Thursday, October 29, 2020

அலை-23

 அலை-23

விடலைப் பருவத்திற்குரிய வியாக்கியானங்களே தனிதான். பதின்ம வயதுகளில் வரக்கூடிய கிளுகிளுப்போ காதலோ  பள்ளிப் பருவத்தில் ஏன் வரவில்லை என்று இப்போது கூட விளங்கவில்லை. படிப்பு மட்டுமே முதன்மையானதாக இருந்ததால் இருக்கலாம். வாழ்க்கைச் சூழலின் அடுத்த படிக்கட்டிற்கு ஏற படிப்பு மட்டுமே உதவும் என்பது மனதில் ஆழப் பதிந்து கொண்டிருந்த காலமல்லவா அது. 


எனக்கு முன்னால் இரண்டு அண்ணன்களும் அடுத்ததாகத் தம்பியும் இடைசொறுகலாக நானும் இணைந்து பள்ளி சென்ற நாட்கள். எல்லோருக்கும் பீஸ் கட்ட வேண்டிய நிலைமை இருந்தால் என்னோட பீஸ் மட்டும் கேள்விக்குறியாக இருக்கும். பொட்டப்பிள்ளைக்கு என்ன படிப்பு வேண்டிக் கிடக்குது, பயலுகளுக்கு பீஸ் கட்டிவிடலாம்னுதான் எங்கஅம்மாவோட ஆர்டர் வரும். அதனால் பீஸ் கட்டாமல் வீட்டுக்கு அனுப்பபட்டவர்களில் அடிக்கடி நானும் இருப்பேன். ஆனாலும் அப்பாவின் உறுதியான நிலைப்பாடு எப்படியாவது என்னை மறுபடியும் பள்ளிக்கு அனுப்பி வைக்கும். 


பசங்களுக்கு பீஸ் கட்டிப் படிக்க வைக்கலாம், பொண்ணுங்களுக்கு முடிந்தால் கட்டலாம் என்ற மனோபாவம் அந்த காலத்தில் ரொம்ப சாதாரணம். ஆனால் அந்த மனோபாவத்தால் என்னையறியாமல் அடிமனதில் விதைக்கப்பட்ட கோபம், பசங்களைவிட நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதிச்சுக் காட்டணும் என்ற உறுதியை உண்டாக்கியிருந்தது. வகுப்பில் எப்பவும் முதல் மாணவியாக வரணும் என்ற பிடிவாதத்துடனேயே பள்ளிப் பருவம் முழுவதும் படித்திருக்கிறேன்.


 சக மாணவர்களைப் போட்டியாளர்களாகவே பார்த்திருந்தேன். ”அழகி” பட ஷண்முகமாக யாருமே கண்ணுக்குத் தெரியவில்லை. நாமளும் ”கோபுரங்கள் சாய்வதில்லை” சுஹாசினி தோற்றத்தில்தானே இருந்தோம். பல்லவர் பரம்பரை என கேலி செய்யப்படும் வகையில் இருந்த எடுப்பான பல் வரிசைவேறு.(இப்போமட்டும் உலக அழகி ஐஷ்வர்யா ராயாகவா இருக்கோம்.) 

படிப்பு ஒரு காரணமாக இருந்தாலும் பசங்களைப் பார்த்தால் வர வேண்டிய குறுகுறுப்பு பள்ளிப் பருவத்தில் வரவே இல்லை. ஹார்மோன்களின் வெளிப்பாடு கல்லூரிப் பருவத்தில்தான் தொடங்கியது போலிருக்கு. சக தோழிகளின் சிலபல கதைகளைக் கேட்டாலும் ஒரு பாதிப்பும் ஏற்படவே இல்லை.


 எந்நேரமும் அவனை முந்திடனும்; இவன் முதலாவதா வந்திடக்கூடாது;நாமதான் முதல் மார்க் வாங்கணும் என்ற நினைப்பே இருக்கும்போது ஹார்மோன் எங்கே வேலை செய்யும். 

வகுப்புக்குள் போட்டியாளர்கள் எனறால்  நான் , ராஜதுரை, K.மாரியப்பன் மூன்று பேரும்தான். போட்டி போட்டு படிப்போம். அதிலும் எனக்கும் ராஜதுரைக்கும்தான் கடும் போட்டியாக இருக்கும். ராம்கி நல்லா படிப்பவன் என்றாலும் போட்டிக்கெல்லாம் வரமாட்டான். நல்லா படிக்கிறவங்ககிட்டே மத்தவங்க எல்லாம் ஹோம்வொர்க் படிச்சு ஒப்பித்துவிட்டு போகணும்.சாயங்காலம் அதுவே மினி கிளாஸ் மாதிரி இருக்கும். நிறைய சந்தர்ப்பங்களில் பசங்க கூட என்கிட்டேதான் ஒப்பிச்சுட்டு போவாங்க.அதுக்காகவே என்னைத் திட்டித் தீர்க்குற கோஷ்டியெல்லாம் உண்டு. எட்டாம் வகுப்பு படிக்கட்டை சுத்தி உக்கார்ந்துதான் இந்த வேலையெல்லாம் நடக்கும்.


 கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு பிறகு சென்ற கிறிஸ்துமஸ் விடுமுறையில், என் வகுப்புத் தோழன் உதயன் அந்தக் கதையை என் மகளிடம் சொல்லி கேலி பண்ணியது கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றெல்லாம் வேறே சொன்னான்.


சயின்ஸ் பரீட்சை பேப்பரெல்லாம் சதானந்தன் சார் என்னைத்தான் திருத்த சொல்லுவார். கிடத்தட்ட அவர் மாதிரியே மார்க் போடறதா வேறே சொல்லுவார். சந்தோஷமாக இருக்கும். துரைப்பாண்டியன் சார் க்ளாஸ் ஜாலியாகப் போகும். நிறைய ப்ராக்டிகல் டிப்ஸ் கொடுப்பார். ஒரு வேலை செய்யும் போது அதை பாதிக்காத இன்னொரு வேலையும் சேர்த்து செய்வது நல்லதுன்னு அடிக்கடி சொல்லுவார். உதாரணமா ஒரு படிக்கட்டு ஏறும்போது எத்தனை படிகள் இருக்குதுன்னு பொதுவாக எண்ணிகிட்டே ஏறணும் என்பார். இன்னைக்கும் நான் படி ஏறும்போது என்னை அறியாமல் எண்ணிகிட்டேதான் ஏறுவேன். இதே மாதிரி நிறைய டிப்ஸ் உண்டு.


தமிழ் அய்யா வகுப்புதான் மனசுக்குப் பிடிச்சது. அவரோட இயற்பெயர் குழைக்காதன் சார் என்பதே மறந்து போய் எல்லோருக்கும் “பெரியப்பா”ன்னு தான் தெரியும்.ராம்கிக்கு அப்பா, எங்களுக்கெல்லாம் பெரியப்பா. அஸ்வதரன் மாதிரி ஆட்கள் ஏதாச்சும் குரங்கு சேட்டை பண்ணிகிட்டே இருப்பாங்க. கோபத்திலே அய்யா அடிப்பது போல் பாசாங்கு செய்வது தனி வித்தை. அவரோட கைவிரல்கள் நீளமாக இருக்கும். ஓங்கி அடிப்பது மாதிரி கையைத் தூக்கி முதுகில் தட்டும்போது தடவிக் கொடுப்பது மாதிரிதான் இருக்கும்.மாணவர்கள் மேல் அவருக்கு அவ்வளவு அன்பு. தமிழ் இலக்கணத்தை இன்றும் மறக்காமலிருப்பது அய்யா கற்றுத் தந்த விதத்தால்தான். பல்லவன் பஸ்ஸில் ஏறும்போது திருக்குறளை அடி,சீர் பிரிப்பது ; வினைத் தொகைகளை விரும்பிச் சொல்வது; இன்றைய அலைகளைக் கூடியவரை பிழையின்றி எழுதுவது எல்லாமே அய்யா கற்றுத் தந்ததுதான்.


நாங்க படிச்சப்போ +2 வெல்லாம் கிடையாது, எஸ்.எஸ்.எல்.சி.தான். எந்த க்ரூப் எடுத்தாலும் டாக்டருக்கோ எஞ்சினீயருக்கோ படிக்கலாம். கூட்டு மதிப்பெண் அதிகம் வரும் என்பதால் கணக்கு விருப்பப்பாடமாக எடுத்து படித்தேன். இப்போ மாதிரி எண்கணிதம் எல்லாம் கிடையாது. அல்ஜிப்ரா & ஜியாமெட்ரிதான். அதை சொல்லித் தந்த இப்ராஹிம் சாரை மறக்கவே முடியாது. ரொம்ப கண்டிப்பான ஆசிரியர். பசங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம், அப்படி ஒரு அடி அடிச்சு வெளுத்துடுவார். நாங்களெல்லாம் அவருக்கு பிடித்த மாணாக்கர்கள். அத்தனை ஆசையுடன் எடுத்தும் இறுதி பரீட்சையில் 98/100 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாகும் வாய்ப்பைத் தவற விட்டேன். 


அந்தக்கால பெருசுகளுக்கெல்லாம் யாரையாவது உதாரணம் காட்டுவது, ஒப்பிட்டு பார்த்து உசுப்பேத்துவது எல்லாம் கைவந்த கலை. எவ்வளவு நல்லா படிச்சாலும் யாருடனாவது ஒப்பிட்டுக் கொண்டே இருப்பாங்க. பள்ளிப் படிப்பு முடிச்சு கல்லூரி போகணும்கிற கால கட்டத்தில் அங்கேயும் ஒரு செக் . எனக்கு முன்னாடி படித்த இந்திராக்காதான் எனக்கு அளவுகோல்னு வைச்சிருப்பாங்க. இந்திராவைவிட ஒரு மார்க் அதிகம் எடுத்தால் கல்லூரிக்குப் போகலாம், இல்லாட்டி வீட்லே அடைபட வேண்டியதுதான்னு சொல்லிட்டாங்க. கரெக்டா 2 மார்க் அதிகம் வாங்கி 503/600 வாங்கி பந்தயத்தில் ஜெயிச்சுட்டேன், அப்போதெல்லாம் 500மார்க் வாங்குவதுதான் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்ணாக இருக்கும். கவெர்ன்மெண்டோட மெரிட் ஸ்காலர்ஷிப்புக்கும் தேர்வாகிவிட்டேன். அப்படி ஒரு முனைப்போட படிக்காமல் போயிருந்தால் இன்னைக்கு என்னவாக ஆகியிருப்பேனோ தெரியாது.


என்னோட வகுப்புத் தோழி ஸ்ரீலக்ஷ்மி, டாக்டரோட பொண்ணு. அந்தக்காலத்திலேயே அவங்க அம்மா ஸ்டைலா கார் ஓட்டிட்டு வந்து அவளை ஸ்கூலில் இறக்கிவிட்டுட்டு காயல்பட்டிணத்தில் இருந்த அவங்க கிளினிக்குக்குப் போவாங்க.எங்க ஹெட்மாஸ்டர் அவளை எப்பவும் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டார், டாக்டரம்மான்னுதான் கூப்பிடுவார். நல்லா படிக்கிற பிள்ளைகளைவிட நல்லா படிச்சவங்களோட பிள்ளைகளுக்கு அதிக மரியாதை கிடைப்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன். அப்போ விழுந்த வித்துதான் என்னை டாக்டராக்கியிருக்க வேண்டும்.


 இதே விஷயத்தை பின்னாட்களில் என் பொண்ணும் சிலாக்கியமாக சொல்லியிருக்கிறாள். அவளோட பேரண்ட்-டீச்சர் மீட்டிங் போகும்போது, அத்தனை பெர்றோர்களையும்விட டாக்டர் பொண்ணு என்பதால் அவளுக்கு தனி அங்கீகாரம் கிடைப்பதாகச் சொல்லுவாள்.


நல்ல மதிப்பெண்கள் வந்ததும் பி.யூ.சி. படிக்க பாளையங்கோட்டையில் உள்ள சாரா டக்கர் கல்லூரிக்கு சென்றதும், இருகரம் கூப்பி சேர்த்துக் கொள்வதாகச் சொல்லிட்டாங்க. ஆனால் அங்கே சேர முடியாமல் மறுபடியும் பீஸ் கட்டும் பிரச்னை. அப்பாவின் நண்பர் வீரபாகு அவர்களின் கல்லூரியான A.P.C வீரபாகு. கல்லூரி , தூத்துக்குடியில் இலவசமாக சேர்க்கப்பட்டேன். அங்கேயும் கல்லூரி முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர நினைக்கும்போது, அங்கிருந்து விடுவிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சான்றிதழ்களைப் பிடிச்சு வைச்சுகிட்டாங்க. நல்ல மாணவிகளை இழக்க விரும்பவில்லையாம். மறுபடியும் அப்பா தலையிட்டு சான்றிதழ்களையெல்லாம் வாங்கிட்டு வந்தாங்க.


மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் வாழ்க்கையின் பாதையும் போக்கும் மாறியது. நயினார் அண்ணன் படித்து முடித்து வேலைக்கு வந்துவிட்டதால் எனது படிப்பு சம்பந்தமான காரியங்களை அவனே பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான். அதன்பிறகு படிப்பும் வாழ்க்கைத் தரமும் முன்னேற்றப் பாதையில் தடங்கலின்றி ஓட ஆரம்பித்துவிட்டது. அண்ணன் வங்கியில் வேலை பார்த்ததால் வங்கியிலிருந்து படிப்புக் கடன் உதவி இலகுவாகக் கிடைத்தது. மெரிட் ஸ்காலர்ஷிப் தடையின்றி வரத் தொடங்கியது. எல்லா இடர்ப்பாடும் நீங்கிய பிறகுதான் ஹார்மோன்களே சுரக்கத் தொடங்கி காதல்களம் களை கட்டத் தொடங்கியது. அது பெரிய கதையாச்சே!


பெண்குழந்தைகளின் படிப்பு எவ்வளவு சோதனைகளுக்கு உட்பட்டது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த குடும்பம் என்பதால் எங்களின் அடுத்த தலைமுறை பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளோம்.


பெண் குழந்தைகளைப் 

படிக்க வைப்போம்

அறிவார்த்தமான 

அடுத்த தலைமுறையின் 

ஆணிவேர் பெண்களே!!

0 Comments:

Post a Comment

<< Home