கவிதைகள் சொல்லவா......
பழைய கவிதையைக் கிறுக்கினேன் காகிதத்தில்
பதிக்கத் துணிவில்லை இணையத்தில்
பார்த்துவிடுவாளோ என் பெண்ணுமோ என்று
பயத்தில் ஒளித்துவைத்தேன் நானும் இன்று!
காதல் கவிதையென்பதால் வந்த குழப்பமா
காதலித்த நாட்கள் பற்றிய
கதைகள் சொல்லவேண்டுமோ என்ற
கற்பனை தோன்றியதால் வந்த மயக்கமா?
நேர்மை இல்லையோ நெஞ்சில் என்று
நெருடலாய் ஒரு விவாதம்...
வலைத் தளங்களில் மட்டும்
வேறு முகம் காட்டுகிறோமோ?
விதண்டாவாதமாய் விமரிசிக்க முடிகிறது
வெட்டித்தனமாக தர்க்கம் செய்யமுடிகிறது
வீட்டுக் காரியமென்று வரும்போது
வலைவேறு வாழ்க்கைவேறு என்றாகிறது!
வலைஞர்களின் குடும்பம்
வலைப்பூக்களை வழிபடுமா
காகிதப் பூக்களென்று
கசக்கி எறிந்துவிடுமா?
8 Comments:
உங்கள் மனசாட்சி இங்கே உண்மையைச் சொல்லி இருக்கிறது.
வழிபடுவதற்கும் கசக்கி எறிந்து விடுவதற்கும் இடையில் எந்த செயலுமே இல்லையா என்ன?
சில விஷயங்கள் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே சுவாரஸ்யம் அளிக்கக் கூடியவை. ஒரு தனிமனித அனுபவத்தில் இருந்து பொதுவான பாடம் அல்லது படிப்பினை கிடைக்கும்பட்சத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
விதிவிலக்கான சிலர் தவிர அனைவரது வாழ்விலும் அவர்கள் சரி என்று நினைக்கும் ஒன்றைச் செய்துவிட முடிவதில்லை. இதன் காரணமாக மனதில் ஒரு பிளவு ஏற்படுகிறது. (அந்நியனைப் பற்றிக் கூறவில்லை) அது விரக்தியையும் சலிப்பையும் தருகிறது. நமக்கு நாமே தொடர்ந்து நமக்குள் நடத்தும் தொடர் போராட்டங்கள் மூலமே சில விஷயங்களில் சரியாக முடிகிறது. பல விஷயங்களில் முயற்சி தொடர்கிறது.
என் வாழ்க்கையில் நான் காதலித்த பெண்களும் கைபிடித்த பெண்ணை காதலித்த விதமும் கல்லால் இல்லாவிட்டாலும் சொல்லடியால் பட்ட வேதனையும் எழுதிய கவிதைகளும்
வாழ்வில் பெற்ற வெற்றி தோல்வி அனைத்தும் என் மகள் அறிவாள். வாழ்க்கையின் ஒவ்வொரு படிக்கட்டிலும் அவள் வயதுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற முறையில் பாங்கான முறையில் தெரிவித்திருக்கிறேன். ஆனாலும் நீங்கள் சொல்வது போல சில தனிமை (அந்தரங்கம் புனிதமானது - ஜெயகாந்தன்) செய்திகள் நம்முடனேயே புதைந்து போக வேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதன் விழுக்காடு மிகக்குறைவாக இருத்தல் அவசியம். ஒவ்வொரு வாழ்க்கை பயணமும் அவர்களது முன்னோர் சென்ற இடத்திலிருந்து மேலும் தொடர் பயணமாக (வேறு திசையில் சென்றாலும்) அமைய வேண்டியது அவசியம். மீண்டும் மீண்டும் முதல் படிக்கட்டிலிருந்து பயணம் தொடங்கக்கூடாது. அப்பொழுது தான் மனித இனம் என்றாவது ஒரு நாள் பிரபஞ்ச அறிவைப்பெற இயலும்.
"வலைத் தளங்களில் மட்டும்
வேறு முகம் காட்டுகிறோமோ?"
வலைத்தளங்களில் மட்டுமா?
நித்தம் நித்தம் எத்தனை
முகங்கள் நமக்கு?
நமக்கே நாமே கூட
நமக்குள் நாமே கூட
எத்தனை எத்தனை
முமூடிகள்?
உண்மைதான் தருமி. முரண்பாடுகளின் மொத்த உருவமாகத்தான் மனித குலம் அமைந்துவிட்டது.புரை தீர்ந்த நன்மை பயக்கவேண்டுமென்றே ஏகப்பட்ட பொய்மைகள். இறுதியில் அதிலேயே அமிழ்ந்துவிடுவோமோ என்ற பயம்.
சூப்பர்சுப்ரா! நானுமே முடிந்தவரையில் எனக்கு கிடைத்த கலப்படமான அனுபவங்களை மகளுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் உணர்ச்சிகளின் வெளிப்பாடு சில நேரங்களில், திசை தவறி ரீச் ஆயிடக்கூடாதுன்னுதான் சின்ன தயக்கம்.
தெருத்தொண்டன்,
நேற்று காலாண்டு விடுமுறை தொடங்கிவிட்டதால், மகளுக்கு என் பதிவுகளை அறிமுகம் செய்தேன்.
அவ்வப்போது பத்மாவின் பதிவுகள் பற்றியும், துளசியின் கலாட்டாக்கள் பற்றியும், மதி ,ராம்கி அனைவரது பதிவுகளில் எனக்கு அப்பீல் ஆன விஷயங்கள் பற்றியும் தவணை முறையில் சொல்லிவருவேன். ஆனால் புதிய பதிவு எழுத நினைத்தபோது சின்ன ரிசர்வேஷன் வந்துவிட்டதைத் தவிர்க்க முடியவில்லை.
//வீட்டுக் காரியமென்று வரும்போது
வலைவேறு வாழ்க்கைவேறு என்றாகிறது!//
உங்களுக்கு ஏற்பட்ட உணர்வை பதிவாக்கியிருக்கிறீர்கள். பதிவு முற்றிலுமாக உண்மை பேசுகிறது.
//காகிதப் பூக்களென்று
கசக்கி எறிந்துவிடுமா?//
உண்மைகள் எழுதப்பட்ட தாள்கள் கசங்கப்படுவதில்லை.
கவிதை, மனச ஏதோ பண்ணுதுங்க
Post a Comment
<< Home