Thursday, October 01, 2020

அலை-19

 

அலை-19

பள்ளிப் பருவத்தில் சென்ற சுற்றுலாக்கள் ரொம்ப குறைவுதான். ஆனாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியம். என்னோட நினைவுகளைக் கசக்கி வெளிக் கொணர்ந்ததில், ”சுனைக்கு போனதுதான் முதல் சுற்றுலான்னு தெரியுது. இன்று சுற்றுலா மேம்பாட்டுத் துறையால்அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்என்று பெயரிடப்பட்டிருந்தாலும் எங்கள் குழந்தைப்பருவத்தில் அதன் பெயர் வெறும் சுனை தான்.

 

எங்க ஊரிலிருந்து சுனைக்குப் போக பஸ் கிடையாது, நடந்துதான் போகணும். கிட்டத்தட்ட 5 -7 கி.மீ. இருக்கும். குளக்கரை, வரப்பு போன்ற குறுக்கு வழியில் போனால் 5 கி.மீ. தான். முதல் சுற்றுலாவின் போது காலையிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டோம். முன்னாடியும் பின்னாடியும் ஆசிரியைகள் வந்த மாதிரி ஞாபகம் இருக்கு. நாங்களெல்லாம் கும்பலா பேசி, கத்தி, சிரித்து , குதித்து நடந்தோம். தூரம் பற்றிய பயமோ சோர்வோ அந்த வயதில் ஏது? பயமறியா இளங் கன்றுகள்.

 

பள்ளிவாசல் பஜார் வழியாகப் போய் பண்டார குளம் தாண்டி குதிரைக்காரன் குண்டு (சின்ன தண்ணீர்க் குட்டை) பக்கமாக வந்து புதுக்குளம் வரை ஏற்கனவே அறிமுகமான இடங்கள்தான்.  வரப்பில் நடக்கும் போது இரண்டு பக்கமும் வயல்வெளி பரந்து கிடக்கும். சில வயல்களில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தலை கவிழ்ந்து சாய்ந்திருக்கும். அதிலிருந்து முற்றிய கதிர்களைக் கை கொள்ளாமல் பறித்துக் கொண்டோம். வழிப் பயணத்துக்கு வெறும் வாயை மெல்லாமல் நெல்மணிகளை சுவைத்துக்கொண்டே நடந்தோம்.

 

புதுக்குளம் தாண்டி சோனங்காட்டுவிளை (சோனகன்விளை)வரைக்கும் குறுகலான பாதையில் காட்டு மலர்களும், பெயர் தெரியாத தாவரங்களும் மண்டிக்கிடக்கும். கொத்துக்கொத்தாக வளர்ந்திருக்கும் காட்டு மலர்களைப் பறித்துவிட்டால் கையெல்லாம் நாற்றம் அடிக்கும். ஒரு சிலருக்கு கையில் எரிச்சலும் அரிப்பும் கூட வந்தது. அதுக்குள்ளே வெயில் வேறே அதிகமாயிடுச்சு.

 

 அவங்கவங்க கட்டிக் கொண்டு .திருந்த காலை உணவை இடைவழியில்  எங்கேயோ வைச்சு சாப்பிட்டோம்.

சோனங்காட்டுவிளையில் தார் ரோடு குறுக்கிடும். திருநெல்வேலி - திருச்செந்தூர் பஸ் ரூட் அது.

 

அத்துடன்  முக்கால்வாசி தூரம் கடந்திருப்போம். எறும்புக் கூட்டம் ஊர்வது மாதிரி  ரெண்டு ரெண்டுபேராகக் கைகோர்த்துக் கொண்டு ரோட்டைக் கடந்தோம். அதற்குள் நிறைய பேருக்கு கால்வலி, மூச்சிரைப்பு, வியர்வை வெள்ளம் என கொஞ்சம் அலுப்பு தட்ட ஆரம்பிசுடுச்சு. ரோடு தாண்டினதும் சுனைதான் என்று சொல்லி உற்சாகப்படுத்தி மீண்டும் நடக்க வைச்சாங்க. அதற்குப் பிறகே கிடத்தட்ட ஒரு மணி நேரம் நடந்திருப்போம்.

 

 நிறைய மரங்களும் ஓடையும் வழியெங்கும் இருந்ததால் அலுப்பு கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.

மணல் குன்று மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததும் சுனை வந்துடுச்சுன்னு சொன்னாங்க. சுற்றி சுற்றி பார்த்தாலும் எங்கேயும் எதுவுமே தெரியலை. மணல் குன்று சரியுற எடத்தில் தாழம்பூ செடிகள் மண்டிக் கிடந்தது. ஒற்றையடி பாதை ஒன்று கீழ் நோக்கி இறங்கியது. எல்லோரும் ஆட்டு மந்தைகள் மாதிரி கும்பலாக இறங்கினோம். கீழே வந்ததும் தெரிந்த காட்சி அலுப்பையெல்லாம் ஆனந்தமாக்கிவிட்டது.

 

காட்டுக்கு நடுவில் ஒரு கோவில், அதை ஒட்டி ஒரு குளம். நாங்கள் சென்றது வெயில் காலம் என்பதால் தண்ணீர் குறைவாக இருந்தது. மழை காலத்தில் தண்ணீர் நிரம்பி வழியும் என்று சொன்னார்கள். இயற்கை அழகுடன் ரம்யமான சுனை. 

 

சரியாகச் சொல்லணும்னா சுனை இருக்குமிடம் திருச்செந்தூருக்கும் நாசரேத்துக்கும் இடைப்பட்ட செம்மண் தேரியின் நடுவில். ஒரு விதமான பாலைவனம்தான்.(desert sand) அதிலிருந்த சுனை  பாலைவனச் சோலைவகையைச் சார்ந்ததாகத்தான் இருக்கும். சுனை என்றால் நீரூற்று (fountain) என்றும் பொருள் உண்டு. வருஷம் முழுவதும் வற்றாத நீரூற்று.

 

கோயிலையும் குளத்தையும் பார்த்ததும் பயங்கர சந்தோஷம். திகட்ட திகட்ட விளையாட விட்டுட்டாங்க. ஒரு பக்கத்தில் கல் அடுப்பு கூட்டப்பட்டு மதிய சமையல் ஆரம்பிச்சாங்க. பெரிய வகுப்பு மாணவ மாவிகளும் சில உதவியாளர்களும் சேர்ந்து "கிராமத்து சமையல்" செய்தார்கள்.

 

குளத்தில் கல் எறிந்து விளையாடுவது ரொம்ப ஜாலி. உடைந்த மண்பாண்டங்களில் உள்ள ஓடுதான் அதற்குரிய ஆட்டக்காய்.அதை லாவகமாக தண்ணீரில் வீசினால் ரெண்டு மூணுதரம் தண்ணீரைத் தொட்டு எழும்பி வழுக்கிப் போகும். பார்க்க ரம்யமாக இருக்கும். எத்தனை தரம் ஓடு எம்பிக் குதிக்கிறதோ ( ஸ்டெபி க்ராஃப் மாதிரி இல்லை) அதை வீசினவங்கதான் வீரர்கள். கோயிலுக்கு வர்றவங்க மண்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம் என்பதால் உடைந்த ஓடுகளுக்கு பஞ்சமே இருக்காது.

 

ஆம்பிளைப் பசங்களெல்லாம் மரத்திலே ஏர்றது தாவுறதுன்னு இருந்தப்போ நாங்களெல்லாம் தாழம்பூ பறிக்கிறது, நவ்வாப்பழம் (நாவல்பழம்) பொறுக்கிறதுன்னு பிஸியா இருந்தோம்.

 

மதிய உணவு அதற்குள் ரெடியாகிவிட்டதால் அனைவரும் வரிசையாக உட்கார வைக்கப்பட்டோம். வாழை இலையில் சுடச் சுட சோறும் குழம்பும் ஊற்றப்பட்டது. எல்லா காய்களும் வெட்டி போடப்பட்டு மிளகாய் சாம்பார் வைத்திருந்தார்கள். அது போன்ற மிளகாய் சாம்பார் அதன் பிறகு இன்றுவரை சாப்பிட்டதில்லை. அதன் மணமும் ருசியும்  Dejavu வாக அப்பப்போ மிளகாய் சாம்பார் சாப்பிடும் போதெல்லாம் வருவதுண்டு.

 

சாயங்காலம் இருட்டுவதற்குள் வீடு திரும்ப வேண்டுமென்பதால் சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே கிளம்பச் சொல்லிவிட்டார்கள். பிரியா விடையுடன் மறுபடி நடக்க ஆரம்பித்தோம். அசதியும் சலிப்புமாக திரும்பும் போது யாருக்கும் சுரத்தே இல்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகுதான் மறுபடியும் சுனைக்கு செல்ல முடிந்தது. அதன் மண்வாசனையும் அமைதி தன்மையும் மறைந்து போய் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. கார், பஸ் எல்லாம் வருகிறது , கழிவுகளும் குவிகிறது.

 

சுனைக்கு பிறகு சுற்றுலான்னு போனது திருநெல்வேலிக்குத்தான். கொஞ்சம் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டதால் வெளியூருக்கு அனுப்ப பெற்றோர்கள் அனுமதி கிடைத்தது. புகை வண்டி மூலம் காயல்பட்டினம் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டோம். முதலில் பார்ப்பது அபிஷேகப்பட்டி கோழிப்பண்ணை . அதற்கு காலையிலேயே போக வேண்டும். எங்கள் ஊரிலிருந்து அதிகாலை புகை வண்டி கிடையாது. எனவே முதல் நாள் மாலை வண்டியில் கிளம்பி நெல்லை சென்றோம். அப்போதெல்லாம் தங்குவதற்கு ஹோட்டலோ விடுதியோ ஏற்பாடு செய்ய மாட்டார்கள். திருநெல்வேலியில் கட்டி முடிக்கப்படாத இரண்டடுக்கு மேம்பாலம்தான் எங்களின் தற்கால தங்கும் விடுதி. ஏற்கனவே போர்வை கொண்டுவரச் சொல்லியிருந்தார்கள். அதனால் முதல் அடுக்கில் போர்வை விரித்து படுத்திருந்தோம். இரண்டாம் அடுக்குதான் எங்களுக்குக் கூரை.

 

எங்களுக்குத் துணையாக நம்பி சார், ஞானையா சார், ஏஞ்சலா டீச்சர் எல்லாம் வந்திருந்தார்கள்.

காலையில் டவுண் பஸ்ஸில் அபிஷேகப்பட்டி போனோம். போகும் வழியில் சின்னச் சின்ன வாய்க்கால்கள் ஸ்டெப் ஸ்டெப்பாக இறங்கி வழியும் போது ஏற்பட்ட சின்னச் சின்ன அருவிகளையும் வயல்வெளிகளையும் ரசித்துவிட்டு கோழிப்பண்ணையையும் சுற்றிப்பார்த்தோம். அது கல்விச்சுற்றுலா என்பதால் முதலில் கோழிப்பண்ணை. மதியம் வரை அங்கேயே சுற்றிவிட்டு மதிய உணவிற்குப்பின் கிருஷ்ணாபுரம் விசிட்.

 

தமிழர்களின் சிற்பக்கலைக்கு இன்றும் உதாரணமாக விளங்கும் கிருஷ்ணாபுரம் கோவில் அன்று பெரிய மலைப்பாகத் தெரிந்தது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாளியும் அதன் வாயினுள் உருண்டுகொண்டிருந்த கல்பந்தும் எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்தது. இன்னோரு சிற்பத்தில் மேலிருந்து ஊசி போட்டால் எப்படி வருகிறது என்று தெரியாமலே கீழே வந்து விழுவதை மறுபடி மறுபடி சோதித்தி பார்த்தோம். இன்னும் நிறைய சிற்பங்களின் பெருமைகளை ஆசிரியர்கள் விளக்க உற்சாகமாக கேட்டுக் கொண்டோம்.

 

இவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்து முடிக்க சாயங்காலம் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு எங்கள் ஊருக்கு புகை வண்டி கிடையாது. மறுநாள் காலைதான் கிளம்ப முடியும். அதனால் முதல் ஆட்டம் சினிமாவுக்குக் கூட்டிச் சென்றார்கள். திருநெல்வேலியில் செண்ட்ரல் தியேட்டர்தான் மிகப் பெரியது. அங்குசிவகாமியின் செல்வன்சிவாஜி படம் பார்த்தோம். ஒத்த வயதுடையவர்களுடன் படம் பார்க்கும் சுகமே அலாதிதான். காதல் காட்சிகள் வந்தபோது வகுப்புத் தோழர்கள் உடனிருந்ததால் சின்ன குறுகுறுப்புடன் படம் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

 

சினிமா முடிந்ததும் இரவு தங்கும் விடுதியாக திருநெல்வேலி புகை வண்டி நிலையத்தின் பிளாட்பாரம் அமைந்தது. வரிசையாக படுத்து, அன்று நடந்த விஷயங்களைப் பற்றி பேசி சிரித்து சந்தோஷமான இரவாக கடந்து போனது. காலையில் எழுந்து முதல் வண்டியில் ஊர் நோக்கி பயணம் தொடங்கியது.

 

இதற்குப் பிறகும் சில சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒரு முறை சென்றோம். ஆனால் வெயில், நீண்ட நடைப்பயணம், வறண்ட உப்பளமும் , துறைமுகமும் அதிக சுவாரஸ்யத்தை அளிக்கவில்லை.

 

அன்று நடந்து சுற்றியதன் சுவை

இன்று காரிலும் விமானத்திலும்

கடல் கடந்து  செல்லும்போதும்

கணக்கற்று செலவளிப்பதிலும் இல்லை

பிளாட்பாரம் தந்த அரவணைப்பு

ரிஸார்ட்டுகளின் சொகுசிலும் இல்லை.

 

நெட்ஃப்லிக்ஸ் ப்ரைம் டைம்

நூறு படம் பார்த்தாலும்

எதிலும் புதுமையில்லை

எல்லாமே நேரப்போக்குதான்.

தரைடிக்கெட்டுக்கும் தங்கம் தியேட்டருக்குமே

தாகத்துடன் மனம் ஏங்குகிறது.

அலை-18

 

அலை-18

நினைவலைகளைப் புரட்டிப் போட்ட சுனாமியாக SPB யின் இழப்பு. அதிலிருந்து மீண்டெழவாவது அலைகளில் மீண்டும் பயணிக்க வேண்டியிருக்கிறது.

வீட்டுக்குள் நிலவியது கம்யூனிசமா கடவுளிசமான்னு அப்போதெல்லாம் தெரியாது. ஆனால் வீட்டை சுற்றி மூணு திக்குகளிலும் இருந்த கோவில்கள் குதூகலத்தையும் கும்மாளத்தையும் அள்ளித் தந்த பிக்னிக் ஸ்பாட்ஸ். வீட்டுக்கு மேற்குப் புறமாகவே எல்லா கோவில்களும் இருந்தன. வடக்குப் பக்கம் சிவன் கோவில், தெற்குப் பக்கம் மாரியம்மன் கோவில். இரண்டு கோவில்களும் ஒரே தெருவின் இரண்டு எல்லைகள். இரண்டுக்கும் மேற்காக  அம்மன் கோவிலும் சர்ச்சும். காயல்பட்டினம் 3 கி.மீ தொலைவுக்குள் இருந்ததால் மசூதி மட்டும் வீட்டுக்கு அருகில் இல்லை.

ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு கோவிலில் விசேஷங்கள் நடக்கும். சினிமாவுக்குப் போகாத நாட்களில் “உன்னைச் சரணடைந்தேன்”னு கோவிலுக்குப் போயிட வேண்டியதுதான். சினிமாவும் சுவாமி தரிசனமும் ஒண்ணான்னு விதண்டா வாதம் பண்ணக்கூடாது. இரண்டுக்கும் வேறுபாடுகள் தெரியாத விகல்பமில்லாத விடலைப் பருவம், மறுபடி வரவே வராது.

வீட்லேயிருந்து நாலு எட்டுலே போயிடும் தூரத்தில் சிவன் கோவில். அங்கே பூஜையின் போது மணி அடிக்க குழந்தைகள்தான் முண்டியடித்து ஓடுவார்கள். தீப ஆராதனை, அபிஷெகம், பூஜை என்று கரெக்டாக நேரம் பார்த்து மணி அடிக்கணும். ஓதுவார் தாத்தா கணீர்க் குரலில் பாட்டு பாடுவார். புரியாத பாஷையில் இருக்கும் ஆனாலும் கேட்க நன்றாக இருக்கும். சிவன் கோயிலுக்கு போவதன் முக்கிய காரணமே சுண்டல் வாங்கத்தான். ஆனால் எங்க சிவன் கோவில் பூசாரி மாதிரி யாரும் சுண்டல் தர முடியாது. உள்ளங்கையை அகலமா விரிச்சு சுண்டலை அவர் அள்ளுவதைப் பார்த்தால், நம்ம கை நிறைஞ்சிடும் போலத் தோணும். ஆனால் கரெக்டா அஞ்சு சுண்டல்தான் நம்ம கையில் விழும். எப்படித்தான் கச்சிதமாக அதே மாதிரி அத்தனை பேருக்கும் தினமும் தருவாரோ தெரியாது.

 

கோவிலின் வலது பக்கம் “செவிட்டு சாமி” இருப்பார் . எல்லாரும் முன்னாடி நின்று கைதட்டி சப்தமெழுப்பி கும்பிடுவாங்க. எங்களுக்கு அவர் முன்னாடி நின்று கைதட்டுவது ஒரு விளையாட்டு. யாராவது அதட்டல் போட்டால் சிட்டாய் பறந்திடுவோம். அவர் பெயர் சண்டிகேஸ்வரர் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். வெளிப் பிரகாரத்தில் இருந்த சாமிகள் பெயர் தெரிந்ததோ இல்லையோ, எந்தந்த சீசனில் எந்த சாமிக்கு விசேஷித்த பிரசாதம் கிடைக்கும் என்பது மட்டும் தெளிவாகத் தெரியும். “பாய்ஸ்” செந்தில் மாதிரி நோட் போட்டெல்லாம் எழுத வேண்டியதில்லை, எல்லாமே மனக்கணக்குதான். சிவராத்திரியும், திருக்கார்த்திகையும், விநாயகர் சதுர்த்தியும் மாசம் மாசம் வரக்கூடாதா என்று நினைச்சுக்குவோம்.

திருக்கார்த்திகையின் போது கோவிலின் வாசலுக்கு எதிரிலுள்ள தெருவில் கோபுரம் மாதிரி பெரிய பந்தல் மாதிரி போடுவாங்க, அதுக்குப் பெயர் “சொக்கப் பனை”.(சொர்க்கப் பனைதான் மறுவியிருக்குமோ, தெரியாது.) ராத்திரி அதை கொளுத்துவாங்க, ஊரே அங்கேதான் இருக்கும்.தீ நாக்குகள் சுருண்டு எழுந்து வானம் முட்டும் வகையில் பறப்பது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். நாங்களும் எங்க பங்குக்கு தேங்காய் மட்டையில் தீ பற்ற வைத்து குச்சியால் தட்டி தீப்பந்தம் கொழுத்துவோம். கார்த்திகைக் கொழுக்கட்டை சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் அதற்குரிய பலகாரம்தான் செய்வாங்க. கார்த்திகைக்குப் பிடிகொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்திக்கு மோதகம், சரஸ்வதி பூஜைக்கு சுண்டலும் அவல் பொறியும், திருவாதிரைக்குக் கழி, தைப்பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல். தீபாவளிக்கு மட்டும் “ஆல் இன் ஆல்” அத்தனை பலகாரங்களும்.

கார்த்திகைக் கொழுக்கட்டை எங்க வீட்லே எக்ஸ்பிரஸ் தினுசில் ரெடியாகும். மாவு பிசைந்து கையில் எடுத்து ஒரு பிடி பிடித்து இட்லி தட்டில் வைச்சு வேக வைப்பாங்க, சீக்கிரம் ஆகிவிடும். அம்மாவின் விரல் அச்சுடன் இருக்கும். நண்பர்கள் வீட்டில் பனை ஓலையில் செய்வார்கள். நேரமும் வேலையும் கொஞ்சம் அதிகம், ஆனால் சுவையாக இருக்கும்.நிறைய நாள் கெட்டுப் போகாமல் இருக்கும். பள்ளியில் பலகாரங்களின் பண்டமாற்று நடக்கும். ( அவ்வப்போது எழில் எனக்காக மெனக்கெட்டு ஓலைக் கொழுக்கட்டை செய்து கொடுக்கிறாங்க.)

சரஸ்வதி பூஜை அப்போ ஏடுகட்டணும்னு எல்லா புத்தகங்களையும் குத்துவிளக்கு முன்னாடி வைச்சிடுவாங்க. ஏடு பிரிக்கிற வரை படிக்க வேண்டாம், எங்களுக்கெல்லாம் ரொம்ப குஷியா இருக்கும். எங்க சரசக்கா சரஸ்வதி பூஜை அன்னைக்குதான் பிறந்தாளாம். பெயருக்குப் பொருத்தமாக தமிழ் பண்டிட் ஆகிவிட்டாள். என் தமிழ் அறிவெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அவளிடமிருந்து வந்ததுதான்.

சிவன் கோவிலில் ஒரு பண்டிகை முடியிறதுக்குள்ளே மாரியம்மன் கோவில் திருவிழா வந்திடும். வெளியூர் போன சொந்தங்களெல்லாம் கோயில் கொடைக்கு வந்திடுவாங்க. ஊரே களை கட்டும். பத்து நாள்போல்  பண்டிகை நடக்கும். ஒவ்வொரு நாளைக்கும் வித விதமான கலை நிகழ்ச்சிகள் நடக்கும் வில்லுப்பாட்டு, கரகாட்டம், பாட்டுக் கச்சேரி, நாடகம் எல்லாம் நடக்கும்.

எனக்கு ரொம்ப பிடிச்சது வில்லுப் பாட்டுதான். விடிய விடிய கதை சொல்லுவாங்க. தெரு பைப்புக்கு பின்னாடி உள்ள காலி இடத்தில்தான் மேடை போட்டு நடக்கும். மகாபாரதமும், ராமாயணமும் புத்தக வடிவில் வாசிக்க ஆரம்பிக்கும் முன்பே ராமனையும், கண்ணனையும், கம்சனையும் அறிமுகப் படுத்தியது வில்லுப் பாட்டுதான். கதைக்கு நடுவில் பாட்டுப் பாடி வில்லில் ஓங்கி ஒரு தட்டு தட்டி சொன்ன கதைகள் இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன. (அழிந்தே போய்விட்டன இது போன்ற நாட்டுபுறக் கலைகள்)

அடுத்தபடி பிடித்தது பாட்டுக் கச்சேரிதான். இட வசதி பற்றாத காலங்களில் சர்ச்சுக்கு எதிரிலுள்ள இடங்களில் மேடை போட்டு பாடுவார்கள். ஒருமுறை பாட வந்த பாடகி எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் எங்களுக்கு தூரத்து சொந்தமாம். கமல் ரஜினியைப் பார்த்த மாதிரி வாய்மூடாமல் அதிசயத்துடன் பார்த்தேன். அந்தக் காலத்திலேயே மேடைக் கவர்ச்சி மனதை கவர்ந்து இழுத்திருக்கிறது. கரகாட்டக்காரர்கள் வீதி வீதியாக நடனமாடி எல்லாரையும் மகிழ்விப்பார்கள்

கும்பம் ஏந்தி வீதி தோறும் வருபவர்களுக்கு காலில் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவோம். கோயில் கொடை எப்போதும் அக்கினி நட்சத்திரத்தை ஒட்டி வரும் என்பதால் கால் சூடு தணிக்க தண்ணீர் ஊற்றுவது நம்பிக்கை சார்ந்த விஞ்ஞானம். தெருவெல்லாம் தண்ணீர் கரைந்து ஓடி தரையின் சூடும் குறையும்.

நேர்த்திக் கடன் செலுத்தும் சடங்காக கோவிலின் முன்புறம் முழுதும் வாழைக் குலைகளைக் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். டெருவின் இரு புறங்களிலும் தொங்கும் வாழைக் குலைகளில் நம்ம வீட்டு குலை எது என்பதற்கு தண்டில் எழுத்துக்கள் வேறு கீறப்படிருக்கும். தினமும் போய் நம்ம வீட்டுக் குலை பழுத்துவிட்டதா என்று நோட்டம் விடுவது எங்கள் வேலை. எல்லா பழங்களும் பழுத்து தொங்கும்போது பார்ப்பது அழகிய அற்புதக் காட்சி.

விளையாட்டுகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிறு சிறு போட்டிகள் அங்கங்கே நடக்கும்.  பலூன் விடுவது, கலர் கலர் ப்ளாஸ்டிக் கண்ணாடிகளை வாங்கி மாட்டிக் கொள்வது, வளையல் க்ளிப் எல்லாம்  வாங்குவது என்று பண்டிகை முடியும் வரை கோலாகலமாக இருக்கும்.

மதங்களின் பரிச்சியம் அன்று

பண்டிகைகளும் திருவிழாக்களும்

அவதாரங்கள் என்பது

பலகாரங்களின் பெயர்களே!

மதமோ சாமியோ மிரட்டவில்லை அன்று

மனதுக்குப் பிடித்தபடி வாழ்ந்தோம்.

மனிதர்களைத் துண்டு போடும்

மாயாவியாய்  மதங்கள்   இன்று!!

Friday, September 25, 2020

பாட மறந்த நிலா

 நிலவுக்கும் உண்டு இங்கு அஸ்தமனம்?


பாடும் நிலா பாலு

பாட மறந்த நாள் இன்று!


எண்ணிலடங்கா பாடல்கள்

எண்ணிக்கையற்ற ரசிகர்கள்

நினைவு தெரிந்த நாளில் இருந்து 

நீங்காது துணைவந்த தேன்மதுரக் குரல்.


காதல் சொல்ல 

உன் குரலே தூதுசென்றது

கல்யாணப் பந்தலிலும் 

உன் இசையே ஓங்கி ஒலித்தது.


மசக்கை முதல் மகப்பேறு வரை

மனத்திடன் கொடுத்ததும் உன்குரலே

மக்களைத் தாலாட்டி தூங்க வைக்க

மயங்க வைத்தாய் மந்திர இசையால்.


துக்கத்தில் அழும் போதும்

துயரத்தில் வெம்பும் போதும்

கோபத்தில் குமுறும் போதும்

குதூகலமாய்த் துள்ளும் போதும்

 

உணர்வுகள் அத்தனையும் 

உன் குரலாய் என் வீட்டில்

பொங்கிப் பிரவக்கித்த வேளையிலும்

 “போதும்” என்று சொன்னதே இல்லையே!


அடுத்தவர்களுக்காக நீ பாடிய

இரங்கல் பாட்டுக்கள் எத்தனையோ

இன்று உனக்காகப் பாட 

ஒன்று கூட நினைவில் வரவில்லை.


இனிய குரலை இனிமேலும் கேட்கலாம்

இசைத்தட்டிலும் இணையத்திலும்

இன்னிசை உலகம் இழந்து நிற்பது

”பாடும் நிலா பாலு” வை!!


இன்னிசையை வழி அனுப்பிட

இதயம் கனிந்த மவுன அஞ்சலி .

Wednesday, September 23, 2020

அலை-17

 அலை-17

எனது அலைக்கு பின்னூட்டமிட்ட தம்பி நானா, இந்த மனுஷி(தாணு)யின் மறுபக்கத்தை உசுப்பி விட்டுட்டான். சின்ன வயசுலே கொஞ்ச நாள் “ அந்நியன்” மாதிரி நான் அலைந்ததை மறந்தே போயிருந்தேன், மறுபடி நினைவூட்டி விட்டான். 


கதைப் புத்தகங்களை வாசிக்கும்போது அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது நிறைய பேரின் இயல்புதான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் நான் ஒரு படி அதிகமாகவே  ஒன்றியிருப்பேன் போல் இருக்குது. அதன் பிரதிபலிப்பாக தூக்கத்தில் பினாத்துவது, கனவில் ரீப்-ப்ளே (replay) பண்ணி கதை சொல்லி பக்கத்தில் படுத்திருப்பவங்களை இம்சை பண்ணுவது எல்லாம்  உண்டு. ஆனால்  அதன் உச்சகட்டமாக சில கதைகளின் தொடர்ச்சியாகவோ தூண்டுதலாலோ அப்பப்போ  தூக்கத்தில் எழுந்து நடப்பேன். 

இப்போதைய காலமாக இருந்திருந்தால் “ தூக்கத்தில் நடக்கும் வியாதி” என்று முத்திரை குத்தி Drs. ஷுபா, ராமேஸ்வரி போன்றோரிடம் அழைத்துப்போய் அரைக் கிலோ மாத்திரை வாங்கித் தந்திருப்பாங்க. நல்ல வேளை அப்படியெல்லாம் எதுவும் நடக்கலை.அந்தக்கால பெருசுங்கலெல்லாம் என்னை மாதிரி எத்தனை அரை வேக்காடுகளைப் பார்த்திருப்பாங்க.  ஏதாச்சும் வித்தியாசமான அசைவு கேட்டதும் “ ஏய் தூங்கு” ன்னு ஒரு அதட்டல் போட்டால் அத்தனை கனவும் புஸ்வானமாகி மறுபடி தூங்கிட வேண்டியது தான். அதனாலே நான் அந்த காலத்தில் நோயாளி ஆவது தவிர்க்கப்பட்டு மருத்துவர் ஆகிவிட்டேன்.(ஏதோ வடிவேலு படம் பார்க்கிற மாதிரி இருக்கா?) வாழ்க எங்க வீட்டுப் பெரியவங்க. 


இந்த அதட்டலுக்கெல்லாம் அடங்காத சில நாட்களும் உண்டு. அதன் தாக்கம் எப்படி இருக்குமென்பதை  முந்தைய நிலாச்சோறு பதிவுக்குத் தம்பி நானா பின்னூட்டமாக சிறு கதை போலவே எழுதிட்டான். கண்டிப்பாக எல்லாரும் வாசிக்கணும்.


””பெரிய வீட்டின் ஒரு ஓரத்தில் பதுங்கி கொண்டு இரவலாக கிடைத்த குமுதத்தில் அந்த வார தொடர் கதையை ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினேன்.அந்த நேரம் பார்த்து " ஏய் தாணு எங்க இருக்க. இன்னக்கி சோமண்ணன் கடை லீவு....அந்த கோனார் கடை வரைக்கும் போய் ஒரு கால் கிலோ புளி வாங்கிட்டு வா" சமையல் வேலை அரை குறையா கெடக்கு..... சீக்கிரமா போயிட்டு வா" சமையல் கட்டிலிருந்து வந்த அம்மாவின் குரல் தலையில் நங்கென்று குட்டியது போலிருந்தது. கதையின் சுவாரசியத்தில் இருந்து வெளியே வந்து விழுந்தேன். 

கொஞ்ச நேரம் நிம்மதியா படிக்க விடுறாங்களா! இந்த நானா தம்பிப்பயல் எங்கே போனான். எங்கேயாவது சந்தைக் கடையிலே சுத்திட்டு இருப்பான். அவனக் கூப்பிட்டு போகச் சொல்ல வேண்டியது தானே! வீட்ல இருந்தா இதுதான் வம்பு... சலித்துக் கொண்டே ஏக்கமாக குமுதத்தை கீழே வைத்து விட்டு கோனார் கடையை நோக்கி நடக்கிறேன். சீக்கிரமா புளிய வாங்கி குடுத்துட்டு கதையை விட்ட இடத்துலேர்ந்து படிக்கணும்... 

…வேக வேகமாக நடக்கிறேன்...

ஏய்... ஏய்ய்... நில்லு.. நில்லு... கிடுகுகளில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து எழுந்தது அபாயக் குரல். பரபரப்பு. திடுக்கிட்டு எழுந்து எதுவும் புரியாமல் சிலர் உட்கார, ஒரு சிலர் இருட்டுக்குள் சந்தைக்குள் ஓட... அதற்குள் கோணைப் பூவரசு மரம் வரைக்கும் நடந்து விட்டாள் அவள்(தாணு) நள்ளிரவு காரிருளில் கோனார் கடைக்கு புளி வாங்க போய்க் கொண்டிருந்தவளை பிடித்து இழுத்து வந்தார்கள்....

இப்படியாக தெருப் பைப்புக்கும், தங்கம் தேட்டருக்கும் கூட சில நாட்கள் போய் வருவாள். அன்று கனவுகளில் நடந்தவள் இன்று கதை சொல்ல வந்தாள். கனவுகள் தொடரட்டும்.”” ....


எப்படி நைசா சந்துலே சிந்து பாடியிருக்கான். எனது நினைவலைகளின் பக்கத்து அலைகளாக என் தம்பியின் பின்னூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

அவனுக்கு தெருப்பைப்புக்கும் தங்கம் தியேட்டருக்கும் நடந்ததுதான் தெரியும். ஊரு விட்டு ஊர் தாண்டிப் போன கதைகள் தெரியாது. ஸ்ரீவைகுண்டத்தில் இப்போ கேட்டாலும் சொல்லுவாங்க. 


பள்ளி விடுமுறையின் போது ஸ்ரீவை அக்கா வீட்டுக்குப் போயிடுவேன். அத்தான் அங்குள்ள அஞ்சிலாம்பு (அஞ்சு lamp)பக்கத்தில் 

சின்ன பெட்டிக்கடை வைச்சிருந்தாங்க.  நாளிதழ், வாரப்பத்திரிகை, மாத நாவல் எல்லாம் சுடச்சுடவிற்பனைக்கு வரும்.  அத்தனையும் உடனுக்குடன் படிக்கலாம் என்பதாலேயே லீவுக்கு அங்கே ஓடிவிடுவேன். எல்லாத்தையும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியாது. அதனாலே அத்தானுக்கு டீ, காபி கொண்டு போற சாக்குலே போய் காலையில் வர்றதெல்லாம் படிச்சுடுவேன். மத்திய உணவுக்கு அத்தானை மாற்றிவிடும் சாக்கில் கடையிலேயே உக்கார்ந்து மத்த எல்லா புக்கும் படிச்சுடுவேன். அந்த சமயத்தில் பீடி, சிகரெட், வாழைப்பழமெல்லாம் விற்பனை செய்திருக்கிறேன். 


ஞாயிறு அன்று கடை லீவ் என்பதால் எல்லாரும் சினிமாவுக்குப் போவோம். “தாமரை நெஞ்சம்” சினிமா பார்க்கப்போனபோது அக்கா மஞ்சள் நிற புடவை கட்டியிருந்தாள். படம் முடிந்து வெளியே வரும்போது சினிமா காட்சிகளை அசை போட்டுகிட்டே அக்கா பின்னாடி நடந்தேன். ரொம்ப நேரம் நடந்தும் வீடே வரலை. கால் வேறே நல்லா வலிச்சுது. அப்போதான் தலையை நிமித்தி அக்காவைப் பார்த்தால் அது வேறு யாரோ ஒரு பெண், மஞ்சள் புடவையில். அந்த ஊர் பெயர் குருசை கோவில். எதிரே சர்ச். (பின்னாடி வாழ்க்கை சர்ச்சில்தான் என்று அப்போதே மனதில் முடிச்சு விழுந்திடுச்சு போலிருக்கு)


 ஸ்ரீவையிலிருந்து வாய்க்கால் ஓரமா ரொம்ப தள்ளி உள்ள ஊர் அது.பயந்து அழுது அடம் பிடிச்சு என்கிட்டே இருந்து

 ஒரு வழியா விஷயங்களைப் பிடுங்கி விலாசம் தெரிஞ்சுகிட்டாங்க.வீட்லே கொண்டுவிட ஏற்பாடு செஞ்சாங்க.  நேரமோ நடுராத்திரி கிட்டே ஆயிடுச்சு.


 அதுக்குள்ளே வீட்டுக்குப் போன அக்கா அப்போதான் நான் கூட வரலைங்கிறதைக் கண்டுபிடிச்சிருக்கிறாள். நல்லா திட்டு கிடைச்சிருக்கு. பெரியத்தானும் சின்னத்தானும் சைக்கிள் எடுத்துட்டு சினிமா தியேட்டர் , பஸ் ஸ்டாண்டுன்னு தேடி அலைஞ்சிட்டு இருந்தாங்க. ஒருவழியா தேடிப்போன கோஷ்டியும், திரும்ப கூட்டிட்டு வந்த கோஷ்டியும் சந்திச்சுகிட்டதால் சீக்கிரமா வீடு வந்து சேர்ந்தேன். வீட்லே வந்து நல்லா அக்காகிட்டே அடி வாங்கினேன். அதற்குப் பிறகு ஸ்ரீவைகுண்டத்தில் சினிமா பார்க்கப் போனதில்லை.


மேலே நடந்த விஷயங்களை எல்லாம் ஆறுமுகநேரியில் அக்கா சொல்லவே இல்லை. அவளுக்கும் சேர்த்துதான் மண்டகப்படி கிடைக்கும்னு சொல்லாமல் மறைச்சிட்டாள். பெரிய மனுஷி ஆனபிறகு லீவுக்கெல்லாம் வெளியூர் அனுப்பாத காலம் வந்த பிறகுதான் எப்பவோ சொன்னாள். அதற்குள் விஷயத்தின் சூடு தணிந்து என்னைக் கேலி பண்ண முடியாத அளவுக்குப் பிசு பிசுத்துப் போய்விட்டது. 


எனக்கும் நயினார் அண்ணனுக்கும் ஐந்து வருட இடைவெளி. நானாவுக்கும் எனக்கும் இரண்டரை வருடம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளும் களேபரங்களும் அவனுக்குத்தான் அதிகம் பரிச்சியம் என்பதால் என்னக் கேலி பண்ணவும் கடுப்பேத்தவும் அடிக்கடி இதையெல்லாம் கையில் எடுத்துக்குவான். அவனைக் கேலி பண்ண நானும் சில விஷயங்கள் வைத்திருப்பேன். பதிலுக்குப் பதில் சொல்லம்புகள் பறந்து சண்டை களை கட்டும்போது அண்ணனோ அக்காவோ வந்து அதட்டல் போட்டு அடக்கிவிடுவார்கள். 


தூக்கத்தில் நடந்தது கதை சொன்னதெல்லாம் எப்போது மறைந்தது எப்படி போச்சுது என்பதெல்லாம் விளங்கவே இல்லை. ஆனாலும் அப்பப்போ தூக்கத்தில் எழுந்து சுவரோரம் நின்று பயமுறுத்துவதாக தம்பி அவ்வப்போது கோள் சொல்லுவான். இந்த விஷயங்களை ஒரு குறைபாடாக அம்மாவோ அப்பாவோ கருதவே இல்லை. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து  (Somnambulism) ”தூக்கத்தில் நடப்பது” பற்றி படித்தபோதுதான் சுமார் 20% மக்களில் இது நடப்பது இயற்கை என்பது புரிந்தது. அளவுக்கு அதிகமான வாசிப்பும் நில நேரங்களில் தூக்கத்தைக் கெடுப்பதால் இந்த மாதிரி நிகழலாம். 


அடடா! என் பதிவுகளை வாசிக்கச் சொல்லி எழிலுக்கு அன்புக் கட்டளை வேறே போட்டிருக்கேன்.  காதலிச்ச காலங்களிலேயே கட்டுரை (composition) மாதிரி இருக்குதுன்னு பாதி கடிதங்களைமட்டும் படிக்கிற ஆளு. இந்த "பின்பக்கத்தின் பளீரொளி" , அதாங்க "Flash-back" கதையை வாசித்துவிட்டு ஏதேனும் விபரீத முடிவெடுத்தால் என்ன செய்வது? கலகத்தை ஆரம்பித்த நாரதர் நாராயணன் (நானா) தான்

 மத்தியஸ்துக்கு வரணும். மச்சானும் மச்சினனும் தோஸ்த்துங்கதான்.

Monday, September 21, 2020

அலை-16

 அலை-16

தென்னந் தட்டிக்குக் ”கிடுகு” என்ற பெயர் இருந்ததே மறந்து விட்டது. நண்பன் அஸ்வதரன் நினைவூட்டிய பின்தான் நினைவுக்கு வந்தது.  


பள்ளிப் பருவத்தில் ஆண்களுக்கு சாரணர் இயக்கம் ( Scout)  இருப்பதுபோல் பெண்களுக்கு சாரணியர் இயக்கம் (Guides) உண்டு. எனது வகுப்புத் தோழன் சுதாகரின் அம்மா அலெக்ஸ் டீச்சர்தான் எங்களுக்கு Guides ஆசிரியை. கண்டிப்பும் கனிவும் ஒரு சேரப் பெற்ற அன்பான ஆசிரியை. வகுப்புத் தோழன் அம்மா என்பதால் எங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.  வாரத்தில் ஒருநாள் சாரணியர் வகுப்பு இருக்கும். அதில் நிறைய கைவினைப் பொருட்கள் செய்ய சொல்லித் தருவாங்க.


 கிடுகு பின்னுவதும் அதில் ஒன்று. கிடுகு தட்டி பின்ன மாட்டோம், அந்த மாதிரி பின்னலில் ஓலைப்பெட்டி முடைய சொல்லித் தருவார்கள்.எங்கள் ஊரில் பனை மரம் அதிகம் என்பதால் பனை ஓலைகள் இலகுவாகக் கிடைக்கும். 


கொஞ்சம் இளசாக உள்ள ஓலைகளைக் கிழித்து சமமான அளவுள்ள பனை நார்கள் ரெடி பண்ணுவது முதல் பயிற்சி. சொல்ல ஈஸியாக இருக்கும். ஆனால் நேர் கோட்டில் நார்கள் கிழிப்பது ரொம்பக் கஷ்டம். வகுந்து இழுக்கும் போது குறுக்கு வாக்கில் கிழிந்து பல்லி மாதிரியோ பல்பம் மாதிரியோ கண்ட வடிவங்களில் வரும். நிறைய ஓலைகளை வீணாக்கிய பிறகுதான் கொஞ்சம் நார்கள் கிடைக்கும். அதுக்கே ஒருவாரம் ஒப்பேத்திடுவோம். ஹோம் வொர்க் எல்லாம் உண்டு. ஒருவழியாக ”படித்து கிழித்து”(ஓலையைத்தாங்க) பனை நார்களுடன் அடுத்த வாரம் தயார் நிலையில் இருப்போம்.


ஓலைப்பெட்டியில் முதலில் அடிபாகம்தான் பின்னணும். ரெண்டு பனை நார்களில் முதல் கட்டம் பின்னிவிட்டு அடுத்த கட்டத்துக்கு போகும் முன்னர் முதல் கட்டம் பிரிந்து வந்துவிடும். எப்படியோ திக்கித் திணறி ரெண்டுமூணு கட்டம் போட்ட பிறகும் பிடிமானம் இறுகலாக இல்லாவிட்டால் எல்லாம் உருவிகிட்டு வந்துடும். பரோட்டா சூரி பாணியில் ‘‘மறுபடியும் முதலில் இருந்து’’ ஆரம்பிக்க வேண்டியதுதான். எப்படியோ ரெண்டு மூணுவாரம் வேர்வை சிந்தி உழைச்சு அடிபாகம் போட்டுட்டு பெருமையா அலெக்ஸ் டீச்சர்கிட்டே கொண்டு போவோம். அடுத்த கட்டமாக பெட்டி செய்ய பயிற்சி கொடுப்பாங்க. கூடையை மடக்கி பெட்டிபோல் செய்யவேண்டுமென்றால் நாலு மூலைகளையும் மடக்கி  ஷேப்புக்குக் கொண்டு வரணும்.  எத்தனை தரம் சொல்லித் தந்தாலும் புரியாது. மூலை மடிக்கத்தெரியாமல் கூடை பின்னுவதையே விட்டுட்டு ஓடிப்போனவர்கள் அதிகம். நானெல்லாம் எதுக்கும் கலங்காத வில்லி வீரம்மா. ஒருவழியாக சில பல நாட்கள் முயற்சி செய்து கூடை பின்னி முடிச்சிட்டேன். ஆனால் அதுக்குப் பெயர்  'ஓலைப் பெட்டி"ன்னு சொன்னால் யாருமே நம்பலை,அப்படி ஒரு நசுங்கிய பெட்டி அது.


பெட்டி பின்னுவது போக நிறைய கைவேலைகள்  வாழ்க்கைக்கு உகந்ததாக சொல்லித் தருவார்கள். கைக்குட்டைக்கு மடிப்பு தைத்து பூவேலை செய்வது, வயர் கூடை பின்னுவது, பாசி கோர்த்து மணி பர்ஸ் செய்வது போன்ற பல  பயிற்சிகள் உண்டு. அன்று அழு மூஞ்சியா கத்துகிட்டதெல்லாம் இப்போ நிறைய  பயனுள்ளதாக இருக்குது. இப்பவும் எங்க வீட்லே உள்ள வயர்கூடைகள் சில நான் பின்னியதாகவே இருக்கும்.


பாசியில் மணிபர்ஸ் பண்ண பாசிக்காக அலைவது குட்டி டூர்தான். எங்க ஊரில் ஒரேயொரு கடையில்தான் இந்த விஷயங்களெல்லாம் வைத்திருப்பாங்க. அந்தக் கடை முதலாளி பையனும் என் வகுப்புத் தோழன்தான் .VTS  கடை என்று ஞாபகம்.. ஆனால் அங்கே நினைச்ச கலரில் பாசி இருக்காது. மயில் டிசைன் போடணுமென்றாலும் யானை என்றாலும் ஒரே கலர் பாசிதான். வேண்டிய கலர் சொல்லி, அவங்க கொள்முதல் செய்து எங்க கைக்குக் கிடைப்பதற்குள் வருஷமே முடிஞ்சிடும். அண்ணன் அக்கா  யாராவது திருச்செந்தூரோ திருநெல்வேலியோ போனால் சீக்கிரமாகக் கிடைக்கும். 


வருஷத்துக்கு ஒருமுறை பக்கத்து ஊர்களில் நடக்கும் சாரணியர் கேம்ப்புக்கும் கூட்டிட்டு போவாங்க. அதுக்குன்னு பிரத்தியேக பயிற்சிகளெல்லாம் நடக்கும். வேறு பள்ளிகளிலிருந்து வரும் பெண்களிடம் அறிமுகமாக நல்ல வாய்ப்புகூட.  ஒரே தரம் மெஞ்ஞானபுரம் சென்று வந்தது நினைவிருக்கிறது. 


சாரணியருக்குன்னு ஒரு யூனிபார்ம் உண்டு. கரு நீலக் கலரில் பாவாடை தாவணி, வெள்ளை நிற ரவிக்கை. எனக்கு அந்தக் கலரே பிடிக்காது. நாங்களெல்லாம் அநேகமா  பனை மரம், தென்னை மரம் கலரில்தான் இருப்போம். அந்த கருங்கலர் போட்டால் எங்களுக்கும் துணிக்கும் வித்தியாசமே தெரியாது. வீட்லேயும் ரெகுலர் யூனிபார்ம் தவிர கூடுதலாக இந்த யூனிபார்ம் எடுத்துத் தர மாட்டாங்க. அதனால் பாவாடையிலிருந்து தாவணிக்கு மாறிய பிறகு சாரணிய வகுப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. 


சாரணர்கள் ஆடை மட்டும் விறைப்பான டவுசர், தொப்பி, கழுத்தில் உள்ள ஸ்கார்ஃப் , பூட்ஸ் என்று அட்டகாசமாக இருக்கும். அதன் ஆசிரியர் நம்பி சாரும் கண்டிப்புடன் இருப்பார். பள்ளியில் பசங்க எல்லோரும் பயப்படுவது நம்பி சாருக்குத்தான். எங்களோட உடற் பயிற்சி ஆசிரியரும் அவர்தான். ஞானையா சாரும் உடற்பயிற்சி ஆசிரியர்தான், ஆனாலு கொஞ்சம் இளகிய மனசுள்ளவர். 


அசெம்பிளிக்கு தாமதமாக வருவது, வகுப்பு நேரங்களில் வெளியே சுற்றித் திரிவது, உடற் பயிற்சி சமயங்களில் கட் அடிப்பது போன்ற நேரங்களில் நம்பி சார் பிரம்புதான் எல்லோரையும் கட்டுப் படுத்தும்  மந்திரக்கோல்.


 பள்ளியின் முன்புறம்,  பின்புறம், பக்கவாட்டில் உள்ள நடைபாதை எல்லாமே மைதானங்கள்தான். எல்லா விளையாட்டுக்களும் அங்கேதான் நடக்கும். ஒரே நேரத்தில் ரெண்டு மூணு வகுப்பு மாணவர்கள் கூட உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவு விஸ்தாரணமான காலி இடங்கள் உண்டு. 


பின்னாடி உள்ள மைதானம் மிகப் பெரியது என்பதால் கால்பந்து விளையாட்டுகள் அங்கேதான் நடக்கும். மாணவர்களின் ஓட்டமும் ஆட்டமும்  "பிகில்" பட காட்சிகளை மிஞ்சும் வண்ணம் இருக்கும். பெண்களெல்லாம் துரைப்பாண்டியன் சார் வீட்டு மாடியிலிருந்து திருட்டுதனமாகப் பார்ப்போம்.


 ஆசைப்பட்டு விளையாடுபவர்களும், அடிக்குப் பயந்து அவஸ்தையுடன் விளையாடுபவர்களும் எல்லா வகுப்பிலும் உண்டு. 

 வேப்ப மரத்தடி நிழலில் ரெண்டு இரும்பு போஸ்ட் இருக்கும். ”முதல் மரியாதை” சிவாஜி மாதிரி கெத்து காட்ட பசங்களெல்லாம் அதில் தொங்கி புல்-அப்ஸ் எடுப்பாங்க.  நாங்களெல்லாம் அதில் தொங்கி ஊஞ்சல் மட்டும் ஆடுவோம்.


 அடர்த்தியான மர நிழல் கபடி விளையாட வசதியான இடம். பேயன்விளையிலிருந்து வரும் பெண்கள் கூட்டம் நல்லா விளையாடுவாங்க. அதிலொரு இரட்டையர்கள் ( ஒருத்தி பெயர் வத்ஸலா) சூப்பரா விளையாடுவாங்க. என் தோழி ஜான்ஸியும் நல்லா விளையாடுவாள்.  நான் அப்போ ரொம்ப நோஞ்சான். எப்போ கபடி விளையாடினாலும் காலில் அடிபட்டு ஜவ்வு கிளிஞ்சிடும். ஒருவாரம் நொண்டிக் கொண்டுதான் வகுப்புக்கு வருவேன்.


ஆண்டு விழா சமயத்தில்மட்டும் எல்லா போட்டிகளிலும் பெயர் கொடுத்திடுவேன். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்த சமயத்தில் எங்க அண்ணன்கள் 11 ஆம் வகுப்பில் இருந்தார்கள். நான் ஓட்டப் பந்தயத்தில் சேரப் போறேன்னு சொன்னப்போ 8ஆம் வகுப்பு வரை ஒரே தகுதிதான். பெரிய வகுப்பு பொண்ணுங்க கூட விளையாடி நீ ஜெயிக்க முடியாது, சேர வேண்டாம் என்று சொன்னாங்க. ஆனாலும் அண்ணனுக்குத் தெரியாமல் பேர் கொடுத்திட்டேன். அங்கங்கே தனித் தனியாகத்தான் போட்டி நடக்கும், தப்பிச்சுக்கலாம்னு நெனைச்சேன். ஆனால் என் துரதிருஷ்டம், எங்க போட்டிக்கு நயினார் அண்ணன் தான் லைன் அம்பயர். எப்படியோ பயந்துகிட்டே ஓடி ரெண்டாவது பரிசு வாங்கிட்டேன். 


நாங்க பள்ளி இறுதி வருஷம் வந்த போதுதான் கிரிக்கெட் என்ற விளையாட்டு பற்றி பரவலாகப் பேசப் பட்டது. அதுபற்றி எதுவும் புரியாத நாட்களில் கிரிக்கெட் பேட்டை பேஸ்பால் விளையாட பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.


அடடா இந்த நினைவலை

கிடுகில் ஆரம்பித்து 

கிரிக்கெட்டில் முடிந்துவிட்டதே!!

Saturday, September 19, 2020

அலை-15

 அலை-15

நிலாச்சோறு சாப்பிட்டு இருக்கீங்களான்னு கேட்டால் நிலாவில் போய் சாப்பிடுவதா என்று இன்றைய தலைமுறை கேலியாகக் கேட்கும். அமுதைப் பொழியும் நிலவில் தரையில் அமர்ந்து தலையை நிமிர்த்தி வான் நோக்கி உண்ட சாப்பாடு அமிர்தம் இளவல்களே!!


இப்போதெல்லாம் வருஷத்துக்கு ஒன்றிரண்டு முறைகள் கூட நிலவைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நிலா அப்படியேதான் இருக்கிறது. நாம்தான் மாறிப்போனோம். கார் கூரையும் கான்க்ரீட் தளங்களும் நம்மை நிலவுக்கு அந்நியமாக்கிவிட்டது. அதனால் “அற்றைத் திங்கள் அந்நிலவில்” என்று பாட்டுமட்டும் பாடிக் கொண்டு  இருக்கிறோம். 


எங்கள் வீட்டில் மின்சாரமே இல்லாதபோது மின்விசிறி மட்டும் எங்கிருந்து வரும். கோடைக்காலங்களில் வீட்டினுள் படுக்க முடியாது,  அவிஞ்சி போயிடுவோம். அதனால் வெளிவாசலில் தான் படுக்கை.தரையில் படுக்க பாயோ போர்வையோ சரியா வராது.  கீழே விரிக்க   தென்னந் தட்டிகள் எப்பொழுதும் தயாராக இருக்கும். 


இரட்டைத் தென்னங் கீற்றுகளை இணைத்து அழகான தட்டி செய்திருப்பாங்க. ஏழெட்டு எண்ணம் எப்போதும் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். மழைக்காலங்களில் அதே தட்டிகள் கூரைமேல் ஒய்யாரமாகப் படுத்து மழைக்குக் காவல் காக்கும்.

 குடும்ப அங்கத்தினர்களின் உயரத்திற்கேற்ப பெரிசும் சிறுசுமாக வாங்கி வைத்திருப்பாங்க.


இரவு மெல்லக் கவிழும்போதே “ மூந்தி கருத்திருச்சு, தட்டியை எடுத்துப் போடுங்க”ன்னு சத்தம் கேட்டவுடனேயே நொடிப்பொழுதில் தரையை அடைத்து பரப்பிவிடுவோம். கடைசியாக விரிக்கிறவங்க நடைபாதையை ஒட்டி படுக்கணும். அங்கே படுத்தால் நாலுகால் நண்பர்கள் சிலர் ( நாய், ஆடு, மாடு, சில சமயங்களில் பன்றிகள்கூட- கிராமங்களில் இதெல்லாம் சகஜமப்பா) நம்மீது ஏறி பச்சைக் குதிரை விளையாடி விடுவார்கள். அலெர்ட் ஆறுமுகமாயிருந்தால்தான் வசதியா இடம் பிடிச்சு நிம்மதியாகத் தூங்கலாம்.


 குறுக்கும் நெருக்குமாக விரிக்கப்பட்ட தட்டிகளில் அவரவர் உடைமைகளைப் ( தலையணை, பெட்ஷீட்) போட்டு ரிசர்வ் செய்து கொள்வோம். நிறைய பேருக்குத் தலையணை கிடைக்காது. சுருட்டி வைக்கப்பட்ட துணிமூட்டைதான் தலையணை. 


காலையில் எழுந்ததும்  அவரவர் தட்டிகளைத் தூக்கி சுவரில் சாத்த வேண்டும். வெயில் பட்டு ஓலை கெட்டுப்போகாமல் இருக்க சில நேரங்களில் தண்ணீர் தெளிக்க வேண்டும். சாயங்காலமே தட்டி விரிக்க வேண்டிய இடங்களில் தண்ணீர் தெளித்து தரையின் சூடு தணிக்க வேண்டும். 

அப்பாவுக்கு ஒற்றை பெஞ்சும் பெரியண்ணனுக்கு சட்டம் வைத்த மரக்கட்டிலும் ரெடியாக போடப்பட்டிருக்கும். அம்மா மதினியெல்லாம் சிறுசுங்க பக்கத்தில் இருக்கும் இடங்களில் ஒண்டிக்குவாங்க.

ரொம்ப வெயில் அதிகமாகும் காலங்களில் ஓலை விசிறி ஒவ்வொருத்தர் கையில் இருக்கும்.


பெளர்ணமி அன்று தென்னந் தட்டியில் மல்லாக்க படுத்து வானத்தைப் பார்க்கிற சுகம் வேறு எந்த இயற்கைக் காட்சியிலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.


 கவிஞர்களின் வர்ணனை மாதிரி ”நட்சத்திரங்களை எண்ணினாள் கதாநாயகி” எல்லாம் எங்களைப் பார்த்து எழுதியதுதான். வானத்தில் குவிந்து கிடக்கும் நட்சத்திரங்களின் பிரயாணம் ஒவ்வொரு சீசனுக்கும் இடம் மாறுவதை தினம் பார்த்துக் களித்தது எங்கள் தலைமுறை.

மூன்று நட்சத்திரங்கள்  ஒரே கோட்டில் இருக்கும், அதற்குப் பெயர் உலக்கை. நட்சத்திரக் கூட்டத்திற்கு அவ்வப்போது அவரவர் ரசனைக்கேற்ப பெயர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். மேகக் கூட்டங்களிடையே நட்சத்திரம் மறைவதை ஒட்டி போட்டிகளெல்லாம் கூட நடக்கும். காற்றின் திசை மாறும்போது நாம் கணித்த திசையில் செல்லாமல் மேகம் இடம் மாறிவிட்டால் தோற்றுப் போய்விடுவோம். 


நிலவில் பாட்டி வடை சுட்ட கதை காலம் காலமாக சொல்லப்பட்டது போலவே எங்களுக்கும் சொல்லப்பட்டது. அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே நிலவைப் பார்க்கும் போது, உண்மையாகவே ஒரு பாட்டி காலை நீட்டி உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியிருக்கிறது. பாட்டி வடை சுட்டது பற்றி ஆச்சி சுவாரஸ்யமாக பீலாவிட்டு அதையே தொடர்கதையாக நீட்டி சொல்லுவாங்க. தினசரி கதை சொல்லும் நேரம் நிலாவிலிருந்தே ஆரம்பிக்கும். அதன் தொடர்ச்சியாக ஏதோ ராஜா ராணி கதையெல்லாம் கூட ஓடும். 


சாப்பிடுவது,கதை சொல்வது, வானத்தை ரசிப்பது எல்லாமே அந்தத் தென்னந் தட்டியில்தான். சில நேரங்களில் சீட்டு விளையாடுவதும் அங்கேதான். அதற்கு வெளிச்சம் பத்தாது என்பதால் தீப்பந்தம் வைத்து விளையாடுவோம். பழைய டானிக் பாட்டில்களின் அலுமினிய மூடியில் ஓட்டைபோட்டு பழைய துணியைத் திரியாக்கி அதில் சொறுகி பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றினால் பந்தம் ரெடி. ஒரு பந்தம் வைத்தாலே முற்றம் முழுதும் வெளிச்சம் கிடைக்கும். 


நான் கல்லூரி செல்லும் வரை அந்தமாதிரி பந்தத்தில்தான் நிறைய படித்திருக்கிறேன். ஒரு முறை லயித்து வாசிச்சப்போ பந்தத்தின் அருகில் தலை குனிந்ததால் முன் தலையின் முடி கருகி பாரிதாபமாக அலைந்திருக்கிறேன். யாரோ பார்த்து தீயை அணைத்ததால் முகம் கருகாமல் தப்பினேன். 


வானத்தில் உலவும் மேகக்கூட்டங்களை அவரவர் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவகப்படுத்தி கதை பின்னுவதில் நாங்கள் சமர்த்தர்கள். கற்பனைத் திறனற்ற  அடாவடிகளுக்கு எங்கள் கற்பனையைக் கேலி செய்து வெறுப்பேற்றுவதும் ஒரு பொழுதுபோக்கு. இன்றும் கூட வானத்தில் மேகக் கூட்டங்களைப் பார்த்தால் வித விதமான உருவங்களைக் கற்பனை செய்து மகிழ்வது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. 


கதை சொல்லி ஓய்ந்து தூங்கும் நேரம் வரும்போது வீட்டிலுள்ள ட்ரான்சிஸ்டரிலிருந்து ஏதாவது சினிமா பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும். இசையும் நிலவும் கூட இனிமையான இரவுகளைத் தந்திருக்கிறது.


”வானம் எனக்கொரு போதிமரம்” என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. வானம் எங்களின் நாடக மேடை.  அதற்குள் எத்தனை காட்சிகள், கவிதைகள், கற்பனைகள். வீனஸும், ப்ளூட்டோவும், வான சாஸ்திரமும் விஞ்ஞானமும் எங்கள் மண்டைக்குள் புகுவதற்கு முன் வானம் எங்கள் விளையாட்டு மைதானம். 


வெண்ணிலா எங்கள் தோழி , கதாநாயகி.  அவள் நடையழகும், சுருங்கி விரியும் இடையழகும் எங்களுக்கு ஆச்சரியம். அமாவாசையன்று முழுதாக மறையும் போது கவலை கொள்ளும் எங்கள் கூட்டம். பிறை கண்டு பித்துப்பிடித்து மகிழும் மனங்கள். 


விடி வெள்ளியும், வானவில்லும் எங்கள் விளையாட்டுத் தோழர்கள். வானத்து நட்சத்திரங்கள் சினிமா நட்சத்திரங்களைப் போலவே எங்களை மகிழ்விக்கும் கலைஞர் கூட்டம். வடை சுட்ட பாட்டியும் வழி மாறும் மேகங்களும் எங்கள் உறவினர்கள். கிரகணமும் , வால் நட்சத்திரமும் , கார்கால மேகங்களும் எங்களைக் கடுப்பேத்தும் வில்லன்கள்.


வானத்தையும் நிலவையும்

 வேறுபடுத்தி பார்க்க முடியாது

நினைவலைகளையும்

நிலவையும்கூட

வேறுபடுத்தி பார்க்க முடியாது.