அலை-90
அலை-90
“கேள்விகள் ஆயிரம்”
மருத்துவப் படிப்பின் முக்கியமான பகுதி நோயாளிகளை பரிசோதனை செய்து வியாதியையும் அதற்குரிய மருத்துவ நிவாரணங்களையும் அலசுவது. அதை இரண்டு பகுதியாக பிரித்திருப்பார்கள். காலை ஏழரை மணிமுதல் புறநோயாளிகள் பிரிவும் 11 மணிமுதல் உள் நோயாளிகள் பிரிவும் மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். ஒவ்வொரு துறையிலும் நான்கு பிரிவுகள் உண்டு. ஒன்று முதல் நான்கு யூனிட்டுகள். அதிலும் வெகு நாட்கள் பதவியிலிருக்கும் துறைத் தலைவரின் பெயரிலேயே யூனிட்டுகள் இருக்கும். முதல் யூனிட் என்றால் அறுவை சிகிச்சையில் MSS unit, பொது மருத்துவத்தில் AS unit என்றிருக்கும். நான் நாலு வருஷமும் மூணாவது யூனிட் ஆன RH Unitதான்.மெடிசினில் ஐந்தாவது வருடம் மட்டும் GVS Unit, மீதி எல்லாமே மூணாவது யூனிட்தான்.
எல்லா பிரிவிலும் மூன்று வருட மாணவர்களுடன் ஹவுஸ் சர்ஜன்களும் சேர்ந்து நான்கு வருட மாணவர்களின் சங்கமமாக இருக்கும். அதன்படி நமக்கு முன்னாடி உள்ள மூணுவருஷம், பின்னாடி உள்ள மூணுவருஷம் என ஏழு வருட மாணவர்கள் அனைவரையும் ஓரளவு தெரிந்து கொள்ளலாம். திருநெல்வேலி மருத்துவமனை மூன்றே தளங்கள், அதில் ஏழெட்டு வராண்டாக்கள் என மிகச் சிறிய அளவில்தான் அப்போது இருந்தது. அதனால் எல்லா யூனிட் மாணவர்களும் அங்கும் இங்குமாகத்தான் சுற்றிக் கொண்டிருப்போம். ஒரு யூனிட்டிலிருந்து எட்டிப் பார்த்தால் அடுத்த யூனிட் அட்டகாசங்கள் தெரியும்.
புறநோயாளிகள் பிரிவில் சில துறைத் தலைவர்களின் வகுப்பு அட்டகாசமாக இருக்கும். அப்போது நிற்கக்கூட இடம் கிடைக்காது. சில நாட்கள் உப்புச் சப்பின்றி இருக்கும்போது மெலிந்த ஜனத்தொகையுடன் காட்சி தரும். அந்த மாதிரி நாட்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு காஃபி கடைகளை நோக்கி ஒருகூட்டம் நகர்ந்துவிடும். நிரந்தரப் புத்தகப் புழுக்களான அறிவுஜீவிகள் எல்லா வருடமும் ரெண்டுமூணு பேராவது இருப்பாங்க. அவங்களை வைச்சு தொய்வில்லாமல் வகுப்பு நடக்கும். தியரி படிக்கிறோமோ இல்லையோ புறநோயாளிகள் பகுதியில் எண்ணற்ற வியாதிகளின் தன்மைகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். OP க்கு OP அடிச்சா நஷ்டம் நமக்குத்தான்.
வியாதிகளின் வகைகள் எத்தனையோ இருக்கும். ஆனால் அதை வெளிப்படுத்தும் நோயாளிகளின் சொற்களும் அவர்கள் சொல்லும் கதைகளும் அதைவிட எத்தனையோ மடங்கு வித்தியாசம் விதியாசமாக இருக்கும். History Taking என்று சொல்லப்படும் முதல்கட்ட விசாரணைதான் நோயின் தன்மைக்கு நம்மை இழுத்துச் செல்லும் வழிகாட்டி. ஆனால் அது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. சாதாரண சளி பிடித்த விஷயத்தைச் சொல்லுவதற்கு குற்றாலத்துக்கு டூர் போன கதையிலிருந்து விஷயம் ஆரம்பிக்கும். தும்மல் போட ஆரம்பித்த கதை வருவதற்குள் கேள்வி கேட்பவர் தூங்கிவிடாமல் இருக்கணும். சரியான கேள்விகளைப் போட்டு வியாதிக்குரிய விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள அடிப்படைப் பயிற்சி அங்கிருந்துதான் ஆரம்பமாகும்.
நிறைய நேரங்களில் அறிவார்த்தமாக கேள்வி கேட்பதைவிட இலகுவான கேள்விகள்தான் சரியான பதிலைத் தரும். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குக்கும் ஏகப்பட்ட கனெக்க்ஷன் இருக்கும். சர்க்கரை நோயால் கால்விரல் அழுகிவிடும் நிலையில் இருக்கும். ஆனால் தலையில் ஏதோ ஒரு இடத்தில் அரிப்பு இருப்பதைத்தான் முதலில் சொல்லுவார்கள். அதன் தன்மை அறிந்து வேறு ஏதாவது புண் இருக்கிறதா என்று கேட்கும்போதுதான் புரையோடிப்போன விரல்களைக் காட்டுவார்கள். சரியான கேள்விகள் கேட்கப்படாவிட்டால் நிறைய வியாதிகள் கண்டுபிடிக்கப்படாமல் போய்விடும். அதனால்தான் சரளமாகப் பேசுபவர்கள் இலகுவாக டயக்னோஸிஸ் பண்ணிவிடுவார்கள்.
நோயோடு அவஸ்தைப் படுபவர்களுடன் மன்றாடிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது சில நகைச்சுவைக் காட்சிகளும் நடக்கும். அதிலும் மகப்பேறு மருத்துவப் பகுதியில் தான் அதிகக் காமெடி நடக்கும். தனது கணவருடன் சேர்ந்திருக்கும் நேரங்களில் வயிற்று வலி வருவதை ஒரு பெண் ஜாடை மாடையாக “எனது கணவருடன் பேசும்போது வயிற்று வலி வருகிறது டாக்டர்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்திருந்த மருத்துவ மாணவி பெருநகரங்களில் வசித்தவர் . வட்டார வழக்குகள் அவ்வளவாகத் தெரியாது. ரொம்ப சீரியஸாக “இப்போ என்கூட பேசிக்கொண்டு இருக்கீங்களே, வயிற்று வலி வருகிறதா” என்று கேட்க அந்தப் பெண் பேந்தப் பேந்த விழித்ததும் அருகிலிருந்தவர்கள் வாய் மூடிச் சிரித்ததும் செம காமெடி.
சில சமயங்களில் நோயாளிகளால் நமக்கே மாரடைப்பு வந்துவிடவும் வாய்ப்புகள் உண்டு. விஷமுறிவு பற்றி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. கடிவாய் தனமை குறித்து நோயாளியின் கால்பகுதியைக் காட்டி வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் பேராசிரியர். இயல்பாக நோயாளியைப் பார்த்து “ என்ன பாம்பு கடித்தது” என்று கேட்கவும் அந்த நோயாளி டிரவுசர் பாக்கெட்டிலிருந்து நிஜ பாம்பையே எடுத்துக் காட்ட ரெண்டு மூணுபேருக்கு மயக்கம் வந்தது உச்ச கட்டம். இதே மாதிரி அடிக்கடி பாம்பு கொண்டுவரும் கணவான்களைப் பார்த்துப் பார்த்து அப்புறம் பழகிப் போய்விடும்.
கண், காதுமூக்குதொண்டை, குழந்தைகள்நலம், தோல், டிபி , தொற்றுநோய் என ஏகப்பட்ட துணைப் பிரிவுகளுக்கு புறநோயாளிகள் பகுதிக்கு செல்லுவோம். அது honey-moon posting என்று அழைக்கப்படும். அதிலேயெல்லாம் தனித்தனியே பரீட்சைகள் கிடையாது.கண்ணுக்கு மட்டும் உண்டு.அதனால் வேதாந்தம் சாரிடம் கொஞ்சம் பயம் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் கற்றதும் கேட்டதும் அவ்வப்போது கட் அடிப்பதும் நடந்தாலும் போஸ்ட்டிங் முடிந்ததும் ஒரு பார்ட்டி நடத்தி பிரிவு உபசாரம் செய்து கொள்வது உண்டு. புறநோயாளிப் பிரிவின் பார்ட்டிகள் அருகிலுள்ள ஆஸ்தான ஹோட்டலான சீத்தாலட்சுமியில்தான் நடக்கும். தோல் மருத்துவப்பிரிவு எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். மஹாகிருஷ்ணன் சார் மாதிரி மாணவர்களிடம் அன்பாகப் பழகும் ஆசிரியர்களால் அது சாத்தியமானது.
ஆண்கள் எல்லோரும் சைக்கிளில் வந்துவிடுவதால் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள். நாங்கதான் பெண்கள் விடுதியிலிருந்து லொங்கு லொங்குன்னு நடந்து வரணும். பாதிநாள் சாப்பிடவே நேரம் இருக்காது. இடைவேளையில் ஹோட்டல் சீத்தாலட்சுமியின் சிற்றுண்டிகள்தான் துணை. மொத்த மாணவ கும்பலும் அங்கேதான் இருக்கும். காலையில் கொஞ்சம் லேட்டாப் போனாலும் யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் Dr. DKP OP என்றால் நேரம் தவறாமல் போயிடணும், இல்லாட்டி அன்னைக்கு நம்ம பாடு அதோகதிதான். ஆனால் அவரது வகுப்புகள் ரொம்ப நல்லாயிருக்கும்.
இருதய நோய், நுரையீரல் பாதிப்புகள், பக்கவாதம் போன்றவைகள் தான் படிப்பதற்கென உள்ள முக்கிய வியாதிகள் இடத்தில் இருக்கும். அது சம்பந்தமான கேள்விகள் எல்லோருக்கும் தளபாடமாக இருக்கும். என்ன தொந்தரவுடன் வந்தால் என்ன கேள்வியெல்லாம் கேட்கலாம் என உருப்போட்டு வைத்திருப்போம். ஒரு காய்ச்சலோ வாந்தி பேதியோ தீக்காயமோ வந்தால் ஒன்றிரண்டு கேள்விகளைத் தாண்டி குறுக்குக் கேள்விகள் கேட்கத் தோன்றாது. ஆனால் தினசரி பார்க்கும் புறநோயாளிகளில் இதுபோன்ற நோயாளிகள்தான் அதிகம் வருவார்கள் என்று அதிலும் எங்களைச் சிறந்த மருத்துவர்களாக பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள் அநேகம்பேர் உண்டு.
நாங்க நோயாளிகளிடம் கேள்வி கேட்பது போக வாத்தியார்களிடம் கேள்வி கேட்டே அவர்களை ஒரு வழியாக்கிவிடும் ஜாம்பவான்களும் உண்டு. புரிதலுக்காக சிலரும் , பிகர் முன்னாடி பந்தாகாட்ட சிலரும் , உள்ளேன் ஐயா என்பதைக் கேள்வி கேட்பதன் மூலம் நிலை நாட்ட சிலரும் கேட்கும் கேள்விகள் ஆயிரத்தில் முடியாது.
கேள்விகள் தொடரும்.
0 Comments:
Post a Comment
<< Home