Thursday, January 19, 2006

திருப்பரப்பு அருவி



புது வருடம் பிறந்ததிலிருந்தே ஒரே ஊர் சுற்றல்தான். பிரயாண அனுபவங்கள் பற்றியே ஆறேழு பதிவுகள் போடலாம் போல. ஆனாலும் போனவருடத்தின் கடைசி நாள் சென்ற
திருப்பரப்பு அருவி ரொம்ப பிடிச்சிருந்தது.
தமிழகத்தின் தென் கோடியில் உள்ள சிறிய, அழகான அருவி. நாகர்கோவிலில் இருந்து வந்தால் சுமார் 40 கி.மீ. தூரம் இருக்குமென்றார்கள். நாங்கள் திருநெல்வேலி தடத்தில் வந்ததால் ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக சென்றோம். ரோடு ரொம்ப மோசமாக இருந்தாலும்கூட சுற்றிலும் தெரிந்த இயற்கை வனப்புகள் சோர்வு தெரியாமல் செய்துவிட்டது. மரகதப் பச்சை விரித்த வயல்களும், தண்ணென்ற நிழல் பரப்பிய ரப்பர் தோட்டங்களும், கூடவே ஓடி வந்த வாய்க்கால்களும்-கொள்ளையோ கொள்ளை அழகு. மிக சமீபத்துக்கு போகும்வரை கூட அருவி இருக்கும் சுவடே தெரியவில்லை. மிகச் சின்ன அருவி,ஆனாலும் அதிலிருந்து விழும் நீரின் வேகம் அதிகம்தான். நீர் விழும் இடத்தில் அழகாக சிமெண்ட் தரை கட்டி விடப்பட்டுள்ளது. வழுக்கி விழும் அபாயமில்லை;காலில் முள்ளோ கண்ணாடித் துண்டுகளோ குத்தும் பயமில்லை; மேலிருந்து கற்களோ பாறையோ விழும் அபாயமுமில்லை. அருகிலேயே சின்ன நீச்சல் குளம் கட்டி விட்டிருக்கிறார்கள். அருவியின் சீற்றத்துக்கு பயந்த சின்ன வாண்டுகள் அதில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அருவியின் நடை தளர்ந்து அமைதியான ஆறாக இறங்கி ஓடும் இடத்தில் ஏகப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நடந்திருப்பது பார்த்த கணத்தில் புலனானது. `கடலோரக் கவிதைகள்’ முதல் `ஆண் பாவம்’ உள்ளிட்ட பல படங்களை நினைவு கூர்ந்தோம். அவரவர் சினிமா அறிவைப் பொறுத்து ஏகப்பட்ட சினி க்விஸ்கள் அரங்கேறியது.
சிறு குழந்தைகள், பெற்றோர், பெரியோர் என்ற பலதரப்பட்ட கூட்டத்துடன் செல்வதற்கு ஏற்ற பாதுகாப்பான அருவியாகத் தெரிகிறது. அருகிலேயே படகுத் துறை, பெரிய இந்து வழிபாட்டுத்தலம் , சின்ன அணைக்கட்டு போன்ற அமைப்பு என சிறந்த பொழுது போக்கு இடமாக உள்ளது.
கொல்லிமலை அருவி, ஏற்காடு கிள்ளியூர் அருவி,பாபநாசம் பாணதீர்த்தம் அருவி போன்றவை கிளர்ச்சியூட்டும், அட்வென்ச்சர் தனமான அருவிகள். ஆனால் திருப்பரப்பு `குடும்ப அருவி’ன்னு சொல்லலாம். இந்த பதிவு எழுத எழுதவே `நான் பார்த்த அருவிகள்’ன்னு ஒரு தொடரே போடலாம் போல் நிறைய சரக்கு கைவசம் இருப்பது நினைவுக்கு வருகிறது.
எல்லோருக்கும் காலம் கடந்து சமர்ப்பிக்கும் என் `புத்தாண்டு வாழ்த்துக்கள்’

0 Comments:

Post a Comment

<< Home