Thursday, March 31, 2022

அலை-59

 அலை-59

“இமயமலையில் மலையேற்றம்” (Trekking in Himalayas)
“உலகம் பிறந்தது நமக்காக ஓடும் நதிகளும் நமக்காக” ன்னு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாய் மணக்கப் பாட்டுப் பாடினாலும் அதை உணர்ந்து ரசிக்கும் போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். கடந்தவாரம் இமயமலை நோக்கி சென்ற பயணம் அந்த சந்தோஷத்தைத்தான் கொடுத்தது.
பள்ளியில் படித்த சரித்திரமும் பூகோளமும் (history & geography) கண்முன்னே விரிந்த கதம்பமான நினைவலை இது.
கொரோனா காரணமாக ஊர் சுற்ற முடியாமல் முடங்கிக் கிடந்த நேரத்தில், வரப்போகும் கிறிஸ்துமஸ் கால விடுமுறையை ஒழுங்கு படுத்தும் பொருட்டு, எழிலின் தங்கை புனிதாவைத் தொடர்பு கொண்டேன். புது டெல்லி விமான நிலையத்தில் மானேஜர் தகுதியில் வேலை பார்த்து வருவதால் அடிக்கடி ஊர் பக்கம் அவளால் வர முடியாது. இந்த முறை பெங்களூருவில் என் மகள் வீட்டில் கிறிஸ்துமஸுக்குக் கூடலாம் என யோசித்து புனிதாவைக் கேட்டேன். இரண்டு வருடங்களாக வெளிவாசல் எங்கும் போகாமல் அலுவலகம் வீடு என்றே இருந்துவிட்டதால், எங்காவது வெளியில் போகலாமா எனக் கேட்டாள். ஏற்கனவே தரம்ஷாலா, டல்ஹெசி போன்ற மலைவாசஸ்தலங்கள் பற்றியும் தரம்ஷாலாவில் உள்ள மலை ஏற்றம் (Trekking) பற்றியும் அடிக்கடி சிலாக்கியமாகப் பேசுவாள். அதனால் அங்கேயே போகலாம் என முடிவு செய்தோம்.
எங்க வீட்டில் ஐந்து பேரும் அவங்க வீட்டில் நாலு பேரும் டெல்லியிலிருந்து கிளம்பலாம்; அவங்க வீட்டிலேயே ரெண்டு கார் இருப்பதால் நாமளே ஓட்டிக் கொண்டு போகலாம் என முடிவு செய்தோம். நல்ல குடும்ப சுற்றுலாவாக இருக்கும் எனவும் சந்தோஷப் பட்டுக் கொண்டோம். தரம்ஷாலா, மேக்லியாட்கஞ்ச், அமிர்தசரஸ் மூன்று இடங்கள் செல்லலாம் என முடிவானது.
நான்கு நாட்கள் மேக்லியாட் மலை, ரெண்டு நாட்கள் அமிர்தசரஸ் என வகுத்துக் கொண்டோம்.
தரம்ஷாலா குன்னூர் மாதிரியும், மேக்லியாட் அதற்கு மேல் ஊட்டி போன்றும் அமைந்திருந்தது. எனவே மேக்லியாடில் தங்குவது நன்றாக இருக்கும் என நினைத்தோம். தனிப்பட்ட முறையில் புக் பண்ணும் போது பார்த்தால் தங்கும் விடுதிகளின் வாடகை மிக அதிகமாகத் தெரிந்தது. எனவே டிராவல்ஸ் மூலம் செல்வது கணிசமாக இருக்கும் எனத் தோன்றியது. எங்களது ஆஸ்தான டிராவல் ஏஜண்ட் GT Holidays எனது மருத்துவமனைக்கு அருகிலேயே இருந்ததால் அவர்களிடம் பொறுப்பை விட்டு விட்டேன். டெல்லியில் இருந்தே காரில் போவதற்குப் பதிலாக அமிர்தசரஸ் வரை விமானப் பயணமாகவே ஏற்பாடு செய்துவிட்டார்கள். அது இன்னும் சொகுசுப் பயணமாகத் தெரிந்தது.
தற்செயலாக எங்கள் பிரயாணம் பற்றி அறிந்த நளினியும் அவள் கணவரும் எங்களுடன் வர விருப்பம் தெரிவித்ததால் ஒன்பது பதினோரு பேர் ஆனோம். கிளம்புவதற்கு முன்னால் செய்த ஷாப்பிங், பெட்டி அடுக்கியது, உல்லன் பொருட்களை வீடு முழுக்க தேடி படுக்கையின் தலைமாட்டிலிருந்த பெட்டியில் கண்டுபிடித்தது என அந்த வாரம் முழுவதும் ஏக அலப்பறையாக இருந்தது. நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோரிடமும் டெல்லி செல்கிறோம், ஏதாவது மலை வாசஸ்தலம் செல்லுவோம் என பட்டும் படாமலும் சொல்லியிருந்தேன். Trekking போவது பற்றி சொன்னால் ஏகப்பட்ட ஆட்சேபனைகள் வரும் என்று தெரியும். அதனால் தெளிவாகச் சொல்லவில்லை.
நான் ,எழில், நளினி, ரவி நால்வரும் டிசம்பர் 10 ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றோம். எழில் வெள்ளிக் கிழமை அறுவை சிகிச்சைகளெல்லாம் முடித்துவிட்டுதான் வர முடியும் என அடம் பிடித்ததால் 11.45 pm க்குக் கிளம்பிய கடைசி “வண்டி” யில்தான் ஏறினோம். ஆலீஸ், ரோகித், டேனியல் மூவரும் பெங்களூருவில் இருந்து 9pm மணிக்குக் கிளம்ப வேண்டியவர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறால் எங்கள் நேரத்துக்கே கிளம்பினார்கள். அதனால் டெல்லியில் ஒரே நேரத்தில் இறங்கினோம். மறுநாள் காலை 10 மணிக்குதான் அமிர்தசரஸ் விமானம். புனிதாவின் மகன் ஜெர்ரி அந்த பின்னிரவு நேரத்திலும் எங்களை வரவேற்க விமான நிலையம் வந்துவிட்டான். செம குளிர், 7-8 டிகிரிதான் இருந்திருக்கும். அத்தனை பேரும் வீட்டில் தங்க வசதிப்படாது என்பதால் ஏர்போர்ட் Guest House –இல் அறைகள் ஏற்பாடு செய்திருந்தாள். நல்லா படுத்து உருண்டு ஓய்வெடுத்துக் கொண்டோம்.
காலையில் அதைவிட நல்ல குளிர். ஜெர்ரியும் புனிதாவின் கணவர் அலெக்ஸும் அதிகாலையிலேயே இரண்டு கார்களில் வந்து எங்களை வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்கள். வீடு Guest House க்கு மிக அருகிலேயே இருந்தது. புனிதா அந்த குளிரிலும் எங்களுக்காக நள பாகமாகக் காலை சிற்றுண்டி செய்து வைத்திருந்தாள். இரவு சாப்பாடு சரியாக சாப்பிடாததால் அனைவரும் ஒரு பிடி பிடித்தோம். மீதியானதை பார்சல் பண்ணி எடுத்துக் கொண்டோம்.விமான நிலையம் செல்ல GT Holidays ஏற்பாடு செய்த வண்டி லோதி காலனியில் இருந்த புனிதா வீட்டிற்கே வந்துவிட்டதால் டென்ஷன் ஏதும் இல்லாமல் பிரயாணம் ஆரம்பித்தது.
அமிர்தசரஸில் இறங்கும்போது பார்த்தால் செம வெயில். டெல்லியில் அணிந்த ஸ்வெட்டர் ஜெர்க்கின்ஸ் எல்லாம் திசைக்கு ஒன்றாக கழட்டி எறிந்தோம். எங்களுக்காக காத்திருந்த 12 இருக்கைகள் கொண்ட வண்டியில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மேக்லியாட் நோக்கி பயணம் தொடர்ந்தது. இந்தப் பிரயாணம்தான் கொஞ்சம் அலுப்பூட்டும் வகையில் இருக்குமோ என பயந்திருந்தேன். கிட்டத்தட்ட 4 - 5 மணி நேரம் ஆகலாம் என்றார்கள். பதான்கோட் என்ற ஊர் வழியாகச் சென்று மலையேற வேண்டும். ஆனால் நாங்கள் பெரிய க்ரூப் என்பதால் அரட்டையும் கேலியுமாக சென்றதில் பிரயாண அலுப்பே தெரியவில்லை. நானும் நளினியும் அந்தந்த ஏரியாவில் என்ன உணவு கிடைக்கிறதோ அதையெல்லாம் ருசி பார்த்துவிட வேண்டும் என்று முதலிலேயே ப்ளான் பண்ணியிருந்தோம்.
மதிய உணவுக்கு பஞ்சாபி தாபா சென்றோம். நம்ம ஊர்லே வைச்சிருக்கிறதெல்லாம் டூப்ளிகேட் தாபாக்கள். மக்காச் சோளத்தில் ஒரு ரொட்டி செஞ்சு சுடச் சுட தந்தாங்க பாருங்க. மேஜையில் வைப்பதற்குள் காணாமல் போயிடும், அவ்வளவு ருசி. சுத்த சைவம்தான், ஆனாலும் திகட்டாத சுவை. ஜெர்ரியும் புனிதாவும் எந்தெந்த பதார்த்தம் நன்றாக இருக்கும் என்று சொல்லிச் சொல்லி வாங்கிக் கொடுத்ததில் எழில் கூட மதிய உணவை அளவுக்கு மீறி சாப்பிட்டுட்டாங்க. பதினோரு பேர் சாப்பிட்டும் கைக்கு வந்த பில் மிகச் சொற்பமாக இருந்ததைப் பார்த்து அதிசயித்தோம். உண்ட மயக்கம் அனைவரையும் தூங்க வைத்துவிட்டது. கண்முழித்து பார்க்கும்போது வெளியில் எதுவுமே தெரியவில்லை, சரியான பனிப்பொழிவு.
தரம்ஷாலா அருகில் வந்தபோது ரோடில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மேக்லியாட் செல்வதற்கு இரண்டு மணிநேரம் தாமதமாகிவிட்டது. எங்கள் ஹோட்டல் மால் (MALL) ரோடிலேயே இருக்குமாறு பதிவு செய்திருந்தோம். சீக்கிரம் போய்விட்டால் சின்ன ஷாப்பிங் போய்விடலாமென்று பெண்கள் குழு முடிவு செய்திருந்தோம். வண்டி மால் ரோடில் நுழைந்ததுமே தெரிந்த வண்ண விளக்குகளும், தெருவோரக் கடைகளும் எங்களை “வா வா ” எனக் கூப்பிட்டன. நாலு நாட்களும் இதே இடத்தில்தான் இருக்கப் போகிறீர்கள், இன்று ஓய்வெடுங்கள் என்று துணைவர்கள் பட்டாளம் எங்க ஃப்யூஸைப் பிடுங்கிவிட்டார்கள். ஹோட்டலில் கிடைத்த சூடான உணவும், அறையில் பொருத்தப் பட்டிருந்த ஹீட்டரும், பிரயாண அலுப்பும் சேர்ந்து சுகமான உறக்கத்தைத் தந்தது.
ஞாயிறன்று காலை உள்ளூரில் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பாக்ஸு நீர்வீழ்ச்சிக்கு முதலில் சென்றோம். கிட்டத்தட்ட 2 கி.மீ.சரிவான மலைப்பாதையில் செல்ல வேண்டியிருந்தது. காலையில் புத்துணர்ச்சியோடு இருக்கும்போது அங்கே சென்று வரலாம் என்று ஆயத்த ஆடைகள் ,ஷூ, குல்லா எல்லாம் போட்டு கிளம்பியாச்சு. முதலில் பாக்சுநாக் ஆலயம் , அதன் முகப்பிலேயே அழகான நீச்சல் குளம் என கலகலப்பாக இருந்தது. அங்கே இங்கே நின்று போட்டாக்கள் எடுக்கும்போதே லேசாக வெயில் ஏற ஆரம்பித்துவிட்டது. நீர்வீழ்ச்சியை நோக்கி நடக்கும்போது சூடு ஏற ஆரம்பித்துவிட்டது. A/C தியேட்டரில் இருந்தே பழகிவிட்ட எழிலுக்கு அந்த சூட்டில் நீர்வீழ்ச்சிக்கு வருவது முடியாமல் போய்விட்டது. கீழேயே உட்கார்ந்து கொண்டார்கள். புனிதாவும் அலெக்ஸூம் அண்ணனுக்குத் துணையாக கீழேயே தங்கிவிட்டார்கள். நாங்கள் மேலே ஏறி நீர்வீழ்ச்சியின் குளிர்ந்த நீரை உணர்ந்து ரசித்து சுற்றுச் சூழலையும் நன்கு அநுபவித்தோம்.
இளவட்டங்கள் ஐந்து பேரும் எங்களையும் தாண்டி உயரே சென்று “சிவா கஃபே” என்ற இடத்தில் உள்ள உணவுகளை ருசிக்க சென்றுவிட்டார்கள். எல்லோரும் ஒரு மார்க்கமாகத்தான் வந்திருந்தார்கள். எந்த இடத்தில் என்ன சாப்பாடு ஸ்பெஷல் என்று “கோவலு”(Google)வை சலிச்சுட்டு வந்திருக்காங்க. அவங்க திரும்பி கீழே வரும்வரை நீச்சல் குளம், உடற்பயிற்சி பூங்கா என்று நாங்களும் சுற்றிக் கொண்டிருந்தோம். மதிய உணவு மட்டும் கிடைக்குமிடத்தில் லைட்டாக சாப்பிட்டால்தான் நடக்க முடியும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். நூடுல்ஸ், ஆம்லேட் என நொறுக்கிவிட்டு ‘தால்-லேக்’ நோக்கி சென்றோம். புனிதாவும் அதைப் பற்றிப் பிரமாதமாகச் சொல்லியிருந்தாள்.
காஷ்மீர் சென்றபோது பார்த்த தால் ஏரி பற்றிய கனவுடன் சென்ற எங்களை வரவேற்றது ஒரு சதுப்பு நிலப் படுகை. தண்ணீர் வற்றி மாடு மேயும் குட்டையாகக் காட்சியளித்தது. புனிதாவுக்கு பொறுக்கவே முடியலை.முந்திய தரம் அவள் சென்றபோது அவ்ளோ அழகாக இருந்ததாம். அங்கே நிற்காமல் நேராக ‘நடி’(NADDI) Sun set View Point போயிட்டோம். எதிரே மிக உயரமான மலை முகடுகளின் மேல் உறைபனி போர்வைபோல் போர்த்துக் கிடந்தது. சூரிய அஸ்தமனத்தின்போது தங்கப் பாளங்கள் போல் ஜொலிக்குமாம். வெயிலில் மலை ஏறியதில் ஆலீஸுக்கும் தலைவலி வந்து விட்டதால் அஸ்தமனம் வரை காத்திராமல் அறைக்குத் திரும்பிவிட்டோம்.
திங்கட்கிழமைதான் முக்கியமான நாள். “இமயமலையில் மலையேற்றம்”. ஊரிலிருந்து கிளம்பும்போது எங்கள் ப்ளான் படி, காலையில் ஏறிவிட்டு சாயங்காலத்துக்குள் இறங்கிவிடுவதாகத்தான் ஏற்பாடு. ஜெர்ரி ஏற்கனவே மனாலி போன்ற இடங்களில் கூடாரத்தில் தங்கியிருந்த அநுபவங்களைப் பகிர்ந்து கொண்டதும், எங்க வீட்டு வாண்டுகளும் இரவு தங்கப்போவதாக அறிவித்துவிட்டார்கள். டிராவல்ஸ்காரர்களிடம் பேசி அதற்குரிய கைடு, கூடாரம் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டோம். ஆனால் அந்தப் பாதை செங்குத்தாக ஏறி மலை உச்சிக்கு செல்லும் என்றார்கள். புனிதா தவிர பெரியவர்கள் அனைவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள். எனவே நாங்கள் வேறு ஏற்பாடு செய்து கொண்டோம்.
ஜெர்ரி, பெனிட்டா, ஆலீஸ் ,டேனி நால்வரும் பாக்ஸு நீர்வீழ்ச்சி பாதைவழியே சென்றார்கள். ரோகித்துக்கு ஏற்கனவே முட்டியில் சின்ன பிரச்னை இருந்ததால் அறையில் இருக்கச் சொல்லிவிட்டோம். நாங்கள் ஆறு பேரும் தரம்கோட் வழியாக கொல்லு தேவி கோவில் வரை ஜீப்பில் சென்று , அங்கிருந்து மலையேற ஆயத்தமானோம். எங்களுக்கென்று தனியான கைடும், ஆளுக்கொரு ஊன்றுகோலும் எடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு இரண்டு கிலோ மீட்டரிலும் சின்ன டீக்கடை இருக்கும் என்பதால் அதிக தண்ணீரோ சிற்றுண்டியோ எடுத்து வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எடை தூக்கி நடப்பது சிரமம்.
முந்தின நாளே எழில் நடக்க கஷ்டப்பட்டாங்களே, இன்று என்ன நிலைமையோ என்று சந்தேகப்பட்டேன். ஆனால் காலையிலேயே எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணி ரெடியாகிவிட்டார்கள். ஆரம்பமே மனது பதைபதைக்கும் படிதான் இருந்தது. இதுதான் பாதை என்று கைடு காட்டுமிடத்தில் வெறும் கற்களும் வேர்களுமாகத்தான் இருந்தது. வீட்டில் வருஷத்துக்கு ஒருதரம்தான் முதல் மாடிக்கு ஏறுவேன். அந்தப் பாதையைப் பார்த்ததும் ஏற முடியுமா என்ற மலைப்பும் வந்துவிட்டது. ஆஸ்த்துமா நோயாளி வேறு, Inhaler இல்லாமல் எங்கும் செல்வதில்லை. ஆனாலும் ஒரு வைராக்கியம் வந்துச்சு. ஏற முடியும் வரை ஏறலாம், முடியாத பட்சத்தில் உட்கார்ந்துகொண்டு மேலே செல்பவர்களுக்கு வழிவிட்டு, திரும்பும் வரை கைபேசியில் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்துவிட்டேன்.
உடன் வந்தவர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு பிரச்னை இருந்தது. எழிலுக்கு ஆஞ்சியோ-ப்ளாஸ்ட்டி பண்ணியிருந்தது. நளினிக்கு முட்டி தேய்மானத்தினால் நடக்க சிரமம். ரவிக்கு நுரையீரலில் ஒரு பக்கம் ஏற்கனவே அறுவை சிகிச்சையில் எடுக்கப்பட்டிருந்தது. புனிதாவுக்கு பார்வைத் தொந்தரவு. அலெக்ஸுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் சமீபத்தில் தீவிர சளித் தொந்தரவு இருந்தது. ஆனாலும் ஆறு பேரும் தைரியமாக கிளம்பிவிட்டோம். புனிதாவின் தைரியமூட்டும் பேச்சுக்கள்தான் எங்களுக்கு டானிக். அவள்தான் முன்னாடி இருப்பாள்.
எனக்கு மூச்சுகுழாயில் திணறல் ஏற்படுவதுபோல் தோன்றும்போதெல்லாம் பாறைகளில் சாய்ந்தோ உட்கார்ந்தோ இளைப்பாறிக் கொள்வேன்.
மெதுவாக நடந்தால் போதும் என்று சொல்லிவிட்டதால் மூச்சு வாங்காமல் நடந்தோம். ரொம்ப தூரம் நடந்த மாதிரி தெரியும்போது கைடு கிட்டே கேட்டால் அரை கிமீ வந்திருக்கீங்கன்னு சொல்லுவான். கடுப்பாக இருக்கும். மொத்த தூரம் 9 கிமீ நடந்தால் மலை உச்சிக்குச் சென்று பனிச்சிகரங்களைப் பார்க்கலாம். தெளலதார் மலைக் கூட்டங்கள் தெரியுமாம். உச்சிவரை போக முடியாவிட்டால் மலை முகடுகள் தெரியும் இடம் வரை போகலாம் என்றும் சொன்னான். காலை 9 மணிக்கு ஆரம்பித்த ஏற்றம், மதியம் 2 மணிக்குள் உச்சிக்கு சென்றால் இருட்டுவதற்குள் கீழே இறங்கி விடலாம். ஆனால் நாங்கள் சென்ற வேகத்திற்கு பாதி தூரம்தான் செல்ல முடிந்தது. 1 கிமீ ஏறவே ஒரு மணி நேரம் ஆனது. இடையிடையே ஓய்வு, புகைப்படம் எடுத்தல் என மெதுவாகவே சென்றோம்.
நாங்கள் சென்ற சமயத்தில் வெயில் நன்றாக அடித்ததால் ஸ்வெட்டர் எதுவும் தேவைப்படவில்லை. கையில் பிடித்திருந்த மூங்கில் கம்புதான் உறுதுணையாக இருந்தது. கரடு முரடான தடம், அவ்வப்போது சறுக்கிவிடும் ஜல்லிகள், சட்டென்று செங்குத்தாக உயரும் வழிப்பாதை என்று செம த்ரில்லிங்காக ஏறிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கைடு எங்களை ஓரங்கட்டுவார். வரிசையாக கோவேறுக் கழுதைகள் ஊர்வலமாக வரும். மேலே உள்ள கடைகளுக்கும்,கூடாரங்களுக்கும் வேண்டிய பொருட்கள் அவற்றின் மூலமே கொண்டு செல்லப் படுகின்றன.
ஒருவழியாக 4 வது கிமீயில் இருந்த Magic View Café க்கு வந்து சேர்ந்தபோது ஒரு மணி ஆகிவிட்டது. அதன்பிறகு கொஞ்சம் ஏறத் தொடங்கியதுமே பனிமூடிய மலை முகடுகள் அழகாகத் தெரிய ஆரம்பித்தன.
கிட்டத்தட்ட பாதிதூரம் வருவதற்கே நாலு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. மலை உச்சி வரை செல்வதற்கு சாயங்காலம் ஆகிவிடும். திரும்பும் போது விளக்குகளற்ற கரடுமுரடான பாதையில் இறங்குவது கடினம் என்பதை உணர்ந்து கொண்டோம். ஏகோபித்த முடிவுடன் அங்கிருந்தே திரும்ப ஆரம்பித்துவிட்டோம்.
திரும்பி வரும்போது அந்தக் கடையில் உக்கார்ந்து சாப்பிட்ட நூடுல்ஸ் அவ்ளோ சுவையாக இருந்தது. அந்தக் கடைக்காரரின் பெண் லூதியானா மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். அவ்வளவு சீக்கிரம் இறங்க ஆரம்பித்துமே அடிவாரம் வரும்போது நன்கு இருட்டிவிட்டது. குளிரும் அதிகமாகிவிட்டது. ஆசைகளுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது பெரிதல்ல. பிரச்னைகளை உண்டாக்காமல் சுகத்துடன் திரும்புவது அதைவிட முக்கியம் என்பது எங்கள் எல்லோருக்கும் புரிந்திருந்தது.
எங்களது பாதையிலிருந்து ஒரு முகட்டில் எங்கள் குழந்தைகளின் கூடாரங்களைத் தொலைவில் பார்க்க முடிந்தது. இடையே இருந்த தூரம் குறைவாக இருந்தாலும் நடுவில் பெரிய பள்ளத்தாக்கு இருந்தது. நாங்கள் சென்ற பாதை மெதுவாக உயரம் கூடும்படியாக இருந்தது. அவர்கள் பாதை செங்குத்தாக இருந்ததாக மறுநாள் சொன்னார்கள். மரம் கொடிகள் இல்லாத வெட்ட வெளியாக இருந்ததாம். அஸ்தமனம் அட்டகாசமாக இருந்ததாம். ஆனால் இரவில் யாருமே தூங்கவில்லையாம். ஜெர்ரி மட்டும் எருமைத் தோல்காரன், நல்லா குறட்டை விட்டு தூங்கினான் என டேனி கேலி பண்ணிக் கொண்டிருந்தான். செம குளிராம். ரெண்டு மூணு அடுக்குகளாகப் போட்டிருந்த ஆடைகளோ உறங்கும் பை(sleeping-bag)களோ உதவவில்லையாம். ஆனாலும் புதிய அனுபவம் என்று சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தியர்களில் 40-45 வயது உள்ளவர்கள் மட்டுமே இந்த மலையேற்றத்துக்கு வருவாங்களாம். மற்றதெல்லாம் வெளிநாட்டவர்கள்தான் வயசான பிறகும் வருவாங்களாம். நாங்க எல்லோரும் சீனியர் சிட்டிசன் என்று சொன்னதும் கைடு ஆச்சரியப்பட்டான். முதலிலேயே சொல்லியிருந்தால் எங்ககூட வராமல் சாக்குபோக்கு சொல்லியிருப்பானோ என்று நினைத்தோம். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்து மனிதர்கள் ரொம்ப அன்பாகவும் மரியாதையுடனும் இருப்பார்கள்.கஷ்டமான இடங்களில் பொறுமையாக கைகொடுத்து நடக்க உதவி செய்தான்.
மறுநாள் தரம்ஷாலா, பின்னர் அமிர்தசரஸில் பொற்கோயில், ஜாலியன்வாலாபாக், வாஹா பார்டர் சென்றதெல்லாமே மிகப் பெரிய அநுபவம்தான். ஒவ்வொரு இடத்தைப் பற்றியுமே ஒவ்வொரு அலையாக எழுதலாம். ஆனாலும் இந்த மலையேற்றம் பற்றி எழுத நினைத்ததற்கு முக்கிய காரணம் நமது மன திடத்தை அறிந்து கொள்ளத்தான். ஐம்பது வயதாகும்போதே வாழ்வின் விளிம்புக்கு வந்துவிட்டதுபோல் பேசுபவர்களுடன் சேராதீர்கள். எங்க புனிதா மாதிரி தன்னம்பிக்கையும் மனதிடமும் உள்ளவர்களுடன் சேர்ந்தால் இன்னும் ஒருதரம் கூட மலை ஏறலாம்.
“மனமுண்டானால் மார்க்கமுண்டு”
Dhanu Ezhil

0 Comments:

Post a Comment

<< Home