அலை-54
அலை-54
”பயணங்கள் முடிவதில்லை”
வார இறுதி நாட்களில் ஊருக்கு ஓடிவிடுவதுதான் என் வாடிக்கை. அதனாலேயே விடுதியில் நடக்கும் நிறைய நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியாமலே போய்விடும். ஆனாலும் வாரத்துக்கு ஒருதரம் வீட்டு சாப்பாடு சாப்பிடாவிட்டால் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கும். அம்மாவின் கைமணம் அப்படி.
ஊருக்குப் போவதும் அவ்வளவு ஈஸியான வேலையில்லை.
எங்க ஊர் ஆறுமுகநேரி, திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில்தான் இருக்கிறது என்றாலும் நேரிடையாகச் செல்லும் பேருந்துகள் ரொம்பக் குறைவு. ஸ்ரீராம்பாப்புலர் என்று ஒரே ஒரு பேருந்து மட்டும்தான் எங்கள் ஊர் வழியாகச் செல்லும். மற்ற பேருந்துகள் எல்லாம் அம்மன்புரம் வழியாகவே செல்லும். ராம்பாப்புலரும் ஒரு நாளைக்கு ரெண்டு தரம் மட்டுமே செல்லும். அந்த வண்டியின் நேரக் கணக்கு கல்லூரி விடும் சமயத்துடன் ஒத்துப் போகாது. ராத்திரி எட்டரை வரைக்கும் காத்திருக்கணும். அதனால் ரெண்டு பஸ் மாத்திப் போறதுதான் ஈஸி. எங்க எல்லாருக்குமே அதுவே பழகிப் போயிடுச்சு.
அம்மன்புரம் வழியாகச் செல்லும் பேருந்தில் ஏறினால் குரும்பூரில் இறங்கி வண்டி மாத்தணும். நாசரேத், சாத்தான்குளம் போன்ற ஊரிலிருந்து எங்க ஊருக்குச் செல்லும் வண்டிகளின் கனெக்க்ஷன் அங்கே கிடைத்துவிடும். அப்படி மாறி மாறிப் போகும்போது சில நாட்களில் சாயங்காலக் காட்சி சினிமாவுக்குக் கூட ஆஜராகிவிடுவேன்.
நாசரேத்தில் இருந்து வரும் வண்டிக்கு “டப்பா” பஸ் என்றுதான் பெயர். உண்மையான பெயர் ஜெபமணி ட்ரான்ஸ்போர்ட் என்றாலும் டப்பா பஸ் என்று சொன்னால்தான் எல்லாருக்கும் புரியும். அதன் தோற்றத்தால் அந்தப் பெயர் வந்ததா அல்லது அது போடும் சத்தத்தால் வந்ததான்னு தெரியாது. மருத்துவக் கல்லூரி முடிக்கும் வரைக்கும் டப்பாவும் என்னுடனேயே பயணித்தது.
குரும்பூரில் வண்டி மாறிப் போவதில் இன்னும் ஒரு செளகரியம் இருந்தது. அம்மாவின் கடைக்குட்டி தங்கை பார்வதி சித்தி(பார்சித்தி)யின் வீடு பேருந்து நிறுத்தத்துக்கு எதிரேயே இருக்கும். திருநெல்வேலி பஸ்ஸில் இறங்கி டப்பா பஸ் வர்றதுக்குள்ளே ஓடிப்போய் சித்தி வீட்டில் எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்திடலாம். பஸ்ஸைத் தவற விட்டாலும் சித்தி வீட்டு வாரிசுகளுடன் பொழுது போக்கிவிட்டு அடுத்த பஸ் பிடிச்சுக்கலாம். செல்லமக்கா(செல்லம்மாள்) ராஜமக்கா(ராஜம்மாள்) எல்லாரும் புத்தகப் புழுக்கள் என்பதால் வீடு முழுக்க புத்தகங்களாகக் கிடக்கும். பொழுது போவதே தெரியாது. பருப்பே போடாமல் தேங்காய் அரைத்து ஊற்றி சித்தி செய்யும் வெள்ளக் குழம்பின் வாசம் இன்னும் மனதில் மணக்கிறது.
அம்மாவுடன் பிறந்த பத்துபேரில் பத்தாவது பார்வதி சித்தியின் வாரிசுகள்தான் எங்க எல்லோருக்கும் ரொம்ப நெருக்கம். சித்தப்பாவும் (தரங்கதாரா) கெமிக்கல் வேலை முடிந்ததும் சந்தக்கடை வீட்டை ஒரு விசிட் அடிச்சுட்டுதான் போவாங்க.
திங்கள் கிழமை காலையில் திருநெல்வேலிக்குத் திரும்பிச் செல்ல நாராயணன் பேருந்துதான் வசதியாக இருக்கும். மயில்வாகனம் ட்ரான்ஸ்போர்ட் எதனால் நாராயணன் பஸ் ஆச்சுதோ தெரியாது. எங்கள் ஊரில் உள்ள தரங்கதாரா ஆலையின் பணியாளர்களின் வசதிக்காக அந்த வண்டி மட்டும் புன்னக்காயல் வரைக்கும் ஷண்டிங்க் சென்று திரும்பும். ஆலை நேரப்படி வரும் பஸ் என்பதால் “நாராயணன் பஸ் வந்தாச்சே இன்னும் வேலைக்குக் கிளம்பலையா” என்ற சத்தம் நிறைய வீடுகளில் கேட்கும்.
அந்த வண்டி புன்னக்காயல் போய் வரும் முன்னர் குளிச்சு கிளம்பினால் கல்லூரிக்குச் செல்ல சரியாக இருக்கும். டப்பா பஸ் மாதிரி இல்லாமல் இது கொஞ்சம் அலங்காரமானதாக இருக்கும். இருக்கை வசதிகளும் சுமாராக இருக்கும். எங்க ஊரிலிருந்தே கிளம்புவதால் உட்கார இடம் கிடைத்துவிடும். பள்ளிவாசல் நிறுத்தம்வரை போயிட்டால் உட்காரும் இடம் நிச்சயம்.
திருச்செந்தூர் ரோடில் கல்லூரிக்கு முன்னாலேயே இறங்கிக் கொள்ளலாம். பொடி நடையாக நடந்தால் விடுதி வந்துவிடும். வகுப்புக்கும் சரியான நேரத்துக்குப் போயிடலாம்.
முதல் வருடம் முழுவதும் இப்படியேதான் போனது. இரண்டாம் வருடத்திலிருந்து அனாடமி வகுப்புகள் சீக்கிரம் ஆரம்பித்ததால் நாராயணன் பஸ் கைநழுவிப் போனது. ஆனால் ஊருக்குப் போவதற்கோ, திரும்பி வருவதற்கோ ஜங்ஷன் வரை போனதே இல்லை. அநேகமாக எல்லா நாட்களும் உட்கார இடம் கிடைக்காமல் நின்றுகொண்டே போவதுதான் வாடிக்கை. என்னைக்காவது ஒருநாள் உட்கார இடம் கிடைக்கும். ஆனாலும் அதுக்கும் சோதனை வந்திடும். எங்க வீட்டுக்கு ரொட்டிக்கடை ஸ்டாப்பில்தான் இறங்கணும். கொஞ்சம் அசந்துட்டா, பள்ளிவாசல் நிறுத்தத்துக்குப் போயிடும். பிறகு அங்கிருந்து லொங்கு லொங்குன்னு நடந்து வரணும். அதனாலே முந்தின ஸ்டாப்பிலேயே எந்திரிச்சு நிண்ணுக்கணும்.
இப்போ மாதிரி ஸ்டைலாக Back-pack எல்லாம் கிடையாது. ஜோல்னாப்பை அல்லது கொஞ்சம் பெரிய சைஸ் hand-bagதான் இருக்கும்,சில சமயம் வயர் கூடையும் கையில் தொங்கும்.நாம ஒரு பக்கம் சாய்ந்தால் அது ஒரு பக்கம் இழுக்கும். எங்க ஊர் ரோடுகள் பத்தி சொல்லவே வேண்டாம் “ வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ” ன்னு பாடினவங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும். ரோலர் கோஸ்டர்லே போற மாதிரியே இருக்கும்.
பிரயாணம் எவ்வளவு எரிச்சலூட்டினாலும் வெளியே தெரியும் காட்சிகள் அதையெல்லாம் மறந்து போக வைத்துவிடும். பயணங்கள் முடியவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை அழகு வழி நெடுக இருக்கும்.
கல்லூரி வாசலில் ஏறியதும் எப்படியாவது முண்டியடித்து ஓட்டுநரின் பின் பக்கம் போய்விட்டால் வேடிக்கை பார்ப்பது சுலபமாக இருக்கும். ஓட்டுநர் பின்னாடி பொருத்தியிருக்கும் கம்பியில் சாய்ந்து கொண்டுதான் நிறைய நாட்கள் பயணம் செய்திருக்கிறேன்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் வழிகள் கொஞ்ச தூரத்தில் பிரிந்து விலகிச் செல்ல ஆரம்பித்துவிடும்.அதன்பிறகு வரும் ஒவ்வொரு மைல் கல்லுக்கும் ஒவ்வொரு விஷயம் இருக்கும். கிருஷ்ணாபுரம்தான் முதலில் வரும் முக்கிய கிராமம். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே சுற்றுலாவாக வந்திருப்பதாலும் விசேஷமான கோவில் என்று கேள்விப் பட்டிருந்ததாலும் அதைக் கடந்து போகும் போதெல்லாம் கடைக்கண் பார்வை வீசாமல் சென்றதில்லை. அத்துவானக் காட்டில் ஒரு கோவில், அதன் கோபுரம், நாலைந்து தெருக்களுடன் கூடிய சின்ன ஊர். ரோட்டின் அருகில் ஒரு சிதிலமான கல் மண்டபம். அது எப்பொழுதும் பாழடைந்து இருள் சூழ்ந்து இருக்கும். ஆனாலும் ஸ்தல புராணத்தைப் பின்னாடி படித்தபோது விசேஷி்த்த ஸ்தலம்தான் என்பது புரிந்தது.
அடுத்து வரும் செய்துங்கநல்லூர் தாண்டும்போது இரண்டுபக்கமும் போர்வீரர்கள் மாதிரி நிற்கும் மரங்களின் கூட்டம் எப்போ கடந்து போனாலும் குளுமையாக இருக்கும். அதை ஒட்டி செல்லும் தென்கால் வாய்க்காலில் எப்போதும் அல்லிப்பூக்கள் மந்தகாசமாகச் சிரித்துக்கொண்டே இருக்கும். தமிரபரணியின் தொப்பு வாய்க்கால் என்பதால் தண்ணீர் வற்றி பார்த்ததில்லை. அதன் பின்புலமாகத் தெரியும் வல்லநாடு மலை கார்மேகம் சூழும் நாட்களில் ரொம்ப ரம்யமாகத் தெரியும்.
அதனைப் பார்த்து ரசித்து முடிப்பதற்குள் கருங்குளம் வந்துவிடும். கூடவே இடதுபுறம் தாமிரபரணி ஆறு தளிர் நடை போட்டுத் துணைக்கு வரும்.
ரோட்டின் இருபுறமும் நெருக்கமாக அடைத்துக் கொண்டிருக்கும் வாழைத் தோப்புகளைக் கடந்ததும் கண்ணில் தெரியும் காட்சியை வர்ணனை செய்யவே முடியாது. பெரிய குளத்தின் அடுத்த கரையில் தெரியும் சின்ன குன்று, அதன்மேல் ஒரு கோவில். அஸ்தமன நேரத்தில் அந்த இடத்தைக் கடக்க நேர்ந்தால் உண்மையாகவே பொன் மாலைப் பொழுதாகவே இருக்கும்.இங்கும் அல்லிப்பூக்கள் ஆங்காங்கே மலர்ந்திருக்கும். வலதுபுறம் குளமும் குன்றும் கோவிலும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் போது இடப்புறம் தாமிரபரணியின் மணல் மேடுகளும் நீரோட்டமும் போட்டி போட்டு ரசிக்க வைக்கும் .
ஸ்ரீவைகுண்டம் வரையிலும் ஆறும் நம்முடனேயே கூடவரும். எல்லா பேருந்துகளும் ஸ்ரீவை உள்ளே சென்றுதான் திரும்பும்.
ஸ்ரீவை பேருந்து நிலையத்தில் தேநீர் குடிக்க தாமதிக்கும் பத்து நிமிடங்கள்தான் ரொம்ப இம்சையான பொழுதுகள். திரும்பும் வழியில் இங்கும் அதே மாதிரி வல்லநாடு மலை, ஸ்ரீவை கோவில் கோபுரம், தாமிரபரணி ஆறு அதன் ஆற்றுப்பாலம் எல்லாம் ஒரே நேர் கோட்டில் தெரியும் சில வினாடிகள் ஆராதிக்கக் கூடியவை. ஒரு நாளும் தவற விட மாட்டேன். விடுமுறைக்கு ஸ்ரீவை அக்கா வீட்டுக்கு வரும்போது நீச்சல் பழகிய இடம் என்பதால் அந்த இடத்தின்மீது ரொம்பப் பாசமும் உண்டு.
ஆழ்வார்திருநகரி ஊரில் வீடுகள் நெருக்கமாகவும் அடைசலாகவும் இருந்தாலும் எல்லா வீட்டிலும் கம்பி குத்திய தாழ்வாரங்கள் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு சித்தி வீடு கோவில் பக்கத்திலேயே இருந்தாலும் ஒருநாள் கூட அங்கு இறங்கினதில்லை.
கடையனோடை வரை ஆறும் கூடவே வரும். அது பிரிந்து போனது கூட ஒரு பொருட்டாகத் தெரியாதபடிக்கு காட்சிகள் சட்டென்று மாறிவிடும்.பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள் பரந்து விரிந்து பாதையின் இருபுறமும் மரகதப் போர்வை போர்த்தது போல் இருக்கும். இடையிடையே புள்ளி வைத்ததுபோல் வெள்ளை நிறக் கொக்குகள் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும். அதை ரசித்து முடிப்பதற்குள் குரும்பூர் வந்து விடும்.
குரும்பூரில் பஸ் மாறி ஆறுமுகநேரிக்குப் போகும்போது நல்லூர் குளம் தரைதட்டி நிறைந்து வழியும். ரோடு ரொம்பக் குறுகலாக வேறு இருக்கும். எதிரே இன்னொரு பேருந்து வந்தால் நம்ம வண்டி குளத்துக்குள்ளே விழுந்திடுமோன்னு பயம்மா இருக்கும். ஆனாலும் நம்ம ஓட்டுநர்கள் திறமைசாலிகள்தான், ஒருநாளும் பஸ் குளத்துக்குள் குளிக்கப் போனதில்லை. குளத்துக்கு அப்பால் கெமிக்கல் கட்டிடங்கள் கூட்டம் கூட்டமாகத் தெரியும். அந்தி சாயும் நேரமாக இருந்தால் அதிலுள்ள விளக்குகளின் ஜொலிப்பு மத்தாப்பு மழைதான்.
ஒருவழியாக ஆறுமுகநேரி எல்லையில் தூத்துக்குடி ரோடில் ஏறும்போது உப்பளங்கள் வரிசை கட்டி கிடக்கும் உப்புக் குவியல்கள் வெள்ளை யானைகள்போல் படுத்திருக்கும். நிலாக்காலங்களில் அவையெல்லாம் நிஜ யானைகள் போலவே தோன்றும். நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்து ரயில்வே கேட் மூடாமலிருந்தால் மாலைக் காட்சி சினிமாவுக்குப் போயிடலாம்.
ரொட்டிக்கடை நிறுத்தத்தில் இறங்கும்போது, அப்பாவைப் பார்த்துவிடலாம். பெரும்பாலான நாட்கள் அப்பா பக்கத்து காப்பிக் கடையில்தான் உட்கார்ந்திருப்பாங்க. சினிமாத் தனமான எமோஷனல் காட்சிகளெல்லாம் இருக்காது. யதார்த்தமான பார்வை அல்லது சின்ன தலையாட்டல்தான் . சனிக்கிழமைகளில் ஊருக்கு வந்தால் வாரச்சந்தையின் கசகசவென்ற கூட்டத்துக்கு நடுவே புகுந்து போகவேண்டும். ஏதாவது ஒரு மூலையிலிருந்து தெரிந்தவர்கள் யாராவது ‘தாணு! இப்போதான் வர்றியா” ன்னு கேட்பாங்க. ஆமாம் என்று சொல்லிவிட்டு நேரே அடுப்பங்கரைக்குள் ஐக்கியமாகிவிடுவேன். அங்குதான் அம்மா மதினி எல்லோரும் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
”கிழக்கே போகும் ரயில் “ திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குத் தினமும் சென்றுகொண்டுதான் இருக்கும். ஆனால் ஒருநாள்கூடப் புகை வண்டியில் ஊருக்கு வந்ததே இல்லை. பஸ்ஸில் வந்தால் கல்லூரி முன்னாடியே இறங்கிக் கொள்ளலாம். ரயில் செல்லும் வழித் தடத்தில் சுவையான காட்சிகள் அதிகம் இருக்காது. எல்லாத்துக்கும் மேலே எங்க ஊரில் நிலக்கரி எஞ்சின் தான். வெளியே எட்டிப் பார்த்தால் துண்டு துண்டாகக் கரித் துகள்கள் பறந்து வந்து கண்ணில் விழும். அதுக்குப் பயந்தே ரயிலில் போனதில்லை.
பயணங்கள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பார்வைகள்தான் மாறிக்கொண்டு வருகிறது. நின்று கொண்டு பயணித்த காலம் போய் படுக்கை வசதி கொண்ட பேருந்தை மனம் நாடுகிறது. பேருந்து பயணத்தை விட ரயில் பயணங்கள் சுகமாகத் தெரிகிறது. உள்ளூர் அழகை ஓரம் கட்டிவிட்டு அயல் நாட்டு அழகைத் துரத்திக் கொண்டிருக்கிறோம்.
பயணங்கள் தொடர்கதைதான்.
0 Comments:
Post a Comment
<< Home