Wednesday, September 14, 2005

ஏட்டுச் சுரைக்காய் மருத்துவத்துக்கு ஆகுமா?

துளசியின் பதிவு பார்த்ததும் எனக்குள் தோன்றியவை.

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பள்ளிக் குழந்தைகளின் முதல் கனவு, அனேகமாக டாக்டர் ஆவதாகத்தான் இருக்கும். மற்றைய தொழில் நுட்பங்கள் உலகளாவி விரிந்திருந்தாலும் இந்தக் கனவுகளை சிதைக்க முடிவதில்லை. அவ்வளவு உயரிய எதிர்பார்ப்புகளையும் உயர்ந்த நோக்கங்களையும் உடைய மருத்துவத் துறை இப்போது எப்படி இருக்கிறது?

மெடிகல் காலேஜ் சீட் வாங்குவதை விட செவ்வாய்க் கிரஹத்தை அடைவது மிகச் சுலபம் (வேறு உவமானம் கொடுத்து பிறகு அழித்துவிட்டேன்). இது கஷ்டப்பட்டு படித்து மெரிட்டில் வருபவர்களுக்கு மட்டுமானது. இப்போது குழந்தைகள் எல்லோரும் ரொம்ப நல்லா படிக்கிறாங்க. தேர்ந்தெடுப்பது மிகக் கடினமாகவே உள்ளது.ஒரு வழியாக எம்.பி.பி.எஸ்.முடித்தாலும் தகுதி அடிப்படையில் படித்த மாணவனுக்கு முது நிலை படிப்பு சேருவதற்கு பொருளாதார சிக்கல்கள் இருக்கும் பட்சத்தில் எதேனும் பெரிய மருத்துவ மனையில் பகுதி நேர ஊழியமோ இல்லை, துளசி சொன்னது போன்ற க்ளினிக்கோ நடத்திக் கொண்டு மேற் படிப்புக்கு முயல வேண்டும்.அரசு வேலையில் சேர்ந்தால் மேற்படிப்பு சீட் கிடைப்பது சற்று சுலபமென்றாலும்,அரசு வேலையென்பது குதிரைக் கொம்பாகிவிடுகிறது.(செவ்வாய்க் கிரஹமே பரவாயில்லை)

ஆனால் சுமார் ரகமாகப் படிக்கும் மாணவனும் மருத்துவராகலாம், பெற்றோரின் பின்பலம் மற்றும் பண பலம் மூலம். முதுகலைப் படிப்பையும் தடையின்றி மேற்கொண்டுவிடுவார்கள். முடித்து வந்ததும் சகல வசதிகளுடனும் மருத்துவமனை ரெடியாக இருக்கும்; மருத்துவப்பணி இயல்பாகத் தொடரும்.அதற்காக இப்படி படித்து வருபவர்களெல்லாம் தகுதியற்றவர்கள் என்ற அர்த்ததில் சொல்லவில்லை. இவர்களது சமூக அங்கீகாரம், சம காலத்திய (contemporary) மெரிட் மாணவனின் சின்ன க்ளினிக்கைவிட அதிக தரம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது.

(எண்பதுகளில் மருத்துவம் படித்தவர்களில் ஒருசிலரே குறுகிய வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தாலும், பெருவாரியானவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி எல்லா சிறப்புத் துறைகளிலும் முக்கியத்துவத்துடன் விளங்குகிறார்கள். ஆனால் இப்போது `வாரிசு அரசியல்’, `சினிமாவில் வாரிசுகள்’ போன்று மருத்துவமும் வாரிசுகளைக் கொண்டு மருத்துவக் குடும்பம் என்ற மரபில் சென்றுகொண்டிருக்கிறது. தனிப்பட்டவர்களின் திறமை வெளிவருவது கடினமே. ஆலமரத்தடியில் வளரும் சிறு செடிபோலத்தான் சோபிக்கிறார்கள்)

இன்னுமொரு கூட்டம், குடும்பத்துக்கு ஒரு டாக்டராவது வேண்டும் என்ற பெருமைக்காக சாக்கு மூட்டையில் பணத்துடன்
அலைந்து கொண்டிருக்கிறது. இதில் யாருமே அந்த குழந்தைக்கு மருத்துவராவதற்கு விருப்பமிருக்கிறதா என்று கூட கவலைப் படுவதில்லை. சேர்த்து விட்டுட்டா எத்தனை வருஷம் கழிச்சுன்னாலும் டாக்டர்தானே. இப்போதைக்கு ப்ராக்கெட்டுக்குள்ளே போட்டுகிட்டப் போச்சு என்கிற விளக்கம் வேறு.

இந்த மூன்றுவிதமான மருத்துவர்களைத் தாங்கி வரப்போகின்ற வருங்கால மருத்துவ சந்ததியை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது. House-surgeoncy period-ல் கற்றுக்கொள்ளும் ப்ராக்டிகல் அறிவே ஒரு திடமான மருத்துவ அறிவை வழங்கும். ஆனால் இப்போதைய தலைமுறை அந்தக் காலகட்டத்தில் மேற்படிப்புக்கு சீட் வாங்கும் பொருட்டு நூலகத்திலேயே பொழுதைப் போகிவிடுகிறார்கள்.

ஏட்டுச் சுரைக்காய்த்தனமும், தெளிந்த எதிர்நோக்குகள் அற்ற படிப்பும் விழலுக்கிரைத்த நீராய் மருத்துவ உலகை அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.( பெரிய டாபிக் இது-பின்னூட்டங்களைப் பொறுத்து இதன் திசை தொடரும்)

8 Comments:

At 6:02 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

// மருத்துவக் குடும்பம் என்ற மரபில் சென்றுகொண்டிருக்கிறது. //
எங்க ஊரில் ஒரு டாக்டர் தம் மகளை 23 லட்சம் கொடுத்து மெடிக்கல் காலேஜ்ஜில் சேர்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். "கை"ராசியான டாக்டருங்க...

//( பெரிய டாபிக் இது-பின்னூட்டங்களைப் பொறுத்து இதன் திசை தொடரும்)//
கண்டிப்பாக நல்ல டாபிக். என் பள்ளித் தோழி ஒருத்தி இப்பொழுது எம்பிபிஸ் படித்துக்கொண்டிருக்கிறாள். மிகுந்த சிரத்தை எடுத்து படித்துக்கொண்டிருக்கிறாள். அநேகமாக படிப்பு முடிந்ததும் அதே ஆஸ்பத்திரியில் அவளையும் அட்மிட் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன். அப்படியொரு படிப்பு.

என்ன செய்யங்க பெத்தவங்க கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க அவங்களும் கஷ்டப்பட்டு படிக்கிறாங்க அதனால உடம்பை கவனிக்க மறந்திடறாங்க....

ஒரு படத்தில நம்ம நாகேஷ் சார் ஒரு ஜோசியரிடம் போய் பலன் கேட்பார்.
ஜோசியரும் அடுத்த ஆறு மாசத்துக்கு நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பார்.
நாகேஷ் உடனே "அதுக்கப்புறம் ?" எனக் கேட்பார்
ஜோசியர் "அதுவே உனக்கு பழகிப் போயிடும்" என்பார்.

சிரிக்க வைத்தாலும் இதில் உண்மை இருக்கவே செய்கிறது. கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு கஷ்டத்திற்கு நம்மை நாமே பழக்கி கொள்கிறோம். அந்த கஷ்டத்தின் பலன் கிடைக்கும் பொழுது இழக்கக் கூடாத எல்லாவற்றையும் இழந்திருப்போம்.....
ம்ம்ம் இது காலம் செய்யும் லீலை

 
At 11:25 PM, Blogger துளசி கோபால் said...

தாணு,

பெரிய டாபிக்தான். ஆனாலும் விடாம எழுதுங்க.

பின்னூட்டத்தின் எண்ணிக்கையைப் பார்த்துட்டுத் தொடருமுன்னா
இப்படி எடுத்துக்குங்க.
என் ஒரு பின்னூட்டம் 100 பின்னூட்டத்துக்குச் சமம். இது எப்படி இருக்கு?

இங்க நியூஸியிலே மெரிட் மட்டுமே பாக்கறதாலே 'நம்ம ஊர் பசங்களுக்கு' இடம் கிடைச்சுருது. என்ன, ஃபீஸ் ஜாஸ்தி. ஆனா லஞ்சம்/டொனேஷன் இதெல்லாம் இல்லையே!

 
At 12:08 AM, Blogger தாணு said...

துளசி,
நான் பின்னூட்டங்களை பத்தி சொன்னாது, எந்த கோணம் என்ற் அர்த்தத்தில்தான்- capitation fees பற்றியதா, தரம் பற்றியதா என்பது குறித்துதான். ஆனாலும் உங்க `பாட்ஷா' பாணி பினூட்டத்துக்கு முன்னுரிமை அழித்து தொடருகிறேன்

 
At 2:40 AM, Blogger NambikkaiRAMA said...

ஆம்! லட்சக்கணக்கில் கொட்டி படிக்கிறார்கள். பின் அதை வட்டி முதலுமாய் சிகிச்சை என்ற பெயரில் வாங்கி விடுகிறார்கள். எனது நண்பரின்(NRI) மைத்துனிக்கு மெடிக்கல் சீட் கிடைக்க நன்கொடை(?) மட்டும் 50 இலட்சம் கொடுத்தார்கள். என் பெயர் கொண்ட மருத்துவ கல்லுர்ரியில்தான் அவர்கள் படிக்கிறார்கள்.

 
At 2:50 PM, Blogger துளசி கோபால் said...

//ஆனாலும் உங்க `பாட்ஷா' பாணி பினூட்டத்துக்கு முன்னுரிமை அழித்து தொடருகிறேன் //

அழித்தது ஏனோ? (-:

 
At 11:48 PM, Blogger தாணு said...

துளசி,
எழுத்துப்பிழை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. வேலையையும் வலையையும் மாற்றி மாற்றி தொடர்வதால் வரும் தவறு.

 
At 7:42 PM, Blogger ஜென்ராம் said...

//வேலையையும் வலையையும் மாற்றி மாற்றி தொடர்வதால் வரும் தவறு.//

தவறு வலையில் என்றால் பிழையில்லை. தவறு வேலையில் என்றால் பாவம் உங்கள் நோயாளிகள்..
பார்த்துக் கொல்லுங்கள்.. மன்னிக்கவும் பார்த்துக் கொள்ளுங்கள்..

 
At 3:14 AM, Blogger தாணு said...

ராம்கி அதனால்தான் என்னிடம் வைத்தியம் ப்பார்த்துக் கொள்வதில்லையோ?

 

Post a Comment

<< Home