிருந்து பணம் ஏற்பாடு செய்து தந்தார். என்னை பஸ் ஏற்றிவிட ஹைகிரவுண்டு பேருந்து நிறுத்தம் வரை துணையாக வந்தார். 

அப்பாவிற்கு ஒன்றும் சீரியஸாக இருக்காது, தேவைப்பட்டால் இங்கேயே கூட்டி வந்துவிடு என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். நான் ஒரே வரியில் விளக்கம் சொன்னேன். எங்கள் வீட்டில் யாருக்கு சீரியஸ் என்றாலும் தகவல் சொல்ல மாட்டார்கள். அப்பாவிற்கு ஏதோ ஆகிவிட்டதால்தான் எனக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள் என சொல்லும்போதே பெரிதாக அழ ஆரம்பித்துவிட்டேன்.


எனக்கு அவ்வளவு சீக்கிரம் கண்ணீரே வராது. சினிமாவில் வரும் சில நெகிழ்ச்சியான காட்சிகளில் கண்ணீர் வரும்போதுகூட மற்றவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகத் துடைத்துக் கொள்வேன். பிறர் முன்னாடி அழுவது பிடிக்கவே பிடிக்காது. நான் அழுவதைப் பார்த்ததும் நிலைமையைப் புரிந்துகொண்ட எபி தானும் என்கூட வருவதாகச் சொல்லி பணம் எடுக்க C-17 அறைக்குச் சென்றார்கள். ஆனால் அதுவரை தாமதிக்க முடியாததால் அடுத்து வந்த பேருந்தில் ஏறி தனியாகவே கிளம்பிவிட்டேன். 


வாழ்க்கையில் மறக்க முடியாத சில தருணங்களில் ஒன்றான அப்பாவின் மரணம். பேருந்தில் ஏறிய பிறகும்  என்னைக் கதறி அழவைத்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பாவைப் படுக்க வைத்திருந்த கோலம் ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் அழியாக் காட்சி. நயினார் அண்ணன் வருவதற்காகக் காத்திருந்தார்கள். அண்ணன் கொஞ்சம் தொலைவான ஊரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்து பயணம் செய்து வர அதிக நேரமாகிவிட்டது. 


ஒவ்வொருவராக அழுது அழுது மயக்கமாவதும், அவர்களைத் தெளிய வைப்பதுமாக அலங்கோலப் பட்டுக் கிடந்தது வீடு. நயினார் அண்ணன் வந்ததும் வாசல் நிலைக்காலைப் பிடித்துக் கொண்டு அப்பாவின் முகத்தைப் பார்த்து தாரை தாரையாகக் கண்ணீர் விட்டான். 


அப்பாவின் மரணம் எதிர் பாராத ஒன்று. எப்போதும் போல் காலைகடன்களுக்காக பனங்காடு போய்விட்டு வீட்டில் வந்து கால் கை அலம்பிவிட்டு வீட்டுக்குள் வரும்போது சட்டென்று கீழே விழுந்து அடுத்த நிமிடம் உயிர் பிரிந்துவிட்டதாம். மருத்துவம் படித்த பிறகு திடீர் மரணத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் தெரிந்து கொண்டாலும் அன்று அப்பாவின் மரணம் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பாகிவிட்டது.


இறந்தவீட்டுக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் நான் காட்சிப் பொருளாகிப் போனேன். இந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்காமல் போய்விட்டாரே என்று அங்கலாய்த்துக் கொண்ட கூட்டமும் இருந்தது. பேரப்பிள்ளைகள் நெய்ப்பந்தம் பிடிக்க  விமரிசையாக இறுதி ஊர்வலம் சென்ற பிறகுதான் சுற்றி இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. வகுப்புத் தோழர்களும் எழில் மற்றும் நண்பர்களும் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். அப்பாவின் நண்பர்களும் நலம் விரும்பிகளும் உறவினர்களும் கூடியிருந்ததில் சந்தைகடை வளாகமே நிரம்பி வழிந்தது. 


அப்பாவின் திடீர் மரணத்தால் விட்ட குறை தொட்ட குறையாக செய்ய முடியாத விஷயங்கள் அநேகம் உண்டு. வீட்டிலேயே ஒரு டிஸ்பென்சரி மாதிரி வைக்க வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லியிருந்தார்களாம். அதை நிறைவேற்ற முடியவில்லை. எழில் பற்றி சொல்லி அப்பாவின் ஒப்புதல் பெற முடியாமல் போய்விட்டது. அப்பாவுக்கு சரியான மருத்துவம் பார்க்க முடியாததும் மனக்குறையாகவே இருக்கிறது. 


அப்பாவுக்கு முழங்காலில் படை போன்ற தோல்வியாதி இருந்தது. அப்பப்போ அதிகமாகி நீர்போல் வடியும். காய்ந்த பிறகு அந்த இடம் வெண் தேமல் மாதிரி மாறிவிடும். நான் மூன்றாம் வருடம் சென்ற பிறகு தோல் மருத்துவ பிரிவில் ஆலோசனை பெற்று வெண்தேமல் மறையும் களிம்புகள் வாங்கிக் கொடுத்தேன் . ஆனால் முறைப்படி வைத்தியம் செய்யும் முன் காலம் கடந்துவிட்டது. 


அப்பாவின் முத்திரைகள் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ தருணங்களில் இன்றளவும் உதவிக் கொண்டிருக்கிறது. தலைமைப் பண்பு, போராட்ட குணம், உதவி செய்யும் பாங்கு எல்லாமே அப்பாவிடமிருந்து வந்தவைகள்தான். அவையத்து முந்தியிருக்கச் செய்த அப்பாவின் ஆளுமையை அடுத்த தலைமுறைக்கு ஏந்திச் செல்லும் கருவிகள் நாங்கள். 


ஐநூற்று முத்துப் பிள்ளையை அறியாத ஆறுமுகநேரிக்காரர்கள் அன்று இல்லை. அந்த ஆலமரத்தின் விழுதுகள் உலகம் முழுவதும் இன்று.

முத்துக்கள் குடும்பத்தின் முதல்முத்து

அனைத்து வாரிசுகளுக்கும் அடித்தளமாய் ஞானமாய் விளங்கும்

அப்பாவின் நினைவுகள் நம்மை வழிநடத்தும்

0 Comments:

Post a Comment

<< Home