அலை-71
அலை-71
“இமயம்+அலை”
இமயமலைப் பயணங்களே நிறைய அலைகளைத் தவழ விட்டுவிடுகிறது. வடகிழக்கு மேகாலயா சென்றுவந்த களைப்பு தீர்வதற்குள்ளாகவே வடக்கு நோக்கி “லடாக்” பயணம் தொடங்கிவிட்டது. கனடாவிற்கு வேலை நிமித்தம் செல்வதற்குள் லடாக் போக வேண்டுமென்று மருமகன் ஜெர்ரி ஆசைப்பட்டதை மீற மனமில்லாமல் பயண ஏற்பாடுகள் தொடங்கின. மகன் டேனியலின் NEET-PG entrance மே மாதம் 21 ஆம் தேதி முடிந்ததும் 22 ஆம் தேதி கிளம்ப ஆயத்தமானோம். குடும்ப சுற்றுலாவாக 11 பேருடன் தொடங்கி, நளினி குடும்பமும் சேர்ந்து 15 பேர் செல்ல உறுதியாகிவிட்டது.
பத்து வருடங்களுக்கு முன்பு காஷ்மீர் சென்று வந்தபோது குல்மார்க் கொண்டோலா சவாரியில், தூரத்தில் கார்கில் தெரிவதாகச் சொன்னபோதுகூட “லடாக்” என்பது போக முடியாத பிரதேசம் என்றுதான் மனதில் பதிவாகி இருந்தது. ஆக்ஸிஜன் அளவு குறைவு, மூச்சு விடுவது சிரமம் என்றெல்லாம் கேள்விப் பட்டிருந்ததால், ஆஸ்த்துமா பிரச்னைகளுள்ள நானெல்லாம் அங்கே போகவே கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் ஜெர்ரியின் ஆசையும் அவன் தந்த தைரியமும் எங்களை ஊக்கப்படுத்திவிட்டது. பதினைந்து பேரில் 10 பேர் அறுபதைத் தொட்டும் அதைத் தாண்டியவர்களும்தான். ஐந்து பேர் மட்டுமே முப்பதுகளில் இருந்தார்கள்.
பிரயாணம் ஒழுங்கு பண்ணி பணம் எல்லாம் கட்டிய பிறகுதான் நெருங்கியவர்களுக்கு மெதுவாகச் சொன்னேன். நயினார் அண்ணன் எந்த விஷயத்தையும் சவாலாக ஏற்றுக் கொள்ளுபவன். அவனே கொஞ்சம் தயக்கத்துடன் பேசினான். லடாக் - சீனா எல்லைப்பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக கொஞ்சம் ஆட்சேபனையும் சொன்னான். தம்பி நாராயணனும் அதே தொனியில்தான் பேசினான். ஆனால் அதற்குள் ஏற்பாடுகளெல்லாம் முடித்துவிட்டதால் பின்வாங்கும் முயற்சிக்கே வழியில்லாமல் போய்விட்டது. மற்ற நெருங்கிய நண்பர்களும் எதிர்மறை கருத்துக்களே சொன்னார்கள். பயணம் தொடங்கும் வரைக்குமே எழில் முகத்தில் சிரிப்பே இல்லை. ஒருவித பதட்டத்துடனேயே இருந்தார்கள்.
எனக்குள்ளும் ஒருவித பயமும் அசட்டுத்தனமான
தைரியமும் கைகோர்த்து படுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அலீஸ், ஜெர்ரி ரெணுபேரும் நல்ல தைரியமாக motivate பண்ணிக் கொண்டே இருந்தார்கள். அலீஸ் மாமனார்கூட கிளம்புவதற்கு தயங்கினபோது அவர்களை உற்சாகப்படுத்திக் கிளப்பிவிட்டாள். ஐந்து டாக்டர்கள் வரும் இந்தக் குழுவில் வருவதால் எந்தப் பிரச்னையும் வராமல் போய் வரலாம் என்று சொன்ன பிறகுதான் அவங்க ரெண்டுபேரும் கிளம்பினாங்க. எங்கள் டிராவல் ஏஜண்ட் திரு.குமார் (GT Holidays) ரொம்ப தைரியமாக ஊக்கப்படுத்தி முழு பயணத்திலும் உறுதுணையாக இருந்தார். வண்டி, அறைகள், பயணத்திட்டம் எல்லாவற்றிலும் என்னென்ன மாறுதல்கள் கேட்டாலும் சலிக்காமல் செய்து கொடுத்து சிறப்பான பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
மற்ற இடங்களுக்குக் கிளம்புவதுபோல் இல்லாமல் அநேக முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. நாம் உபயோகிக்கும் சாதாரண கம்பளித்துணிகள் லடாக்கில் நிலவும் குளிருக்கு பாதுகாப்பு அளிக்காது என்பதால் பிரத்தியேகமான உடைகள் சேகரிக்க வேண்டி இருந்தது. லடாக் குளிர் பாலைவன வகையைச் சார்ந்திருந்ததால் பலதரப்பட்ட தேவைகள் இருந்தன. பகலில் சுள்ளென்று வெயில் அடிக்கும்போது சாதாரண வகை ஆடைகளும், நிழலில் செல்லும்போது மிக கனத்த ஆடைகளும் தேவைப்பட்டது. சைனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்கனவே பிரயாணம் செய்திருந்ததால் நிறைய கம்பளிகள் மூலைக்கொன்றாக விசிறிக் கிடந்தன.
எல்லாவற்றையும் எடுத்து சுத்தம் செய்வதிலிருந்து, பெட்டி தயார் செய்வது வரை நிறைய வேலைகள் இருந்தது. கையுறை காலுறை எல்லாம் அலீஸ் வாங்கி வைத்துவிட்டாள். “ பிகிலூ! கப்பு முக்கியம்” பாணியில் கறுப்பு கண்ணாடி வேறே கண்டிப்பா வாங்கிடணும்னு சொல்லிட்டாள். UV protection glasses அவளே வாங்கித் தருவதாகவும் சொன்னாள். நாந்தான் பீலாவாக எங்க கண்மருத்துவரைக் கேட்டுட்டு இங்கேயே வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன். சோதனை மாதிரி பயணம் ஆரம்பிக்கும் வரை வாங்க முடியாமலே போயிடுச்சு. லடாக்கிலே போய் ஒன்றையணா ப்ளாட்பார்ம் கண்ணாடிதான் வாங்க முடிஞ்சுது. அதுவும் ரஜினி ஸ்டைலில் அழகாகத்தான் இருந்துச்சு.
ஷூ வாங்குவதற்குள் எனக்கும் எழிலுக்கும் சின்ன குருஷேத்திரப் போரே நடந்துவிட்டது. எழில் தம்பி அமெரிக்காவிலிருந்து வாங்கிக் கொடுத்த NIKE SHOE போனமுறை தரம்ஷாலா சென்றபோது பிய்ந்துவிட்டது. அதனால் நல்ல ஷூ வாங்க Reliance Mall சென்றபோது NIKE அங்கு இல்லை. IPL season காரணமாக SKECHERS SHOE நிறைய இருந்தது. நான் எனக்கு வேண்டியதை வாங்கிவிட்டேன். எழிலைக் கடைக்குக் கூட்டிப்போவதே ரொம்பக் கஷ்டம். வீட்டை விட்டு சீக்கிரத்தில் கிளம்ப மாட்டாங்க. அதிலும் ஷூ விலை ஆறாயிரம் என்றதும் வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தார்கள்.
நாலு நாள் போடுவதற்கு அவ்வளவு விலை கொடுக்கணுமான்னு விவாதம் வேறு. நாலு வருஷத்துக்கு ஒருதரம் கூட கட்ட வாய்ப்பிருக்காத பட்டு சேலை எட்டாயிரம் பத்தாயிரம்னு எனக்கு வாங்கித் தருவாங்க. தனக்குன்னு செலவளிக்க மனசே வராது. ஆனால் கால் பாதுகாப்பு எவ்ளோ முக்கியம்னு சொல்லிகிட்டே இருந்தாலும் கேட்காமல் அடம் பிடிச்சுகிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துலேசண்டை முத்திப்போய் ஆளுக்கு ஒருபக்கம் மூஞ்சைத் தூக்கிக் கொண்டு போயிட்டோம். அப்புறமா டேனி, சோம்ஸ் அங்கிள் எல்லாம் சமாதானம் பண்ணி கடைக்காரரிடம் OFFER எல்லாம் வாங்கிக் கொடுத்து நாலாயிரத்துக்கு புது ஷூ வாங்கிகிட்டது தனிக்கதை. லடாக் பத்தி நினைக்கும் போதெல்லாம் ஷூவும் நினைவுக்கு வந்தே ஆகணும். சில ஊடல்கள்கூட சுகமான நினைவலைகள்தான்.
ஜெர்ரியும் ஆலீஸும் பயணத்திட்டத்தை நன்கு அலசி OFF-LINE route map ரெடி பண்ணி எல்லா விபரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டார்கள். இதற்கிடையே நானும் நளினியும் அரை மணிக்கும் குறையாமல் கிளுகிளுப்பாக பயணத் திட்டங்கள் பற்றி அரட்டை அடித்துக் கொள்வோம். பயண நாட்கள் பக்கத்தில் வரவரக் கொஞ்சம் பயத்துடன் கூடிய த்ரில்லாகவே இருந்தது. எங்க பெட்டியில் பாதி இடம் மினி ஆஸ்பத்திரியாகவே இருந்தது. அவசரப் பிரிவு மருந்துகளும் ஊசிகளும்; Nebuliser, Pulse-oxymeter; BP apparatus; Laryngoscope என்று உபகரணங்களும் பக்காவாக பேக் செய்துவிட்டோம். லடாக் கடைத் தெருவில் நடமாடும் க்ளினிக் போட்டிருந்தால் பயணச் செலவுக்கு சம்பாதிச்சிருக்கலாம்.
எழிலுக்கு Angioplasty பண்ணியிருப்பதால் cardiologist கிட்டே கருத்து கேட்டுக் கொள்ளுவோமா என்று நினைத்தோம். திடீர்னு அவர் போகக்கூடாதுன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு அமைதியாக இருந்துட்டோம். நுரையீரல் சிறப்பு மருத்துவரிடம் மட்டும் ஆலோசனை கேட்டோம். அவர் சண்டிகாரில் படித்தவர் என்பதாலும் நிறைய Mountain sickness cases பற்றி அறிந்தவர் என்பதாலும், ரொம்ப ஊக்கமளிக்கும் விதமாகப் பேசினார். என்ன மாதிரி நடந்துக்கணும்,என்ன மருந்துகள் எடுத்துக்கணும் என்றெல்லாம் விபரமாகக் கூறினர்.
எங்களுக்கு முன்னாடி கோவையிலிருந்து ஐந்துபேர் கொண்ட குழு (60 வயதுக்காரங்க) நாங்க கிளம்புவதற்கு முந்தின நாள் வெற்றிகரமாகப் பயணம் முடித்து வந்ததாக குமார் கூறியிருந்ததும் மனசைக் கொஞ்சம் அமைதிப்படுத்திருச்சு.
டேனியும் NEET தேர்வு முடித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் சேர்ந்துகொண்டான்.
சென்னையிலிருந்து Dr. Raveendar& Sabitha ; பெங்களூருவிலிருந்து Alice, Rohit, Sheepathi Bhat& Rohini ; கோவையிலிருந்து நான்,எழில், நளினி, ரவி& டேனி என்று மூணு குழுக்களாக ஞாயிறு காலையே டெல்லி சென்றுவிட்டோம். திங்கட்கிழமை காலை 10 மணி விமானம் என்பதால் முதல் நாள் செல்வது உசிதமாகப் பட்டது. கோவை விமான நிலையத்தில் திடீர்னு எழில் check-in bag ஐ திறந்து காட்டச் சொல்லிட்டாங்க. வளைந்த கத்திபோல் ஒன்று இருப்பதாகச் சொல்லிட்டாங்க. அப்புறம்தான் நினைவுக்கு வந்தது, Laryngoscope blade metal என்பதால் அப்படித் தெரிந்திருக்கிறது. விஷயத்தை விளக்கிச் சொன்னதும் புரிந்து கொண்டார்கள்.
புனிதா Airport authority யில் AGM rank இல் இருந்ததால் சப்தர்ஜங் விமான நிலையம் அருகிலுள்ள Officers’ club இல் அறைகள் பதிவு செய்து வைத்திருந்தாள். உள்ளேயே அருமையான மெஸ்ஸூம் இருந்தது. அறைகளில் செட்டில் ஆனதும் சாப்பிட்டுவிட்டு பெண்கள் அனைவரும் சரோஜினி மார்க்கெட்டில் ஜாலியாக ஒரு ஷாப்பிங் போனோம். பயணத்தின் முதல் படியே சந்தோஷமாக ஆரம்பித்தது. எங்கள் தோழி ஷியாவின் அக்கா கணவர் ஆர்மியில் நல்ல பதவியில் இருப்பதால் லடாக்கில் சில ஆர்மி விஷயங்கள் பார்க்க அநுமதி வாங்கி வைத்திருந்தார்.
மறுநாள்காலை விமான நிலையம் செல்ல GT holidays இலிருந்தே பெரிய வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். புனிதா வீடு அருகில் உள்ள லோதி காலனியிலேயே இருந்ததால் காலை சிற்றுண்டி அவளே ஏற்பாடு செய்துவிட்டாள். அலெக்ஸுக்காகக் கொடுக்கப்பட்ட வீடு India Habitat Center இன் பின்வாசலில் இருக்கும். ஆனால் சோதனையாக புயல் மழை. வண்டிக்கே போக முடியவில்லை. பயங்கர sand-storm ராஜஸ்தானிலிருந்து அடிப்பதாகச் சொன்னாங்க. வீட்டுக்கு வருவதற்குள் ஓரளவு வெறித்துவிட்டது. அடாது மழை பெய்தாலும் விடாது ரவுண்டு கட்டி விதவிதமான சிற்றுண்டிகளை நொறுக்கிவிட்டு விமான நிலையம் வந்தோம்.
தில்லி விமான நிலையத்தின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சீக்கிரமாகவே security check வரை முடித்துவிட்டோம். ஆனால் Sand-storm மழையால் ஏகப்பட்ட விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. எல்லாம் தாமதமாகவே கிளம்பின. அதனால் விமான நிலையம் முழுக்க செம கூட்டம். உட்காரக்கூட இடம் கிடைக்கவில்லை. அலீஸ் முன்னேற்பாடாகக் கொண்டு வந்திருந்த பெரிய போர்வையை தரையில் விரித்து அனைவரும் அட்டஹாசமாக உட்கார்ந்து கொண்டோம். நிற்க முடியாமல் நின்ற சில குடும்பத்தினரையும் எங்களுடன் உட்கார வைத்துக் கொண்டோம். டேனி நெடுஞ்சாண் கிடையாக நீட்டி படுத்துத் தூங்கவே செய்திட்டான். VIP Lounge Access க்கு எல்லோரிடமும் கார்ட் இருந்தபோதும் உள்ளே நுழைய முடியாத அளவு கடும் கூட்டம்.
எங்க பைகளிலேயே நிறைய தின்பண்டங்கள் இருந்ததால் அவற்றை எல்லாம் ஒருகை பார்த்துக்கொண்டோம். அது போதாதென்று ஜெர்ரியும் எழிலும் lounge இலிருந்து தின்பதற்குப் பார்சல் வேறே வாங்கிட்டு வந்தார்கள். ஒருவழியாக 2 மணிநேர காத்திருப்புக்குப் பின்னர் விமானம் ஏறினோம். விமானத்திலிருந்து காணும் காட்சிகள் நன்றாக இருக்கும் என்று அலீஸ் சொன்னதால் அத்தனை பேருக்கும் சாளர இருக்கையாகவே web check-in பண்ணிக் கொடுத்திருந்தார்கள். மலை முகடுகளில் ஆங்காங்கே பனி படர்ந்த தோற்றங்கள் அருமையாக இருந்தன.
முதல் நாள் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று எல்லா தரப்புகளிலிருந்தும் சொல்லியிருந்ததால் அன்று அறைகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டது. லே ப்ளாஸா என்ற அந்த ஹோட்டல் ரொம்ப நல்லா இருந்தது. அறையிலிருந்து பார்த்த்தாலே தெரிந்த பனிமூடிய மலைகளும் சுற்றுச் சூழலும் ரம்யமாக இருந்தது.மதிய உணவை அறைகளுக்கே தருவித்து சாப்பிட்டுக் கொண்டோம். முன்னேற்பாடாக புனிதா கொண்டுவந்திருந்த எலுமிச்சை சாதம் என் போன்ற சோறு பிரியர்களுக்கு தேவாமிர்தமாக இருந்தது.
முதல்நாள் கொண்டாட்டமாக பால்கனியில் அமர்ந்து சீட்டு விளையாடி, அரட்டை அடித்து, போட்டோக்கள் எடுத்து கண்சிமிட்டும் நேரத்துக்குள் இரவு வந்துவிட்டது. சின்ன தலைவலி, கொஞ்சம் படபடப்பு போன்ற சில அசெளகரியங்கள் சிலருக்கு வந்தாலும் எழில் உடனடியாக பரிசோதித்து தேவையான மருந்துகள் கொடுத்திட்டாங்க. பிரச்னைகள் ஏதும் இன்றி நன்கு ஓய்வெடுத்தோம். படி ஏறினாலே மயக்கம் வந்து விழுந்திடுவாங்க, தெருவில் போனவங்க மயக்கத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டாங்க, மருத்துவமனையில் அட்மிட் ஆறவங்க எல்லாம் சுற்றுலாப் பயணிகள்தான் என்று பலவிதமான பிரச்சாரங்களைக் கேட்டுவிட்டு வந்திருந்ததால் எங்க குழுவில் யாரும் பிரச்னைக்குள் மாட்டவில்லை.
லடாக்கின் அழகையும் அதிசயங்களையும் அடுத்த அலையில் தவழ்ந்து பார்ப்போம், எதிர்பார்த்திருங்கள்.
0 Comments:
Post a Comment
<< Home