Tuesday, December 13, 2022

அலை-72

 அலை-72

லப்டப் எகிற வைக்கும் “லடாக்”
இந்தியாவின் கொண்டை உச்சியில் இருக்கும் யூனியன் பிரதேசமான லடாக், கார்கில் யுத்தத்திற்குப் பிறகு அடிக்கடி பேசப்படும் இடமாகிவிட்டது. மே மாதம் முதல் ஜூலை வரைதான் சுற்றுலாவுக்கு ஏற்ற மாதங்கள் . மற்ற நேரங்களில் உறைபனி காரணமாக ரோடுகளும் விடுதிகளும் மூடப்பட்டுவிடும். விநோதமான தட்ப வெப்பமும் விவகாரமான அரசியல் சூழல்களும் சுற்றுலா பயணிகளை எட்டத் தள்ளினாலும் எங்களைப் போன்ற கும்பல்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். சீசன் காலத்தில் தினசரி வருகையாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துகொண்டு இருப்பதாக லே ஏர்போர்ட் மானேஜர் (புனிதாவின் சக ஊழிய நண்பர்) கூறினார்.
எங்கள் பயணத்திட்டப்படி 6 இரவுகள்/ 7 நாட்கள், திங்கள் முதல் ஞாயிறுவரை என ஏற்பாடு. திங்கள் முழுவதும் அறையில் தங்கி உடலையும் மனதையும் அதிக உயரத்தை எதிர்கொள்ளத் தயார் பண்ணிக்கொண்டோம். வெளியே போகவே கூடாது என ரூல் போட்டாச்சு. ஆனால் எழிலும் பட்
அண்ணாவும் எங்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சுற்றப்போனதை சிலர் வீடியோ எடுத்து வைத்திருக்காறார்கள்.
இரண்டு நாட்கள் ‘லே’ ஊரைச் சுற்றிப்பார்ப்பது, ஒருநாள் நூப்ரா பள்ளத்தாக்கு, ஒருநாள் பாங்காங் ஏரி, கடைசி நாள் முழுவதும் பயணம் என வகுத்து வைத்திருந்தோம். முதல்நாள் மூன்று கார்களில் செல்லலாம் என்றிருந்த போது ஒரு ஓட்டுநர் மட்டும் ஒழுங்கீனமாக தாமதமாக வந்து சேர்ந்தார். அதனால் எல்லா இடங்களையும் பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் வந்துவிட்டது.
முதல் இடமாக “சங்கமம்” என்ற இடத்திற்குச் சென்றோம். லடாக் முழுவதுமே சிந்து நதி தவழ்ந்து செல்கிறது . லடாக்கிலிருந்து 35 கி.மீ. தொலைவில் சிந்து நதியின் முதல் துணை நதியான ஜன்ஸ்கார் நதியுடன் கலக்குமிடம்தான் சங்கமம். லே-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையிலேயே இருக்கிறது. மேலிருந்து பார்க்கும்போது இரு நதிகளும் இரண்டு நிறங்களுடன் கலக்கும் அழகு வார்த்தைகளில் சொல்ல முடியாது. தண்ணீர் அதிகமாகச் செல்லும் காலங்களில் படகு விளையாட்டுகளெல்லாம் அதிக அளவில் நடக்குமாம். ‘World’s Highest Rafting Point’ என்ற பெருமைக்குரிய இடம்.புகைப்படங்கள் எடுக்க அருமையான லொகேஷன். போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே இஷ்டப்படாத எழில் கூட நிறைய போட்டோ எடுத்துகிட்டாங்க. வரலாறு முக்கியமாச்சே!
மதிய சாப்பாடு நேரம் என்பதால் அங்கிருந்த சங்கம் கஃபேவில் ஏதாவது சாப்பிடலாம்னு போனோம். நூடுல்ஸ் வாங்கிகிட்டவங்க தப்பிச்சாங்க. சைனா பார்டரில்தானே இருக்கிறோம்னு ஃப்ரைடு ரைஸ் சொன்னவங்க மாட்டிகிட்டாங்க. சோறு மேலே சோயா சாஸ் ஊற்றி கொடுத்திட்டான். பசிதாங்க முடியாத நான் அதிலும் கொஞ்சம் மொக்கிக் கொண்டேன்.
அடுத்த இடம் பதார் சாஹிப் குருத்துவாரா என்பதால் அங்கே போய் லங்கரில்(அன்னதானம்) சாப்பிட்டுக் கொள்வதாக கொஞ்சம் விபரமான ஆட்கள் சொல்லிட்டாங்க. காவா சாய் எனப்படும் சிறப்பு தேநீர் சுவையாக இருந்தது.
காந்த மலை (Magnetic Hill) வழியாகத்தான் குருத்துவாரா செல்ல வேண்டும்.. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் எந்த முயற்சியும் இல்லாமலே ‘மேல்’ நோக்கி வாகனங்கள் உருளுகின்றன. ஏதோ ஒரு பெளதீக தியரி எல்லாம் சொன்னாங்க. ஆனால் உண்மையாக வண்டி கீழ்நோக்கி இறக்கத்தில்தான் செல்லுகிறது. முன்னால் தெரியும் சாலை உயரமாக இருப்பது போன்ற ஒளியியல் மாயை (optical Illusion) அப்படி ஒரு உணர்வைத் தருகிறது. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளேயிருந்து ஒருதரமும், வெளியில் நின்று சில தரமும் அலசி ஆராய்ந்தாலும் வண்டி மேல் நோக்கி உருளுவது போலவே தான் தெரிந்தது. மொட்டை வெயிலில் கொஞ்ச நேரம் செலவிட வசதியாக மணல்-பைக் சவாரிகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. எங்கவீட்டு ஜாம்பவான்கள் பெனிட்டாவும் டேனியும் ஜாலியா ரைடு போனார்கள். எங்ளைமாதிரி ஆசாமிங்க வண்டிலே
ஓட்டுற மாதிரி போஸ் குடுத்து போட்டோ
எடுத்துகிட்டோம்.
குருத்துவாரா இரண்டு பகுதிகளாக இருந்தது. கீழ்பகுதியில் குருநானக் அவர்களின் பிம்பம் பதிந்த குன்று தொழுகைக்காக வைக்கப்பட்டுள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் குருநானக் லடாக் விஜயம் செய்ததை நினைவு கூறும்படியாகக் கட்டப் பட்டுள்ளது. இந்திய ராணுவம்தான் அதை பராமரித்து வருகிறது. லங்கரில் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாது என்பதால் சிலர் வெளியவே நின்றுவிட்டார்கள். ஆனால் உள்ளே போனபிறகு பார்த்தால் வசதியாக அமரும்படி சின்ன மேடை அமைக்கப்பட்டிருந்தது. சாதமும் கடி எனப்படும் மோர்க்குழம்பும் தேவாமிர்தமாக இருந்தது. கேட்டுக் கேட்டுப் பரிமாறினார்கள். நல்லா சாப்பிட்டோம். வராதவர்களிடம் மோர்க்குழம்பின் சுவையை ஏத்தி ஏத்திப் பேசி கடுப்பாக்கிவிட்டோம். சின்னப் பசங்க எல்லாம் எதிரில் இருந்த மலைமேல் ஏறி அங்கிருந்த கோயிலைத் தரிசித்து வந்தார்கள். கொஞ்சம் மூச்சு வாங்கினதாகக் கேள்வி.
திரும்பும் வழியில் வாழ்த்து அரங்கம் (Hall of Fame Museum) சென்றோம். இந்தியா- பாக் இடையே ஏற்பட்ட யுத்தங்கள் பற்றிய நினைவரங்கம். கார்கில் போர் சம்பந்தப்பட்ட விபரங்கள் படங்கள், ஆயுதங்கள், உடைகள் என பலவிதங்களாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. Operation Vijay விளக்கக் காட்சிகள் மேடைமேல் வடிவமைக்கப்பட்டு விவரிக்கப்படுகின்றன. அரங்கத்திலிருந்து வெளிவந்த அனைவருமே கனத்த இதயங்களுடனும் நனைந்த விழிகளுடனும்தான் தென்பட்டார்கள்.
முதல்நாளின் கடைசி இடமாக சாந்தி ஸ்தூபி (Shanthi Stupa). உலக அமைதியை ஊக்குவிக்கும் விதமாக ஜப்பான் மற்றும் லடாக் புத்தமதத்தினர் இணைந்து கட்டிய ஸ்தூபி. லடாக்கைச் சுற்றி செல்லும் எந்த பாதையிலிருந்து பார்த்தாலும் தெரியும்படியாகவும் சூரியோதயம் அஸ்தமனம் போன்றவை நன்கு தெரியும்படியாகவும் கட்டப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்த்தால் லே நகரத்தின் அமைப்பு முழுவதுமாகத் தெரிகிறது. முதல் தின ஊர் சுற்றல் முடிந்தபிறகும் வெளிச்சம் இருந்தது. இரவு ஏழுமணிக்குதான் இருட்டுமாம். அதனால் கிடைத்த கொஞ்ச நேரத்திலும் சின்ன ஷாப்பிங் போய்விட்டோம்.
இரண்டாம்நாள் காலையில் லே அரண்மனை பார்க்கச் சென்றோம். ஒன்பது அடுக்குகள் கொண்டதாக இருந்ததால் ஏற முடியாதவர்கள் தரைத் தளத்திலேயே தங்கிவிட்டார்கள். அங்கு கிடைக்கக்கூடிய களிமண், மரம் போன்ற சாதாரண பொருட்களை வைத்தே அற்புதமான கலைதிறனுடன் கட்டப்பட்டுள்ளதாக சொன்னார்கள். ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் அதை ரசிக்குமளவு இல்லை.ஆனால் சுவரில் தீட்டப் பட்டிருந்த ஓவியங்கள்
அஜந்தா
குகைகளை நினைவூட்டுவதாக இருந்தன.ஒன்பதாவது தளத்தின் மொட்டை மாடியிலிருந்து பார்த்த லே-காட்சிகள் அற்புதமாக இருந்தன.
அங்கிருந்து நேராக ஷியா அத்தான் ஏற்பாட்டின்படி “லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமெண்ட்” என்ற இந்திய ராணுவத்தின் காலாட்படைப் பிரிவிற்கு சென்றோம்.
எங்களுக்கு அனைத்து விபரங்களையும் விளக்கிச் சொல்ல உயர் அதிகாரி ஒருவர் தயாராக இருந்தார். லே வந்து இறங்கியதிலிருந்தே எங்களுடன் தொடர்பில் இருந்து பயண நேரங்களையும் எங்கள் வருகை பற்றியும் துல்லியமாக ப்ளான் பண்ணியிருந்தார். லடாக் ஸ்கவுட்ஸ் “ பனிச் சிறுத்தைகள்” என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுகிறார்கள். லடாக்கிலிருந்தே ஆட்சேர்ப்பு செய்கிறார்கள். எல்லைகளின் ஆபத்தும் சீதோஷ்ணமும் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் எல்லைப் பகுதியைக் காக்க அவர்களே பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். மலை ஆடுகளைப்போல் இலகுவாக செல்லக்கூடிய படை என்பதால் அவர்கள் சின்னமே “மலை ஆடு” (Himalayan Ibex)தான்.
அந்தக் காலாட்படைப் பிரிவில் பார்த்ததும் விளக்கிச் சொல்லக் கேட்டதும் அளப்பரிய விஷயங்கள். ஜனாதிபதிதான் அப்பிரிவின் தலைமைத் தளபதி (commander in chief).அவரது பிரத்தியேக இருக்கை அங்குள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தோ-சைனா யுத்தம், கார்கில் யுத்தம் போன்றவற்றின்போது பிடிபட்ட பொருட்களும், படைப்பிரிவினர் உபயோகிக்கும் பொருட்களும்கூட காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. குண்டுகள் நீக்கப்பட்ட துப்பாக்கி ரகங்களை எங்களுடன் வந்த இளவட்டங்கள் தூக்கிப்பார்த்து அசந்து போனார்கள். கைத்துப்பாக்கியே ஒருகிலோவுக்கும் அதிக எடையில் இருந்தது.
அங்கிருந்த போர்நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கனத்த இதயங்களுடன் இருந்த எங்களை அதிகாரிகளுக்கான மெஸ்ஸில் தேநீர் அருந்த அழைத்துச் சென்றார். அங்கே மினி மதிய உணவே பரிமாறப்பட்டது. மோமோவும் கேக்கும் பிஸ்கட்டுகளும் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். இவ்வளவு அற்புதமான படைப்பிரிவைப் பார்த்ததே லடாக் பயணத்தின் முக்கிய அம்சம் என்று தோன்றியது. அடுத்து வந்தவையும் இன்னும் நிறைய அதிசயங்களைக் காட்டியது.
அங்கிருந்து ஹெமிஸ் மடாலயம் பார்க்கச் சென்றோம். ஹெமிஸ் என்றாலே மறைக்கப்பட்ட புதையல்னு அர்த்தமாம். பெரிய அருங்காட்சியகம் இதனுள்ளும் இருந்தது. பல அரிய சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. அடுத்ததாக வந்த தீக்ஷே மடாலயத்தை வெளியிலிருந்தே பார்த்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
திரும்பும் வழியில் “த்ரீ இடியட்ஸ்” பள்ளிக்குள் நுழைந்தோம். ஹிந்தியில் வந்த அந்த சினிமாவால்தான் லடாக் சுற்றுலா பிரகாசிக்கத் தொடங்கியதாம். அந்த சினிமா படப்பிடிப்பு முழுவதும் நடந்த பள்ளியை சுற்றுலாத் தலமாக மாற்றியிருந்தார்கள். நாங்களும் அங்கிருந்த சுவர் பக்கத்திலிருந்து விதவிதமாகப் படம் எடுத்துக் கொண்டோம். சிறுநீர் கழிக்கும்போது மின்சாரம் தாக்குவது போன்ற காட்சிகளுக்கு போஸ் கொடுத்து போட்டோ ஷூட் களை கட்டியது. ஜெர்ரி, டேனி , ரோஹித் மூணுபேருமே த்ரீ இடியட்ஸ் மாதிரி ஏக சேட்டைகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மறுநாள் நூப்ரா பள்ளத்தாக்கு செல்ல வேண்டியிருந்ததால் சின்ன ஷாப்பிங்கிற்குப் பிறகு சீக்கிரமே தூங்கப் போய்விட்டோம்.
நூப்ரா மற்றும் பாங்காங் ஏரி சென்றுவிட்டு மறுபடியும் லே வந்துதான் விமானம் ஏற வேண்டி இருந்ததால் இரண்டு நாட்களுக்கான உடைகள் தவிர மற்றவை எல்லாம் ஹோட்டலின் Cloak room இல் வைத்துவிட்டோம். நூப்ரா பள்ளத்தாக்கிற்கு செல்ல உலகத்தின் மிக உயரமான கணவாய் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. கார்டுங்க் லா எனப்படும் கணவாய் கடல் மட்டத்திலிருந்து சுமார் 18000 அடி உயரத்தில் இருக்கிறது. “Highest Motorable Road of the World” என்ற சிறப்பு பெற்றுள்ளது. சிதோஷ்ண நிலை மைனஸ் டிகிரிகளில் இருக்கும் என்பதால் நாலைந்து அடுக்குகளாக கம்பளி ஆடைகள் போடச் சொல்லியிருந்தார்கள்.
இதற்கிடையில் ஒன்றிரண்டு பேர் தயங்க ஆரம்பிச்சுட்டாங்க. இங்கேயே இவ்வளவு குளிரும்போது பாங்காங்கில் கை காலெல்லாம் மரத்துப்போய்விடும். போதிய கம்பளிகள் கிடைக்குமான்னு தெரியலை. அதனால் லே-யிலேயே தங்கிக் கொள்கிறோம்னு அடம் வேறே. ட்ராவல் ஏஜெண்ட்கிட்டே விளக்கம் கேட்டபோது, அந்த சிதோஷ்ணத்துக்குத் தகுந்த மாதிரி கம்பளிகள் கிடைக்கும்னு உத்திரவாதம் கொடுத்த பிறகுதான் கிளம்பினாங்க. நூப்ராவில் மின்சாரம் ஓரளவுக்கு இருக்கும், பாங்காங்கில் மின்சாரமே கிடையாது. இரண்டு மணி நேரம் மட்டும் ஜென்ஸெட் மூலம் விளக்குகள் எரியும் என்றும் கூறினார்.
கம்பளிகள், power bank, snacks எல்லாம் பேக்கிங் பண்ணி எடுத்துக் கொண்டு மறுநாள் பயணத்தைப் பற்றிய கனவுகளுடன் கண்ணயர்ந்தோம்.
பயணங்கள் முடிவதில்லை.....

0 Comments:

Post a Comment

<< Home