Thursday, March 31, 2022

அலை-63

 அலை-63

மூன்று என்பது நிறைய இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இலக்கியத்தில் இயல் இசை நாடகம், இந்துக் கடவுள்களில் மும்மூர்த்திகள், இயற்கையோடு இணைந்த மூன்றாம் பிறை என எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் மருத்துவ மாணவர்களைப் பொறுத்த வரையில் மூன்றாம் வருடம் என்பது மிக முக்கியமான வகுப்பு.
முதல் இரண்டு ஆண்டுகளும் கல்லூரிக்குள்ளேயே சுற்றித் திரிந்துவிட்டு மூன்றாம் ஆண்டு மருத்துவமனைக்குள் நுழைவது சுகமான அநுபவம். வார்த்தைகளில் சொல்ல முடியாத படபடப்பும் பெருமிதமும் மனதுக்குள் சிறகடிக்கும். அனாடமி தியேட்டரில் போடும் கோட்டுக்கும் மூன்றாம் ஆண்டு கோட்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சடலங்களின் வாயிலாக படித்திருந்த உடற்கூறுகளை ரத்தமும் சதையும் நிறைந்த மனிதர்களில் பொருத்திப் பார்க்கப் போகிறோம் என்பதே பெரிய த்ரில்தான்.
மூன்றாம் ஆண்டின் முதல் நாள் என்று எதுவுமே நினைவுக்கு வரவில்லை. சுமார் 42 வருடங்களுக்கு முன்பு நடந்ததாச்சே, மூளையை எவ்வளவு கசக்கினாலும் நினைவுக்கு வரவில்லை. தினசரி காலை 7 மணிக்கு வந்துவிடவேண்டும். அவசரப்பிரிவில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு தங்களுக்குரிய பகுதிக்கு செல்ல வேண்டும். எந்தெந்த பகுதி என்பதை யாரோ சொல்லியிருந்தார்கள்.
காலை புறநோயாளிகள் பிரிவு 7 மணிக்கே ஆரம்பித்துவிடும்.. 7-10 மணிவரை புறநோயாளிகள் பகுதியின் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாணவர்களைப் பிரித்து அனுப்புவார்கள். எங்களுக்கு முந்தைய வகுப்பின் ‘C’ batch மாணவர்கள் கொஞ்ச பேரும் எங்களுடன் இணைந்திருந்தார்கள். அதனால் குழப்பமான போஸ்ட்டிங்தான் இருந்தது. தோழியர் கொஞ்சம் பிரிந்துவிட்டோம்.
ஊசி போடும் அறை, புண்ணுக்கு கட்டுப்போடும் பகுதி, சீழ்கட்டிகளை அறுத்துப்பார்க்கும் SOT, x - Ray பகுதி , மாத்திரை கொடுக்குமிடம் என்று பொதுவான இடங்கள் போக பிரதான இடங்களான பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் பிரிவு போன்றவையும் உண்டு. மகப்பேறு மருத்துவம், எலும்பு முறிவு , தொற்றுநோய்ப் பிரிவு, இரத்த வங்கி எல்லாம் கொஞ்சம் வெளிப்புறமாக இருக்கும். தோல்நோய், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை, மனநோய் பிரிவு எல்லாம் முன்பக்கத்தில் இன்னோர் கோடியில் இருக்கும். இதெல்லாம் போக காலையில் வர முடியாத நோயாளிகளுக்கென Extension OP யும் உண்டு. இத்தனைப் பிரிவுகளிலும் அந்த ஒரு வருடத்தில் சீரான இடைவெளிகளில் வகுப்பில் இணைய வேண்டும்.
எல்லா பிரிவுகளிலும் மூன்றாம், நான்காம் , ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் இணைந்து படிக்க வேண்டும். பெரியவங்க எல்லாம் நோயாளி குறித்து விளக்கிக் கொண்டிருப்பார்கள். கடைக்குட்டிகளெல்லாம் எதுவுமே புரியாமல் வாய் பிளந்து ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம்.
X-ray OP யில் நிழற் படங்களில் தெரியும் விஷயங்களை நோயாளியின் வியாதியுடன் ஒப்பிட்டு விளக்கி சொல்லித் தருவார்கள். நாங்கள் படிக்கும் போது வேலு சார் வகுப்பிற்கு மட்டம் போடாமல் போய்விடுவோம். அதை ஒட்டிய அறைதான் SOT (septic operation theater). நல்லா சொல்லித் தரும் சீனியர் யாராவது அங்கிருந்தால் அப்படியே உள்ளே நுழைஞ்சிடுவோம்.
மருத்துவம் , அறுவை சிகிச்சை பிரிவுகளில் சீனியர்களையே அதிகம் நோண்டிக் கொண்டு இருப்பார்கள். மூன்றாம் ஆண்டு தொடங்கிய காலத்தில் எதுவுமே புரியாது. அதனால் நாங்களெல்லாம் அவ்வப்போது கட் அடித்துக் கொள்ளுவோம். தோழியர் இருக்கக்கூடிய வேறு ஏதாவது சுவாரஸ்யமான OP க்கு சென்று விடுவோம். Chief class எடுக்கும் போது மட்டும் தவறாமல் ஆஜராகிவிடுவோம். ஏனென்றால் ஐந்தாம் வருடத்தில் அவங்க தயவு இருந்தால்தான் பாஸ் பண்ண முடியும். அவங்க bad book இல் அச்சேறிடக் கூடாது.
குழந்தைகள் பிரிவும் கொஞ்சம் இம்சைதான் , ஒரே அழுகைச் சத்தமாகவே இருக்கும். நாங்க படிச்சப்போ குழந்தைகள் நலம் தனிப் பரீட்சை கிடையாது. அதனால் ஒப்புக்கு அவ்வப்போது எட்டிப் பார்த்துக்குவோம். நல்லா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் வகுப்பில் தவறாமல் கலந்துகொள்ளுவோம். தம்பி சார் தான் அந்தப் பிரிவின் முடிசூடா மன்னர்.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிதான் சுற்று வட்டாரத்திலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்பதால் நோயாளிகளின் வருகையும் மிக மிக அதிகமாகத்தான் இருக்கும். சராசரியாகப் படிக்கும் மாணவர்கள் கூட மருத்துவத்தில் பாண்டித்தியம் பெறும் அளவுக்கு பலதரப்பட்ட நோய்களுடன் வருவார்கள். நாங்கள் எல்லோருமே புத்தகத்தில் படித்ததை விட நோயாளிகளிடமிருந்து கற்றுக் கொண்டதுதான் மிக அதிகம்.
சீனியர்கள் தொந்தரவு இல்லாமல் நாமாகப் படிக்கும் ஒரே இடம் ஊசிபோடும் அறைதான். செவிலியர்களிடமிருந்துதான் ஊசி போடக் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு நல்லா சொல்லித் தந்துட்டா அவங்களுக்கு வேலைப் பளு குறைவு என்பதால் நன்றாகவே சொல்லித் தருவார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊசிபோடும் அறைகள் தனிதனியாக இருக்கும். ரெண்டு பக்கமும் மாறி மாறி வேலை செய்ய வேண்டும்.
எங்களை எப்போதும் சீண்டிக் கொண்டே இருக்கும் சீனியர்கள் அவ்வப்போது மருத்துவ மனையிலும் குமைத்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் முந்தைய வகுப்பின் Dr. கபீர் &
Dr. பெருமாசாமி ரெண்டுபேரும் முதல் ஆட்கள். ஒருநாள் ஆண்கள் ஊசிபோடும் பிரிவில் நின்று கொண்டிருந்தபோது தற்செயலாக எங்களைத் தாண்டிச் சென்ற ரெண்டுபேரும் அங்கே வந்திட்டாங்க. தாணு எனக்கொரு B12 ஊசி போடு என்று Dr. கபீர் கேட்டுவிட்டு தோள்பட்டையின் கோட் பகுதியை விலக்கிக் கொண்டு நிற்கிறார்.
நாங்களே அப்போதான் புதுசாக அந்த OP க்கு வந்திருந்தோம். தட்டுத் தடுமாறி மருந்து பாட்டிலில் இருந்து ஊசியில் மருந்து எடுக்கப் பழகிக் கொண்டு இருக்கிறோம். பத்துப் பதினைந்து பேருக்குத்தான் ஊசியே போட்டிருப்போம். சீனியர் கேட்கிறாரேன்னு போட்டாலும் ஒழுங்கா போடுவேனான்னு தெரியாது. போடமாட்டேன்னு தயங்கினால் இதுவே சாக்குன்னு இவளுக்கு ஊசி கூடப் போடத் தெரியலன்னு ஊரு பூரா கொட்டடிச்சிடுவாங்க. யோசிச்சுப் பார்த்தேன், எதுக்கு பின்வாங்கணும் வினை விதைத்தவர்கள் வினை அறுக்கட்டும். Injection Abcess வந்தால் SOT-க்கு இன்னொரு நோயாளி கிடைப்பாங்கன்னு சிரிஞ்சில் மருந்து நிரப்பிட்டு பஞ்சு வைச்சு தோள்பட்டையை சுத்தம் செய்து ஊசி போடப் போயிட்டேன். அம்மாடி இது வில்லங்கம் புடிச்ச பிள்ளைன்னு ஊசி போட்டுக்காமல் தெறிச்சு ஓடிட்டாங்க. அதுக்குப் பிறகு எங்க வம்புக்கே வர்றதில்லை.
புற நோயாளிகள் பிரிவு முடிந்ததும் அரை மணிநேரம் இடைவேளை எடுத்துக் கொள்ளலாம். அருகாமையில் உள்ள உணவு விடுதிகளில் தேநீர் பருகும் நேரத்தில் கடலைகள் வறுக்கப்படுவதும் வழக்கம். அடுத்து வந்த மூன்று வருடங்களிலும் அதற்குப் பின் வந்த ஒரு வருட பயிற்சி மருத்துவத்திலும் எங்களோடு இணைந்து கொண்டது சீதாலட்சுமி உணவகம். ஆயிரமாயிரம் கதைகள் அதன் சுவர்களில் அடக்கம்.
பத்தரை மணிக்கு மேல் வார்டு வேலைகளுக்கு செல்லுவோம். இங்கேயும் மூன்று வருட மாணாக்கர்களும் இருப்போம். மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் மூணும்தான் மெயின் வார்டுகள். ஒவ்வொரு துறையிலும் நான்கு யூனிட்டுகள் உண்டு. மகப்பேறில் இரண்டு யூனிட்டுகள் மட்டுமே. ஒவ்வொரு யூனிட்டும் துறைத் தலைவரின் பெயர்ப்படியே வழங்கப்படும். அவர்களின் கீழே உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் எல்லாம் இருப்பார்கள்.
அறுவை சிகிச்சையில் MSS, DKP, RH & SR Units உண்டு. மருத்துவத்தில் AS, GVS , PSS & Sk units உண்டு. இரண்டு பிரிவிலும் நாலாவது யூனிட்டுக்கு நிரந்தர பொறுப்புத் தலைவர் இல்லாததால் அது நாலாம் யூனிட் என்றே அழைக்கப்படும். மகப்பேறில் SA &GS யுனிட்கள் உண்டு.
எனது பெயரின் சீனியாரிட்டிபடி எனக்கு மூன்றாம் யூனிட் தான் எல்லா வருடங்களுக்கும் வழங்கப்பட்டது. மருத்துவத்தில் PSS unit அறுவை சிகிச்சையில் RH unit . சொல்லி வைத்தது போல் பயிற்சி மருத்துவரானபோதும் இதே யூனிட்களில்தான் இணைந்தேன்.
வார்டு வேலைகளில் நுழைந்துவிட்டால் மூச்சுவிட நேரம் இருக்காது. சீனியர்கள் chief வருவதற்குள் வார்டு சுற்றுகள் முடித்து வைப்பார்கள். ஜூனியர்கள் ஊசி போடுவதும், மருந்து கட்டுவதும், BP பார்ப்பதும் போன்ற சின்ன வேலைகள் செய்துகொண்டிருப்போம். தலைவர் வந்ததும் பெரிய சுற்றுகள் (Grand Rounds) ஆரம்பிக்கும். ஒவ்வொரு நோயாளி பற்றியும் இறுதி ஆண்டு மாணவர் அல்லது உதவி பேராசிரியர் விளக்கிச் சொல்ல தலைவர் நிபுணர் கருத்துகளை முன் வைப்பார். ஒரு நல்ல மருத்துவர் உருவாகும் இடம் அதுவாகத்தான் இருக்கும்.
இறுதிச் சுற்று முடிந்ததும் இரத்த ஆய்வுகளுக்கு குருதி சேகரிப்பது, இரத்த வங்கியில் இருந்து இரத்தம் பெற்று வருவது, குளுக்கோஸ் திரவங்கள் ஏற்றுவது என்று ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். இதையெல்லாம் முடித்துவிட்டு விடுதியில் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு மதிய வகுப்புகளுக்காக கல்லூரி செல்ல வேண்டும். மூன்றாம் ஆண்டின் சுவையான பகுதிகள்----இனி தொடர்ந்து வரும்.

0 Comments:

Post a Comment

<< Home