Sunday, February 05, 2006

கடற்கரைக் கவிதைகள்

`திருநெல்வேலிக்காரங்க தேர் பார்க்க மாட்டாங்க, திருச்செந்தூர்க்காரங்க கடல்லே குளிக்க மாட்டாங்க’ என்பது எங்க ஊர்ப்பக்க வட்டார மொழி. ஆனால் திருச்செந்தூர் பக்கத்து ஊர்காரங்களுக்கு கடல் குளியல்னா உசுரு. திருச்செந்தூர் பத்தி நிறையப் பேர் அழகழகா எழுதியிருக்காங்க. நான் அதைச் சுத்தி உள்ள கடற்கரைகள் பத்தி மட்டும்தான் சொல்லப் போறேன்.

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரைக் கிழக்கு கடற்கரையில் எத்தனையோ புகழ் பெற்ற கடற்கரைகள் இருந்தாலும், செந்தூரின் அழகே அழகு. கோவில் வாசலிலிருந்து பார்த்தால் மணப்பாடு வரை தெரியும்,பின்னாடி திரும்பிப் பார்த்தல் காயல்பட்டிணம் வரை தெரியும்.

மற்ற கடற்கரைகளைக் காட்டிலும் தென்கோடி வரவர தேசிய ஒருமைப்பாடு தெரியிற மாதிரி அமைந்திருக்கும். திருச்செந்தூர் இந்துக்களின் புனிதக் கடவுளின் தலமாக இருக்கிறது. அதனை ஒட்டிய வீரபாண்டியன்பட்டினம் முழுவதுமாக கிறிஸ்தவர்களைக் கொண்டது. அதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் திருச்செந்தூருக்கு இணையான பிரசித்தி பெற்றது. முருகன் கோயில் கோபுரம் எவ்வளவு கம்பீரமாக இருக்குமோ அதே போன்று நெடிதுயர்ந்த தேவாலயக் கோபுரங்களும் மிக அழகு. அதை அடுத்த காயல்பட்டிணம் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை உள்ளடக்கிய ஊர். அங்குள்ள மசூதியும் மிக்க சிறப்பு வாய்ந்ததே!
இந்த மூணு ஊர்களைப் பற்றி அப்புறம் எழுதறேன்

இந்த மூன்று ஊரின் பிள்ளைகளும் படிக்கும் பொது கல்லூரி ஆதிதனார் கல்லூரி. சுற்றி உள்ள ஊர்களின் பாடசாலைகளிலும் அநேகமாக மூன்று மத ஆசிரியர்களும் நல்லிணக்கத்துடன் இன்று வரை பணியாற்றி வருகிறார்கள். நாட்டின் பல மூலைகளிலும் ஏற்படும் மதக் கலவரங்கள் இங்குள்ளவர்களை அந்நியப் படுத்தியதில்லை. அந்த வகையில் நான் பிறந்த மண் புண்ணியம் செய்ததே!
ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது தென்தமிழகத்தைப் பார்வையிட வந்த போது இந்த மூன்று மதத் தலங்களிலும் பிரியமுடன் வழிபட்டதாகக் கேள்வி.
தற்போது கிழக்குக் கடற்கரைச் சாலையை குமரி வரை நீட்டிக்கும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அவ்வாறு இணைக்கும் போது இன்னும் அழகிய கடற்கரைகள் வெளி உலகுக்குத் தெரியும்.
செந்தூரில் இருந்து குமரி நோக்கி செல்லும் போது அடுத்து வருவது மணப்பாடு கடற்கரை. சமீபத்தில் வந்த `இயற்கை’ படம் பார்த்தவர்களுக்கு அந்த கடற்கரைதான் மணப்பாடு என்று தெரியும். ரொம்ப அழகான ஆரவாரம் இல்லாத கடல். நிலப்பரப்பு கொஞ்ச தூரம் உள்ளே சென்று சின்ன தீபகற்பத்தை உருவாக்கியிருப்பதால் ஊரின் பக்கம் உள்ள கடல் அமைதியாக இருக்கும் .செந்தூரின் சீற்றம் மிக்க கடலில் குளிக்க பயப்படுபவர்கள் இந்த அமைதிக் கடலில் குளிக்கலாம்.

மீன் பிரியர்களுக்கு நாக்கில் தினவு எடுக்கும் வகையில் புதிதாகப் பிடிக்கப்பட்ட விதவிதமான மீன்கள் கடற்கரையில் கொட்டப் பட்டிருக்கும். கடற்கரையிலிருந்து ஊரை நிமிர்ந்து பார்த்தால் வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப் பட்டிருக்கும் தேவாலயங்கள் எட்டி எட்டி பார்க்கும். படகு வைத்திருப்பவர்களைக் கொஞ்சம் அன்புடன் கேட்டால், கடலுக்குள் கட்டுமரத்தில் கூட்டிச் செல்வார்கள்,த்ரில்லிங்காக இருக்கும். மோட்டார் படகிலும் செல்லலாம்.
எங்களைக் கடலுக்குள் 2 கி.மீ. தூரம் வரை கூட்டிச் சென்று படகை நிறுத்திக் கொண்டார்கள். அலையே தெரியவில்லை, ஆழமும் குறைவுதானாம், குதித்து நீச்சல் கூட அடிக்கலாம்னு சொன்னாங்க. எங்க வாண்டுக ரெண்டும் குதிப்பேன்னு நிக்குதுங்க! அவ்வளவு அமைதியாக இருந்தது.
மணப்பாடுக்கும் செந்தூருக்கும் நடுவில் சின்ன கடற்கரை- குலசேகரப் பட்டிணம். அந்தக் காலத்தில் அங்கே மட்டும்தான் டீச்சர் ட்ரெயினிங் கல்லூரி இருந்ததாம். எங்க அக்காவிலிருந்து, மாமியார் வரை அதன் மாணவிகள். தசரா சமயத்தில் அங்குள்ள கோவில் திருவிழா ரொம்ப பிரசித்தி. விதவிதமான வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வாடிக்கை. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வேண்டுதல் நிரைவேற்ற வருகிறார்கள். அந்த சீசனில் அந்த ரோட்டிலேயே போகக் கூடாது, பயங்கர ட்ராபிக் ஜாம் ஆகிவிடும்.

மணப்பாட்டில் குளித்துவிட்டு ஈரம் காயாமலே அடுத்த கடலுக்குள் இறங்கி விடலாம், வரிசையாக கடற்கரைக் கிராமங்கள்தான். ஆனாலும் அடுத்த சிறப்பு உவரி கடலுக்குத்தான். கடற்கரையில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் , கப்பல் வடிவத்திலேயே அமைக்கப் பட்டிருக்கும். கடலில் இருந்து பார்த்தால், கப்பல் தரை தட்டி நிற்பது போலவே இருக்குமாம். கடலுக்கும் ஊருக்கும் இடைவெளி 10 அடிகூட இருக்காது, அலையின் சீற்றமோ சாதாரண நாட்களில் கூட ரொம்ப பயங்கரமா இருக்குது. புயல் வீசும்போது எப்படி இருக்குமோன்னு அச்சமாக இருந்தது.

ஒரே கடல்தான், ஆனாலும் எத்தனை பரிமாணங்கள்! செந்தூரில் அழகும் ஆக்ரோஷமும், மணப்பாடில் ரொம்ப அமைதியாக, உவரியில் பயங்கர வேகமும் சீற்றமுமாக!

இதையெல்லாம் பார்த்துவிட்டு கன்னியாகுமரி கடற்கரை போனால் ரொம்ப கமர்ஷியலாக இருப்பதுபோல் தோணிவிடுகிறது. சுற்றுலா அந்தஸ்து வந்ததுமே அதன் இயற்கை அழகு கெட்டுப் போய்விட்டது.

நடுவில் முட்டம் கடற்கரை எங்கேயோ இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன், இன்றுவரை பார்க்கவில்லை. `அலைகள் ஓய்வதில்லை’ வந்ததிலிருந்து பார்க்க வேண்டுமென்று ஆசையாக இருந்தபோதும், எப்படியோ தட்டிப் போய்விடுகிறது. அதிலும் `சுட்ட மீனும் சுறாப் புட்டும்’ பற்றி சிரில் அலெக்ஸ் எழுதியதைப் படித்த பிறகு அடுத்த முறை கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் சேர்த்தாச்சு.

எப்பவும் நம்ம ஊர் கடலையே பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த முறை மேற்குக் கடற்கரை விருந்தளித்தது. கேரளாவின் கடல் வேறுவிதமான அழகு. இய்ற்கை அழகு கெடாதபடி கடற்கரையை சுற்றுலா மையங்களாகவும் மாற்றி வைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. ஆலப்புழாவில் பேக் வாட்டர் போட்டிங் போனது மறக்க முடியாத அநுபவம். ரெண்டு பக்கமும் வீடுகளைப் பிரிப்பதே தண்ணீர்ப் பரப்புதான். அதில் மீனோ, காய்கறிகளோ வியாபாரம் செய்பவர்கள் இக்குணியூண்டு படகில் கூவிக் கூவி வியாபாரம் செய்ததைப் பார்க்க புதுமையாகவும் அழகாகவும் இருந்தது. எதிர் வீட்டுக்கு ஊர்வம்பு பேசப் போகணும்னாக்கூட படகில்தான் போகணும். சுவாரசியமான பொழுதுபோக்கு இல்லையா? படகு வீடுகளைப்ப் பார்த்தால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறைபோல் சவுகரியமாக இருக்குது. நிறைய தேனிலவு தம்பதிகள் அதில் தங்க வருவாங்களாம். நமக்கும் காலம் கடந்துவிடவில்லை, அறுபதாம் கல்யாணம் முடிச்சுட்டு நேரா இங்கே வந்திட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிகிட்டேன்.
என்ன கடல் காற்று ரொம்ப உப்பு கரிக்குதா? விளக்கமாகவே எழுதலைங்களே! சும்ம கோடி காட்டியிருக்கேன், எப்படியும் பின்னூட்டங்களில் கடல் இளவரசர்கள் அதிக விபரங்களைச் சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில். மேலே இருப்பது திருச்செந்தூர் கடல்தான், வள்ளி ஒளிந்த குகைக்கு முன்பு உள்ள பகுதி.
பி.கு:பின்னூட்டப் பெட்டியில் கமெண்ட் மாடரேஷன் ஏதோ தகராறு பண்ணுது, அதனால் பின்னூட்டங்கள் மறைந்து கொள்கின்றன. என்னுடனாவது பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் எப்பவும் போல் பின்னூட்டமிடவும். நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளேன். நாளையாவது சரியாகுதா பார்க்கலாம்.

14 Comments:

At 1:12 AM, Blogger தாணு said...

கமெண்ட் போஸ்ட் ஆகாமலிருக்க என்ன காரணம்? கம்ப்யூட்டர் விற்பனர்கள் சொல்லலாமே!

 
At 2:03 AM, Anonymous Anonymous said...

கடற்கரை- நேரம்போவது தெரியாமல்
குளிக்கலாம், அலைகளின் ஆற்ப்பரிப்பில் ஆழ்ந்து
நினைவலைகளை நீந்தவிட்டு
மணல் பறப்பில்
மலர்ந்துகிடக்கலாம்.
சுனாமிக்குப்பிறகு கடற்கரை
தூரத்து உறவாகிவிட்டது.

 
At 2:42 AM, Blogger சிவா said...

தாணு! நம்ம ஊர சுத்தி இருக்கிற ஊர எல்லாம் கவர் பண்ணிட்டீங்க. எனக்கும் நாசரேத் என்பதால், திருச்செந்தூர் தான் அடிக்கடி போனதுண்டு. குலசை போயிருக்கிறேன். திருச்செந்தூர்-ல் கடல்ல குளிக்கிறது தான் என்ன ஒரு ஜாலி.சுனாமிக்கு அப்புறம் கொஞ்சம் பயந்து தான் குளிக்க வேண்டிய இருக்கு :-). போனதடவை மணப்பாடு போனப்போ அங்கே கடல் சத்தமே (அலையே) இல்லாம அமைதியா இருந்தது. ஆர்பாட்டமா அலை இருந்து நம்ம தூக்கி தூக்கி வீசினா தான் குளிக்க ஒரு த்ரில்லிங் இருக்கும். :-)).

வரும் பதிவுகளில் ரொம்ப விளக்கமா எழுதுங்க.

 
At 6:30 AM, Blogger மணியன் said...

நான் ஒருமுறை செந்தூரிலிருந்து குமரிவரை கிழக்கு கடற்கரை ஓரமாக சென்றிருக்கிறேன். வெளியூராள் மேலோட்டமாகப் பார்ப்பதற்கும் உள்ளூர்வாசிகள் அதனை விவரிப்பதற்கும் எத்தனை வித்தியாசம் ? தெற்குகோடியின் அழகை நீங்களும், ஜோ/சிறில் ஜோடியும் தத்ரூபமாக சொல்கிறீர்கள். மிகவும் நன்றி.

 
At 7:35 AM, Blogger தாணு said...

கடற்கரையிலேதான் தாகம் அதிகமாக இருக்கும், உப்புக் காற்றினால்

 
At 7:37 AM, Blogger தாணு said...

சித்தன்
சுனாமியும் ஒரு இயற்கை வெளிப்பாடுதானே. காவிரியில் வெள்ளம் வரும்கிறதுக்காக குளிக்காமல் இருக்கிறோமா?(முதலைக்கு பயந்து வேணா குளிக்காமல் இருக்கலாம்)

 
At 7:39 AM, Blogger தாணு said...

சிவா,
ஆர்ப்பாட்டத்தோட குளிக்கணும்னா உவரி போங்க! நாங்க கடலிலேயே கிடக்கிற ஆளுங்கன்னாலும், அந்தக் கடல் கொஞ்சம் பயமா இருந்தது. குட்டீஸ்கூட போக மணப்பாடுதான் சரி.

 
At 7:44 AM, Blogger தாணு said...

பாரதி,
சித்தனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும். தினம்தோறும் மிக மோசமான விபத்துக்களைச் சாலையில் பார்ப்பதால் பயணங்களை ஒதுக்கிவிடுகிறோமா?
எந்த மீனவர்களுக்காக பரிதாபப் படுகிறீர்களோ, அவர்களால் அந்தக் கடலை நீங்கி வாழ முடியாது.

கடலுக்கு அந்த மக்கள் மேல் என்ன கோபம் இருக்க முடியும், இயற்கையின் சூழ்ச்சி கடலை அந்நியப் படுத்திவிட்டது!
பயணக் கட்டுரை எழுதுவதென்றால் நிறைய படங்களுடன் மெட்டீரியல்ஸ் ரெடி!

 
At 7:45 AM, Blogger தாணு said...

மணியன்,
இன்னும் குமரி அருகிலுள்ள சின்னச் சின்ன கடல் கிராமங்கள் நிறைய இருக்கின்றன, சிரில்தான் விளக்கமாக எழுதணும்.

 
At 7:45 AM, Blogger சிங். செயகுமார். said...

"படகு வீடுகளைப்ப் பார்த்தால் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறைபோல் சவுகரியமாக இருக்குது. நிறைய தேனிலவு தம்பதிகள் அதில் தங்க வருவாங்களாம். நமக்கும் காலம் கடந்துவிடவில்லை, அறுபதாம் கல்யாணம் முடிச்சுட்டு நேரா இங்கே வந்திட வேண்டியதுதான்னு முடிவு பண்ணிகிட்டேன்."


நானும் அததான் நெனச்சிட்டு இருக்கேன் .இடையில ஒருதடவ போயிட்டு வந்திடனும்.

 
At 9:51 AM, Blogger தாணு said...

ஜெயக்குமார்,
எதை நினச்சுகிட்டு இருக்கீங்க, அறுபதாம் கல்யாணம் பற்றியா? அவ்வளவு வயச்சயிடுச்சா?

 
At 3:22 AM, Blogger G.Ragavan said...

இந்தப் பதிவை நான் அன்னைக்கே படிச்சிட்டேன். இன்னைக்குத்தான் பின்னூட்டம் போடுறேன். கோவிக்காதீக.

கடலப் பத்திச் சொன்னதுமே எனக்குத் திருச்செந்தூரு நெனவெல்லாம் வந்துட்டு. அங்குட்டுதான தூத்துக்குடி நம்ம பொறந்த ஊரு.

அந்தக் கடலலைக கோயில் சொவத்துல வந்து மோதும். அங்க பெரிய பாறைக கெடக்கும். ராத்திரியில ரவுண்டு போனா கொஞ்சம் திக்குன்னு இருக்கும்.

கோயில் வாசல்ல நின்னுக்கிட்டு அந்தாக்குல பாத்தா தொலையில ஒத்த வீடு ஒன்னு தெரியும். அது வீடோ குடிசையோ எதுவோ..இதுவரைக்கும் போய்ப் பாக்கல்ல.

தூத்துடில மட்டும் என்னவாம். பிஷ்ஷிங் ஹார்பரு எதுக்க இருந்தப்ப மாடிக்குப் போனா வெளீருன்னு உப்பளந்தான். அங்குட்டு கடலு. பயமில்லாமத்தான் இருந்தோம். அப்பப்ப காக்கக்க மீனுகளக் கொத்திக் கொண்டாந்து போட்டுரும்.

அதே மாதிரி ஹார்பருக்கே விடியக்காலைல போனா கூட மீனு கூட சல்லிசாக் கெடைக்கும். வாங்கி விக்குறவ வந்து வாங்குவாங்க.

இன்னும் சொல்ல நெறையா இருக்கு. அப்புறம் பின்னூட்டமே பதிவாயிட்டா என்ன செய்யறது..அதுக்காக இங்ஙனயே நிப்பாட்டுதேன்.

 
At 8:29 AM, Blogger தாணு said...

ராகவன்
நடை மத்தினது கூட நல்லாத்தான் இருக்கு. தூத்துக்குடி பற்றி எழுதினாலே ஒரு பதிவு வந்திடும். எல்லா கடல் பற்றியும் சொல்ல நினைத்ததால் , அது பற்றி சொல்லவில்லை

 
At 3:31 AM, Anonymous Anonymous said...

என்னலே மக்கா(நண்பா) குலசை கடற்கரையை சிறிசுன்னு சொல்லுதுவே.
அங்கேதான்லே ஒரு காலத்துலே பெரிய துறைமுகமே இருந்ததுவே! என்ன மறந்து விட்டீர்வே.
நன்றி.
குலசை சுல்தான்.

 

Post a Comment

<< Home