Tuesday, June 06, 2006

மது, நானும் வந்திட்டேன்!!!

வலைப்பதிவர் : தாணு

வலைப்பூ பெயர் : நட்புக்காக

சுட்டி :http://forusdear.blogspot.com

ஊர் : திருச்செந்தூர் அருகே `ஆறுமுகநேரி’ என்ற கிராமம்

நாடு :தமிழ்நாடு(நம்மை இணைத்ததும் அந்நாடே அன்றோ?)

வலைப்பூ அறிமுகம்செய்தவர்
`ஸ்டேஷன்பெஞ்ச்’ ராம்கி!
பாலர் பருவம் முதல் பள்ளி இறுதிவரை வகுப்புத் தோழன். நேற்றுவரை `நீ’யாக இருந்தவர் வலை உலகின் பண்பாடு காரணமாக `நீங்கள்’ ஆனவர்!!

முதல் பதிவு ஆரம்பித்த நாள் :26 th August 2005

இது எத்தனையாவது பதிவு :63

இப்பதிவின் சுட்டி :http://forusdear.blogspot.com/2006/06/blog-post.html
(சுட்டி இலவசக் கொத்தனார் உபயத்தால் சரி செய்யப் பட்டது))
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
ஒரே விதமாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழல் போரடித்த தருணத்தில் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து Japanese language கற்றுக் கொள்ள விழைவதாக ராம்கியிடம் சொன்னேன். முதலில் வலைப்பூ பற்றி அறிந்துகொள்ளுமாறு சொல்லி அதற்குரிய முகாந்திரங்களையும் டவுண்லோட் செய்து கொடுத்த போது ஆரம்பித்த பூமாலை இன்றளவும் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது.

சந்தித்த அனுபவங்கள்:
இணையம் என்றாலே ஒரு வித மூடு மந்திரம், அதில் உலாவும் அன்பர்கள் அனைவருமே ஏமாற்றுக்காரர்கள், நாமும் புனை பெயருடன் தான் உலா வர வேண்டும் என்று இருந்த நினைப்பைப் புரட்டிப் போட்ட இடம் வலைப்பூ; நிழல்களை நிஜமாக்கித் தந்த நிச்சய பூமி; எழுத ஆரம்பித்த தருணத்திலேயே நம்மைப் பற்றிய விவரங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிய அழகான அன்பான உலகம்; தம்பிகள் முதல் மருமகன்கள் தொடங்கி, துளசி முதல் தருமி வரை என்னற்ற நண்பர்களைத் தந்த ச்ந்தோஷமான தளம்.; இன்னும் எத்தனையோ அனுபவங்கள்.
தீபாவளியன்று கோவை அருகில் `கல்லாறு’ சுற்றுலாத் தலம் அருகே நடந்து கொண்டிருந்தபோது திடீரென வந்த வெளி நாட்டுத் தொலைபேசி அழைப்பு `நான் உஷா பேசறேங்க, துபாயில் இருந்து’ .( நம்ம ராமச்சந்திரன் உஷா) அந்த நிமிடம் ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
ஒரு மத்தியான தூக்கக் கலக்கத்தில் `NJ யில் இருந்து பத்மா (தேன்துளி பத்மா) பேசறேன்’ன்னு வெகுநேரம் அளவளாவிய போது அடைந்த புளகாங்கிதம்;
செல்வராஜ் ஈரோடு வந்தபோது, அத்தனை அலுவல்களுக்கிடையிலும் நேரில் வந்து பார்த்துச் சென்றது;
இன்னும் அருணா சீனிவாஸ், நம்ம மதுமிதா( இந்தப் பதிவின் காரணகர்த்தா) தருமி போன்றோர் தொலைபேசியில் பேசியபோது கிடைத்த நட்பு;
சிங்.ஜெயகுமார் முயற்சியால் , நான் விரும்பிக் கேட்ட புத்தகத்தை, கூரியர் மூலம் என் கையில் கிடைக்க வைத்த பெருந்தன்மை-
எனது பெயரைப் பார்த்து ஒத்த பெயருடைய சில நண்பர்கள், யாஹூ குழுமத்திலிருந்து நண்பர்களாகினார்கள். சில மருத்துவ நண்பர்களும் தொடர்பு கொண்டார்கள்
(சந்தித்த அனுபவங்களே பெரும் பதிவாகிவிடும் போலிருக்கே)

பெற்ற நண்பர்கள்:
சந்தித்த அனுபவங்களிலேயே ஓரளவு நட்பு வட்டம் வந்துவிட்டது. ஆனாலும் சிவா, இளா, சிபி, பரஞ்சோதி போன்ற பக்கத்து ஊர் நண்பர்களையே, வலைப்பூக்கள் மூலம்தான் அடையாளம் கண்டுகொண்டேன். இன்னும்பெயர் எழுதப்படாவிட்டாலும் நண்பர்கள் வட்டம் அதிகம்தான். எனது பதிவுகளில் தளராமல் பின்னூட்டமிடும் அனைவரும் என் நண்பர்களே!

கற்றவை:
வெகுகாலமாக எழுதுவதே மறந்து போயிருந்த நேரத்தில் மறுபடியும் எழுத ஆரம்பித்ததால் கிடைத்த relaxation நன்கு பயனளிப்பதாக உள்ளது. ஒரு சிக்கலான கேஸில் மாட்டிக்கொள்ளும்போது ஏற்படும் மனத் தளர்வைக்கூட நீக்கவல்லதாக என்னுடைய எழுத்துக்கள் உள்ளது.
எழுத்து சுதந்திரம் இருந்தாலும் கண்டபடி எழுதக் கூடாது என்பதை நிறைய பதிவுகள் வாசித்துக் கற்றுக் கொண்டேன்.
சில மருத்துவ முன்னேற்றங்களைக் கூட மற்றவர்கள் பதிவின் மூலம் நிறைய நேரம் அறிகிறேன். சந்திர வதனாவின் பதிவுகள் அதில் முக்கியமானது.
நியூஸி பற்றி வெளிப்படையாகத் தெரிந்தவற்றைவிட துளசி மாதிரி நண்பர்கள் விளக்கமாக எழுதும்போது, என் குழந்தைகளுக்கு அதைக் காட்டி சந்தோஷப் பட்டுக் கொள்கிறேன்.
உள்ளங்கையில் உலகம் என்பது நிஜமாகவே ஒரு திரைக்குள் குவிந்துகிடப்பதைத் தெரிந்துகொண்டேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
பார்த்ததை, கேட்டதை, நினைத்ததை என்று எது பற்றி வேண்டுமானாலும் எழுதக் கிடைத்த வாய்ப்பு போதாதா? எடிட் செய்யப்படாமல் நம் எண்ணங்கள் பிரதிபலிப்பதே எழுதக் கிடைத்த சுதந்திரத்தால்தானே!

இனி செய்ய நினைப்பவை:
ஒவ்வொரு பதிவு எழுதியதும் ,அடுத்து தொடர்ச்சியாக எழுத வேண்டுமென்று நினைக்கிறேன், முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தட்டச்சு செய்து வைத்துக்கொண்டு தவணை முறையிலாவது பதிவு செய்ய வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.
நிறைய பதிவுகள் வாசித்துவிட்டு போய்விடுகிறேன், முடிந்த அளவு பின்னூட்டமும் இட வேண்டுமென்று முயலவேண்டும்.
மதுமிதா போன்றோர் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வதைப் பார்க்கும்போது, நாமும் ஏதாவது செய்யவேண்டுமென்று முனைப்பு வருகிறது, செயல் படுத்த முடிவதில்லை. ஏதேனும் ஒரு புதுமை செய்ய வேண்டும். (ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன)

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
ஆரம்பக்கல்வி திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி என்ற கிராமத்தில்.
MBBS- திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி
DGO - ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி
அரசு மருத்துவராக 15 வருடங்கள் ( வேலூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, ஈரோடு மாவட்டங்களில்)
கணவரும் மருத்துவர் மயக்கவியல் நிபுணர்( அந்நாள் கல்லூரித் தோழர், இந்நாள் வாழ்க்கைத் துணைவர்)
கலப்புமணத்தில் விளைந்த முத்துக்கள் இரண்டு-
மகள் - +2 வில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்
மகன் -6 ஆம் வகுப்பு செல்கிறான்.
உடன் பிறந்தோர் என்னையும் சேர்த்து எட்டு பேர், அதில் ஒருவர் வலைப்பதிவரும் கூட!
47 வயதில் நடை பயின்று கொண்டிருக்கிறேன், ஆனாலும் முப்பது வயதுதான் மதிக்க முடியும் என்பது என் கணவரின் முகஸ்துதி! ( நம்மளைப் பற்றி நாமே மெச்சிக்காட்டி எப்படி?)

ஆர்வம்:
சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போது வலைப்பதிவு நண்பர்களை நேரில் பரிச்சியம் செய்து கொள்ள வேண்டுமென்று பேராவல். டூர் செல்லும்போது முன்பெல்லாம் புது இடங்களைப் பார்க்கும் ஆர்வம் இருக்கும். இப்போது அந்த இடத்தில் வலைப்பதிவு நண்பர் யாரையாவது சந்திக்க முடியுமா என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது.

(ஒருவழியா மூணு நாளா எழுதி இன்னைக்கு அரங்கேற்றிட்டேன் )

39 Comments:

At 10:18 AM, Blogger தாணு said...

மது
லேட்டா வந்தேன்னு லிஸ்ட்டில் சேர்க்காமல் விட்டுடாதீங்க!

 
At 11:59 AM, Blogger பரஞ்சோதி said...

அக்கா, நீங்க லேட்டா வந்தாலும் தலைவர் பாணியில் லேட்டஸ் (லோட்டஸ்) ஆக வந்திருக்கீங்க.

அது என்ன ஆறுமுகநேரியை கிராமம் என்று சொல்லிட்டீங்க.

சுத்து வட்டாரத்தில் ஆறுமுகநேரி பெரிய டவுண் ஆச்சே.

அங்கே தானே, தலைவர் படம் எல்லாம் ரிலிஸ் ஆகும். படையப்பா 100 நாட்கள் ஓடிய ஊரை கிராமம் என்று சொல்லாதீங்க ஆமாம்.

- பரஞ்சோதி

 
At 12:03 PM, Blogger இலவசக்கொத்தனார் said...

டாக்டரக்கா,

உங்க பதிவோட சுட்டி இப்படி இருக்கணும் - http://forusdear.blogspot.com/2006/06/blog-post.html

 
At 12:06 PM, Blogger லதா said...

// உடன் பிறந்தோர் என்னையும் சேர்த்து எட்டு பேர், அதில் ஒருவர் வலைப்பதிவரும் கூட! //

அத்தையின் உடன்பிறப்பு எவர் என்று கண்டுபிடிக்கும் வலைப்பதிவருக்கு ஆஆஆஆஆயிரம் (பொற்காசுகள் இல்லை) பின்னூட்டங்கள் இலவசம். :-)))

// 47 வயதில் நடை பயின்று கொண்டிருக்கிறேன், ஆனாலும் முப்பது வயதுதான் மதிக்க முடியும் என்பது என் கணவரின் முகஸ்துதி! ( நம்மளைப் பற்றி நாமே மெச்சிக்காட்டி எப்படி?) //

அப்படி எல்லாம் எழுதக்கூடாது. என்றும் 16 என்றுதான் எழுதவேண்டும். நிரந்தரத் தலைவி அப்படித்தான் எழுதச் சொன்னார்கள் :-)

 
At 1:06 PM, Blogger Thekkikattan|தெகா said...

அஹா, என்னையும் உங்க குரூப்ல சேர்த்துக்கங்க... நானும் முயற்சிக்கிறேன் நண்பரா உலா வர :-)

தெகா.

 
At 9:15 PM, Blogger துளசி கோபால் said...

அப்படியெல்லாம் உங்களை வுட்டுற மாட்டாங்க. ஜூன் 10க்கு இன்னும் 3 நாள் இருக்கு:-))))

'மயக்கவியல்' நல்லா இருக்கே!

அப்படியே மயக்கிட்டாரா?:-)))))

நல்லா இருங்க.

 
At 2:10 AM, Blogger தாணு said...

பரஞ்சோதி
நான் பள்ளிப் பருவத்தில் இருந்தபோது ஆறுமுகநேரி கிராமம் போல்தான் இருந்தது. இப்போ டவுண் ஆகிவிட்டது! நாங்க பள்ளிக்கூடம் போகும்போது பனங்காட்டு வழியே ஒத்தைத் தடத்தில், மோகினி உலாவுதான்னு பயந்துகிட்டே போனோம். இப்போ அடுத்த தலைமுறை டவுண்பஸ்ஸில் அல்லவா போகிறது! ஆனாலும் ஸ்கூல் பையைத் தலையிலோ முன்னாடி போற மாட்டு வண்டியிலோ மாட்டிட்டு கதை புத்தகம் வாசித்துக் கொண்டே போகும் சுகம் இவர்களுக்கு மிஸ்ஸிங்!!

 
At 2:10 AM, Blogger தாணு said...

இலவசக் கொத்தனார், நன்றி. ஆனாலும் பதிவில் அதை எப்படி மாத்துறதுன்னு தெரியலையே.

 
At 2:12 AM, Blogger தாணு said...

லதா
மனசளவில் நான் என்றுமே மார்க்கண்டேயினிதான். ஆனாலும் உங்களை மாதிரி மருமகப் பிள்ளைகள் அடிக்க வந்திடக் கூடாதேன்னு உண்மை வயசைச் சொல்லிட்டேன்.

 
At 2:14 AM, Blogger தாணு said...

தெக்கிக்காட்டான்( உச்சரிப்பு சரியா?)
நண்பராகிவிட்டீர்கள், எதற்கும் சி.கி. சபையிலும் சேர முடியுதான்னு முயற்சி பண்ணுங்க!

 
At 2:15 AM, Blogger தாணு said...

ஆமாம் துளசி! எல்லோரையும் பேச விடாமல் மயக்குவாங்க. என்னைப் பேச வைத்தே மயக்கிட்டாங்க அந்த அழகுக்கு அரசர்(புரியுதுல்ல?)

 
At 4:13 AM, Blogger தருமி said...

அப்போ தலைவர் M.B.,B.S.படிக்கிறதுக்கு முந்தியே 'மயக்கவியல்' நிபுணர் ஆயிட்டார்னு சொல்லுங்க..!

 
At 4:14 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

அக்கா,

blogspot-ல லாகின் பண்ணிக்கோங்க. அங்க ஒவ்வொரு பதிவுக்கும் நேரா edit postன்னு ஒரு ஆப்ஷன் இருக்கு.
இந்த பதிவுக்கானா பட்டனை சொடுக்கிக்கோங்க.
அது உங்க பதிவைக் காட்டும்.
அங்க போயி மாற்றங்களைப் பண்ணுங்க. முடிச்சா கீழ publish postன்னு ஒரு பட்டன் இருக்கும் அதை சொடுக்குங்க.
அப்புறம் நம்ம பதிவுக்கு வந்து ஒரு பார்வை பாத்துட்டு போங்க. ;0
அவ்வளவுதான்!

 
At 8:30 PM, Blogger ILA (a) இளா said...

//இப்போது அந்த இடத்தில் வலைப்பதிவு நண்பர் யாரையாவது சந்திக்க முடியுமா என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது//
அட நம்ம கட்சி.

//ஆனாலும் சிவா, இளா, சிபி, பரஞ்சோதி போன்ற பக்கத்து ஊர் நண்பர்களையே, வலைப்பூக்கள் மூலம்தான் அடையாளம் கண்டுகொண்டேன்.//
என்னாத்த பண்றதுங்க இவுங்களை எல்லாம் ஒரு தடவ கூட பார்த்துஇல்லைன்னாலும், அட நம்ம ஊர்க்காரங்க அப்படிங்க போது மனசுக்குள்ள ஒரு சின்ன பட்டாம்பூச்சி

 
At 10:01 PM, Blogger மதுமிதா said...

நன்றி தாணு

இந்தப்பதிவின் சுட்டி
http://forusdear.blogspot.com/2006/06/blog-post.html

இலவசகொத்தனார் சொன்னது போல்
செய்ங்க போதும்

ஆமா நம்ம ராம்கி இன்னும் காணோமே:-(

 
At 12:05 AM, Blogger தாணு said...

ஆமாம் இளா!
ட்ராக்டர்லே ரைடு போகும்போது எங்க ஊர்ப்பக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டு போங்க!

 
At 12:07 AM, Blogger தாணு said...

அப்பாடி,
மது பார்த்திட்டீங்க!
ராம்கி முக்கியமான டிவி சீரியல் வேலையில் மூச்சுத் திணறிகிட்டு இருக்காங்க. சித்தன் அவங்க பொண்ணு கல்யாண வேலையில் பிஸி. இந்த மாதிரி ஆளுங்களுக்காக தவணை தேதியைத் தள்ளிப்போட வாய்ப்பு இருக்கிறதா?

 
At 1:04 AM, Blogger Chandravathanaa said...

மயக்கவியல் நிபுணர்...?

 
At 7:27 AM, Blogger தாணு said...

ஆமாம் வதனா!
மயக்கவியல் நிபுணர்தான்(Anaesthetist)ஆனால் மயக்குவதில் நிபுணர் இல்லை, ரொம்ப பாவமான ஆளு!

 
At 7:36 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

எல்லாம் சரி, நான் சொன்ன வழிமுறையில் கடைசி விஷயத்தைப் பண்ணுனீங்களா? இல்லையா? :)

 
At 7:44 AM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு
வாங்க, ரொம்ப நாளா காணோம். நலமா?

 
At 3:30 AM, Blogger ramachandranusha(உஷா) said...

தாணு, நா பார்த்தவரையில் இந்த அறிமுகப் படலத்தை விலாவாரியாய் எழுதியது நீங்கத்தான் :-) சரிதான், மூணுநாளா எழுதினேன்னு சொல்லியிருக்கீங்களா, விடு ஜூட்
:-))))))))))))))

 
At 9:57 AM, Blogger ஜென்ராம் said...

நன்றி தாணு.. மதுமிதாவிடம் தேதியைத் தள்ளி வைக்க வழி இருக்கிறதா என்று கேட்கிறீர்கள்.. நன்றி..
எனக்கு இதன் ஆதியும் புரியவில்லை அந்தமும் புரியவில்லை.. ரோசாவசந்த் நட்சத்திரமாக இருக்கும்போது இரு முறை வந்ததோடு சரி.. என்ன நடக்கிறது என்றே நான் கவனிக்கவில்லை.
தவறு என்னுடையதுதான்.. அதற்குத் தண்டனையாக என்னைப் பற்றிய குறிப்பு இடம் பெறாவிட்டாலும் சரிதான். இருந்தும் மதுமிதாவின் வலைப்பதிவுத் தளத்திற்குச் சென்று என்ன என்று தெரிந்து கொள்கிறேன். சித்தன் மகள் திருமணத்திற்கும் வர இயலாத நிலையில் இருந்தமைக்கு அவரிடம் உங்கள் பின்னூட்டப் பெட்டியில் மன்னிப்பு கேட்கிறேன்.

ஏதோ ஜப்பானிய மொழியைப் படிக்க விடாமல் வலைபதியச் சொன்ன மாதிரித் தெரிகிறது. மயக்கவியல் மருத்துவரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்து விடுங்கள். ஜப்பானிய மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள்.

 
At 1:19 AM, Blogger G.Ragavan said...

வாங்க தாணு. ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு. இப்பெல்லாம் ரொம்ப வேலையா? பதிவுகள் கொறஞ்சிருக்கே. மதுமிதா வந்து கேட்டாங்களோ இல்லையோ...ஒரு பதிவு குடுத்துட்டீங்க.

ஊர் பேரைச் சொல்லி ஆறுமுநேரின்னு தூத்துக்குடி பழைய பஸ்டாண்டுல கத்துற சத்தத்தை நினைவு படுத்தீட்டீங்க.

 
At 8:20 AM, Blogger சிங். செயகுமார். said...

"தாணு, நா பார்த்தவரையில் இந்த அறிமுகப் படலத்தை விலாவாரியாய் எழுதியது நீங்கத்தான் :-) சரிதான், மூணுநாளா எழுதினேன்னு சொல்லியிருக்கீங்களா, விடு ஜூட்
:-))))))))))))))"

 
At 1:34 PM, Blogger வெளிகண்ட நாதர் said...

//47 வயதில் நடை பயின்று கொண்டிருக்கிறேன், ஆனாலும் முப்பது வயதுதான் மதிக்க முடியும் என்பது என் கணவரின் முகஸ்துதி! // எல்லா வீட்டிலேயும் சொல்ற பொய் தான் !

ஆமா, நம்ம கணக்கு பார்த்து வருவதா காதல்?படிச்சிட்டீங்களா??

 
At 4:04 AM, Blogger Gnaniyar @ நிலவு நண்பன் said...

சரி சரி கவலைப்படாதீங்க..இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்க..உங்க பதிவும் அவங்க புத்தகத்துல இடம் பிடிச்சிறும்..

 
At 8:56 AM, Blogger தாணு said...

தருமி,
உங்க குசும்பை இங்கே ஆரம்பிக்காதீங்க!

 
At 8:57 AM, Blogger தாணு said...

இ.கொ.
உங்க இலவசத்தைப் படிச்சுட்டேன்!!

 
At 8:58 AM, Blogger தாணு said...

பத்மா
லீவ் முழுக்க பிஸியாக ஓடிடுச்சு. இப்போதான் மறுபடியும் ப்ளாக் வர்றேன்

 
At 8:59 AM, Blogger தாணு said...

உஷா
உங்க மாதிரி ஆளுங்க விபரமா கதைகள் எழுதும்போது, நாங்களெல்லாம் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்தான் நீள்பதிவு போட வேண்டியிருக்கு.

 
At 9:01 AM, Blogger தாணு said...

ராம்கி
ஜப்பானிய மொழி படிக்கும் ஆர்வம் அடி மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. மகள் மேல்படிப்புக்கு சென்னை வந்தால் அவளுடன் ஒட்டிகிட்டு வந்திட வேண்டியதுதான்.

 
At 9:01 AM, Blogger தாணு said...

ராகவன்,
இப்போதான் உங்க பதிவுலே நன்றி சொல்லிட்டு வந்திருக்கேன்

 
At 9:02 AM, Blogger தாணு said...

செயகுமார்
ஆற அமர வேலை செய்யிறது நம்ம வழக்கம்தானே!!

 
At 9:03 AM, Blogger தாணு said...

வெளிகண்ட நாதர்
உங்க பதிவுதான் ஓப்பன் பண்ணி வைச்சிருக்கேன். வாசித்துட்டு கருத்து சொல்றேன்

 
At 9:04 AM, Blogger தாணு said...

ஞானியார்
ஆறுதல் சொன்னதுக்கு நன்றி.
திருமண அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன். வாழ்த்துக்கள்.

 
At 6:22 PM, Blogger erode soms said...

வயதெல்லாம் சொல்லி எங்கவயச ஞாபகப்படுத்தப்படாது..

 
At 3:26 AM, Blogger தாணு said...

அப்பிச்சி ஆகிற வயசுக்கு வந்தவங்க எல்லாம் வயசு பற்றி கவலைப் படுவது நியாயமா?

 
At 8:34 AM, Anonymous Anonymous said...

//ஒரே விதமாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழல் போரடித்த தருணத்தில் ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டுமென்று நினைத்து Japanese language கற்றுக் கொள்ள விழைவதாக ராம்கியிடம் சொன்னேன்.//

ஓ! நம்ம ஜாதியா நீங்க! நானும் இப்படித்தான் ஆர்வக்கோளாறுல Japanese கத்துக்கப்போய், அதனால ஈர்க்கப்பட்டு, கடைசியில இங்கேயே வந்து சேர்ந்துட்டேன்.

போனவாரம் ஊருக்கு வந்திருந்தேன். உங்களையும் தருமியையும் சந்திக்க நினைச்சிருந்தேன். ஆனா முடியலை. அடுத்தமுறை பார்ப்போம்.

Japanese கத்துக்க நீங்க சென்னையெல்லாம் போக வேண்டியதில்லை. தமிழ் மூலமாக் கத்துக்கறதுக்கு 'Learn Japanese' ன்னு ஒரு புத்தகம் இருக்கு. ஆரம்ப காலங்களில் இதைவைத்துப் படித்துத்தான் இண்டர்வியூவுக்கே போனேன். சென்னையில் இருக்கும் என் ஆசிரியை கல்பனா கணேசன் எழுதியிருக்காங்க. ஈரோடு Bookies-ல் திரு.அன்புகிட்ட சொன்னீங்கன்னா, வாங்கித்தர ஏற்பாடு செய்வார்.

http://www.xlweb.com/heritage/asian/japanese.htm

இதில் விளக்கங்கள் இருக்கு.

வாழ்த்துக்கள்
கமல்

 

Post a Comment

<< Home