Tuesday, October 11, 2005

இளைஞர்கள்- அன்றும் இன்றும்

சமீப காலங்களில் இந்நாட்டு மன்னர்களை, வருங்கால இந்தியத் தூண்களை, உரசிப் பார்ர்க்கும் சங்கதிகளையே கேட்டுக் கேட்டு அவர்களைப் பற்றிய ஒரு கவலையுடன் இருந்த காதுகளுக்கு நேற்று ஒரு அருமையான விருந்து கிடைத்தது. சமீபத்தில் பள்ளிப் பருவம் தாண்டி கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழியின் மகன். அவனது தெளிந்த சிந்தனைகளையும், தீர்க்கமான முடிவுகளையும் தெரிந்து கொண்ட போது, தேவையற்றுக் குழம்புவர்கள் கிழட்டுப் பருவத்தை எதிர்நோக்கியிருக்கும் நாமே என்று தோன்றியது.

மாநிலத்திலேயே மூன்றாவது இடத்தில் தேறி மருத்துவப் படிப்புக்கு முன்னுரிமை கிடைத்தும் அதை வேண்டாமென்று தள்ளிவிட்டு பொறியியல் துறையில் தனக்குப் பிடித்த பிரிவை தேர்ந்தெடுத்து சேர்ந்துவிட்டான். தாய் மருத்துவராக இருந்தும் அவனைத் தன்வழியில் இழுக்க முடியவில்லை. தாயின் தோழர்களும் தோழியரும் (என்னையும் சேர்த்துத்தான்) மணிக்கணக்கில், வாரக் கணக்கில் விவாதித்தும் அவனின் தெளிந்த முடிவிலிருந்து மாற்ற எள்ளளவும் முடியவில்லை. அவனது நெருங்கிய நண்பனுக்கு மார்க் குறைந்ததால் அதிக பட்ச capitation fee கொடுத்து மருத்துவ சீட் வாங்கியதைப் பார்த்தும் கூட அவன் மனது கொஞ்சம் கூட கலையவேயில்லை.

படிப்பது , குறிப்பிட்ட துறையில் சேர்வது எல்லாமும் அந்தந்த நேரத்திய சூழலைப் பொறுத்தது என்றாலும் கூட , முடிவெடுப்பதில் இளைய தலைமுறைக்குள்ள தீர்க்கம் மனதுக்கு சுகமாக இருந்தது. இத்தனை வயதுக்குப் பிறகும் கூட அநேக நேரங்களில் நமது தீர்க்கமான முடிவுகள் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப திரிந்து விடுகிறது. அத்தனை pressure மத்தியிலும் அசையாமல் நின்றுவிட்டானே! இவன் மட்டுமே அபூர்வமானவன் என்று சொல்லவில்லை. இந்த வயதுக் குழந்தைகளெல்லோருமே நன்கு தெளிந்த சிந்தனையுடந்தான் இருக்கிறார்கள். அப்பா அம்மா டாக்டராக இருந்தும் பயாலஜி எடுக்க மாட்டேன் என்று கம்ப்யூட்டர் எடுத்த பையன், மாவட்டத்திலேயே பயாலஜியில் முதல் மார்க். ¼ மார்க்கில் மருத்துவப் படிப்பைத் தவறவிட்ட டாக்டர் வீட்டுப் பெண், எத்தனை லட்சம் கொடுத்தாவது, மெடிகல் சீட் வாங்கித்தருவதாகச் சொன்ன அப்பாவின் வாக்கைப் புறம் தள்ளிவிட்டாள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.

இவ்வளவு அறிவுபூர்வமாக தெளிவாக இருக்கும் இவர்களின் அடுத்த பக்கத்தை மட்டுமே பூதாகாரமாகக் காட்டி அசிங்கப் படுத்துவது ஊடகங்களே. எங்கோ நடக்கும் மேல்தட்டு நிகழ்ச்சிகளை விளம்பரத்துக்காக வெளியிடும்போது, அத்தனை இளைஞர்களுமே அதேபோல் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். ஜீன்ஸ் போட்ட பெண்கள் எல்லோருமே தரக்குறைவானவர்கள் போலவும், நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பவர்கள் எல்லோரும் தவறான உறவு உள்ளவர்கள் போலவும் மிகைப் படுத்தி காட்டும் பத்திரிகைகள்தான் தவறானவை.

பள்ளிப் பருவம் முடியும் வரை குடும்பம் என்ற கூட்டுக்குள், பெற்றோர் என்ற அன்புச் சிறையில் வளர்வதால், வெளி உலக உறவுகளோ நேரப் போக்குக்கான தனித்தன்மையான விஷயங்களோ தேவைப் படுவதில்லை. கல்லூரியில் சேரும்போது வரும் சுதந்திர உணர்வு , தன்னால் முடிவெடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களைச் சிறிது அசைத்துப் பார்ப்பது உண்மைதான். அதனால் காதலிலிருந்து கஞ்சா அடிப்பதுவரை எல்லாவற்றையும் பரீட்சார்த்தமாக முயன்று பார்ப்பதும் நடக்கத்தான் செய்கிறது. சிறிய சதவீதத்தவரைத் தவிர மற்றவரெல்லாம் தங்கள் இயல்புக்குத் திரும்பிவிடுவதும் வாடிக்கைதான். இது இன்று நேற்று தான் நடக்கிறதா? காலம் காலமாக வரும் நிகழ்வுகள்தான். எத்தனையோ கஞ்சா, தண்ணி கேஸ்கள் இன்று புகழ் பெற்ற மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுநர்களாகவும் இல்லையா? இந்தப் பதிவை வாசிக்கும் எத்தனை ஆண்கள் இதுவரை தண்ணியே அடித்ததில்லை என்று சொல்லமுடியும். காதலித்துப் பார்க்காத( ஒருவேளை தோல்வியுற்றதாகவும் இருக்கலாம்) மனிதர்கள் எத்தனை பேர்?
Love is a part of life which is unescapable. நாம் நடந்துவந்த பாதையில்தான் நம் சந்ததியும் செல்கிறது. அவர்கள் செய்வதை மட்டும் கண்டனப்படுத்தி அவர்களை அந்நியப் படுத்துவது ஏன்?

சின்னச் சின்ன தவறுகளும் தடுமாற்றங்களுமில்லாமல் வளரும் குழந்தைகள்தான் மிகப் பெரிய தோல்விகளைச் சந்திக்கிறார்கள், அதைத் தாங்க முடியாமல் தேவையற்ற முடிவுகளைத் தேடிக் கொள்கிறார்கள். குழந்தைகளின் திசை மாற்றம் கண்டிப்பாக பெற்றவர்களுக்குத் தெரியும்.அதை திருத்த வேண்டிய கட்டத்தில் தலையிடாமல் போகும்போதுதான் மக்களை இழக்கிறோம். என் மகன் தவறே செய்யமாட்டான் என்ற போலித்தனமான நம்பிக்கையிலிருந்து விடுபட்டு தன் மகனும் சாமான்யன் என்ற உணர்வு வரவேண்டும்.

காதலிப்பதாகத் தெரிந்து கத்தி கபடாக்களைத் தூக்கியோ, காதலர்களைப் பிரித்தோ சாதிப்பது ஒன்றுமில்லை. தண்ணியடிப்பதாகத் தெரிந்து பாக்கட் மணி நிப்பாட்டுவதாலோ, நண்பர்கள் சேர்க்கை சரியில்லை என்று தனிமைப் படுத்துவதாலோ பிரயோஜனமில்லை. உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள், அதிக நேரம் பேசுங்கள், அவர்கள் எதிர்பார்க்கும்போதெல்லாம் பேசுங்கள். பெற்றோரின் நட்பில் வாழும் இளைஞர்கள் பாதை மறுவதில்லை.

15 Comments:

At 2:01 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

// அப்பா அம்மா டாக்டராக இருந்தும் பயாலஜி எடுக்க மாட்டேன் என்று கம்ப்யூட்டர் எடுத்த பையன், மாவட்டத்திலேயே பயாலஜியில் முதல் மார்க//

திருத்தம்! மாவட்டத்திலேயே கம்ப்யூட்டரில் முதல் மார்க.

//Love is a part of life which is unescapable//
கலக்குங்க.... நானெல்லாம் "Love is part of life not heart of life" ரகம்

//பெற்றோரின் நட்பில் வாழும் இளைஞர்கள் பாதை மறுவதில்லை//
தாணுக்கு ஒரு சல்யூட்

 
At 2:19 AM, Blogger தாணு said...

கணேஷ், அந்த கம்ப்யூட்டர் பையன் யாரு நீங்களா?. நான் சொன்ன பையன் 10 ஆம் வகுப்பில் பயாலஜி முதல் மார்க், +2 வில் பயாலஜி எடுக்க மாட்டேன்னுட்டான்.
சரஸ்வதி பூஜைக்கு எங்கேயும் போகலையா?

//love does not have a record of WRONG hearts//

 
At 2:20 AM, Blogger தாணு said...

கணேஷ் கோஷ்டியில் ஏகப்பட்ட பேர் சேர்வீங்க போலிருக்கே?
ராஜ் உங்களுக்கும் அதே பதில்தான்!!!!

 
At 2:52 AM, Blogger துளசி கோபால் said...

தாணு,

நல்ல பதிவு. பசங்க தெளிவாத்தான் இருக்காங்க. நமக்கு அதாவது பெத்தமனசுதான் பித்தாயிக்கிடக்கு.

என் பொண்ணு குழந்தையா இருக்கறப்பவே, நீ டாக்டருக்குப் படிப்பியான்னு கேட்டா,'மாட்டேன். அம்மா வயித்துலே இருந்தப்பயெ அங்கேயெ எல்லாம் சுத்திப் பார்த்தாச்சு' சொன்னது.

 
At 3:54 AM, Blogger பத்மா அர்விந்த் said...

தாணு
இந்தியாவில் நடுத்தர மக்களிடம் முன்பெல்லாம் படிப்பு ஒரு வேலைக்கு உத்தரவாதமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது நிலை மாறி இருப்பதையும் அறிகிறேன். இதைபற்றி விரிவாக எழுதுகிறேன்

 
At 5:25 AM, Blogger தாணு said...

துளசி,
உங்க பொண்ணுக்கும் உங்க மாதிரியே நகைச்சுவை உணர்வு அதிகம் போலிருக்கு.

 
At 5:26 AM, Blogger தாணு said...

மு.க.
உங்க பெயரில்தான் எதுகை மோனைன்னு பார்த்தா, உங்க எழுத்திலும் அது இருக்கு! நன்று!
வலைப்பதிவில் கிடைத்த முதல் தம்பி!!!

 
At 5:29 AM, Blogger தாணு said...

ஆமாம் தேன்துளி,

எனக்கு தெரிஞ்ச பையன் ஒருவன் மருத்துவம் படிச்சுட்டு, ஒரு படம் டைரக்ட் பண்ணணும்னு சொல்லிட்டு இருக்கான். மருத்துவம் பெற்றோருக்காக, படம் பண்ணுவது தனக்காக.

 
At 5:43 AM, Blogger ஜென்ராம் said...

//தாயின் தோழர்களும் தோழியரும் (என்னையும் சேர்த்துத்தான்) மணிக்கணக்கில், வாரக் கணக்கில் விவாதித்தும் அவனின் தெளிந்த முடிவிலிருந்து மாற்ற எள்ளளவும் முடியவில்லை.// தாணு, நீங்கள் போடியில் இருக்கும் உங்கள் தோழி பற்றிப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவரது பையனுக்கு பணம் செலவழிக்காமல் மருத்துவ சீட் கிடைத்ததா? அல்லது +2 விலேயே உயிரியல் எடுக்க மறுத்து விட்டாரா?

//இத்தனை வயதுக்குப் பிறகும் கூட அநேக நேரங்களில் நமது தீர்க்கமான முடிவுகள் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப திரிந்து விடுகிறது.// இப்போது எடுக்கும் முடிவின் பலன் சில வருடங்களுக்குப் பிறகே தெரியும்.

//ஜீன்ஸ் போட்ட பெண்கள் எல்லோருமே தரக்குறைவானவர்கள் போலவும், நண்பர்கள் கூட்டத்துடன் இருப்பவர்கள் எல்லோரும் தவறான உறவு உள்ளவர்கள் போலவும் மிகைப் படுத்தி காட்டும் பத்திரிகைகள்தான் தவறானவை.// மாணவியர் ஜீன்ஸ் அணியக் கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டம் வந்தது ஊடகங்களால் அல்ல. ஊடகங்கள் எப்போதுமே ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கு ஊதுகுழலாகத்தான் இருக்கும். அதனுள் பணிபுரிபவர் என்ன கருத்து கொண்டவர்கள் என்பது முக்கியமில்லை.

//இந்தப் பதிவை வாசிக்கும் எத்தனை ஆண்கள் இதுவரை தண்ணியே அடித்ததில்லை என்று சொல்லமுடியும். காதலித்துப் பார்க்காத( ஒருவேளை தோல்வியுற்றதாகவும் இருக்கலாம்) மனிதர்கள் எத்தனை பேர்?// இதே தொனிதான் குஷ்பூவின் கருத்திலும் தொனித்தது. ஆளும் வர்க்கமும் அதன் அடிவருடிகளும் என்ன செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

//பெற்றோரின் நட்பில் வாழும் இளைஞர்கள் பாதை மறுவதில்லை.// நீங்கள் பாதை என்று எதைக் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. இங்கு பகிரங்கமாக நான் இதை விவாதிக்க விரும்பவில்லை.

நீங்கள் கூறும் கருத்தை எல்லாம் மேலோட்டமாகப் பார்த்தால் நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வாழ்க்கை ஆழமானது. சமூகம் வேறு விதமான கருத்தாக்கங்களால் இயங்குவது. அங்கு ஆளுவோரின் கருத்துக்களே ஆளுமை செய்கின்றன. இதை மீறுபவர்கள் பலவிதமான சங்கடங்களுக்கு உள்ளாகிறார்கள்.
அந்த சங்கடங்களுக்கு உள்ளாகத் தயாராக இல்லாதவர்களை நாம் பொது நீதி சொல்லி பிரச்னைக்குள்ளாக்கக் கூடாது.

நீங்களும் நானும் வளர்ந்த சூழ்நிலை வேறு. அது அனைவருக்கும் பொருந்தாது என்பதே என் கருத்து.

 
At 5:59 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

//இந்தப் பதிவை வாசிக்கும் எத்தனை ஆண்கள் இதுவரை தண்ணியே அடித்ததில்லை என்று சொல்லமுடியும். காதலித்துப் பார்க்காத( ஒருவேளை தோல்வியுற்றதாகவும் இருக்கலாம்) மனிதர்கள் எத்தனை பேர்?//

சத்தியமா சொல்றேங்க.....இதுவரைக்கும் தண்ணியே அடிச்சதில்லை. எட்டாப்பு படிக்கும் பொழுது சும்மா காட்டியும் பின்னாடி போன ஒரு மூணு நாலு பிகரைத் தவிர எனக்கு வேறெந்த பெண்ணையும் பிடித்ததில்லை.

@ராம்கி
//அங்கு ஆளுவோரின் கருத்துக்களே ஆளுமை செய்கின்றன. இதை மீறுபவர்கள் பலவிதமான சங்கடங்களுக்கு உள்ளாகிறார்கள்.//
எப்படிங்க இதைச் சொல்றீங்க.... ஒவ்வொரு software engineer கிட்டேயும் இத கேளுங்க....... ஆளுமை எல்லாம் பணத்துக்கு முன்னாடி செத்து போயிடுங்க. அம்பது லட்சம் இருந்தா போதும் கல்வி அமைச்சரே வந்து உங்க பையனுக்கு MBBS சீட் வாங்கி கொடுப்பார்.

//அது அனைவருக்கும் பொருந்தாது என்பதே என் கருத்து.//
உண்மை.

 
At 6:04 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

//சரஸ்வதி பூஜைக்கு எங்கேயும் போகலையா?//
எங்க ஆபிஸ்லேயே இந்த தடவை அரிசிபொரி பாக்கெட் கொடுப்பாங்களாம் :-)

//love does not have a record of WRONG hearts//
பொறுத்திருந்து பார்ப்போம்... பட்சி எதாச்சும் மாட்டுதான்னு


@ராம்கி
//நீங்கள் பாதை என்று எதைக் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. இங்கு பகிரங்கமாக நான் இதை விவாதிக்க விரும்பவில்லை...//
வேறென்னங்க சமுதாயத்துல நல்ல குடிமகன் இந்திய நாட்டுக்கு நல்ல பிரஜை வீட்டுல பொறுப்பான பையன் அப்பா அம்மா சொல் பேச்சு கேட்டு இருக்கிற ஒரு நல்ல பையன்..... இதை எல்லாத்தையும் தான் பாதைன்னு சொல்றாங்க

 
At 6:36 AM, Blogger தாணு said...

ராம்கி,
அதே தோழியின் மகன் தான். பிடிவாதமாக மருத்துவத்தைத் தவிர்த்து பொறியியல் சேர்ந்துவிட்டான். அவனுடன் நேற்று பேசிக்கொண்டிருந்ததால் ஏற்பட்டதுதான் இந்த பதிவு. நாம் வளர்ந்த சூழலைவிட நம் குழந்தைகளுக்கு ஓரளவு விரிந்த சூழல்தான் கொடுத்திருக்கிறோம். நமது P.U.C.பருவத்தில் எவ்வளவு அறியாமையுடன் இருந்திருக்கிறோம், இவர்களின் சிந்தனை தீர்க்கமாகவே இருக்கிறது.
பத்திரிகையின் முகங்கள் அதில் பணிபுரிபவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபட்டது என்று எனக்கும் புரிகிறது. ஆனால் எத்தனையோ சட்டங்கள் அரங்கேறினாலும் சிலவற்றை மட்டும் ஊதி ஊதிப் பெரிதாக்குவது பத்திரிகைகள் இல்லையா? உடை ரீதியான சட்டம் கூட மறு பரிசீலனை செய்யப் பட்டிருக்கலாம் அவர்களுக்குள்ளாகவே, மீடியா இந்த அளவு மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால். ஆபாசமாக இருக்ககூடாது என்பதுதான் அச் சட்டத்தின் நோக்கம், சரிவர சொல்லப்படாததால் , தவறாகவே முடிந்துவிட்டது.
சில விஷயங்களில் மோசமான பலன்களை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்குமென்பது தெரிந்தாலும் சொல்லாமல் இருக்க முடிவதில்லை, அதுதானே என் சுபாவம்.
இன்றைய காலகட்டத்தில், பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கருவியாகவே பெற்றெடுத்த மகன்/மகள்கள் கருதப்படுவது எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நானும் அதிலொருத்தி ஆகிவிடக்கூடாதென்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளவே இதுபோல் புலம்புகிறேன் போலும். எல்லாத் தந்தைகளும் ஐநூற்று முத்து/குழைக்காதன் ஆகிவிட முடியாது.

 
At 6:44 AM, Blogger தாணு said...

கணேஷ்,
மனைவிக்கு அடங்கி நடக்கிற சமத்தான கணவன்ங்கிறதை விட்டுட்டீங்களே.

பாதைகள் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் வித்தியாசப் படுவதில்லையா?

காதலே தவறு சிலருக்கு, காதலிக்கலாம் ஆனால் தங்கள் சம்மதத்துடன் மணம் செய்யணும்னு சிலர், யாரையாவது கட்டிகிட்டு செட்டில் ஆனால் சரி, இந்த மாதிரி ப்ளாக்-லேயே நேரம் போக்கிறதைவிட!!அப்படீன்னு சிலர்- இதிலே பாதை வரையறுக்க முடியாத நெளிவுகளுடையது!!

 
At 8:34 AM, Blogger Vaa.Manikandan said...

ennamo pesikkareenga onnumee puriyalai :)

 
At 10:17 AM, Blogger தாணு said...

வா(ருங்கள்) மணிகண்டன்,
உங்க உலகம்தான் இது!

 

Post a Comment

<< Home