Wednesday, November 09, 2005

`ராகிங்'ன்னா என்ன?

மருத்துவக் கல்லூரி ராகிங் என்பது பரவலாக அலசப் படும் ஒன்று. மகனோ மகளோ மருத்துவம் படிக்க தேர்ந்தெடுக்கப் படும்போது அதை முழுமையாக அனுபவிக்கமுடியாதபடி, சின்ன நெருடல் ராகிங் காரணமாக எல்லா பெற்றோரிடமும் இருக்கும். அவ்வளவு மாகாத்மியம் பொருந்திய ராகிங் பயங்கரத்திலிருந்து தப்பித்த பெருமை எங்கள் வகுப்பையே சாரும்.
திருநெல்வேலி மரு.கல்லூரியில் முதலாமண்டு காலடி வைக்கிறோம்,தெரிந்தவர்களும் நண்பர்களும் பயம் காட்டி அனுப்பியிருந்த நேரம்.லேடீஸ் ஹாஸ்டலில்(House of angels) இருந்து வகுப்பறை வரை ஊர்வலம் போல் நாங்கள் கலர் கலராக செல்ல, முன்னும் பின்னும் இரு `அடியாட்கள்’ எங்களுக்கு காவலுக்கு வந்தாங்க. எங்க கல்லூரியின் சைக்கிள் ஸ்டாண்ட் தான் எல்லா நல்லது கெட்டதிலும் பங்கேற்கும் கதாபாத்திரம் (`அழகன்’ படத்து டெலிபோன் மாதிரி). எல்லா சீனியர் குங்ரகு(மாற்றிப் படிக்கவும்-குரங்கு)களும் வரிசையா நின்னுகிட்டு கத்தறதும், சீட்டியடிக்கிறதும், முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பாவம்போல தலை குனிந்து போனோம்.
ஆனால் சாயங்காலம் ஆனதும் சீனே மாறிப்போச்சு!

ரொம்ப நாள் நிலுவையில் இருந்த கல்லூரி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்ததால், எங்களுக்கு ராகிங்கில் இருந்து exemption. போட்டியிடுபவர் பற்றிய எந்த விபரமும் அறியப்படாதவர்கள் என்பதால், எங்களை தாஜா பண்ணினா கணிசமான வோட்டு கிடைக்குமே!! எனவே இரண்டு தரப்பினரும் அன்பைப் பொழிஞ்சு தள்ளிட்டாங்க. (ஜாதி பிரிவு, மதப் பிரிவு, பொருளாதாரப் பிரிவு என்று ஏகப்பட்ட பிரிவினைகளை அந்த தேர்தல் எங்களுக்குள் உண்டாக்கி அதனடிப்படையிலேயே நண்பர் வட்டம் அமையும் வண்ணம் செய்துவிட்டது ஒரு வகையில் நெருடலான பாதிப்பே)

என்னதான் ராகிங் இல்லையென்று சந்தோஷப் பட்டுக் கொண்டாலும், அதை இழந்ததால் நாங்கள் இழந்ததும் கொஞ்சம் அதிகமே. வக்கிரப் படுத்தப் படாமல் செய்யப் பட்ட ராகிங் மூலம் சீனியர் மாணவர்களின் அன்புக்கு பாத்திரமாகும்போது, நிறைய உதவிகள் கிடைக்கும். கஷ்டப்படும் மாணவர்களுக்கு புத்தகங்கள் முதலானவை சேகரித்துக் கொடுப்பதிலிருந்து, பீஸ் கட்ட தாமதமாகும்போது உதவி செய்வது வரை நிறைய நட்புணர்வும் உருவாகும். எங்கள் கல்லூரி ஓரளவு கிராமீயத்தனமான atmosphereஐயே கொண்டதாக இருந்ததால் ரொம்ப சீரியஸான ராகிங் இருக்காது. ஆனால் சின்ன சின்னதா ரசிக்கிறமாதிரி நிறைய நடக்கும். அது முதலாண்டில் மட்டும் அல்ல, முதல் clinical yearஇன் போது ஆஸ்பத்திரி வளாகத்தில் நுழையும் வரை நடக்கும்.

உதாரணத்துக்கு:
முதல் க்ளினிகல் ஆண்டில் ஊசிபோடும் பிரிவில்தான் முதல் பாடம் ஆரம்பிக்கும். அப்போதெல்லாம் க்ளாஸ் சிரிஞ்ச் தான். அதை ஸ்டெரிலைசரில் இருந்து எடுத்து பிக்ஸ் பண்ணி ஊசி மாட்டி, மருந்து ஏத்தி-அப்பப்பா பெரிய வேலை அப்போது. அடிக்கடி சிரிஞ்ச் கீழே விழுந்து உடைந்து செவிலியர்களிடம் திட்டு வாங்குவதும் நடக்கும். எனக்கு immediate senior மாணவர் ஒருவர், என்னை குமைச்சுடணும்கிற நோக்கத்தோட வந்து தனக்கு ஊசி போட்டு விடுமாறு கையைக் காட்டிட்டு நின்றார். கையைப் பிடித்து ஊசி போட்டால் காலேஜ் முழுக்க, `அவள் என் கையைப் பிடிச்சா’ன்னு புரணி பேசறது, போடாமல் தயங்கி நின்னா அதையே சாக்காக வைச்சுகிட்டு மேலும் மேலும் கிண்டல் பண்றது. இதுதான் அங்கே நடைமுறை. அதனால் சீனியர் குங்ரகுங்க தலையைப் பார்த்ததுமே பெண்கள் கூட்டம் ஒழிஞ்சுக்குவாங்க. நாந்தான் கொஞ்சம் அடாவடி ஆச்சே, பொறுமையா B12 ஊசியை லோடு பண்ணினேன், நிதானமா அவர் சட்டைக் கையை மடிச்சுவிட்டுட்டு நறுக்குன்னு ஊசியை ஏத்திட்டேன். இதை எதிர்பார்க்காத அவர் `ஆ’ன்னு கத்தினதும் சக நண்பரே சிரிச்சுட்டார். அதற்குப் பிறகு நாங்க நல்ல நண்பர்களாயிட்டோம்.

ஆண்களுக்கு ராகிங் கொஞ்சம் சீரியசாக இருந்திருக்கலாம். என்ன மாதிரி ராகிங் செய்யப்பட்டோம்னு இது நாள்வரை எங்க வீட்டுக்காரர் என்னிடம் ஒரு வார்த்தை சொன்னதில்லையே!!

ஆமா! ராகிங்னா என்ன?(தலைப்புக்குப் பொருத்தமா வந்திட்டேனா?)

முகம்தெரியாத மனிதர்கள்
முதல்தரம் பார்க்கும்போது
முரட்டுத்தனம் காட்டினாலும்

இறுதிவரை இணைந்து நின்று
இன்னுயிர் நண்பர்களாவதுதான்
நாங்கள் கண்ட ராகிங்!!

இன்றைய ராகிங் கண்டு
நானும் பயப்படுகிறேன்
மகளைக் கல்லூரி அனுப்ப!!

25 Comments:

At 10:04 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

நானெல்லாம் பேரூந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் முருக்கு வித்துருக்கேன் தெரியுமா. ... சட்டையைக் கழட்டி இடுப்பில் கட்டிக் கொண்டு கால்சட்டையை முட்டி அளவிற்கு மடித்து விட்டு ஒரு முருக்கு வியாபாரி தோற்றத்தை வேறு கொண்டு வருமாறு உத்தரவு. உண்மையில் என் தோற்றத்தில் ஒரு ஒரிஜினல் முருக்கு வியாபாரி தோற்றிருப்பான் என்றே நினைக்கிறேன். நான் வீட்டிலிருந்து தினமும் கல்லூரிக்குச் சென்று வந்தேன். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தவர்கள் தான் ரொம்ப பாவம். போஸ்டருக்கெல்லாம் சோப் போட சொல்வாங்களாம்.... யார் போஸ்டருக்குன்னு மட்டும் கேட்காதீங்க ;-)

 
At 10:39 AM, Blogger சிவா said...

ஒரு கை மண்ணை அள்ளி எண்ண சொல்லிவிடுவாங்க. போக்கத்த பசங்க.

"உன் சீனியர் பேரு என்னடா" - சீனியர்.
"வாணி" - இது ஜுனியர்
"சீனியர எதுக்குடா மரியதை இல்லாம 'வாநீ'ன்னு சொல்லற. இனி 'வாங்க நீங்க'ன்னு தான் சொல்லனும்"

இப்படி கடி ஜோக்குகளும் ராகிங்கில் சகஜம்.

 
At 10:45 AM, Blogger பத்மா அர்விந்த் said...

மாலை ஆரம்பிக்கும் ராகிங் இரவு 3 மணிவரை கூட தொடரும். எத்தனை கேள்வி கேட்டலும், படுத்தினாலும் அநாடமி படிக்க தேவையான அத்தனை எலும்புகளும் எனக்கு இலவசமாக கிடைத்தது.
பொறியியல் கல்லூரிகளில் படித்த என் சகோதரர்கள் பட்ட பாடு மோசம்.

 
At 11:25 AM, Blogger rv said...

அத்தை,
என்ன சொன்னாலும் ராகிங் கறத என்னால ஒத்துக்க முடியாது. என்னை இதுவரை யாரும் செஞ்சதில்லை. நானும் இதுவரைக்கும் யாரையும் செஞ்சதில்லை. அதற்கான அவசியமும் இல்லை என்பது கருத்து. அதேபோல எனக்கு சீனியர்களும் எதனையும் எதிர்ப்பார்க்காமல் உதவி செய்துள்ளனர். நானும் எனக்கு பின்னால் சேர்ந்தவர்களுக்கு செய்துள்ளேன். இதில் பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது? அடுத்தவருக்கு உதவுவதற்கு முன்னே, அவர் நம்மை செயற்கையாகவாவது மதித்து கேட்டால்தான் செய்வோம் என்பது ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.

சீனியர்கள் என்றால் என்ன பெரிய கொம்பா? அவங்க படிச்சத போல அளவு வருஷம் படிச்சா அவங்களுக்கு இருக்கற அனுபவம் நமக்கும் வரும். இதே மனநிலையோடுதான் என் ஜூனியர் மக்களையும் அணுகுவேன். சார், அண்ணா என்றெல்லாம் தேவையில்லாத செயற்கை மரியாதை வேண்டி செய்யப்படும் சாடிஸ்ட் செய்கைகளே ராகிங், அது எவ்வளவு benign ஆக இருந்தாலும், என்பது என் கருத்து.

இந்த இடத்திலே வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு சொல்லமுடியாது. என்ன ஒண்ணு, இரண்டு வயசு வித்தியாசம் இருக்குமா? உங்கள அத்தைன்னு கூப்பிடறது வேற விஷயம் :P

 
At 1:27 PM, Blogger வெளிகண்ட நாதர் said...

இதைப் படிச்சோன நாங்க சொல்ற ராக்கிங் oath தான் ஞாபகம் வருது "அந்தி நேரம் சந்தி சாயும்" அப்படின்னு ஆரம்பிக்கிறது, வேணாம், அதெக்கப்பறம் வரதெல்லாம் உவ்வே!

 
At 2:31 PM, Blogger rv said...

This comment has been removed by a blog administrator.

 
At 1:17 AM, Blogger தாணு said...

ஆண்களின் ராகிங் பற்றி அரசல் புரசலாகத்தான் கேள்விப்பட்டோமே தவிர நிறைய தெரியாது. எங்க ஹாஸ்டலில் பாட்டு பாடச் சொல்றது, டான்ஸ் ஆடச் சொல்றது தவிர வேறெதுவும் நடக்கலை. அதனாலே நாங்களும் எங்க ஜூனியர்ஸை ராக் பண்ணலை.
இப்போல்லாம் ஸ்கூலில் கூட ராகிங் வந்திடுச்சாம், என் பொண்ணு சொன்னா. +11 ரீஅட்மிஷன் ஆகும்போது நடக்குதாம்.

 
At 1:23 AM, Blogger தாணு said...

ராமநாதன்,
என் க்ளாஸ் நண்பர்கள் என்னை அத்தைன்னு தான் கூப்பிடுவாங்க,ஒரு நாடகத்தில் அத்தை வேஷம் போட்டதால். அந்த காத்து எப்பிடியோ உங்களுக்கும் அடிச்சுட்டுது. பாட்டின்னு கூப்பிடாதவரை இப்போதைக்கு நிம்மதி.
நீங்க படிச்சது எந்த காலேஜ், ராகிங்கே இல்லாதது?

ராகிங் என்ற பெயரால் செய்யப்படும் அசம்பாவிதங்கள்தான் தவறு. சின்னச் சின்ன கலாட்டாக்கள்கூட இல்லாமல் கல்லூரியில் படிப்பதெப்படி ராமநாதன்? உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது!

 
At 1:26 AM, Blogger தாணு said...

கணேஷ்,
கோவில்பட்டியில் இவ்வளவு அப்பாவி முகத்துடன் உள்ள முறுக்கு வியாபாரியை முதல் தடவை பார்த்திருப்பாங்க, இல்ல!

 
At 1:28 AM, Blogger தாணு said...

சிவா, வெளிகண்ட நாதர் ,
உங்கள் வருகைக்கும் நன்றி , பகிர்ந்துகொண்டதுக்கும் நன்றி. இன்னைக்கு என்ற வீட்டுக்காரரோட சண்டை பிடிக்கணும்,ஒன்னும் சொல்லலையே என்று

 
At 1:28 AM, Blogger தாணு said...

பத்மா
லேடீஸ் ஹாஸ்டலில் கூடவா அப்பிடி

 
At 5:33 PM, Blogger erode soms said...

என்ன எல்லோரும் "கற்க்காலத்திற்கு" படையெடுத்து விட்டீர்,
சீனியர் தோழிகளிடம் I LOVE U
சொன்னதுமுண்டு,ஹாட்டலில் முண்டுகூட
இன்றி புகைவண்டி ஓட்டியதும் உண்டு.
எப்படி இருப்பினும் ராக்கிங் நல்ல அனுபவம் தான்

 
At 7:41 PM, Blogger தருமி said...

அப்போ ராமனாதர் மாதிரி ஆட்களுக்கு எங்க கல்லூரி ரொம்பவுமே பிடிக்கும்னு நினைக்கிறேன். Orientation-ல சீனியர் மாணவர்கள் கல்லூரி வாயிலிலேயே ஜுனியர்களை வரவேற்பதென்ன..நாள் முழுவதும் campus tour போவதென்ன..
கூடவரும் பெற்றோர்களே அசந்துவிடுவார்கள்.

 
At 7:59 PM, Blogger தாணு said...

பசித்தவர்கள் பழங் கணக்குதான் பார்க்க முடியும். ஐ லுவ் யூ சொன்னது யாரிடம்? இதுவரை சொன்னதே இல்லை?

 
At 9:43 AM, Blogger erode soms said...

யாருக்குத்தெரியும் முகமறியா மூத்தோர்களை,
\பசித்தவர்கள் பழங்கணக்குத்தான் பார்க்க முடியும்\-எனக்கு பசித்தபோது உங்கள் பின்னூட்டமிது "பதினாறு வயதுப் பையனா அந்த போட்டோவில்?"

 
At 2:03 PM, Blogger பத்மா அர்விந்த் said...

இரவு உணவுக்கு பிறகு எல்லாரையும் அழைத்து கொண்டு சீனியர் மாணவிகள் பொது இடத்திற்Kஉ சென்றுவிடுவார்கள். ஜிப்மரில் ஆண்கள் பெண்கள் விடுதிக்கும் பெண்கள் ஆண்கள் விடுதிக்கும் செல்லலாமே. பெண்கள் அறைக்குத்தான் வர முடியாது. அதற்கும் ஆண்கள் ஹஸ்டலில் அனுமதி உண்டு.

 
At 2:19 PM, Blogger kirukan said...

Aruppukottai-Kovilpatti bus is very famous for ragging...

I still remember my friends Srini hanging inside the bus when the bus was riding....

Vivek acting like a checking inspector and asking for ticket with passengers..

Ayyo naan enna pannennu kekuringala... I was doing Karate inside bus itself.. ;-)

 
At 2:20 PM, Blogger kirukan said...

Those were sweet days... Thanu... dont make me write another autograph..

 
At 7:56 AM, Blogger தாணு said...

கிறுக்கன் வருகைக்கு நன்றி. உங்க ஆட்டோகிராப் எங்களுக்கு சுவையாக இருக்கலாமே!

 
At 10:25 AM, Blogger rv said...

தாணு,
இங்கே ரஷ்ய கல்லூரிகளில் இல்லாத ஒன்று ராகிங்.. சில சமயம் இந்தியர்கள் ராகிங் செய்தாலும், அது ரொம்ப சீரியஸாக இருந்து, நேரே சான்ஸலரிடம் நீங்கள் புகார் செய்தால் அவர் கல்லூரியிலிருந்தே நீக்கப்படலாம். இங்கேயுள்ள பல விஷயங்கள் உங்களுக்கு அதிர்ச்சியைத்தரும்..இவ்வளவு ஏன், ஆசிரியர்களுக்கும்.. உதாரணத்திற்கு, ஒரு ஆசிரியர் உங்களை கருவிக்கொண்டே தொடர்ந்து பிரச்சனை கொடுக்கிறார் என்றால், அந்த குறிப்பிட்ட பாடத்திற்கு மட்டும் குரூப் மாறிக்கொள்ளலாம். அதே ஆசிரியர், உங்களை தேர்வில் தொல்லைப்படுத்தாதவாறும் பார்த்துக்கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கே இப்படியென்றால், மாணவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும். சீனியர்/ஜூனியர்களுடன் நட்பு வளருவதென்பது ராகிங்கை பொறுத்ததில்லை என்பது இன்னமும் என் நிலைப்பாடு.

 
At 10:27 AM, Blogger rv said...

//சின்னச் சின்ன கலாட்டாக்கள்கூட இல்லாமல் கல்லூரியில் படிப்பதெப்படி ராமநாதன்? //
கலாட்டாக்கள் என்பது நண்பர்களுக்கிடையே இருக்கவேண்டும்.. சீனியர் ஜூனியர் என்ற பிரிவினருக்கு மத்தியில் இல்லை..

all IMHO..

 
At 11:12 PM, Blogger Dr.Srishiv said...

அன்பின் தானு அம்மா
வணக்கம், வாழிய நலம், தங்கள் வலைப்பூவிற்கு முதன்முறையாக வருகைதந்தேன், ராகிங் பற்றி அருமையாக எழுதி இருக்கின்றீர்கள், என் நிலைப்பாடு, ராகிங் தேவை என்பதே, என் சீனியர் மாணவர்கள் அடித்த லூட்டிகளுக்குப்பின் எங்களுக்கு அந்த 4 வருடங்களும் எவ்வளவோ உதவிகள் செய்தனர், அவர்கள் கல்லூரி முடித்துச்சென்றாலும் அதன்பின்னும் உதவினார்கள், கல்லூரி காலங்களில் கோவிலில் பிச்சை எடுத்தது, பஸ்ஸில் முருக்கு விற்றது, வாட்டர் பாக்கெட் விற்றது, இதைப்பார்த்த ஒரு நிருபர் நேரே காவல்நிலையத்திற்கு வண்டியைக்கொண்டு செல்ல, எங்கள் கல்லூரி முதல்வர் வந்து எங்களை மீட்டது, என்று எவ்வளவோ மலரும் நினைவுகள்....ஹ்ம்ம்ம் மீண்டும் என்னை 15 வருடங்களுக்கு முன் அழைத்துச்சென்றதற்கு நன்றிகள் அம்மா..:)
அன்புடன்,
ஸ்ரீஷிவ்...:) அஸ்ஸாமிலிருந்து...

 
At 9:34 AM, Blogger தாணு said...

வருகைக்கு நன்றி ஸ்ரீஷிவ், ஆனாலும் அம்மான்னு சொல்லி ரொம்ப வயசான உணர்வை உண்டாக்கிட்டீங்களே!

 
At 6:58 PM, Blogger ஜோ/Joe said...

இராமநாதன்,
இந்த விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு தான் எனக்கும்.எந்த விதத்திலும் ராகிங்-ஐ என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது .ராகிங் மூலமாகத்தான் நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதை நான் மறுக்கிறேன் .நான் யாரையும் ராகிங் செய்யவில்லை .மாறாக பல ஜூனியர்களை ராகிங் -கிலிருந்து தடுத்திருக்கிறேன் .அதன் மூலமே எனக்கு நிறைய ஜூனியர் நண்பர்கள் கிடைத்தார்கள்.

 
At 9:32 PM, Blogger நேர் வழி. said...

பல்லவன் பஸ்ஸை கைகாட்டி,லண்டன் போகுமா கேளுடாண்ணாய்ங்க...கேட்டேன்.
"பாவம் வெயில் கொடுமை" - பஸ்ஸிலிருந்த்த பாட்டி.
"யோவ்...சாவு கிராக்கி...ஒத்திப்போய்யா...பார்த்தா இவனாட்டம் இருக்கே..." பஸ் கண்டக்டர்..
"ஏன் சார்...பாரீஸ் போறீங்களே...அதான் லண்டனும் போவீங்களோன்னு கேட்டேன்.." -நான்

கண்டக்டர் புண்ணியவான் சிரித்துவிட்டார்..

கதிரவன்

 

Post a Comment

<< Home