அலை-20
அலை-20
கூழ் வற்றல் வடகம் சாப்பிட ஆசைப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் அதை செய்யும் கலை இருக்குதே, அது ஒரு வரலாறு. போனவாரம் சீதாவும் சிவகாமியும் ஈரோட்டுக்கு வந்திருந்தபோது ஒரு பெரிய டப்பா நிறைய கூழ் வத்தல் போட்டு தந்திட்டுப் போனாங்க. ரொம்ப சுவை.
கோடை விடுமுறை ஆரம்பித்ததுமே வத்தல், வடகம் எல்லாம் போடற வேலையும் ஆரம்பிச்சுடும். கையளவோ தம்ளர் அளவோ எல்லாம் கிடையாது. அண்டா அண்டாவாத்தான் பெரிய அளவில் செய்வாங்க. முதல் நாள் சாயங்காலமே அரிசியை ஊற வைச்சு தோசைக்கு அரைப்பதுபோல் மையாக அரைச்சு வைச்சிடுவாங்க.
அநேகமா எப்பவும் எங்க குப்பம்மா மதினிதான் நடமாடும் க்ரைண்டர். எங்க வீட்டு ஆட்டு உரல் தரையிலேயே பதிக்கப்பட்டிருக்கும், பெரிய சைஸ் கல்.எங்க மதினி ரொம்ப குள்ளமா இருப்பாங்க. அவங்க சைஸுக்கு அந்த முழு உரலையும் சின்னக்கையால் சுத்துவது பெரிய திறமைதான். சலிக்காமல் மாவாட்டுவாங்க. அரிசி மாவில் உப்பு போட்டு கலக்கக் கூடாது.
அதிகாலையிலேயே கூழ் காய்ச்சும் வைபவம் தொடங்கிடும். அகலமான அலுமினியம் அல்லது ஈயம் பூசின பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கணும். பிறகு அரைச்சு வைச்சிருக்கும் அரிசி மாவை அதில் கொட்டி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கணும். அதுக்குண்ணு ஸ்பெஷலா மர அகப்பை நீள கைப்பிடியோட இருக்கும்.அரிசிமாவு வேகும் வரைக்கும் கிளறிகிட்டே இருக்கணும். இல்லாட்டி கட்டி விழுந்திடும். அதுலேயே தண்ணிவத்தல், கெட்டி வத்தல்னு ரெண்டு தினுசா கூழ்காய்ச்சுவாங்க. தினசரி செலவுக்கு தண்ணி வத்தல், கொஞ்சம் மாவில் நிறைய வத்தல் கிடைக்கும், எக்கனாமிகல். கெட்டி வத்தல் யாராவது விருந்துக்கு வரும்போது மட்டும். எனக்கு தண்ணி வத்தல்தான் பிடிக்கும். ஈஸியா நாக்கில் கரைந்துவிடும், சுவையும் நல்லாவே இருக்கும்.
கூழ் சரியான பதம் வந்ததும் சில வாசனைப் பொருட்கள் சேர்ப்பாங்க. சீரகம், பச்சிமிளகாய், பொடியாக நறுக்குன சின்ன வெங்காயம் , இதுலே எது வேணுமின்னாலும் போட்டுக்கலாம். அதைப்பொறுத்து வத்தல் பெயர் மாறும். தனித்தனி டப்பாவுக்குள் அடைச்சு வைப்பாங்க.கூழ் காய்ச்சி இதெல்லாம் சேர்த்தவுடன் வர்ற வாசம் தூங்கிட்டு இருக்கிற பொடிசுகளையெல்லாம் எழுப்பி விட்டுடும். அம்மாவுக்குத் தெரியாமல் கூழை கையில் எடுத்து நக்கிப் பார்க்க ஒரு கோஷ்டி படையெடுக்கும். ஆனால் செம சூடாக இருப்பதால் யாரோட பருப்பும் வேகாது.
கொஞ்சம் சூடு தணிந்ததும் எல்லா கூழையும் சின்ன சின்ன பாத்திரங்கள், தட்டு, மூடி எல்லாத்திலேயும் ஊற்றுவாங்க. அகல பாத்திரங்களில் ஊற்றும் போது சீக்கிரம் சூடு தணியும்.ஆனால் முழுவதும் ஆறுவதற்குள் கூழ் ஊத்திடணும், இல்லாட்டி கட்டியாகி பாத்திரத்திலேயே செட்டில் ஆயிடும்.
எங்க வீட்டுக்கு அடுத்து ஒரு மொட்ட தட்டட்டி ( மொட்டை மாடி) உண்டு. அதுலேதான் கூழ் ஊத்தி காய விடணும். அதுக்கு ஏறுவதற்கு படிக்கட்டெல்லாம் கிடையாது. சாய்வான சுவர் மீது பக்குவமா காலை வைச்சு ஏறணும். அவ்ளோ கூழ் பாத்திரங்களையும் மேலே ஏத்தணும், அதெல்லாம் ஆம்பிளைப் பசங்களோட வேலை.
பழைய வெள்ளை வெஷ்டியில்தான் கூழ் ஊத்துவாங்க. அப்பா, அண்ணனோட பழைய வேட்டிகள் இதற்கென்றே பத்திரப் படுத்தப் பட்டிருக்கும். தரையை நன்கு பெருக்கி, வேஷ்டிகளை நனைத்து தரையில் விரிக்கணும். வேஷ்டி பறக்காமலிருக்க நாலு மூலையிலும் கல் ஏதாச்சும் வைக்கணும். நாலு முனையிலும் நாலுபேர் உக்காந்துக்குவோம். அந்தந்த முனையிலிருந்து கூழ் வடகம் ஊற்ற ஆரம்பிக்கணும். அப்போதான் ஒருதரை ஒருத்தர் இடிக்காமலும், வேஷ்டியில் இடைவெளி இல்லாமலும் வத்தல் ஊற்ற முடியும். அதுலேயும் நாந்தான் நிறைய ஊற்றினேன்னு பீலா போட்டி பெருமையெல்லாம் கூட நடக்கும்.
கூழ் வத்தல் ஊத்தறது இப்போ எழுதற மாதிரி ஈஸி கிடையாது. சூடான கலவையைக் கையில் எடுத்து வடட வட்டமா ஒரே அளவில் ஊத்தணும். மேல் பக்கம் சூடு தணிந்த கூழை முதலில் எடுக்கணும். ஆர்வக் கோளாறில் ஆழமாகக் கையை விட்டால் வெந்து போயிடும். எங்க அக்கா மதினியெல்லாம் கைதேர்ந்த வல்லுநர்கள் . பட படன்னு ரெண்டு மூணு வேஷ்டியில் ஊற்றி முடிச்சுடுவாங்க. வெயில் ஏர்றதுக்குள்ளே ஊத்திடணும். இல்லாட்டி மண்டை காஞ்சிடும். எங்களை மாதிரி சின்னப் பசங்களுக்கு ஸ்பூன் தருவாங்க. ஆனால் அதில் ஊத்தும்போது ஒருநாளும் அளவும் இடைவெளியும் சரியாவே வராது. சித்திரம் மட்டும் கைப்பழக்கம் அல்ல, கூழ் ஊத்துவதும் தான். கூழ் ஊத்தும்போதே அப்பப்போ கொஞ்சம் கொஞ்சம் டேஸ்ட் பார்க்கிறேன்னு காலி பண்ற வேலையும் இருக்கும்.
பெரிசுங்க எல்லாம் அவங்கவங்க வேலையை முடிச்சுட்டு கீழே இறங்கிடுவாங்க. எங்க ஊர் காக்காவெல்லாம் இந்த மாதிரி கூழ் வத்தல்லேயே வாழ்ற ஆட்கள். கும்பலா வந்திடுவாங்க கொத்திட்டுப் போக. கொஞ்சம் அசந்தால், அழுக்குக் காலோட வேஷ்டியில் உக்காந்து அதனையையும் நாசம் பண்ணிடுவாங்க. அதனாலே பொடிசுங்க எல்லாருக்கும் காவல்காரன் வேலை. இன்பமான இம்சை வேலை அது.
காவல் காக்கிறவங்க உக்காரகூட இடமே இருக்காது, வெயில் சுட்டெரிக்கும். மொட்டை மாடியின் ஓரத்தில் ஒரு கொடுக்காபுளி ( கோணப்புளியங்கா) மர நிழல் விழும் . அதுக்கு மேலே ஒரு பெட்ஷீட் அல்லது துண்டு போட்டு தற்காலிக டெண்ட் உண்டாக்கிக்குவோம்.
தனியாக மாட்டிக் கொள்ளும் போது புத்தகங்கள் வாசிக்க நல்ல இடம். சில சமயம் துணை கிடைத்தால் அங்கேயே உக்காந்து சீட்டுக் கட்டு விளையாடுவோம்.
சில நேரம் காவல்காரர்களையும் ஏமாத்திட்டு காக்கா வந்துடும். அதிலிருந்து காப்பாற்ற அம்மாவின் மயிர்க்குடி(சவுரி)யை கம்பில் கட்டி நிறுத்தியிருப்போம். காக்கா பக்கத்திலேயே வராது. சாயங்காலம் வரைக்கும் அங்கேயேதான் இருக்கணும். வேலைத் தளர்வு எல்லாம் கிடையாது. சாப்பிட போறப்போ ஷிஃப்ட் மாத்திக்குவோம்.
முதல்நாள் சாயங்காலம் வத்தல் முழுசும் காய்ந்து இருக்காது. கொஞ்சம் ஈரமா இருக்கும். அதனாலே வேஷ்டியோட எடுத்துட்டுப்போய் கொடியில் தொங்க விடணும். மறுநாள் காலையில் வத்தல் உள்ள வேஷ்டியை தட்டட்டிக்கு எடுத்துட்டுப் போய் மறுபடியும் காய வைக்கணும். இன்னைக்கு அடுத்த டீம் காவல் வேலைக்குப் போவாங்க.
ரெண்டாம் நாள் நல்லா காய்ந்து வத்தல் ரெடியாயிடும். ஆனால் வேஷ்டி அதை அன்போட பிடிச்சுட்டு இருக்கும். அதனாலே வேஷ்டியின் பின்பக்கத்தைத் திருப்பி போட்டு கொஞ்சமா தண்ணீர் தெளிச்சு நனைக்கணும். ஒவ்வொரு வத்தலாக வேஷ்டியிலிருந்து பிரித்தால் இலகுவாக வரும். இந்த வேலையெல்லாம் எங்க கிட்டே கொடுக்க மாட்டாங்க. ஒண்ணு வேஷ்டியைக் கிழிச்சுடுவோம், அல்லது கணிசமான வத்தல் கடவாய்க்குள் போயிடும். அதனாலே பெரியவங்கதான் சுத்தி உக்காந்து புரணி பேசிகிட்டு வத்தல் உடையாமலும், வேஷ்டி கிழியாமலும் எடுப்பாங்க.
இதோட வேலை முடிஞ்சுடலை.
வேஷ்டியிலிருந்து எடுத்த வததலையெல்லாம் சொளவு(முறம்)லே கொட்டி வைச்சிருப்பாங்க. தண்ணீர் நனைச்சு எடுத்ததால் கொஞ்சம் ஈரம் இருக்கும். அப்படியே டப்பாவில் போட்டால் பூசனம் பூத்துவிடும். அதனால் மறுபடியும் மூணாம் நாள் காலையில் மாடியில் பேப்பர் அல்லது பாய் விரித்து அன்னைக்கு முழுதும் காய விடணும். டண்டடான் – கூழ் வத்தல் ரெடி.
இதே வேலை ,இடைவெளி விட்டு நாலைந்து தரமாவது கோடை விடுமுறையில் நடக்கும். ஒரு வருஷத்துக்கு தேவையான வத்தலை அப்போதே செய்து டப்பாவில் அடைச்சு வைச்சிடுவாங்க. காய் பொறியல்கள் தட்டிப் போகும் சமயங்களிலும், திடீர் விருந்தாளிகள் வரும்போதும், மழை காலங்களிலும் கூழ் வத்தல்தான் அம்மாவுக்கு ஆபத் பாந்தவன்.
இதே பாணியில் வெங்காய வடகம், தேன்குழல் வத்தல் என்று ரக வாரியாக ஏதேதோ செய்து கொண்டே இருப்பாங்க. ரெடிமேட் வத்தல் உண்டு என்பதே நகர வாழ்க்கைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது.
அப்பளம் கூட சிறு தொழிலாகத்தான் வீட்டிலிருந்தே போட்டு தருவார்கள். எங்க ஊரில் அப்பளக்கார பெரியம்மாவே உண்டு. எங்களுக்கு தூரத்து சொந்தம் கூட. அவங்க வீட்டில் அப்பளம் வாங்க போகும்போது நானே நிறைய நாள் அப்பளம் உருட்டிக் கொடுத்திருக்கிறேன். உளுந்து மாவில்தான் அப்பள உருண்டைகள் செய்து வைச்சிருப்பாங்க. நல்ல வாசமாக இருக்கும். அதை எண்ணெயில் பொறிக்கும் போது சன்னமாகவும் மொறு மொறுவென்றும் சுவையாகவும் இருக்கும்.
வத்தலும் வடகமும்
வருஷம் முழுக்க மணக்கும்
அதை நினைப்பது
வருடங்கள் பல கடந்தும்
மொறு மொறுப்பாக
நினைவலைகளில் நொறுங்கும்.
(பி.கு: என் அலைகளில் நிறைய தென் தமிழக வழக்குச் சொற்களை அப்படியே உபயோகித்துள்ளேன். எனது எண்ணங்களின் நடை ஓட்டம் மாறாமலிருக்கவும், வழக்குச் சொல் அழியாமலிருக்கவும். பொருத்தருள்க)
0 Comments:
Post a Comment
<< Home