அலை-42
அலை-42
தேர்தல் என்று வந்துவிட்டாலே எல்லாமே தலைகீழாகத்தான் மாறிவிடும் போல் இருக்கிறது. நாங்கள் முதலாமாண்டு படித்தபோது மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவையின் தேர்தல் நடந்தது.கல்லூரி முழுவதும் ஒரே களேபரமாக இருந்துச்சு. மாணவர்களிடையே எத்தனை எத்தனை பிரிவுகளையும் பிணக்குகளையும் உண்டாக்கியது .
நான் வார இறுதி நாட்களில் திருநெல்வேலியில் இருந்த பெரியக்கா வீட்டிற்கு சென்றுவிடுவேன். அதனால் தேர்தல் களேபரங்களில் அதிகமாக சிக்கவில்லை. நிறைய விஷயங்கள் புரியாமலே இரு.துச்சு.
எந்தக் காலமாக இருந்தாலும் தேர்தலின்போது மதம், சாதி பிரிவுகள் போன்றவற்றின் ஆளுமைகள் தவிர்க்க முடியாதது போலும். நாற்பத்து நாலு வருடங்களுக்கு முன்னரும் ,இன்றைய தேர்தலுக்கு சற்றும் வேறுபாடின்றி சாதீய அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி தேர்தல் களைகட்டிக் கொண்டிருந்தது. புரிந்தும் புரியாமலும் ஒவ்வொரு குழுவில் சேர்க்கப்பட்டு பந்தாடப் பட்டோம். நான் எந்த க்ரூப்பில் இருந்தேன் என்று எனக்கு கடைசி வரை ஞாபகம் இல்லை.
தேர்தல் வந்ததால் நடந்த மிக நல்ல விஷயம், ராகிங் என்பதே இல்லாமல் போனதுதான். ராகிங்க்கு பயந்து சீனியர்களைத் தவிர்த்து ஓடிக்கொண்டிருந்தது மாறிப்போய் ,வி.ஐ.பி.கள் மாதிரி மிதப்பாக அலைந்தோம். பெரிய தலைகள்தான் எங்களைத் தாங்கிக் கொண்டாடினார்கள்.
இரண்டு பெரிய தலைகள் மோதிக் கொண்டார்கள். ரெண்டுபேரையும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் விடுதியிலிருந்த சீனியர்கள் மூலம் சில சமயம் தன்மையாகவும், சில நேரங்களில் மிரட்டலாகவும் அவர்களைப் பற்றிய பரிந்துரைகள் வரும். பூம் பூம் மாடுகள் மாதிரி தலையை ஆட்டிக் கேட்டுக் கொள்வோம். பெண்கள் சார்பாக பிளாரன்ஸ் அக்காவும் G.E.லதா அக்காவும் போட்டி போட்டாங்க. ரெண்டு பேருமே விடுதியில் இருந்ததால் ரெண்டு கோஷ்டியும் விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப் முடிந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு சீனியர் வழி மறித்து நீ சோடியமா என்று கேட்டார். கெமிஸ்ட்ரி சம்பந்தமான கேள்வியை அவர் ஏன் கேட்கிறார் என்று புரியவில்லை. அதற்குள் யாரோ விரிவுரையாளர் வந்ததால் பதில் சொல்லும் முன்பே விலகிப் போய்விட்டார். எனக்கு ஒரே மண்டைக் குடைச்சலாக இருந்தது. கெமிஸ்ட்ரி லேபில் ஏதோ சேட்டை பண்ணியதை கண்டுபிடித்துவிட்டதாக பயந்து போய்விட்டேன்.
விடுதிக்கு வந்ததும் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது சோடியம் கதையைச் சொன்னேன். சிலர் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள், சிலர் சந்தோஷமாக ஆரவாரித்தார்கள். ஏனென்று சொல்லாமல் கொஞ்ச நேரம் கலாய்த்துவிட்டு மெதுவாக விளக்கம் சொன்னாங்க. யார் விளக்கினாங்கன்னு மறந்துடுச்சு. கெமிஸ்ட்ரியில் சோடியம் உப்பின் சிம்பல் (SYMBOL) Na+. அது ஒரு சாதிப் பிரிவின் முதல் இரண்டு எழுத்துகள். இலை மறை காயாக நான் அந்த பிரிவைச் சேர்ந்தவளா எனக் கேட்டிருக்கிறார். நான் அக்கா வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்ததால் இந்த சங்கேத பாஷைகளெல்லாம் முதலில் புரியவில்லை. போகப் போக புரிந்து கொண்டேன்.
தேர்தல் முடிந்து மாரியப்பன் என்பவர் ஜெயித்ததாகவும், பிராயன் சக்ரவர்த்தி என்பவர் தோற்றதாகவும் முடிவுகள் வந்தன. அதுவரைக்கும் வகுப்புக்குள்ளேயே ஒருவித இறுக்கமான சூழ்நிலை இருந்து கொண்டிருந்தது. முடிவு வெளியானதும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து இயல்புக்கு மாற ஆரம்பித்தோம். தேர்தல் காரணமாக மாணவர்களிடையே சின்ன சின்ன க்ரூப்புகள் பிரிய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் பெண்கள் விடுதியில் அப்படி எந்த பிரிவினையும் தென்படவில்லை.
எங்கள் கல்லூரி தமிழ் நாட்டின் தென்கோடியில் இருந்ததால் நிறைய மாணவ மாணவிகள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களது பேச்சுத் தமிழ் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் “ மக்கா, மக்களே” ன்னுதான் கூப்பிடுவாங்க. முதலில் கொஞ்சம் காமெடியாகத் தெரிந்தாலும், பின்னர் அதுவே பிடித்துப் போய்விட்டது. மச்சான்ஸ் என்ற வார்த்தை மாணவர்களிடையே ரொம்ப பிரபலம் (நமீதா எங்களிடமிருந்துதான் காப்பி அடிச்சிருப்பாங்க). பிடிக்காத யாரைப் பார்த்தாலும் “இவன் சரியான தொட்டி”ன்னு சொல்லுவாங்க, விசித்திரமான உவமானமாக இருக்கும்.
எங்கள் மருத்துவக் கல்லூரி(டிவிஎம்சி)க்குன்னே ஸ்பெஷல் பாஷை ஒன்றும் உண்டு. எல்லா வார்த்தையையும் தலை கீழாக்கிப் பேசுவது. ’மாடு’ என்பதை ’டுமா’ன்னு சொல்லிட்டு அதிலும் ஒரு எக்ஸ்ப்ரஷனாக ’ஸ்’ சேர்த்து ”டும்ஸ்” என்று கூப்பிடுவது. பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் சுலபமாக திருப்பிப்போட்டு பேசுவார்கள். முதலில் ஒண்ணுமே புரியாது. போகப் போக நாங்களே அப்படிப் பேச ஆரம்பித்துவிட்டோம். அதிலும் “கைக்ழுவ” (வழுக்கை) என்ற வார்த்தை ரொம்ப பிரச்னைகளை பின் வந்த காலங்களில் உண்டாக்கியது. சில நேரங்களில் தேர்ந்த வித்தகர்கள் பெரிய வாக்கியத்தைக் கூட ரிவர்ஸ் பண்ணிப் பேசுவாங்க. டுபாப்சா(சாப்பாடு)தான் எல்லார் வாயிலும் புகுந்து வதைபடும் வார்த்தை.
கல்லூரியை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் மற்றவர்கள் அறியாமல் கதைப்பதற்கு இந்த மொழியையே பயன்படுத்துவோம். வகுப்பறையில் ஆசிரியருக்குத் தெரியாமல் சில்மிஷங்கள் பண்ணவும் இந்த மொழியே பயன்படும். இப்படியே பேசிப்பேசி, சில நேரங்களில் முறையான வார்த்தைகள் கூட பிழையாகத் தோன்றுவதும் உண்டு.
நல்லவேளையாக தமிழைக் கொலை செய்வதாகக் கூறி யாரும் எங்களை வதைத்தெடுக்கவில்லை.
0 Comments:
Post a Comment
<< Home