Saturday, September 05, 2020

அலை-9

 அலை-9

”ஆசிரியர் தின வாழ்த்துக்கள்”

காணியாளர் தெருவின் திரவியம் ஆரம்பப் பாடசாலைதான் எங்கள் குடும்பத்தின் வாரிசுகள்    எல்லோருக்கும் அறிவுக்கண் திறந்த முதல் படிக்கட்டு. பள்ளியின் பெயர் எப்போதும் மறக்கப்பட்டு தெருப் பெயர்தான் விலாசமாகக் கொண்ட பாடசாலை. அதன் சமகால இந்து ஸ்கூல் இந்த அளவு பிரபலமாக இருந்ததாக நினைவில்லை. 


பள்ளியின் தாளாளர் திரு. வேதமுத்து சார், அப்பாவின் நெருங்கிய நண்பர். இருவரும் ஒரே உயரம், எடை, ஒத்த சிந்தனை என நெருங்கிய நண்பர்கள். காணியாளர் தெருவின் முனையில் இருக்கும் காபி கிளப்தான் அவர்களின் சந்திப்பு இடம். மூங்கில் பட்டியலிட்ட ஜன்னல் மூலம் அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதைத் தினமும் பள்ளி செல்லும் போது பார்க்கலாம்.


ஆரம்பப் பாடசாலை என்ற பெயருக்கு ஏற்றவாறு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை தான் உண்டு. நாலாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகள் ஓடு போட்ட முன்னாடி ஹாலில் நடக்கும். சின்ன வகுப்புகளுக்கு கூரையும், மணல் தரையும்தான். ரெண்டாம் வகுப்புக்குப் பிறகு மனைப்பலகை போன்ற பெஞ்சுகள் கிட்டத்தட்ட ஆறடி நீளங்களில் கிடத்தப்பட்டு அதன் மேல் உட்காரலாம். முதல் வகுப்பு மட்டும் முழுவதுமே மணல்தரைதான். அந்த மணலில்தான் முதல் முதலில்  “ அ ” வரைந்து படிக்க ஆரம்பித்தோம். கரும் பலகையும், கல்சிலேட்டும், சிலேட்டுக் குச்சியும் தான் எங்களுக்கு முதலில் படிப்பு கற்பித்த தோழர்கள்.


எல்.கே.ஜி. மாதிரி பள்ளிப் பருவங்கள் இல்லாத கால கட்டம். ஆனாலும் கொஞ்சம் வயது குறைந்த குழந்தைகளை கவனிக்கும் வகுப்பு ஒன்றே ஒன்று உண்டு. அதற்கு குட்டிப் பால்ராப்பு (குட்டி பாலர் வகுப்பு)ன்னு பெயர். என் அண்ணனின் பேத்தி என்னிடம் நர்ஸரி பாடல் சொல்லித் தரச் சொல்லிக் கேட்டாள்.. அவளை கொஞ்சி கலாய்க்கும் விதமாக “என்னையெல்லாம் எல்.கே.ஜி.யில் படிக்கவே வைக்கலை. அதனால் நர்ஸரி பாடலே தெரியாது” ன்னு கதை விட்டேன். ரொம்பவும் கவலைப்பட்டாள். என்னோட அறிவு கொஞ்சம் அவளைவிட குறைவுன்னு பீல் பண்ணி நிறைய ரைம்ஸ் எல்லாம் சொல்லித் தந்தது தனிக்கதை. நான் தான் குட்டிப் பால்ராப்புலேயும் படிக்கலையே, நேரா ஒண்ணாங் கிளாஸ்தான்.


கதவுகளோ ஜன்னலோ இல்லாத நீண்ட கூரைப் பந்தலுக்குள்ளேயே எல்லா வகுப்புகளும் அடக்கம். வகுப்புகளின் எல்லைகள், எந்தவித தடுப்புகளுமின்றி உத்தேசமாக வரையறுக்கப் பட்டிருக்கும்.  நல்ல காற்றோட்டத்துடன் கூடிய ஆரோக்யமான சூழல் இருந்ததையும் மறுக்க முடியாது. இடையிடையே கூரையைத் தாங்கும் கம்புகளில் சாய்ந்து உட்காரவும் சண்டை நடக்கும். 


பள்ளிக்கூடம் முழுவதையும் காலையில் பெருக்குவது, தேவைப்படும் இடங்களில் தண்ணீர் தெளிப்பது, கழிவறைக்கு தண்ணீர் நிரப்புவது எல்லாமே மாணவர்கள் வேலைதான். அந்தக் காலத்தில் “மாணவர்களை வேலை வாங்குவதாக” எந்த பெற்றோரும் கம்ப்ளெயிண்ட் சொன்னதில்லை. எந்த ஆசிரியரும் அதைக் குற்றமாக நினைத்ததும் இல்லை. இயல்பாக நடக்கும் நிகழ்வுகள்.  ஆண் பெண் வேற்றுமை, பொருளாதார , ஜாதி சமய வேற்றுமைகள் அனைத்தும் அற்றுப் போய் மாணவர்கள் என்ற ஒரே குடைக்குள் அனைவரையும் இணையச் செய்த சக்தி வாய்ந்த அநுபவங்கள் அவை.


 மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட காலகட்டம் அது. அனைவருக்கும் ஒரு அலுமினியத் தட்டு உண்டு. அனைத்தையும் கிணற்றடியில் வைத்து கழுவி சுத்தப் படுத்துவதும் மாணவ மாணவிகளே! 


தினமும் வாய்ப்பாடு வகுப்பு உண்டு. ஒரு மாணவன் சொல்லச் சொல்ல அனைத்து மாணவர்களும் கோரசாக திருப்பிச் சொல்ல வேண்டும். அன்று படித்த வாய்ப்பாடுகள்தான் இன்றும் எங்கள் கணக்குகளுக்கு அடித்தளம். லாகிருதம் புக், கால்குலேட்டர், கணிணி என எத்தனையோ அறிவியல் முன்னேற்றங்கள் வந்துவிட்ட போதும் ”எண்ணெட்டு அறுபத்து நாலு”ன்னு வாய்ப்பாடு மூலம்தான் இன்றும் என்னால் கணக்குப் போட முடியும். அந்த வாய்ப்பாடு கோரஸ் இன்னும் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.


பள்ளியின் கிழக்குபுறத்தில் ஒரு மைதானத்தில்தான் எங்கள் விளையாட்டுகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். பந்து, வலை, பேட் போன்ற பொருட்களெல்லாம் கிடையாது. கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகள்தான் அதிகம் இருக்கும். பள்ளியின் வெளி வராந்தா கொஞ்சம் உயரமான திண்டு.அங்குதான் பள்ளியின் மணி கட்டியிருக்கும். பள்ளி ஆரம்பிப்பது, இடைவேளை, மதிய உணவுக்கு, பள்ளி முடிந்ததற்கு என்று அடிக்கடி ஓசை எழுப்பும் மணி, உண்மையிலேயே மணி கிடையாது. உடைந்த தண்டவாளத் துண்டு கம்பி போட்டு கட்டியிருக்கும். இடையிலுள்ள துவாரத்தில் அதில் ஓசை எழுப்ப இன்னுமொரு இரும்புத் துண்டு சொருகப் பட்டிருக்கும். மனி ஓசை சத்தம் மட்டும் தெருவே அதிரும்படி இருக்கும்.


அந்த கால கட்டத்தில் கான்வெண்ட் போன்ற பள்ளிகள் அருகில் இல்லாததால் அய்யாதுரை டாக்டர் வீட்டுப் பிள்ளைகளும் எங்கள் பள்ளியிலேதான் படித்தார்கள். அந்த சிறப்பின் காரணமாக எத்தனையோ டாக்டர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள் என எண்ணிலடங்கா மேதைகளை எங்கள் பள்ளி உருவாக்கி இருக்கிறது. இப்போது வரும் ஆண்டுவிழா மலர்களில் முன்னாள் மாணவர்களின் முன்னேற்றம் உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

அரை நூற்றாண்டு (சுமார் 50 வருடங்கள்) க்குப் பிறகு ஆரம்பப் பள்ளியின் நினைவலைகள் மேலெழும்பி வந்தாலும் , பெயர்களும் நிகழ்வுகளும் புகை படிந்த ஓவியங்களாகவே தெரிகிறது. அறியாப் பருவம் என்பது மிகச் சரியே. அதன் பிறகு வந்த உயர்நிலைப் பள்ளி, கல்லூரி போன்றவற்றின் நினைவுகள் ஆரம்பப்பள்ளி நினைவுகளை அமுக்கி விட்டன போலும். அதனால்நிறைய பெயர்கள் மறந்துவிட்டன. ராம்கியிடம் பேசியிருந்தால் சில நினைவுகளைப் பகிர்ந்திருப்பான். 


சுதந்திர தினத்துக்கு ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு எடுத்துக்கணும். அதுக்கு தகுதித் தேர்வெல்லாம் நடக்கும். “கொடியில் இரண்டு மலருண்டு”ன்னு பாடல் பாடி நான்கூட  பாட்டுப் பாட தேர்வானேன். ஏதோ ஒரு ஆசிரியை “ சுதந்திரத் திருநாளாம் இன்று ; இந்நன்னாளிலே கூடினோம்” என்று ஒரு பாட்டு எழுதிக் கொடுத்து என்னைப் பாட வைச்சாங்க. அப்போல்லாம் என் குரல் கொஞ்சம் கேட்கிற மாதிரிதான் இருந்தது. பரிசு கூட வாங்கினேன். 

எங்க அக்கா அண்ணன் எல்லாரும்ம் கூட இங்கேதான் படிச்சாங்க. மரகதம் அக்கா மட்டும் இந்து ஸ்கூலில் படிச்சான்னு நினைக்கிறேன். வேதமுத்து சாரோட மகன் விவேகானந்தன் சார் நாங்க படிக்கும் போதே ஆசிரியராக வந்து சேர்ந்தார். அவர் கை பிரம்புக்குத்தான் பசங்க பயப்படுவாங்க. இன்னமும் அவர்தான் எங்கள் பள்ளியைத் திறம்பட நடத்தி வருவதாக கேள்விப்பட்டேன். ஐந்தாம் வகுப்பு (அஞ்சாப்பு) வாத்தியார்தான் தலைமை ஆசிரியராக இருப்பார். பஞ்சாயத்துகளெல்லாம் அவர் முன்தான் போகும். 

மொத்தமே ஐந்து முதல் ஆறு ஆசிரியர்களை மட்டும் வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் ஆணித்தரமான அடிப்படைக் கல்வியைக் கொடுத்த அத்தனை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தில் இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன். 

 

ஆரம்பப் பள்ளி நினைவலைகளின் முதல்புள்ளி

ஆலமரமென ஆணிவேர் விட்டு செழித்து வளர்ந்து

விழுதுகளை வையமெங்கும் பரப்பி சிறப்பற்று நிற்கும்

வேதமுத்து வாத்தியாரின் திரவியம் பள்ளி!!

0 Comments:

Post a Comment

<< Home