Friday, August 27, 2021

அலை-46

 அலை-46

         "உல்லாசப் பயணம்"


கல்லூரி முதல் ஆண்டில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகள் - கல்லூரி ஆண்டுவிழா மற்றும் உல்லாசப் பயணம். எது ரொம்ப பிடிச்சுதுன்னு  சொல்ல முடியாதபடி ரெண்டுமே ரெண்டு வகையான அனுபவங்களைத் தந்திருந்தது.  உல்லாசப் பயணம் ரெண்டுநாள் நிகழ்வாக இருந்ததால் கூடுதல் சந்தோஷம்.


அப்போதெல்லாம் உல்லாசப் பயணம் என்றால் கேரளாவுக்குத்தான் போவார்கள். அதுதான் எங்க ஊருக்கு ரொம்ப பக்கமாக இருக்கும், செலவும் குறைவாக ஆகும். எங்க வகுப்பில் நிறைய பேர் கன்னியாகுமரியை ஒட்டிய ஊர்களிலிருந்தே வந்திருந்ததால் , அவங்களெல்லாம் அதை எப்படி ரசிச்சாங்கன்னு தெரியாது. ஆனால் எங்களுக்கெல்லாம் வெளிநாடு போவதுபோல் கிளுகிளுப்பான டூர். மாநிலத்தைவிட்டு வெளியே சென்ற முதல் டூர் என்று கூட சொல்லலாம். 


 முதல் வருடத்தின் வகுப்புத் தலைவன் மூர்த்திதான் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தான் என்று நினைக்கிறேன். எறும்புபோல் துறுதுறுவென்று சுற்றிக் கொண்டிருப்பான். ஒன்றிரண்டு பேர் தவிர அனைவரும் இணைந்து சென்ற பயணம் அதுவாகத்தான் இருக்கும்.


 நிறைய விஷயங்கள் மறந்து போன மாதிரி இருக்குது. ஆனால் நிறைய நிகழ்வுகள் “டிட் பிட்ஸ்” மாதிரி நினைவலைகளை இதமாக மீட்டுகிறது. வீட்டின் கஷ்ட நிலை உணர்ந்திருந்த நான் எப்படி வீட்டில் பணம் கேட்பது என்ற தயக்கத்துடன் இருந்தேன். ஆனால் நயினார் அண்ணன் மனிதர்களையும் அவர்களின் உணர்வுகளையும் நன்கு உணர்ந்தவன் என்பதால் எப்படியோ ஏற்பாடு செய்து பணம் கொடுத்து விட்டான். இந்த மாதிரி அனுபவங்களைத் தவற விடக் கூடாது என்றும் சொன்னான்.


நீண்ட. ரெண்டு நாள் பயணம். கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திருவனந்தபுரம் என்றெல்லாம் எங்கள் அஜெண்டாவில் இருந்தது. தமிழ்நாட்டின் தலைநகரமே அதுவரை பார்த்ததில்லை. கேரள தலைநகரைப் பார்க்கப் போவதில் ஏகசந்தோஷம். அதிலும் புது இடங்களைப் பார்ப்பதில் எனக்குக் கொள்ளைப் பிரியம்.


 பயணம் செல்ல ஒழுங்கு பண்ணப்பட்ட  நாளிலிருந்தே எங்கள் விடுதியில் ஏகப்பட்ட பரபரப்பு. பஸ்ஸில் வைத்து கோரஸாகப் பாட பாட்டுகளெல்லாம் பிரத்தியேக பயிற்சிகளுடன்  நடந்து கொண்டிருந்தது. ஷுபா, மேகலா, பானு எல்லோரும் சேர்ந்து ஒரு பாய்லா பாட்டு இட்டுகட்டி ரெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் போன்ற சிலருக்குப் பாடுவது என்றாலே என்னவென்று தெரியாது. ஆனாலும் கண்டிப்பாக பாடணும்னு ஒருமித்த கருத்து. அதனால் தினமும் ஏதோ ஒரு அறையில் கூடி ,பாடி pre-tour preparationஐக் கொண்டாடிக் களித்தோம். 


ஆண்கள் விடுதியில் என்ன ஏற்பாடுகள் நடந்தது என்பது தெரியவில்லை,ஆனாலும் அது பற்றிய குறுகுறுப்பு இருந்தது.  பதினேழு வயதுப் பருவத்தின் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து செல்லும் உல்லாசப் பயணத்தின் எதிர்பார்ப்புகள் பற்றி சொல்லவும் வேண்டுமா, செம களேபரம்தான். நாள் நெருங்கி வரவர படபடப்புகளும் புரணி பேச்சுகளும் உச்சமடைந்திருந்தது.


அந்த நாளும் வந்தது. எங்கள் கல்லூரிக்கென்று ஒரு பஸ் உண்டு, .ரொம்ப பழைய பேருந்து ,எப்போது ரிப்பேராகி நிற்குமென்றே சொல்ல முடியாத தன்மையில் இருக்கும். ஆனால் எங்களுக்கெல்லாம் தெரிந்த முதல்  காதல் வாகனம் அதுதான்.அதன் ஓட்டுநர் எல்லா மாணவர்களுக்கும் நண்பராக இருப்பார். பெயர் கூட பாண்டியன் என்று ஞாபகம். பயணத்தன்று அதிகாலையில் விடுதி முன் வந்து வண்டி நின்றது.


 ஏற்கனவே ஆண்கள் விடுதியில் சென்று அனைவரையும் ஏற்றிக் கொண்டு வந்துவிட்டார்கள். அவர்களெல்லாம் பேருந்தின் பின் இருக்கைகள் மற்றும்  இடப்புற வரிசைகளில் அமர்ந்திருந்தார்கள். பெண்களில் dayscholars உம் ஏற்கனவே விடுதிக்கு வந்துவிட்டார்கள். எங்களுக்கு வலப்புற இருக்கைகள் காலியாக வைக்கப் பட்டிருந்தது. அதிலும் முதல் வரிசையில் ஆசிரியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். எனக்கு எப்பவுமே முன்னாடி உட்காரப் பிடிக்கும் என்பதால் ரெண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். சில பல கோஷ்டிகள் பின் வரிசையில் சாய்ந்து கொண்டார்கள்.


செல்வசேகரன், நடனசபாபதி, மகாதேவன், நாராயணசாமி, சத்திய மூர்த்தி சாரெல்லாம் எங்களுக்கு துணையாக வந்திருந்தார்கள். நல்ல வேளையாக சீனியர் சிட்டிசன் ஆசிரியர்கள்  யாரும் வரவில்லை. பெண்களுக்கு பொறுப்பாசிரியராக பெத்தம்மா மேடம் வந்திருந்தாங்களா இல்லையான்னு நினைப்பில்லை. ஏறிய உடன் இருந்த சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆனது. அவங்கவங்களுக்கு வேண்டியவங்க அமர்ந்திருக்கும் இடங்களைக் கண்களால் பதிவு செய்துகொண்டு இருக்கைகள் மாற்றிக் கொள்ளப்பட்டன. 


அதிகாலை என்பதால் நிறையபேர் அறைகுறை தூக்கத்தில் இருந்தோம். தூங்கி விழிக்கும்போது கன்னியாகுமரி கடற்கரைக்கு வந்திருந்தோம்.

கன்னியாகுமரியின் சிறப்பு என்னவென்றால் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரே கடற்கரையில் பார்க்கலாம். எங்களுக்கு  சூரிய உதயம் ஏற்பாடு  பண்ணப்பட்டிருந்தது. அன்னைக்கு சூரியன் உதித்ததா,எங்களைப் பார்த்து வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டதா என்பது மறந்துவிட்டது.  அதை முடித்துவிட்டு விவேகானந்தர் பாறைக்கு விசைப்படகில் சென்றோம். எங்க காலத்தில் திருவள்ளுவர் சிலையெல்லாம் கிடையாது. பாறையில் இருந்த தியான மண்டபத்தில் முழு அமைதி காக்க வேண்டும் என்பது விதி. அதுவரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு வெளியே வந்ததும் கூச்சலும் கும்மாளமுமாக சுற்றிப் பார்த்தோம். கடல் அலைகளை மீறியிருந்தது எங்கள் அரட்டை ஒலி.


காலை சிற்றுண்டி கையில் தந்தார்களா உணவு விடுதிக்குக் கூட்டிப் போனார்களா என்று சத்தியமாக நினைவில்லை. அதன்பிறகு பத்மநாபபுரம் அரண்மனையை நோக்கி நெடிய பயணம். பேருந்து சூடாகிவிட்டதால் இடைவெளியில் இளைப்பாற நின்றபோது மீனாக்கா புடவையெல்லாம் ஏதோ சிந்திவிட்டதால் அருகிலிருந்த வாய்க்காலில் சுத்தம் செய்யப் போனார்கள். நாங்கள் நின்றிருந்த இடத்தில் ரெண்டுபுறமும் தண்ணீர் தளும்பிச் சென்ற வாய்க்கால்கள், பசேலென்ற தென்னந்தோப்புகள், சின்ன தண்ணீர்க் குட்டைகள், அதில் மிதந்து கொண்டிருந்த அல்லிப் பூக்கள் என மிக ரம்யமான சூழல். அங்கிருந்து கிளம்பவே மனமின்றி பேருந்தில் ஏறினோம். இந்த மாதிரி இடங்களில்தான் பின் வந்த நாட்களில் “அலைகள் ஓய்வதில்லை” சினிமா எல்லாம் எடுத்திருப்பார்கள்.


பேருந்து பயணம் போரடிக்காமல் இருக்க பாட்டு பாடலாம் என முடிவெடுத்து ஆரம்பித்தோம். கொஞ்சம் சினிமா பாட்டுகள் பாடிய பிறகு அந்தக்கால பேமஸ் பாட்டான “சுராங்கனி” பாட்டு பாட ஆரம்பித்ததும் அதுவரை பாடலில் இணையாத உம்மணா மூஞ்சிகள்கூட பாட ஆரம்பித்தார்கள். அது முடிந்ததும் ஏற்கனவே விடுதியில் ரிஹர்சல் பண்ணி வைத்திருந்த பாடலைப் பாட முடிவெடுத்து பெண்கள் ஆரம்பித்தோம்.


இறந்துபோன தவளையை சிவப்பு எறும்புகள் ஊர்வலமாக இழுத்து செல்வதை கிராமீய பாடலாக எழுதி பயிற்சி செய்திருந்தோம். எழுதியது யாரென்று மறந்துவிட்டது. ஆரம்ப பல்லவியாக “டொங்கு டொங்கு” என ஆரம்பிக்கணும். அதுக்கு பிறகுதான் பாடல் வரும். நாங்க டொங்குன்னு சொன்னதும் கடைசி வரிசையிலிருந்த ஆண்கள் எல்லோரும் சேர்ந்து டொக்கு டொக்கு- ன்னு எதிர்பாட்டு பாட ஆரம்பிச்சாங்க. திரும்ப நாங்க ஆரம்பிச்சாலும் அதே எதிர்பாட்டுதான். கொஞ்ச நேரம் இழுபறியாக இந்த ரெண்டு வார்த்தைகளிலேயே போராட்டம் நடந்தது. நாங்க பாட ஆரம்பிச்சதும் எங்க சத்தம் அமுங்குறபாணியில் பேருந்தின் தரையில் கால்களால் தட்டி ஒலி எழுப்பி பாட விடாமல் கடுப்பேத்திகிட்டே இருந்தாங்க. எங்க வகுப்புப் பெண்களுக்கோ சுயமரியாதை மிகமி அதிகம். அதனால் நாங்க எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கத்தி கோரஸ் பாடி அந்தப் பாட்டைப் பாடியே முடிச்சோம். பாவம் கடைசி பெஞ்ச் ஆண்களுக்கு மற்ற மாணவர்கள் துணைக்கு வரவில்லை. ராஜேந்திரன், நெடுஞ்செழியன் ரெண்டுபேரும்தான் lead role.


இந்த மாதிரி கலகலப்பான போராட்டங்களின் இடையில் பத்மநாபபுரம் வந்து சேர்ந்ததே தெரியவில்லை. அரண்மனை முழுவதும் சுற்றிப்பார்க்கவே பகல் முழுவதும் கழிந்துவிட்டது. அதன் பிரம்மாண்டமும், கலை நயத்துடன் கட்டப் பட்டிருந்த விதமும் அந்த வயதில் அவ்வளவு ஈர்ப்பைத் தரவில்லை. ஆனாலும் அந்த சூழலும், சுற்றியிருந்த கூட்டமும் ஒருவித மயக்கமான ரசனையைத் தந்தது என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு இடத்தின் வரலாறைச் சொல்லும் போதும் அதைக் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்யும் இளவட்டங்கள் உடனிருக்கும் போது கருங்கல்கூட காவியமாகத்தானே தெரிந்திருக்கும். அதிலும் கடைசி பெஞ்ச் ஆட்கள் எல்லாரையும் கலகலப்பாக ஆக்கிவிடுவார்கள். 


திருவனந்தபுரத்தை  நெருங்க ஆரம்பித்ததும் இயற்கைத் தன்மை குறைந்து நகர்ப்புறம் அதிகமானது. நாங்க எல்லோரும் வார்த்தைகளை தலைகீழாகப் பேசுவதில் தேர்ந்துவிட்டதால், ரோடுகளில் நின்றிருந்த காவலர்களை நோக்கி “ஸ்லீபோ” என கத்தி கைகளை ஆட்டிக் கொண்டே சென்றோம். அவர்களும் ஏதோ வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்து பதிலுக்கு கையசைத்தார்கள். இரவு சாப்பாட்டிற்கு பரோட்டா கடைகளில் சாப்பிட இறக்கினார்கள் போலும். மறுநாள் காலையில் ஊர் சுற்றிப் பார்க்க போக வேண்டுமென்பதால் சீக்கிரமே எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதிகளில் தூங்கச் சென்றோம். ஆனாலும் அன்றைய நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனங்களும், வியாக்கியானங்களும் ரொம்ப நேரம் ஓடிக் கொண்டிருந்தது. 


திருவனந்தபுரத்தில் மிருகக் காட்சி சாலை பார்த்ததுதான் நல்லா நினைவிருக்கிறது. அதிலும் பெரிய மனிதக் குரங்கு முன்பு நின்று சேட்டைகளுடன் கமெண்ட் அடித்து பார்த்தது சுவாரசியமான விஷயம். விமான நிலையம் அருகில் எதற்கோ கூட்டிச் சென்றார்கள். முதல் முதலாக விமானத்தை அருகில் பார்த்தோம். விமான நிலையத்தை அதன் சுற்றுச்சுவருக்கு வெளியே நின்று பார்த்தோம்.


மற்ற இடங்களெல்லாம் பார்த்துவிட்டு ஊர் திரும்ப பேருந்தில் ஏறினோம். கொஞ்சநேரம் பாட்டு,எதிர் பாட்டுபாடிக் கொண்டிருந்தோம். மிக நெடிய பயணம் என்பதால் நிறைய பேர் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். முன் வரிசையில் அமர்ந்திருந்த ஆசிரியர்களுடன்  தங்கராஜ், நான் எல்லோரும் சேர்ந்து சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டு வந்தோம்.


விடுதியில் இறங்கும் நேரம் வந்ததும் எல்லோருக்கும் பயணம் அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டதே என்று சின்ன கவலை. ஆனாலும் அசதி அதிகமாக இருந்ததால் அவரவர் அறைகளை நோக்கி மவுனமாக பயணித்தோம்.


" பயணங்கள் முடிவதில்லை".


எங்க நாட்டுப்புறப் பாடல்:


"கட்டெறும்பு மொய்க்க மொய்க்க

உங்க காலும் கையும்

தொங்கத் தொங்க

சிவத்த குதிரை ஏறி

சிவலோகம் போறீயளே

டொங்கு டொங்கு

டொங்கு டொங்கு "

0 Comments:

Post a Comment

<< Home