Wednesday, June 05, 2024

அலை அலை-3

 அலை அலை-3

“மதம்” பிடிக்காத பருவம்.
மலர் பிடிக்காத வயதே இல்லை; காதல் வயப்படாத காளைப் பருவமே அரிது. ஆனால் “மதம்” பிடிக்காத மானிடர்கள் அரிதாகிக் கொண்டே போவது நிகழ்காலம். மதம்னா என்ன என்று கேட்டு, அவற்றைப் புறம் தள்ளிவிட்டுத் துள்ளித் திரிந்த காலங்கள் பழங்கணக்கு பார்ப்பது போல்தான் தெரிகிறது. நாங்கள் இந்துக்கள், அவர்கள் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று பிரித்துப் பேசத் தெரிந்திராத பிள்ளைப் பருவம் கொண்ட அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்தான். பள்ளிப் பருவம் முடிக்கும் வரைகூட கிட்டத்தட்ட இந்த நிலைதான்.
பொட்டு வைப்பதும் , கோவிலுக்குப் போவதும் ஒரு சாரார்( இந்துக்கள்). பொட்டு வைக்காதவங்க வேதக்காரங்க (கிறிஸ்தவர்கள்) அல்லது பாய் வீட்டுக்காரங்க (முஸ்லீம்கள்), அவ்வளவுதான் எங்களுக்குத் தெரிந்த மத வேறுபாடு. பண்டிகைகளின்போது பலகாரங்கள் மாற்றி மாற்றி பறிமாறிக்கொள்ளப்படும். தீபாவளிப் பலகாரங்களின் சுவைக்கு ஆவலோடு காத்திருப்பதும், கிறிஸ்துமஸ் கேக்கிற்கு எதிர்பார்ப்போடு இருப்பதும், பாய்வீட்டு பிரியாணிக்கு பந்திபோட்டு காத்திருப்பதும் உள்ளூர் மக்களின் யதார்த்தமான பரிவர்த்தனைகள். அண்ணாச்சி என்று அழைத்து தோள்மேல் கைபோட்டுப் பேசும் இயல்பான உறவு முறைகள் அப்போது எல்லோருக்குள்ளும் இருந்தது.
இந்து மதத்தினரே பெரும்பான்மையாக இருந்த ஊர் ஆறுமுகநேரி. ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு அம்மன் கோவிலோ பிள்ளையார் கோவிலோ சிவன் கோவிலோ இருக்கும். ஆனாலும் அதன் ஊடாகவே சிலுவை தாங்கிய சர்ச்சும் தனித்துவத்துடன் இருக்கும். ஊரின் முக்கிய சந்திப்பான பள்ளிவாசல் மசூதியின் அடையாளமாக ஊரின் நடுநாயகமாக இருக்கும். மார்கழி பஜனையும் நோன்பும், லெந்து கால பூஜைகளும், ரம்ஜான் நோன்பும் அதனதன் போக்கில் ஆரவாரமின்றி ஆன்மீகத்துடன் நடக்கும். இன்றைய காலகட்டத்தில்கூட விநாயகர் சிலைகள் காயல்பட்டிணம் ஊர்வழியே ஊர்வலமாகச் சென்று அங்குள்ள கடலில்தான் கரைக்கப்படுகின்றன.
“கண்ணாத்தா எங்க மாரியாத்தா” போன்ற பாடல்கள் லவுட் ஸ்பீக்கரில் பாடும்போது கேட்டு எப்படி மனப்பாடம் ஆகியிருக்குமோ அது போலவே “தந்தானைத் துதிப்போமே ” பாடலும் மனப்பாடம் ஆகியிருக்கும். மசூதியிலிருந்து ஒலிக்கும் அல்லாஹு அக்பரும் மனதை வருடிச் செல்லும். நாங்க உருண்டு புரண்ட மண்ணுக்கே தரம் பிரிக்கத்தெரியாது. திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய பட்டிணம் மேரி மாதாவும், காயல்பட்டிணம் மசூதிகளும் இரண்டு மூன்று கி.மீ.கள் இடைவெளியில் அடுத்தடுத்து இருக்கும். மூன்று ஊர்களுமே கடற்கரைக் கிராமங்கள். திருச்செந்தூர் கோபுரம்,மாதா கோவிலின் கோபுரம், மசூதியின் கோபுரம் எல்லாமே கடற்கரையின் பின்னணியில் கம்பீரமாக எழுந்து நின்று கண்ணைக் கவருமே தவிர ஒருநாளும் கலவரத்திற்கு வித்திட்டதில்லை. மூன்று ஊரின் குழந்தைகளும் கலந்து பயின்ற பள்ளிகளிலும் எந்த பிரிவினைகளும் போதிக்கப்படவில்லை.
மத நல்லிணக்கத்துக்கு சாட்சியாக உருவாக்கப்பட்டதுதான் நாங்கள் படித்த பள்ளி- “காயல்பட்டிணம் ஆறுமுகநேரி உயர்நிலைப் பள்ளி”. இரண்டு ஊர் குழந்தைகளும் சமமாகப் படித்து முன்னேறவேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய எண்ணற்ற மாணவர்கள் இன்று சமுதாயத்தில் மிகப்பெரிய பதவிகளை வகித்து ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்பது எல்லோருக்குள்ளும் இயல்பாகவே இருந்தது. அவையெல்லாம் தொலைந்துபோய் மதம் என்ற மதம் எல்லோரையும் எப்போது பிடித்தது என்பதே புரியவில்லை.
இப்ராஹிம் சார் , குழைக்காதன் சார், அந்தோணிமுத்து சார் என்ற பெயர்களே எங்கள் பள்ளியின் பெருமையைச் சொல்லும். எல்லாம் ஆண் வாத்தியார் பெயர்களே இருக்குதேன்னு தோணலாம். அலெக்ஸ் டீச்சர், ஏஞ்சலா டீச்சர், ஜெய ஜானகி டீச்சர் என்று ஏகப்பட்ட லிஸ்ட் இருக்குது. இப்ராஹிம் சார் கிட்டே கணக்கு கற்றுக் கொள்வது லட்டு சாப்பிடுவது மாதிரி. கணக்கை கல்கண்டு சாப்பிடுவதுபோல் இனிப்பாக்கியவர். நாங்களெல்லாம் அவர்மீது மாறா அன்பு கொண்டவர்கள், அவரோட அபிமான மாணவர்கள். கணக்கில் வீக் ஆக இருக்கும் மாணவர்களுக்கு எங்களை வைத்தே சாயங்காலம் சிறப்பு பயிற்சி அளிப்பார். ஆனால் தப்பு போட்டால் முட்டுக்குக் கீழே உரிச்சு எடுத்திடுவார். அந்த கால கட்டத்தில் ஆசிரியரிடம் அடி வாங்குவதும் சாதாரண விஷயம். இப்போ மாதிரி பெற்றோர்கள் போர்க்கொடி தூக்குவது எல்லாம் கிடையாது. ஒரு மாணவனைத் தண்டிக்க நேர்ந்தால் பெற்றோர்கள் அடித்த ஆசிரியரின் மதத்தை முன்னிறுத்தி சண்டை போடவும் வருவதில்லை.
குழைக்காதன் சாரின் மாணவியாக இருந்ததால்தான் இன்றுவரை பிழையில்லாமல் தமிழில் எழுதுகிறேன். தமிழை சுவாசிக்க வைத்தவர். ”எங்கே அவள்’ என்ற சினிமா பாடலை “எங்கே அவல்” என்று சாப்பாட்டு பட்ஷணமாக்கிய தமிழ்ப் ‘புலவர்’களுக்கும் சலிப்பின்றி தமிழை போதிப்பதில் சாருக்கு இணையே கிடையாது. தப்பு போடும்போது குனிய வைத்து அடிக்க கை ஓங்குவதைப் பார்த்தால் முதுகில் டின் கட்டிவிடுவது போல் தோன்றும். ஆனால் கை கீழே இறங்கும்போது தடவிக் கொடுப்பதுபோல் போய்விடுவார். எங்களுக்கெல்லாம் பிரியமான “பெரியப்பா”.
ஆங்கிலத்துக்கு அந்தோணிமுத்து சார்தான். அவரது உச்சரிப்பும் வகுப்பெடுக்கும் நேர்த்தியும் கிராமப்புற மாணவர்களைக் கூட ஆங்கிலம் இலகுவாக படிக்கும்படி செய்துவிடும். இதே வகையில் தான் அனைத்து ஆசிரியர்களும் எங்களை வழி நடத்தினார்கள், எங்களுக்கு சம தர்மத்தை மறைமுகமாகப் போதித்தார்கள், நாங்களும் சமுதாய உணர்வுமிக்க மாணவர்களாக வெளி வந்தோம். இன்றைய தலைமுறையின் உணர்வுகளும் வாழ்வியலும் மதங்களை முன்னிறுத்தியே செதுக்கப்படுவதுபோன்ற தோற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. ஆன்மீகமும் அரசியலும் கைகோர்த்துக்கொண்டு அவர்களின் தலைகளைக் கொட்டிக் கொண்டே இருக்கிறது.
நெற்றி நிறைய பூசப்படும் விபூதியும், கழுத்தில் அணியப்படும் சிலுவையும், தலையை மறைத்த முக்காடுகளும் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. அவரவர் வழிபாட்டின் அடையாளங்களாக இருந்தவை இன்று பிரிவினையை வலுப்படுத்தும் ஆயுதங்களாக மாற்றப்பட்டுக் கொண்டு இருப்பது காலத்தின் கோலம்.
நாற்பது வருடங்களுக்கு முன்பு “அலைகள் ஓய்வதில்லை” படம் பார்த்துவிட்டு வந்தபோது என்ன உணர்வு இருந்ததோ அதே நிலைமைதான் இன்னும் இருக்கிறது என்பது அயர்ச்சியாக இருக்கிறது. அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்குள் மதம் என்ற வார்த்தையே இருக்காது கலப்புத் திருமணங்கள் பரவலாக நடந்து பெரிய சமுதாயப் புரட்சியே நடக்கும் என்று நினைத்தோம். ஆனால் முன்பிருந்ததைவிட மதத்தின் பேரால் வன்முறைகள்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கான மதம் மக்களை மதம் கொள்ள வைக்காமல் இருக்கட்டும்.
All reactions:
Sivasubbu Kannan Meenakshisundaram, Baskara Pandian and 48 others
21 comments
4 shares
Like
Comment
Share

0 Comments:

Post a Comment

<< Home