Tuesday, December 15, 2020

அலை-32

 அலை-32

“நோய் நாடி நோய் முதல் நாடி”ன்னு அறிவார்த்தமாகப் பாடினாலும் எல்லாத்தையும் உள்ளடக்கியது கைநாடி தான். மருத்துவம் அசுர வேகத்தில் வளர்ந்தாலும் அடிப்படை என்னமோ கைபிடிச்சு (பல்ஸ்) நாடித்துடிப்பு பார்ப்பதில்தான் இருக்குது.  


சமீப காலமாக மருத்துவ உலகமே கலப்பட மருத்துவ சிகிச்சைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. நானும் அதில் ஒரு அங்கம்தான். ஆனால் அறுபதுகளில் இருந்த நிலைமையே வேறு.

அலோபதி, ஹோமியோபதி, சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம்னு ஏகப்பட்ட மிக்ஸிங். எதுவானா என்ன சீக்கிரமாகக் குணமாகி அன்றாட இயல்புக்கு  திரும்பணும் என்பதற்கு மேல் யோசித்ததில்லை. தரம்பிரித்து வைத்தியம் செய்யும் அளவுக்கு விஞ்ஞானமும் வளரலை வியாதிகளும் அதிகமாக இல்லை. இருக்கிறதைவிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படும் வசதி வாய்ப்புகளும்  இல்லை. இருப்பதில் எது தோதாக உள்ளதோ அந்த வைத்தியமே சிறந்ததாக இருந்தது.


எங்க ஊர் மொத்தத்துக்கும் ஒரே ஒரு அலோபதி மருத்துவர்தான் உண்டு. அய்யாத்துரை டாக்டர்தான் சுத்துப்பட்டு கிராமங்களுக்கும் பரிச்சியமான கைராசி மருத்துவர். ஆறுமுகநேரி தர்மாஸ்பத்திரி (அரசு இலவச மருத்துவமனை) யின் நிரந்தர மருத்துவரும் அவர்தான். வீட்லே யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா நேரே தர்மாஸ்பத்திரிக்குப்போய் வரிசையில் நின்று நாலைந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டால் வியாதியெல்லாம் "போயே போச்சு" . அதுக்கும் சரியாகவில்லை என்றால் சாயங்கால வேளைகளில் அவரது வீட்டில் தனியார் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் என்ன வியாதிக்குப் போனாலும் இடுப்பில் இரண்டு ஊசிகள் நிச்சயம் . அதுக்கு பயந்தே காலையில் அரசு டிஸ்பென்ஸரியில் மாத்திரை வாங்கிக் கொள்வோம். கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கே ஊசி போடுவது குறைவு.


அதே டிஸ்பென்ஸரியில் நர்ஸாக வேலைபார்த்த ராசமக்கா (ராஜம்மாள்) தான் ஊசி போடுவது, புண்ணுக்கு  கட்டு போடுவது எல்லாம் பண்ணுவாங்க . எங்க குடும்பத்துக்கு ரொம்ப தெரிந்தவங்க ,அவங்க மகனும் தம்பி நானாவும் வகுப்புத் தோழர்கள்  என்பதால் நிறைய நாட்கள் மருத்துவரைப் பார்க்காமலே அக்காவிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டு ஓடி வந்துவிடுவோம். நாலைந்து வாசல்கள் கொண்ட மருத்துவ நிலையம் என்பதால் பின்னாடி வழியே போயிட்டு அப்படியே ஓடி வந்துவிடலாம். அய்யாத்துரை டாக்டரிடம் அவ்ளோ பயம்.

 

தரங்கதரா கம்பெனி டிஸ்பென்ஸரியில் வகுப்புத் தோழி லக்ஷ்மியின் அப்பா மருத்துவராக இருந்தார். ஆனாலும் ஏனோ அங்கு வைத்தியம் பார்க்கப் போனதில்லை. அங்கு வேலை பார்த்த கம்பவுண்டர் அண்ணாச்சிதான் காய்ச்சல் சளி போன்ற சிறு வியாதிகளுக்கு மாத்திரை தந்து உதவி செய்வார்.


 வீட்டிலேயே பாட்டி வைத்தியமும் நடக்கும். சளி பிடித்தால் ஆவி பிடிப்பது, நெத்தியில் பத்து போடுவது (வடிவேலு ஸ்டைலில் ’பத்து’ இல்லை), கஷாயம் குடிப்பதுன்னு கொடுமையான வைத்தியங்களும்  நடக்கும், நாங்க ஓடி ஒளிஞ்சுக்கிறதும் நடக்கும். இந்த கஷாயம் குடிக்கிற கொடுமைக்கு பயந்தே அலோபதி மாத்திரைகளை முழுங்கிடுவோம்.  ரொம்ப முரண்டு பிடிச்சா அய்யாதுரை டாக்டர்கிட்டே போகலாம்னு சொல்லுவாங்க சப்த நாடியும் கப்சிப்புன்னு ஆகிடும். மடக் மடக்னு கஷாயத்தைக் குடிச்சுட வேண்டியதுதான். 


கஷாயத்திலே வேறே ஏகப்பட்ட வித்தைகளை வைச்சிருப்பாங்க, வித விதமா காய்ச்சுவாங்க. பூச்சி மருந்துன்னு வேப்பிலைக் கஷாயம் தருவாங்க. அந்தக் கசப்பைக் குடிச்சா, மனுஷங்களே நாக்அவுட் ஆயிடுவாங்க,புழு பூச்சியெல்லாம் எம்மாத்திரம்? சளியை முறிக்கிறதுக்குன்னு இஞ்சிச்சாறு கொதிக்கவைச்சு தருவாங்க,அது காரமோ காரம்.  குத்திருமல் ( குத்தி குத்தி தொடர்ச்சியா இருமுறது) சரி பண்ண பச்சை வெங்காயம் கூட நண்டு   சேர்த்து உரலில் இடிச்சு ஒருவிதமான சாறு செய்வாங்க,மூக்கு பக்கம்கொண்டு வந்தாலே வாந்தி வந்திடும். இப்படி ஏகப்பட்ட மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையாக ஒவ்வொரு வீடும் இருக்கும். மினி மருத்துவர்களாக அம்மாவும் ஆச்சியும் இருப்பாங்க. இதெல்லாம் சித்த வைத்தியமா ஹோமியோபதியான்னு தெரியாது, ஹோம் வைத்தியம்னு மட்டும் தெரியும். அம்மாவா அய்யதுரையா என்பது நம்ம சாய்ஸ்தான். எழுபதுகளின் தொடக்கத்தில் வெளியூரிலிருந்து வந்து தனியார் க்ளினிக்  நடத்திய மருத்துவர்களால் கொஞ்சம் பயம் தெளிந்து வைத்தியம் பார்த்துக் கொண்டோம். 


அந்தக்காலத்தில் டைபாட்டிக்(Typhoid) காய்ச்சல்  தான் ரொம்ப சீரியஸான நோய். திருச்செந்தூர் தர்மாஸ்பத்திரிக்குப் போய் பெட்லே சேர்த்துதான் வைத்தியம் பார்க்கணும். எனக்கு ஏழெட்டு வயசு இருக்கும்போது அங்கே அட்மிட் ஆகி பத்து நாளைக்குமேல் தங்கியிருந்து அப்புறம்தான் காய்ச்சல் சரியானது. அதுக்குப்பிறகு அந்த மருத்துவமனைக்குள் இன்றுவரை நான் போனதே இல்லை. காய்ச்சல் சரியான பிறகு ஒரு பத்தியம் வைப்பாங்க பாருங்க அதைவிட காய்ச்சலில் கிடப்பதே மேல். புளி காரம் கூடாதுன்னு கஞ்சி மட்டும்தான் கிடைக்கும். அதுக்குப்பிறகும் புளில்லாக் கறின்னு உப்பு சப்பில்லாத குழம்பு ஒண்ணு ஸ்பெஷலா செய்வாங்க.   ஒரு மாசத்துக்கு மேலே நோயாளி மாதிரியே கவனிப்புகள் கிடைக்கும். ஆனால் நாக்கும் மூக்கும் சுவையான மணக்கும் உணவுக்கு ஏங்கும். பார்க்க வர்றவங்களெல்லாம் ஆரஞ்சுப்பழமாகவே வாங்கிட்டு வருவாங்க. அதுக்குப் பிறகு ரெண்டு மூணு வருஷத்துக்கு ஆரஞ்சைப் பார்த்தாலே அலர்ஜியாயிடும்.


தப்பித்தவறிகூட வீர விளையாட்டுகளில் களமிறங்கி அடி பட்டுவிடக் கூடாது. சின்ன சுளுக்கிலிருந்து பெரிய எலும்பு முறிவுவரை கைதேர்ந்த வைத்தியர் பண்டாரவிளை வைத்தியர்தான் . இந்தக்கால எலும்பு முறிவு வைத்தியர்களுக்குக் கூட அவ்ளோ கீர்த்தியும் மவுசும் கிடைக்காது. வீட்லேயே வந்து கட்டுப்போட்டுவிடுவார். எல்லா முறிவுக்கும் ஒரே மாதிரி கட்டுதான் . ரெண்டு மரக்கட்டையை அண்டை கொடுத்து முட்டைவைச்சு பத்து போட்டுவிடுவார். கட்டைப் பிரிக்கும் போது எலும்பு எப்படி உடைஞ்சுதோ அதே கோணத்தில்  பிரபுதேவா மாதிரி போஸ் கொடுக்கும். ஆனாலும் அவர் போடுற கட்டுதான் மக்களிடையே ரொம்ப பிரபலம். எங்க ஆச்சி அம்மா எல்லாரும் அப்பப்போ கட்டு போட்டு பார்த்திருக்கிறேன். அதுலேயும் அசையவே கூடாதுன்னு  வேறே சொல்லிட்டு போயிடுவாரு.  எங்க ஆச்சி அதுக்குப்பிறகு நேரே நடந்தே நான் பார்க்கலை .லொடுக்கு பாண்டி மாதிரி விஸ்க்கி விஸ்க்கிதான் கடைசி வரை நடந்தாங்க.


சின்ன வியாதிகளுக்கே இந்தப்பாடு என்றால் பிரசவம் போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கும் இதே நிலைமைதான். எங்க வீட்டில் எல்லாருக்கும் வீட்டிலேயேதான் பிரசவம் நடக்கும். அம்மாவும் சித்தியும் பேறுகாலம் பார்ப்பதில் கில்லாடிகள். உதவிக்கு பயிற்சிபெற்ற தாதி ( Trained Dai) ஒருவரை வைத்துக்கொண்டு பிரசவம் பார்ப்பார்கள். எங்க அம்மாவுக்கு நான் ஏழாவது பெண். இன்றைய நிலையில் நினைத்துக்கூட பார்க்க முடியாதது. கார்த்திகை மாதம் அடை மழையில் பிறந்தேன். சுகப்பிரசவமாகி அம்மாவின் அணைப்பில் இருந்திருக்கிறேன். எங்கள்வீடு மண்சுவரால் ஆனது .. அடை மழையில் சுவர் நனைந்து ஊறிப்போய் இடிந்து விழுந்துவிட்டது. நல்ல வேளையாக நாங்கள் படுத்திருந்த கீழ்ப்புறமாக விழாமல் மேல்புறமாக விழுந்தது . இல்லாவிட்டால் இந்த அலையை எழுத ஆள் இருந்திருக்காது. பிறந்தபோதே பிரச்னையை எதிர்கொள்ளும் அதிர்ஷ்டக்காரியாக பிறந்திருக்கிறேன் . ஏழாவது பெண் இரந்தாலும் கிடைக்காதாம். இறக்காமலும் கிடைத்தது அதிர்ஷ்டம்தானே! 


இதுபோன்ற அசெளகரியங்களும் பிரச்னைகளும் இருந்தாலும் வேறே வழியில்லாமல் இதுபோன்ற வைத்திய உதவிகள்தான் எங்களுக்குக் கிடைத்தது.  கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட மருத்துவ உதவி வேண்டுமென்றால்கூட தூத்துக்குடி அமெரிக்கன் ஹாஸ்பிட்டலுக்கோ திருநெல்வேலி ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கோதான் போகவேண்டும் . ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போல் அய்யாதுரை டாக்டரும் பண்டாரவிளை வைத்தியரும்தான் எங்களின் கைகண்ட மருத்துவ தெய்வங்களாகத் தெரிந்தார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத நிறைய இழப்புகள்  இருந்தது .

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் சொந்தக்கார அண்ணன் வயிறு வீங்கி இறப்பதும் ,சுகப்பிரசவமாக பிறந்த குழந்தைகள் திடீரென மூச்சுத் திணறி மரிப்பதும் , பிரசவத்தில் கர்ப்பிணிகள் இறப்பதும் ஏனென்றே தெரியாமல் அங்கீகரிக்கப்பட்ட சோகமாக அரங்கேறிக் கொண்டே இருக்கும்.


 மருத்துவத்தின் வளர்ச்சிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இல்லாமலும், அறியாமையால் வரும் மூட நம்பிக்கைகளாலும், கிடைக்கும் வைத்தியமே சிறந்தது என்ற பிடிவாத கொள்கைகளாலும் நிறைய இழப்புகளை எதிர்கொள்வது சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக் கொள்ளப்படும். இன்றும் கூட மேம்படுத்தப்பட்ட மருத்துவ உதவிகள் பெற குறைந்த பட்சம் நாற்பது கிலோமீட்டராவது பிரயாணம் செய்யும் நிலையில்தான் எங்கள் ஊர் போன்ற கிராமங்கள் இருக்கின்றன.


"அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" ன்னு திருவள்ளுவர் எப்பவோ சொல்லிட்டு போயிட்டார். அந்த. செயல்முறைகள்தான் இன்னமும் ஒழுங்குக்குள் வரமுடியாமல் கலப்படமாகிக் கொண்டிருக்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home