Friday, August 18, 2023

அலை-96

 அலை-96

“APC மஹாலக்ஷ்மி கல்லூரி ”

பள்ளிப் பருவத்துக்கும் மருத்துவக் கல்லூரி வாழ்க்கைக்கும் நடுவில் கிடைத்த ஒருவருட இடைவெளிப் பருவம் மாப்பிள்ளையூரணியில்தான், APC மஹாலக்க்ஷ்மி கல்லூரியில்தான். 1976 இல் PUC படிக்க தூத்துக்குடி போன அந்த சில நாட்கள். ஐநூற்றுமுத்துவின் மகள் ஐநூறு மார்க்குகளுக்கு அதிகமாக வாங்கியபோதும் பொருளாதார நிலைமையால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த மஹாலக்ஷ்மி கல்லூரியில்தான் சேர வேண்டியிருந்தது. சாரா டக்கரும் செயிண்ட் மேரி கல்லூரியும் பெருமை வாய்ந்த கல்லூரிகளாகவும் இருகரம் கூப்பி வரவேற்கக் காத்திருந்த போதும் அங்கெல்லாம் பீஸ் கட்டுவது கடினம் என்பதால் இங்கு சேர்ந்தேன். APC வீரபாகு பிள்ளை அவர்கள் அப்பாவின் நண்பர் என்பதால் எனக்குக் கல்லூரிக் கட்டணங்கள் ஏதும் கிடையாது. விடுதிக்கு மட்டும்தான் கட்ட வேண்டும். நான் அந்தக் கல்லூரியின் மூன்றாவது batch.


APCM கல்லூரியின் பொன்விழா இந்த வருடம் கொண்டாடப்படுவதற்கான அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கிறது. அந்தக் கல்லூரியில் படித்தது 47 வருடங்களுக்கு முன்பு என்பதை நம்ப முடியவில்லை. ஏதோ ரெண்டுமூணு வருஷம்தான் ஆன மாதிரி இருக்குது. கல்லூரியின் முன்னாள் மாணவி என்று நினைக்கும்போதே அங்கு படிப்பு சொல்லிக் கொடுத்த ஒருசில ஆசிரியைகளும் நினைவுக்கு வருகிறார்கள். அந்தக் காலத்திலெல்லாம் Pet students, favourite teachers என்பதெல்லாம் ஒரு வழக்கமாகவே இருக்கும். பெளதிகம் சொல்லிக்கொடுத்த மெடில்டா மிஸ் நிறைய பேருக்கு பிடித்த ஆசிரியை. சக மாணவிகளின் பரீட்சைப் பேப்பரை என்னைத் திருத்தச் சொல்லும் அளவுக்கு மிஸ்ஸுக்கு என்னைப் பிடிக்கும். உணவு இடைவேளைகளில்கூட பெளதிக ஆய்வுக் கூடத்தில்தான் இருப்பேன். ஆனாலும் பெளதிகம் அவ்வளவு இஷ்டம் கிடையாது.


உயிரியல்தான் அப்பவே ரொம்ப பிடிச்ச பாடம். அதிலும் தாவரவியலைவிட விலங்கியல்தான் ரொம்ப பிடிக்கும். தவளை, கரப்பான்பூச்சி கூறாக்குதல் (dissection) அப்போவே எங்களுக்கு உண்டு. ரெண்டு ஜீவராசிகளைப் பார்த்தாலும் பயமும் அருவெறுப்பும் உண்டு என்றாலும் கூறாக்கல் செய்து உள்ளுறுப்புகளைப் பற்றி படிப்பது மிகவும் பிடித்திருந்தது. தவளையாவது கொஞ்சம் பெரியதாக இருக்கும். போர்டில் குண்டூசிகளைக் குத்தி நிலைப்படுத்திவிடலாம். கரப்பான்பூச்சி ரொம்ப மெல்லிசாக இருக்கும். நிறைய நேரங்களில் பிடித்து வைப்பதற்குள்ளாகவே நசுங்கிப் போய்விடும். கூறாக்குதல் முடிந்த பிறகு ஒருவித நாற்றம் எத்தனை தரம் சோப்புப் போட்டுக் கழுவினாலும் கையை விட்டுப் போகாது. அன்னைக்கு அருவருப்புப் படாமல் சாப்பிடுவதுகூட கஷ்டம்தான்.


வயது முதிர்ந்த ஆசிரியைகள் கொஞ்சம் கடுகடுவென்று இருப்பார்கள். திருமணமாகாத சில இளம் ஆசிரியைகள் எங்களுடன் இலகுவாகக் கூட்டு சேர்ந்துகொள்வார்கள். கெமிஸ்ட்ரியில் ரத்தினமணி மிஸ், ஆங்கிலத்தில் சூர்யா மிஸ் எல்லாம் அந்த ரகம். அதிலும் சூர்யா மிஸ்ஸுக்கு அந்த சமயத்தில்தான் திருமணம் நடைபெற இருந்தது. கனவுலகில் சஞ்சரித்தபடி அவங்க வராண்டாவில் நடைபோடுவதைத் திருட்டுத்தனமாகப் பார்த்து கேலி செய்வது எங்களுக்குப் பொழுதுபோக்கு. தமிழில் இளம்பிறை மணிமாறன் மிஸ் ரொம்ப அழகாகப் பேசுவாங்க. பட்டிமன்றங்களில் எல்லாம் பேசக்கூடிய சிறந்த பேச்சாளர் என்றும் சொல்லுவாங்க. 


நடைபெறப்போகும் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களைச் சந்திக்கும் ஆவல் இருந்தாலும் விழா நடைபெறும் நாளில் பிற அலுவல் இருப்பதால் என்னால் போக இயலாது. கல்லூரியை விட்டு வந்தபின்பு மறுபடி கல்லூரிக்குள் போகவே இல்லை. விடுதிக் கட்டிடம் அப்படியே இருக்கிறதா என்று பார்க்க மிகுந்த ஆவல். தரைத்தளம் மட்டும் கட்டப்பட்டு சுற்றுச்சுவர் இல்லாத மொட்டை மாடிகளுடன் அத்துவானக் காட்டில் இருந்தது. நாங்க படித்தபோது பயங்கர தண்ணீர்ப் பஞ்சம் வேறு.. கழிவறைகளுக்கு மட்டும் சேறு கலந்த தண்ணீர் நிரப்புவார்கள். குளிக்க துணி துவைக்க அருகிலுள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றுக்குப் போக வேண்டும். அதுவும் எட்டையபுரம் மெயின் சாலையைக் கடந்து எதிர்புறம் போக வேண்டும்.


காலையில் எழுந்ததும் ப்ளாஸ்டிக் வாளிகளில் துணிமணிகளை நிரப்பிக் கொண்டு எறும்பு ஊர்வதுபோல் ஊர்வலமாகக் கிணற்றடிக்குப் போக வேண்டும். மொத்த விடுதிக் கூட்டமும் அங்கேதான் இருக்கும் என்பதால் அங்கேயும் தள்ளுமுள்ளுதான். அவசர காக்காக் குளியல் குளித்து அழுக்குத் துணிகளைத் துவைத்து எடுத்துக் கிளம்பினால்தான் மெஸ்ஸுக்கு நேரத்தில் போக முடியும். பெரிய ஆஸ்பெஸ்டாஸ் அரங்கத்தில் அன்னதானத்துக்கு  உட்கார வைத்த மாதிரி எல்லோரும் வரிசையாக உட்காரணும். தினமும் இட்லியும் சாம்பாரும்தான். அதுவும் அளவுதான். வேண்டுமென்றால் மறுபடியும் கேட்கலாம், ஆனால் அப்படிக் கேட்பவர்கள் மதிய உணவு இடைவேளை வரை காத்திருக்கும்படி ஆகிவிடும். மூன்றுவேளை உணவுமே ரொம்ப ரொம்ப சுமாராகத்தான் இருக்கும்.


சாப்பிடாமல் வந்தவர்கள் குறைவாகச் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருகிலுள்ள கேண்டீனுக்குத்தான் படையெடுப்பார்கள். அங்கே அமுத சுரபி மாதிரி கல்கோணா எனப்படும் பதார்த்தம் இருக்கும். வாங்கி வாயில் போட்டால் என்ன முயற்சி செய்தாலும் கரைய வைக்க முடியாது. மணிக்கணக்காக மென்று கொண்டிருக்கலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் பார்வையாளர் தினத்துக்கு வரும் உறவினர்கள் சாப்பாடுதான் எடுத்து வருவார்கள். நான் சனிக்கிழமையானால் வீட்டுக்கு ஓடிவிடுவேன். அடுத்த வாரத்துக்கும் சேர்த்து நல்லா சாப்பிட்டுவிட்டு வருவேன். எப்போவாவது ஊருக்குப் போகாட்டி யாராவது பார்க்க வருவாங்க. எங்க அம்மா ஒரே ஒருதரம் என்னைப் பார்க்க வந்துருக்காங்க. அப்படியே தூத்துக்குடி கூட்டிட்டுப் போய் மாட்டினி ஷோ “ஷோலே” படம் பார்த்துட்டு ஹோட்டலில் சாப்பிட வைச்சுட்டு விடுதியில் விட்டார்கள். 


புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரி என்பதால் புதுப்புது கட்டிடங்கள் கட்ட அஸ்திவாரம் போடப்பட்ட கூரையில்லாத அறைகள் நிறைய உண்டு. ஓய்வு நேரங்களில் ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து பாக்கெட் ரேடியோவில் சினிமாப் பாடல்கள் கேட்பதுதான் ஒரே பொழுதுபோக்கு. அன்னக்கிளி படம் வெளிவந்து இளையராஜா பற்றி பேச ஆரம்பித்த நாட்கள். ’மச்சானைப் பார்த்திங்களா’ பாடல் ரொம்ப பிரசித்தம். புதுப்படப் பாடல்கள்னு நிகழ்ச்சி வரும்போது அதில் கேட்ட பாடல்களுக்குண்டான படங்களை அடுத்த லீவில் திருநெல்வேலிக்குப் போய் பார்த்துவிடுவேன். புதுப்படங்கள் எல்லாம் திருநெல்வேலியில்தான் ரிலீஸ் ஆகும். 


இன்னொரு கூட்டம் மொட்டை மாடியில் உட்கார்ந்து பஜனைப் பாடல்கள் பாடுவாங்க. இரவு சாப்பாடு வேளை வரைக்கும் அது தொடரும். எனக்கு போரடிக்கும்போதெல்லாம் அங்கே போய் உட்கார்ந்து நானும் பாடிக் கொண்டிருப்பேன். அப்போ பாடிய பாடல்கள் இன்னும்கூட மனப்பாடமாக நினைவிருக்கிறது என்றால் எத்தனை தரம் கேட்டு பாடியிருப்பேன். புத்தகங்கள் மட்டும்தான் நிரந்தரத் துணை. நிறைய நாவல்கள் அந்த வருஷத்தில் படித்தேன். காலேஜ் பாடம் ஒருநாள்கூட அறையில் படித்ததில்லை. வகுப்பில் கவனிப்பதோடு சரி. ஒரே அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே விளக்கில் படிக்கும்போது எனக்கெல்லாம் படிக்கவே வராது. ஏதாவது வகுப்புத் தேர்வு இருந்தால்மட்டும்  காலையிலேயே எழுந்து வெராண்டாவில் உட்கார்ந்து படிப்பேன்.


வருடாந்திரத் தேர்வு முடிந்து மதிப்பெண்கள் வந்தபோது நான் தான் வகுப்பில் முதலாவதாக வந்திருந்தேன். மருத்துவக் கல்லூரியில் சேர மாற்றுச் சான்றிதழ் (T.C.) கேட்டபோது தர மறுத்துவிட்டார்கள். நல்ல மதிப்பெண் பெற்றவர்களெல்லாம் கல்லூரியிலிருந்து போய்விட்டால் கல்லூரியின் மதிப்பு குறைந்துவிடும். எனவே நான் அங்கேயே மேல்படிப்பு படிக்க வேண்டும். எல்லா சலுகைகளும் உண்டு என பேரம் வேறு. பிறகு அப்பா தாளாளர் அவர்களிடம் முறையிட்ட பிறகுதான் சான்றிதழ் கிடைத்தது.


பொன்விழா நிகழ்ச்சியில் மலர் வெளியீடு ஏதாவது உண்டா, PUC மட்டும் படித்தவர்களை முன்னாள் மாணவியரில் சேர்ப்பார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் எனது வெற்றி படிக்கட்டில் இரண்டாம் படியான APC Mahalaxmi கல்லூரியின் முன்னாள் மாணவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home