அலை-12
அலை-12
அரை நூற்றாண்டுக்கு முன் அடிப்படை வசதிகளற்ற காலத்தில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்ட பொழுதுகள் இனிவராது. கீழே உட்கார்ந்தால் தூக்கிவிட ஆள் தேவைப்படும் காலத்தில் பசித்தவர்கள் பழங்கணக்கு மட்டும்தான் பார்க்க முடியும்.
கூட்டுக் குடும்பம் என்ற கட்டமைப்பே ஒழிந்து போய், ”எனக்கு நீ உனக்கு நான்” என்ற சுருங்கிப்போன குடும்ப சூழல் இழந்தது மிக அதிகம். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது அரிதாகிவிட்டது, அர்த்தமற்றதாகவும் ஆகிவிட்டது.
பள்ளி செல்லும் நேரங்களில் அவசரமாக சாப்பிட்டாலும் அடுத்தடுத்து அண்ணனோ தம்பியோ சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். மதிய உணவு பள்ளியில் சாப்பிடும்போது தோழியர் கும்பலாக உட்கார்ந்து கதை பேசி சாப்பிடுவோம். இரவுச் சாப்பாடு எப்படியும் ரெண்டு மூணு பேராவது சேர்ந்துதான் சாப்பிடுவது வழக்கம். ஆறுமுகநேரியில் இருந்தவரை தனிமையில் உணவு உண்டதே இல்லை. ஊரைப்பிரிந்து வெளியேறும்போது சில கலாச்சாரங்களையும் ஊர் எல்லையிலேயே விட்டுவிட்டுதான் பேருந்து ஏறியிருக்கிறோம்.
இரவு நேரத்துக்கு என்று அம்மா தனியாக சமைத்துத் தர மாட்டார்கள். காலையில் மீந்த இட்லி, மதியம் வைத்த சாதம் எல்லாம் இரவுச் சாப்பாடாக வந்து சேரும். மதியம் வைத்த குழம்பு காய்கள் மீதமாகாத நாட்களில் சாதத்தில் தண்ணீர் ஊற்றிவிடுவார்கள். அதற்குப் பெயர் வெந்நீர்ப் பழையது. மறுநாள் காலையில் சாப்பிட்டால் அது பழைய கஞ்சி. வெந்நீர்ப் பழையதுக்குத் தொட்டுக்கொள்ள கடலைத் துவையல் இருக்கும். சில நாட்கள் அம்மா மதினி யாருக்காவது நேரம் இருந்தால் எல்லோரையும் வட்டமாக உட்கார வைத்து பழையதில் மோர் போட்டு பிசைந்து உருட்டி உருட்டி கையில் கொடுப்பார்கள். பெரிய சட்டியில் மொத்தமாகப் போட்டு பிசைந்து உருட்டித் தரும்போது அடி பிடியில் அவ்வளவு சாதமும் அரைநொடியில் காலியாகிவிடும்.
நடுவாசல் முற்றத்தில் தென்னங் கீற்றில் எல்லோரும் அம்மாவைச் சுற்றி உட்கார்ந்து உருண்டை சாதம் சாப்பிடும் போது நிலாக்காலமாக இருந்தால் அது நிலாச்சோறு ஆகிவிடும். பக்கத்துவீட்டு மதினி பெரியம்மா எல்லாரும் அவங்க சாப்பாட்டை எடுத்து வந்து எங்களுடன் நிலாச்சோறு சாப்பிடுவாங்க.
லீவு காலங்களில் கூட்டம் அதிகம் என்பதால் அடிக்கடி இலையில்தான் சாப்பாடு. தட்டுகளைக் கழுவுவதற்குக் கூட தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும். இலைதான் எக்கனாமிக்கல்.
பண்டிகைக் காலங்களில் வெளியூரில் படிக்க வேலைக்குச் சென்றவர்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்துவிடுவோம். அது எழுதப்படாத ஒரு ஒப்பந்தம். அபோது மட்டும் எல்லோரும் பெரிய வீட்டில் பந்தி போட்டு உட்கார்ந்து சாப்பிடுவோம். ஆண்களும் சின்னக் குழந்தைகளும் முதல் பந்தி. பெண்கள் இரண்டாவது. அதிலும் அம்மாவும் பெரிய மதினியும் எப்போது சாப்பிடுவாங்களோ தெரியாது. பந்தியில் சாப்பிடுவது பெரிய பந்தாவாக இருக்கும்.
தீபாவளி பந்தியில் வித விதமாகப் பலகாரங்களே நிறைந்திருக்கும். முந்தின நாட்களிலேயே தயாரித்து வைத்திருக்கும் முறுக்கு, மிக்சர், அதிரசம், முந்திரிகொத்து போன்றவற்றுடன் அன்றைக்கு அதிகாலையிலிருந்து தயாரிக்கப்பட்ட மெதுவடை, ஆமைவடை( பருப்பு வடை), பஜ்ஜி, பூரி எல்லாம் படையெடுத்து கலவை மணத்துடன் உட்கார்ந்திருக்கும். அதைக் கபளீகாரம் பண்ண நாங்களும் ரெடியாக இருப்போம். ஆனாலும் கொஞ்ச நேரத்துக்குள் திகட்ட ஆரம்பித்துவிடும். இலையில் மிச்சம் வைக்கக்கூடாதுன்னு அம்மா கண்டிச்சு சொன்னாலும் பாதி சாப்பிட்டதுமே எல்லாரும் இலையை மூடிட்டு ஓடிடுவாங்க. அடுத்த தீபாவளிக்கு பலகாரமே செய்ய மாட்டேன் என்று அம்மா சூளுரைப்பதும் பிரசவ வைராக்யம் மாதிரி வருடா வருடம் நடக்கும்.
தைப்பொங்கலுக்கு பரிமாறப்படும் பந்தி வேறே மாதிரி இருக்கும். வாசலில் பொங்கல் வைத்த பச்சரிசி சாதம் தான் முக்கிய உணவு. வருஷத்தில் அந்த ஒருதரம் மட்டும் தான் பச்சரிசி சாதம் சாப்பிடுவோம். பருக்கையாக புழுங்கல் அரிசி சாப்பிட்டு பழகினவங்களுக்குப் பச்சரிசி சாப்பிடறது ரொம்பக் கஷ்டம். அதுவும் குழைவாக செஞ்சிருப்பாங்க. முதல் ரவுண்டு வரும்போது தேங்காய்த் துவையலும் நல்லெண்ணெயும் சோற்றில்போட்டு பிசைந்து சாப்பிடணும். ரெண்டாவது தரம்தான் சாம்பார் எல்லாம் தருவாங்க. பெரியவங்க எல்லாம் ஆஹா ஓஹோன்னு சுவைச்சு சாப்பிடுவாங்க. நாங்களெல்லாம் இ.தி.கொ.( இஞ்சி தின்ன கொரங்கு) மாதிரி முகத்தைச் சுளிச்சுகிட்டு சாப்பிடுவோம்.
குறைந்தபட்சம் ஆறுவகை காய்கறிகள் இருக்கும். பருப்பு, பச்சடி, கூட்டு, அவியல், ரெண்டு மூணுவிதமா பொறியல்னு நிறைய தினுசுகளில் இருக்கும். காய்கறி ஓவரா சாப்பிடறது எவ்வளவு கஷ்டம் என்று பேட்டி எடுத்தால் அரைமணி நேரம் பேசலாம். எப்படியும் சர்க்கரைப் பொங்கல் எங்களைக் காப்பாத்திடும். ரவுண்டு கட்டிவிடுவோம்.
எப்படியும் ரெண்டு மூணு விருந்தாளிகளும் பந்தியில் இருப்பாங்க. அண்ணன் தம்பிகளோட நண்பர்கள் அந்த பந்தியில் இணைவதும் வாடிக்கை.
அநேகமாக சாப்பிட்டு முடிஞ்சதும் வெற்றிலை பாக்கு இருக்கும். ஆனால் என்ன காரணத்தாலோ எங்களைப் போட விட மாட்டாங்க. வெத்தலை போட்டா மாடு முட்டிடும்னு பயங்காட்டி வேறே வைச்சிருப்பாங்க. ஆனாலும் திருட்டுத்தனமா போட்டுகிட்டு, யாருக்கு நாக்கு நல்லா சிவந்திருக்குதுன்னு எங்களுக்குள் போட்டி நடக்கும்
காய்கறிகள் பொறியல் எல்லாம் வேணுமின்னே அளவுக்கு அதிகமா செஞ்சுவைப்பாங்க. பொங்கல் சீசனுக்குன்னே சில காய்கறிகள் வரும். மூக்குத்திக் காய்னு ஒண்ணு அந்த சமயத்தில் மட்டும் பார்த்திருக்கேன். மீதமான சாம்பாரில் அத்தனை காய் பொரியல்களையும் கொட்டி இளந்தணலில் தண்ணீர் சுண்டும் வரை கிளறி இறக்குவாங்க. அதுக்குப் பெயர் “சுண்டக்கறி”. எங்க வீடுகளில் இன்னும் சுண்டக்கறி ஸ்பெஷல் ஐட்டம்தான். மறுநாள் காணும் பொங்கலுக்கு (கரிநாள்) பிக்னிக் போகும்போது பொங்கல் சோறும் சுண்டக்கறியும்தான் எங்கள் காலை உணவு மதிய உணவு எல்லாம். அத்தனைக் கூட்டத்துக்கும் அடுத்த நாள் முழுவதும் சாப்பாட்டுப் பிரச்னை இல்லாமல் கைகொடுக்கும் அமுதசுரபிகள். எனக்கு நினைவு தெரிந்து அந்த ஒருநாள் மட்டும் எங்க வீட்டு அடுப்பு அணைந்திருக்கும்.
கல்யாணம், காதுகுத்து, சடங்கு எல்லாமே வீட்டிலேயேதான் நடக்கும். வாசலில் பந்தல் போட்டு வாழை மரம் கட்டிவிட்டால் வீடுதான் கல்யாண மண்டபம்.ஆபட்ஸ்பரி கூட அதுக்கு ஈடாகாது. எங்கவீட்டு விசேஷங்களுக்கெல்லாம் சமையல் செய்ய ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுடலை முத்து அண்ணன் வந்துவிடுவாங்க. வீட்டுக்குப் பின்புறம் ஆக்குப்பிறை (சமையல்கூடம்) போட்டு மூணுவேளையும் சுடச் சுட சமையல் நடக்கும். கேட்டரிங் காலேஜ் பசங்க மாதிரி நாங்களேதான் பரிமாறுவோம். மேஜை துடைப்பதில் இருந்து, பரிமாறுவது, எச்சில் இலை எடுப்பது வரை உள்வீட்டு ஆட்கள்தான் செய்வோம்.
இலையில் பறிமாறுவதற்கு சில ரூல்ஸ் வேறே உண்டு. கரெக்டாக செய்யணும். இலையின் மூக்குப் பக்கம் சாப்பிடுபவரின் இடது கைப் பக்கம் இருக்கணும். முதலில் இலை கழுவ தண்ணீர் தெளிக்கணும். இடக்கை ஓரம் உப்புதான் முதலில் வைக்கணும். அதுக்குப்பிறகுதான் பொறியல், அவியல் எல்லாம். அதுஅதுக்குன்னு அலாட் பண்ணியிருக்கிற இடங்களில்தான் இலையில் வைக்கணும். மாற்றி வைச்சா திட்டு கிடைக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அடிகூட கிடைக்கும். பாயாசம் இலையில்தான் ஊற்றணும். அதுக்குப் பிறகுதான் மோர்சாதம் பரிமாறணும். இப்போ நினைச்சா சிரிப்பா வருது. ஆனால் அப்போல்லாம் கர்ம சிரத்தையாக வரிசைப்படி பரிமாறியிருக்கோம்.
வீட்டு ஆட்களெல்லாம் கடைசி பந்திதான். நெறைய நேரங்களில் சாப்பாடு தட்டிப்போய் மறுபடி உலை வைத்திருப்பார்கள். மற்ற பதார்த்தங்களும் தட்டிப்போக ஆரம்பித்திருக்கும். எங்களில் கொஞ்சம் விபரமான பசங்க ரெண்டாவது மூணாவது பந்தியில் சாப்பிட்டு விடுவாங்க. எங்களை மாதிரி பேக்குங்க கடைசி பந்தியில் அரைகுறை விருந்து சாப்பிடுவோம். சைவ சாப்பாடுதான் என்றாலும் அண்ணனின் கைமணம் சாப்பிட்டவங்களைக் கூடத் திரும்ப சாப்பிடக் கூப்பிடும்.
அறுபது வயதில் டைனிங் டேபிளில் தனியாக அமர்ந்து உணவருந்தும் நேரங்களில் எல்லாம் சந்தைக்கடை வீடு மனதில் அலையாக எழும்பாமல் இருந்ததில்லை. வேலை காரணமாக ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நேரம் சாப்பிடும் நிலைமை தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. எங்க அம்மாவும் அப்பாவும் கூட அந்தக் காலத்தில் சேர்ந்து சாப்பிட்டதில்லை. குழந்தைகளாகக் கிடைக்கும் சந்தோஷங்களில் சில , நாம் பெற்றோர்கள் ஆகும்போது பறிக்கப்பட்டு விடுகிறது.
0 Comments:
Post a Comment
<< Home