Wednesday, August 26, 2020

 

அலை -1

எழுத ஆரம்பித்த உடனேயே எனக்குள் இருக்கும் சந்தர்ப்பவாதி, தலையை நீட்ட ஆரம்பிச்சாச்சு. முதலில் கோர்வைப் படுத்திக் கொள், பருவங்களை வகைப்படுத்திக் கொள், நிகழ்வுகளைத் தரம் பிரித்துக் கொள் என்று ஏக அறிவுரை.

எந்த கட்டுக்குள்ளும் அடங்காமல் காட்டாறு மாதிரி போகவேண்டுமென்று மனது சொல்கிறது, ஆனால் விரல்கள் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. இன்று காலை மரகதம் அக்காவிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அதனால் அக்காவிடமிருந்தே ஆரம்பிக்கலாம்.

ஐநூற்றுமுத்து – நாகம்மாள் தம்பதியரின் இரண்டாம் மகள் மரகதம் அக்கா. எனக்கும் அக்காவுக்கும் 18 வருட இடைவெளி. நான் ஏழாவது பெண் அல்லவா? அதனால் நானே அக்காவுக்கு மகள் போன்ற ஸ்தானம்தான்.எதனாலேயோ அவளை நாங்கள் “நல்லக்கா” என்றே கூப்பிடுவோம். ஆனால் அவள் பொல்லாத அக்கா, சேட்டை பண்ணினால் கம்பெடுத்து முட்டிக்குக் கீழே விளாசிவிடுவாள், டீச்சரம்மாவாச்சே!!

அந்தக்காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு, இரு குழந்தைகளுக்கிடையில் இடைவெளி எதுவும் கிடையாது. ஒரு குழந்தை பிறந்து தாய்ப்பால் மறக்கடிக்கும் நிலையில் அடுத்த குழந்தை தங்கிவிடும். அதனால் கிடத்தட்ட இரண்டு-மூணு வருட இடைவெளிகளில் எட்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டவர் எங்கள் அம்மா. எனக்கும் நயினார் ( 6 வது மகன். ) அண்ணனுக்கும் மட்டும்தான் ஐந்து வருட இடைவெளி. எட்டாவது மேதையான தம்பி நாராயணனுக்கும் எனக்கும் இரண்டரை வருட இடைவெளி.

மூத்த அண்ணன் ( நினைவில் வாழும்) ராம்குமார். ஆனால் எங்களுக்கெல்லாம் “ துரை” அண்ணன் (தொரண்ணன்). அண்ணனோட குரல் மிகப் பிரபலம். சாதாரணமாகப் பேசினாலே மூணு தெருவுக்குக் கேட்கும். எதையும் மனசில் வைத்துக்கொள்ளத் தெரியாத அப்பாவி அண்ணன்.

மூன்றாவது அக்கா (நினைவில் வாழும் ) சுடலை வடிவு. சுதந்திர தினத்தன்று பிறந்தவள். ”சுதந்திரதேவி”ன்னு பெயரிடப் பட்டிருக்க வேண்டியவள் சுடலை வடிவானாள். நாலாவது தமிழ் பண்டிட் சரசக்கா, இளம் வயதிலேயே விதவையானாலும் தூண்போல் நின்று தன் குடும்பத்தைக் கரையேற்றியவள்.

ஐந்தாவது அண்ணன் சிவகாமிநாதன். இப்போது எங்கள் எல்லோருக்கும் அப்பா ஸ்தானத்திலிருந்து வழி நடத்துபவன். மூணு அக்கா, மூணு அண்ணன், ஒரு தம்பி என அம்சமான குடும்பத்தின் பெண்களில் கடைக்குட்டி நான்.

அப்பா தீவிர கம்யூனிஸ்ட் .ஆனாலும் அத்தனை குழந்தைகளுக்கும் சாமி பெயர். தனது சித்தாந்தங்களைப் பிறர்மீது திணிக்காத பண்பட்ட அரசியல்வாதி; குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லி கட்டுப்பாடுகளுடன் வளர்க்காமல் அவரவர் தனித்துவத்துடன் இயல்பாய் வளர வழி செய்தவர். கையெழுத்துகூடப் போடத்தெரியாத அம்மாவை “ பாண்டிச்சேரி MLA “ என்று நாங்களெல்லாம் கேலி செய்யும் அளவுக்கு மகாராணி போல் வாழச் செய்தவர். அப்பாவின் பெயரிலுள்ள “ முத்து” அடுத்த தலைமுறை வாரிசுகளின் பெயர்களாய் பல்கிப் பெருகி மணம் வீசிக் கொண்டிருக்கிறது.

முத்துக்கு முத்தான செல்வங்கள் ஒவ்வொருவரைப் பற்றியுமே ஒவ்வொரு புத்தகம் எழுதலாம். ஐநூற்று முத்துவின் வாரிசுகள் 500 வரும்வரை யார் யார் இருப்போமோ தெரியவில்லை. ஒரு நூறு வரும்வரை இந்த தலைமுறை இருக்கும். ஏற்கனவே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள், பிள்ளைகளின் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என எண்ணிக்கை 76 வந்துவிட்டது. வாழ்த்துங்கள் வளரட்டும்.

ரெண்டு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதற்கே நாம் இன்று தடுமாறிக் கொண்டிருக்கும் போது எட்டு குழந்தைகளைப் பெற்று ஆலமரமாய் குடும்பத்து கிளைகளைப் பரப்பி வேறூன்றி நிற்கும் “ முத்துக்கள் ” குடும்பத்திற்கு என் முதல் பதிவு சமர்ப்பணம்.

என்றென்றும் அன்புடன் 

தாணு

26/08/2020

0 Comments:

Post a Comment

<< Home