அலை-41
அலை-41
”அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” தினம் தினம்…..
கல்லூரியின் முதல் வருட அநுபவம் பின்பக்கத்தின் பளீரொளி(Flash-back)யின் இனிய தொடக்கம். முதல் முத்தம், முதல் காதல் போல் முதல் வருட கல்லூரி அநுபவமும் தனித்துவம் வாய்ந்ததுதான். ஒவ்வொரு நாளும் புதுப்புது நிகழ்வுகள் புதிய உறவுகளின் அறிமுகம். ஆனால் முதலாண்டின் படிப்பு மட்டும் அரைத்த மாவையே அரைத்தது போல் பழைய பஞ்சாங்கம். ஆனால் அதையும் சுவைபட ரசிக்கும்படியாக நிறைய விஷயங்கள் இருந்தது.
கற்பித்த ஆசிரியர்கள் அநேகம்பேர் மருத்துவர் அல்லாத மருத்துவக்கல்லூரி ஆசான்கள். முதல் வருடத்தில் அடித்த லூட்டிகளும் சேட்டைகளும் மருத்துவப் படிப்பில் பின் விளைவுகளை ஏற்படுத்தாத அளவுக்கு சுதந்திரம் தந்திருந்த பெருந்தன்மையாளர்கள். அதனாலேயே பயமறியாக் கன்றுகளாக பாடிப் பறந்து திரிந்தோம்.
வகுப்பறை மூன்றாம் மாடியில் இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திற்குரிய ஆய்வகங்கள் வெவ்வேறு மூலைகளில் இருக்கும். பிஸிக்ஸ் லேப் கீழ்தளத்தின் மேற்கு மூலை என்றால், கெமிஸ்ட்ரி லேப் கிழக்கு மூலையில் இருக்கும். பயாலஜி ஆய்வகம் மூன்றாம் மாடியிலேயே இருந்தது. வகுப்புகளுக்கு ஓரிடமும், ஆய்வகங்களுக்கு வேறிடமுமாக வராண்டாக்களில் நடைபயில்வதுததான் அந்தக் காலத்தில் எங்களுக்குப் பிடித்த எக்ஸ்கர்ஷன்.
ஒரே கூட்டமாக இணைந்திருந்த எங்களை, ஆய்வகங்களின் இட வசதி மற்றும் இலகுவாக கற்பித்தல் காரணமாக மூன்று குழுமங்களாகப் பிரித்துவிட்டார்கள், ஒவ்வொரு குழுமத்திலும் சுமார் இருபத்தைந்து பேர் இருப்போம். அதன் அடிப்படையில் பூத்த சிறு சிறு நட்பு வட்டங்கள் நெருக்கமானதும் இந்த அடிப்படையில்தான். என் பெயர் ‘ T ’ யில் ஆரம்பித்ததால் மூன்றாம் குழுமமான ‘ C ‘ Batch-இல் இணைந்தேன். மருத்துவக் கல்லூரியில் ‘ C ‘ Batch என்றால் பெயிலாகி அடுத்த வருஷம் படிக்கும் additional batch என்றும் அர்த்தம் உண்டு.
ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பேராசிரியர், உதவி பேராசிரியர், விரிவுரையாளர் மற்றும் செய்முறை ஆசிரியர்கள் என ஏகப்பட்டபேர் உண்டு. ஒவ்வொரு ஆசிரியரைப் பற்றியுமே ஒரு பதிவு போடலாம். அவ்வளவு interaction ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருந்தது. மருந்துக்குக்கூட ஒரு பெண் விரிவுரையாளர் கிடையாது.
ஆங்கிலத்திற்கு மட்டும் ஒரே ஒரு பேராசிரியர் இருந்த மாதிரி ஞாபகம். சிங்கம் மாதிரி சிங்கிள் ஆக இரூந்திருப்பார். தலைகீழ் ’ப’ வடிவ மீசையுடன் அக்கா வீட்டு பனைக்கு முக்கால் பனை உயரத்துடன் இருப்பார். ஆங்கிலத்தில் என்ன படித்தோம், என்ன பரீட்சை எழுதினோம் என்றே நினைவில்லை. எங்கள் வகுப்பறையின் வாசலை ஒட்டியே அவர் அறையும் இருந்ததால் தினசரி அவரைப் பார்க்கும் பாக்கியம் உண்டு.
பயாலஜி ஆய்வகம் எனக்கு ரொம்ப பிடித்த இடம். பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி மாதிரி கற்பனையில் படிக்காமல் கண்முன்னே படிப்பதால் , அதற்கென்று ஒரு ரசனை உண்டு. பேராசிரியர் Dr. பாலகிருஷ்னன், மலையாளி என்று நினைக்கிறேன், ரொம்ப பேச மாட்டார். ஆனால் அவரது வகுப்புகள் நீரோடைபோல் தெளிவாக இருக்கும். அவருக்கும் சேர்த்து டெமொன்ஸ்ட்ரேட்டர் அடுக்கு மொழியில் பேசி அசத்துவார். அவருக்கு ரைமிங் words என்று பட்டப்பெயர் வைத்தே கூப்பிட்டதால், இயற்பெயர் மறந்தே போய்விட்டது, கருப்பைய்யா சார் என்று நினைக்கிறேன். ஒரு வார்த்தை சொல்லும்போது அதுக்குள்ள இணைச்சொற்கள் (synonyms) நாலைந்தாவது சேர்த்துதான் சொல்லுவார். அவருக்கு பெரிய fan-club உண்டு. AP என்றழைக்கப்படும் அருள்பிரகாசம் சாரும் ரொம்ப பேச மாட்டார், முகத்திலும் எந்த பாவனையும் தெரியாது.
பிஸிக்ஸ் லேபில் பேராசிரியர் ரொம்ப தங்கமானவர். எல்லோரையும் தன் குழந்தைகள் போல் கரிசனையுடன் நடத்துபவர். தும்பைப்பூ மாதிரி நரை முடியுடன் வலம் வருபவரை , நாங்கள் “பெரியப்பா” என்று செல்லமாக அழைப்போம். லேசாக கூன்போட்டு ஆடி ஆடி நடந்து வருவதைப் பார்க்கக் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும். உதவி பேராசிரியர் கனகசபாபதி சார் உர் உர் டைப். சிரிக்கவே மாட்டார். அவர் பேசுவதே காதில் விழாத மாதிரி மெல்லிசாகத்தான் பேசுவார் . ஆனாலும் அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயம்தான். அவருக்கு நேர் எதிரிடையாக இருப்பார் மஹாதேவன் சார். படபடப்பாக பேசிக் கொண்டு ஜாலியாக இருப்பார். நன்கு பாட்டும் பாடுவார். என்ன சந்தேகம் என்றாலும் அவரிடம்தான் கேட்போம்.
கெமிஸ்ட்ரி லேப் போகக் கொஞ்சம் கடியாகத்தான் இருக்கும். அதன் பேராசிரியர் பெயர்கூட மறந்துவிட்டது. ரெட்டி என முடியும் பெயர் என்பதால் சீனியர்கள் அவரை ”ரொட்டி” என்றே அழைப்பார்கள். நாங்களும் அந்த பெயரையே பழகிக் கொண்டோம். உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து அவர் நடந்து சென்றதைப் பார்த்ததே இல்லை. உதவி பேராசிரியர் சமத் சார்ன்னு நினைக்கிறேன். கஷ்டமான கெமிஸ்ட்ரி கூட இஷ்டமாகிற மாதிரி சொல்லித் தருவார். அவரும் ரிசர்வ்ட் டைப்தான்.ஆனாலும் அவரிடம் ஒரு ஒட்டுதல் இருக்கும். பாபனாசம் சார் எதிலும் Cut&right ஆக இருக்கும் பேர்வழி. அதனால் அவருக்கு பட்டப் பெயரெல்லாம் வைக்கவில்லை. அநியாயத்துக்குக் குள்ளமாக இருப்பார், அதனால் உயர வளர்ந்த வணங்காமுடிகள்கூட தலைகுனிஞ்சுதான் அவரிடம் பேசணும் .அவர் பாடம் எடுக்கும் பாங்கு நன்றாகவே இருக்கும்.
செல்வசேகரன் சார் ரொம்ப இயல்பாகப் பழகக் கூடியவர். எல்லாருடைய குடும்ப விபரங்களையும் விசாரிப்பார், கவலையுடன் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லுவார் .அதனால் அவரிடம் எல்லோருக்கும் நல்ல நட்பு இருக்கும். நாங்கள் கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் புதிதாக சத்யமூர்த்தி சார் டெமான்ஸ்ட்ரேட்டர் ஆகச் சேர்ந்தார். படித்து முடித்தவுடன் வந்திருந்ததால் எங்களைவிட நாலைந்து வயது வித்தியாசம் மட்டுமே இருந்திருக்கும். வாத்தியார் என்பதைவிட சீனியர் என்று நினைக்கிறமாதிரி இருப்பார். மேலும் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்புடன் அவர் பேசுவதைக் கேட்க காமெடியாக இருக்கும். வகுப்பில் அவரது உச்சரிப்பைக் கேலி பண்ணி அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும். அவருக்கு பெண்களெல்லாம் சேர்ந்து ஒரு பட்டப் பெயர் கூட வைத்திருந்தோம்.
நாராயணசாமி சார் என்று Statistics ஆசிரியர் உண்டு . ஐந்தாவது வருடம் SPM exam இல் எழுத வேண்டிய Statistics பரிட்சைக்கு முதலாம் ஆண்டில் வகுப்பெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. Mean mode median என்றெல்லாம் எதேதோ புரியாத மொழியில் பேசிக் கொண்டிருப்பார். அநேகமாக எல்லோரும் சத்தமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். (SPM பரீட்சை எழுதியபோதுதான் அவர் எடுத்த வகுப்புகளின் முக்கியத்துவம் புரிந்தது.)
எல்லா உதவி பேராசிரியர்களும் கண்டிப்பாகத் தென்பட்ட போது, அனைத்து டெமான்ஸ்ட்ரேட்டர்களும் இயல்பாக இருந்ததால் வகுப்புகள் போரடிக்காமல் சென்றது.
எங்களுக்கு அடுத்த batch உடன் முதலாமண்டு pre-clinical வருஷம் நிப்பாட்டப் பட்டுவிட்டது. ஜூனியர்களெல்லாம் நேரடியாக அனாடமி படிக்க வேண்டியதாகிவிட்டது. நாங்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். ராகிங் பிரச்னைகள், வீட்டு ஞாபகத்தால் வரும் ஹோம் சிக்னஸ் எல்லாவற்றையும் முதலாண்டிலேயே கடந்து வந்துவிட்டதால் அனாடமி படிக்கப் போகும்போது தெளிந்து விட்டோம். ஐந்தரை வருடங்கள் + ஒரு வருஷம் ஹவுஸ் சர்ஜன் என ஆறறை வருடங்கள் படித்தோம். அந்த நீண்ட பயணத்தில் தொடர்ந்த நட்பு என்பதால் 77 BATCH இன் நட்பு இன்றும் இறுக்கமாகவும் இணக்கமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முதலாமாண்டு பாடங்கள் மருத்துவப் படிப்பிற்கு உதவியாக இருந்ததோ, இல்லையோ அந்த வருடத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் வாழ்க்கைக்கு ரொம்ப தேவையாக இருந்தது. வாழ்க்கையின் மிக முக்கிய பருவமான விடலைப் பருவத்தில் தொடங்கி வாலிப வயதுகளில் வந்த நட்பு தனிதான். ஒவ்வொருவரின் பலம் பலவீனம் எல்லாம் பாசாங்குகளற்று வெளிப்பட்ட வெள்ளந்தியான பருவம்.
மறுபடியும் வாழ முடியுமா என ஏங்க வைத்த காலம்,
நினைவலைகளாகவாவது வலம் வரட்டும்.
0 Comments:
Post a Comment
<< Home