Tuesday, September 06, 2005

பொண்ணுக்குப் பொண்ணு என்னடி?

கொஞ்ச நாளா நாளிதழிலும், வார இதழ்களிலும் `தோலுரிக்கப்படும்’ காட்சிகள் லெஸ்பியன் சம்பந்தப்பட்டது.
ஈரோட்டிலிருந்து இரு பெண்கள் பெங்களூரிலுள்ள ஒரு அமைப்பை நாடிச் சேர்ந்தது பற்றி! கணவர்களின் வக்கிரங்கள் தாங்காமல் அதிலிருந்து தப்பிக்கும் முகமாக அங்கு சென்றதாக அந்தப் பெண்களின் கூற்று. ஆனால் தலைப்புச் செய்தியோ முழுவதுமாக ஓரினச் சேர்க்கை பற்றியதே.

நான் ஓரினச் சேர்க்கை பற்றியோ, அது சரியா தவறா என்ற விவாதத்தை முன்வைத்தோ இதை எழுதவில்லை. திருமணமாகி
இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் அந்த பந்தத்தில் தொடர்ந்து இருக்க முடியாத ஒரு சூழலில், ஏதாவது ஒரு முடிவைத் தேடிக் கொள்ளும் நிலையில்தான், இன்று அனேக இந்திய குடும்ப சூழ்நிலை உள்ளது.அது பற்றி கொஞ்சம் அலசலாமே என்பதுதான்.

அவற்றில் முதலிடத்தைப் பிடிப்பது தற்கொலை முயற்சி. அப்படி முடிவெடுக்கும் பெண்களையும் இந்த சமுதாயம் விட்டு வைப்பதில்லை.எந்தக் காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டாலும், அது பாலியல் சார்ந்ததாகவே முத்திரையிடப்படுவது வாடிக்கை.

இரண்டாவதாக வரம்பு தாண்டிய உறவுகள்(extra marital affairs). இதன் தாக்கம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. குடும்ப சூழல், குழந்தைகள் அனாதையாக்கப் பட்டுவிடகூடாது
போன்ற கட்டாய சூழல்களில், தற்கொலையைத் தவிர்த்து தனக்காகவும் வாழ்வது தன் உரிமை என்பதை நிலைநிறுத்தும்
விதமாக இத்தகைய உறவுகள் அதிகரித்து வருகின்றன.

மூன்றாவதாக வருவது, விவாகரத்து. அப்படி செய்துகொண்டவர்களும், மறுபடி ஏதாவது ஒரு துணை நாட வேண்டிய அவசியம் வருகிறது. அது மறுபடியும் உண்டாக்கும்
புயல்கள் எத்தனையோ, யாரறிவர்?

நான்காவதாக,மிக அபூர்வமாக காணப்படுவது- தனக்கு நெருக்கமான தோழியுடன் நட்பாவது. அது உடல் சார்ந்த உறவா, மனம் பகிர்தல்மட்டும் உள்ள உறவா என்பது தனிப்பட்டவர்களின் சந்தர்ப்பம் மற்றும் தேவையைப் பொறுத்தது.

ஆனால் இதில் எந்த வகையான முடிவை எடுத்தாலும் கடுமையாக விமர்சிக்கப்படுவது பெண்களே! ஒரு ஆணின் தற்கொலைக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், ஒரு பெண்ணுக்கு பாலியல் பிரச்னைகள் ஒன்றுதான் காரணமாம்!
ஆண்கள் விவாகரத்து பெற்றாலும் அதன் மூல காரணம்
மனைவியென்றே சித்தரிக்கப்படுவதுதான் இங்கு வாடிக்கை.
ஆண்களின் முறையற்ற தொடர்புகளுக்கும் மனைவி சரியில்லாமல் இருப்பதுதான் காரணமாம். `கல்’லான கணவர்கள் மேல் மோதிமோதிப் `புல்’லான மனைவிகள்தான் அதிகம்.

பத்மா அரவிந்த்தின் பதிவில் சொன்னதுபோல், விவாகரத்து
ஒரு இயல்பான நிகழ்வாக மாறும்போது, அமெரிக்க கலாச்சாரம்
இந்திய கலாச்சாரம் என்ற பாகுபாடே இருக்காது. மனிதர்களின்
இயல்பு வாழ்க்கைக்கு வறையறுக்கப்பட்ட கலாச்சாரங்களும்
பண்பாடுகளும் மூச்சு முட்ட வைக்கும் போது, அதை மீறுவதில்
என்ன தவறிருக்கிறது.

லெஸ்பியன் என்ற உறவுக்கு உளவியல் சார்ந்த காரணங்களை விடுத்து, மன ரீதியான காரணங்கள் அதிகரித்துவருகின்றன. இன்னும் பெண்களை போகப் பொருளாகவும், சம்பளமில்லா வேலைக்காரிகளாகவும்,சமுதாய அடையாளமுமாகவே பார்க்கும் ஆண்களின் மனோநிலை மாறும் வரை இத்தகைய நிகழ்வுகள் அதிகரிக்குமேயன்றி குறையாது.

`இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ பாணியில்
`தமிழக வரலாற்றிலேயே முதல் தடவையாக’ லெஸ்பியன்
உறவு பற்றி சொல்ல வந்தவர்கள்,அந்தப் பெண்கள் கணவரின்
டார்ச்சர் தாங்காமல் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாகச் சொன்னது பற்றி கண்டுகொள்ளவே இல்லை. எப்படிச் சொல்லுவார்கள்? `யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்’னாச்சே! இவர்களின் பொன் பெண்ணில் அல்லவா இருக்கிறது. எடுக்கப்படும் முடிவுகள் பற்றி மட்டுமே விமர்சிக்கத் தெரிந்தவர்களுக்கு, அதன் மூல காரணத்தை ஆராய வேண்டுமென்ற அடிப்படை உணர்வு கூட இல்லாதது எதனால்?
பெண்ணென்றால் கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆணாதிக்கம் தானே மறுபடியும்!

18 Comments:

At 2:36 AM, Blogger ROSAVASANTH said...

நல்ல பதிவு!

 
At 6:17 AM, Anonymous Anonymous said...

Real 'Fire'

Fire ல் சொல்லப்பட்டவை நிஜத்தில் உள்ள பிரச்சினைகளைத்தான் என்பது இப்போது புரிகிறது. அந்தப்பெண்கள் அல்ல மாறாக புரையோடிய சமூகம்தான் வெட்கப்பட வேண்டும்.

 
At 6:49 AM, Blogger G.Ragavan said...

உண்மைதான். பிரச்சனையை முழுதாக உணர்ந்து கொள்ளாமல் பெண்களின் மீது முடிவைத் திணித்து விடுகிறது.

ஒருவரின் மன உணர்வுகளை உணர்ந்து கொள்வதை விட புண்படுத்துவதில் நமது சமுதாயம் முன்னிலையில் இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். மாறும்.

 
At 8:29 AM, Anonymous Anonymous said...

Great Post!

http://www.domesticatedonion.net/blog/thenthuli/?item=599

 
At 8:36 AM, Blogger தெருத்தொண்டன் said...

//`யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்’னாச்சே!//
அருமையா சொல்லியிருக்கீங்க..

 
At 8:39 AM, Blogger ஜென்ராம் said...

போட்டுத் தாக்குங்கள்..நன்றாக இருக்கிறது பதிவு..

 
At 3:25 PM, Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் எழுத்தும் சிந்தனையும், தெளிவாகவும் சீராகவும் முன்வைத்திருக்கிறீர்கள். ஆணாதிக்க உணர்வு எங்கிருந்தாலும் அது மறைய இது போன்ற பதிவுகள் அவசியம்.

 
At 4:17 PM, Anonymous Anonymous said...

தாணு
மூச்சுமுட்ட உறவுகள் இருந்தால் விலக வேண்டும் என்பதும் மறுமணம் செய்ய வேண்டியதும் தேவைதான். ஆனால் இன்னமும் சமூகத்தில் தனியாய் வாழ்பவர்கள் எதற்கும் துணிந்தவர் என்று பேசுபவரும் அதிகம். படித்த பெண்களுக்கே இப்படி என்றால் படிக்காத பெண்கள் பாடு திண்டாட்டம்தான்

 
At 5:43 PM, Blogger Ramya Nageswaran said...

நல்ல பதிவு தாணு..இதற்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும் பொழுது இன்னும் விரிவாக பேசுவோம்.

 
At 6:35 PM, Anonymous Anonymous said...

குறிப்பிடப்படவேண்டிய பதிவு!

 
At 10:03 PM, Blogger துளசி கோபால் said...

தாணூ,

நல்ல பதிவு. எதுக்கெடுத்தாலும் குத்தம் பொண்ணூமேலேதான். கொஞ்சம் எதிர்த்து நின்னாலும் அவ்வளவுதான். ஒரே இம்சைதான்.

 
At 1:05 AM, Blogger Jayaprakash Sampath said...

முகத்தில் அறையும் உண்மை. பதிவுக்கு நன்றி.

 
At 2:03 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

//, அதன் மூல காரணத்தை ஆராய வேண்டுமென்ற அடிப்படை உணர்வு கூட இல்லாதது எதனால்? பெண்ணென்றால் கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆணாதிக்கம் தானே மறுபடியும்! //
பெண்களை மட்டம் தட்டும் ஆண்களை செருப்பால் அடித்திருக்கிறீர்கள்.
மறுபடியும் என்ற வார்த்தை உகந்ததாக படவில்லை. என்று இல்லாமலிருந்தது இன்று "மறுபடியும்" கிளைக்கத் தொடங்கியிருக்கிறது.
இது ஆண்கள் அவரவர்களுக்கு இட்டுக்கொள்ளும் கொள்ளி. என்றாவது ஒரு நாள் அவர்களே அதில் மடியப்போவது உறுதி.

 
At 11:06 AM, Blogger erode soms said...

உணர்வுகள் என்றுவரும் போது ஆண் பெண் பேதம் இல்லை. ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்க சமூகத்தில் முக்கி வைக்கப்பட்டு இதற்க்கு மேல் தாங்காது என மூச்சு விட எத்தனிப்போர் எத்தனை பேர்? ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுகள் காலச்சுவட்டில் பதியும் ஆரம்பம் இயற்க்கையே! தாலி சுகமாவதும் சுமையாவதும் கட்டினவன் கையாள்வதில் தானே இருக்கிறது .[சுகம் சுமை பெண்ணுக்கல்ல ஆண்களுக்கு]

 
At 7:13 AM, Blogger தாணு said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஊக்குவிப்பு என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.
நட்புடன்
தாணு

 
At 9:18 AM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல பதிவு. நன்றி தாணு

-மதி

 
At 2:57 PM, Anonymous Anonymous said...

indraikkuthaan padikka mudinchuthu.
Nalla pathivu. Nandrigal

 
At 11:58 PM, Blogger உங்கள் நண்பன்(சரா) said...

உங்கள் எழுத்தும் சிந்தனையும், தெளிவாகவும் சீராகவும் உணர்வு

 

Post a Comment

<< Home