Friday, May 19, 2023

அலை-84

 அலை-84

“பாட்டி சொன்ன கதை”
கதை சொல்வதும் கதை கேட்பதும் “கதை விடுவதும்” எப்போதும் நம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் எப்போதோ ஒன்றிரண்டு கதைகள் நம்மை வசப்படுத்திவிடும். அப்படித்தான் எங்க அப்பா அம்மாவின் பரம்பரை பற்றி பேசப்பட்ட கதைகள் எங்களையும் அவ்வப்போது ஆட்கொண்டுவிடும்.
சின்ன வயசாக இருந்தபோது எங்க ஆச்சியைக் கேலி பண்ண “சோறு தின்னு விக்கிச் செத்த சுப்பையா பிள்ளை பொண்டாட்டிதானே நீ” என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுக்கும் அண்ணன் அக்காக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த ஆச்சியோட மூலமும் உறவுகளும் பற்றி அறிந்துகொள்ள முனைப்பெடுக்காத வயது அப்போது. ஆச்சியோட பெயர் தாணு அம்மாள்( எனக்கு ஆச்சி பெயர்தான்) என்பதால் சுசீந்திரம் பூர்விகம் என்பது தெரியும். எங்க ஆச்சிக்கு எங்க அம்மாவையும் சேர்த்து பத்து பிள்ளைகள். அதில் ஒரு தாய் மாமா குடும்பம் கேரளாவில்தான் ரொம்ப காலம் இருந்தார்கள். ஆச்சி கல்யாணம் ஆகி கொம்பன்குளம்(சாத்தான் குளம் அருகில்) வந்ததிலிருந்துதான் பாதைகள் மாறிவிட்டன.
தாத்தா இறந்த பிறகு ஆச்சி ஆறுமுகநேரியில் எங்க அம்மாவுடனேயே தங்கிவிட்டதால் கொம்பன்குளத்திற்கு எப்போதாவதுதான் போவோம். ரொம்ப சின்ன வயசில் ஆச்சியுடன் நடந்தே சென்ற ஞாபங்கள் De javu வாக நினைவில் இருக்கிறது. சாத்தான்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி மணிக்கணக்காக வறக் காட்டில் நடந்திருக்கிறோம். காட்டு வழியாகச் செல்லும் போது சொல்லப்படும் ஏகப்பட்ட சாமி vs பேய்க்கதைகள் அடிக்கடி எங்களைத் தூக்கத்தில் அலற விட்டதும் உண்டு. எங்க ஆச்சிக்கு பில்ட் அப் பண்ணி கதை சொல்வதில் ரொம்ப இஷ்டம். காதில் ஆடும் பாம்படமும் பல் இல்லாத பொக்கைவாயும் ரவிக்கை அணியாத வெள்ளைப் புடவையும் இன்னும் மனக்கண்ணில் பளிச்சென்று பதிந்திருக்கிறது.
அப்பாவின் பூர்வீகம் நாங்குநேரி அருகிலுள்ள விஜயநாராயணம். அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள் இறந்து போய்விட்டதால் குலதெய்வம் கோவிலில் நேர்ந்துகொண்டு அப்பாவுக்கு ஐநூற்று முத்து என்று பெயர் வைத்ததாக பாட்டி சொல்லிய கதைகளில் உலா வந்து கொண்டிருந்தது. ஆறுமுகநேரியில் உப்புத் தொழிலாளர் சங்கத்தில் கணக்கெழுதும் வேலைக்காக குடும்பமே இடம் பெயர்ந்து வந்துவிட்டதால் சிறு வயதில் விஜய நாராயணம் செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை. அப்பா சிங்கம் மாதிரி சிங்கிள் பையனாகப் போய்விட்டதால் வேறு தொடர்புகளும் ஏதும் இல்லை.
சமீப காலமாக குலதெய்வம் கோவில்களுக்குச் செல்லும் பேஷன் அதிகரித்திருப்பதின் காரணமாக அடுத்த தலைமுறை பசங்க இணையத்தில் பார்த்து அப்பா பெயருள்ள கோவிலுக்குப் போய்ப் படமெடுத்து status போட்டிருந்தார்கள். முத்துராமன், திலீப் குடும்பம் அடிக்கடி போய் வந்து கொண்டு இருந்தார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் ஆறுமுகநேரிக்குக் குடும்ப நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது நாமளும் விஜயநாராயணம், கொம்பன் குளம் போனால் என்ன என்று தோன்றியது. சகோதரி ஆசைப்பட்டால் உடனே நிறைவேற்றித்தரக்கூடிய நயினார் அண்ணனும் தம்பி நாராயணனும் உடனே ஓ.கே. சொல்லிவிட ரத சாரதியாக மருமகன் முத்துராமன் கார் ஓட்ட ரெடியாகிவிட்டான்.
அக்க்ஷயாவின் சடங்கு முடிந்து உளுந்தம் பருப்பு சாதம் சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டுமென்று சரசக்கா அன்புக் கட்டளையிட்டதால் எல்லாவற்றையும் பார்சல் சர்வீஸாக எடுத்துக் கொண்டோம். கொசுறாக இரண்டு பாட்டில்களில் நீர்மோர். திருச்செந்தூர் வழியாக சாத்தான்குளம் செல்வது நல்ல பாதை என்று சொன்னார்கள். அது பரமன்குறிச்சி வழியாக செல்லும் என்று தெரியாது. நண்பர் மரு.தம்பிராஜ் பீட்டர் மருத்துவமனை முன்னாடியேதான் போனோம். ஆனாலும் முன்னறிவிப்பு இன்றி நுழைந்து நோயாளிகளைக் கடுப்பேத்த வேண்டாம் என்று சத்தம் போடாமல் கடந்து போய்விட்டோம். வழி நெடுக ஏராளமாக முருங்கை மரம் பயிரிட்டிருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தோம். வெளி ஊர்களுக்கு லாரியில் லோடுகள் செல்வதாக மருமகன் சொன்னான்.
முதலில் கொம்பன்குளத்தில் அம்மா வீட்டைப் பார்க்கப் போனோம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கால்நடையாக வந்த இடங்களைத் தோராயமாக கணக்கிட்டு பொருத்திப் பார்த்துக் கொண்டோம். இவ்ளோ தூரம் எப்படி நடந்தே வந்தோம் என்று மலைப்பாக இருந்தது.மிகப் பெரிய மாற்றங்கள் இன்றி எல்லாமே வறக் காடாகவே இருந்தது. ஊர் மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது. சிதிலமடைந்த வீடுகள் ஆங்காங்கே இருந்தன.ஆனாலும் எங்க அம்மா வீடு எதுவென கண்டுபிடிக்க முடியலை. சிறு வயது ஞாபகமாக இருந்த தோட்டமும் கிணறும் சிதிலமடைந்திருக்கலாம். விசாரிக்கலாம் என்றால் தடி ஊன்றும் வயதில் கிழடுகள் எதுவும் கண்ணில் படவில்லை.
மாமா பெயரில் இருந்த கேத்திரபால சாமி கோவிலும் சிவன் கோவிலும் அப்படியே இருந்தன போலும். நேரமின்மையால் கோவிலுக்குள் செல்லவில்லை. ஒருவேளை கிராம நிர்வாகியாக இருந்த செக்கண்ணன் வந்திருந்தால் கண்டு பிடிச்சிருக்கலாம். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து அப்பா ஊரான விஜயநாராயணம் சென்றோம். எல்லா ஊரும் அருகருகேதான் இருந்தன. முனைஞ்சிபட்டி, கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் எல்லாம் எட்டிப் பார்க்கும் தூரத்தில் தான் இருந்தது. தாமிரபரணி-கருமேனியாறு இணைப்புக் கால்வாய்கள் அடிக்கடி குறுக்கிட்டன. சீக்கிரமே வேலைகள் முடிந்து தண்ணீர் வந்துவிடுமாம்.
சாலையோரம் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி உளுந்தம்பருப்பு சோறும் எள்ளுத் துவையலும் அப்பளத்துடன் சேர்த்து ஒரு அடி அடித்தோம். மோர் சாதம் வெயிலுக்கு இதமாக இருந்தது. கருவாட்டு குழம்புதான் இதற்கு சரியான தோஸ்து என்று அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தான். அப்பா ஊரில் பழைய ரைஸ் மில்லும் அதற்கு எதிரே சாஸ்தா பீடமும் இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள். அது ரெண்டும் பார்த்தோம், ஆனால் சொந்த பந்தங்கள் வீடோ தெருவோ தெரியவில்லை. நேராக அப்பா பெயர் கொண்ட குல தெய்வம் கோவிலுக்கு சென்றோம். அன்று பங்குனி உத்திரம் என்பதால் நிறைய பேர் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.
அது ”ஐநூற்று மங்கை” என்ற பெயர் கொண்ட அம்மன் கோவிலாக இருந்தது. பெயர்ப் பலகை முன் நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். வரலாறு முக்கியமாச்சே, நாங்களும் status போடவேண்டுமே! ஆனாலும் ஐநூற்று மங்கை என்ற பெயர் வித்தியாசமாகத் தெரிந்ததால் அது குறித்து விவாதித்துக் கொண்டோம். கோவிலின் எதிரே பெரிய தெப்பக்குளம் ஒன்று இருந்தது. அந்த கோடையிலும் அடிப்பாகத்தில் கணிசமான அளவு தண்ணீர் தேங்கி இருந்தது.
நயினார் அண்ணன் அந்த பெயர்க் காரணம் குறித்து எப்போதோ படித்திருந்ததை நினைவு கூர்ந்தான். அந்தத் தெப்பக்குளம் ஒரு நீரூற்று எனவும் அதன் கரையில் இருப்பது ”ஐயன் ஊற்று சாஸ்தா” என்றும் , பெயர் திரிந்து ஐநூற்று என்றானதாகவும் கூறினான். அம்மன் கோவில் அதன் தொடர்புடையதால் ஐநூற்று மங்கை என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சொன்னான். கீழடி ஆராய்ச்சியை விட எங்கள் வரலாற்று ஆராய்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது. சென்னை செல்ல வேண்டிய புகை வண்டியைப் பிடிக்க வேண்டி இருந்ததால் மேற்கொண்டு ஆராய்ச்சியில் இறங்காமல் நெல்லை நோக்கிப் பயணித்தோம்.
நாங்கள் கண்ட கேட்ட விஷயங்கள் உண்மையானவைகளா இட்டுக் கட்டப் பட்டவையா என்பதைச் சொல்ல வீட்டில் ரெண்டே ரெண்டு பெரிய தலைகள்தான் இருக்கிறது, மரகதம் அக்காவும் தெய்வு அக்காவும். தனித்தனியாகக் கேட்டால் ரெண்டுபேரும் மணிரத்னம் ஸ்டைலிலும் பாரதிராஜா ஸ்டைலிலும் ரெண்டு கதை சொல்லுவாங்க, ரெண்டுபேரும் பாட்டிகள் அல்லவா? ரெண்டுபேரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும். பாட்டிகள் சொல்லும் கதை கேட்க நாங்க ரெடியாகிவிட்டோம்

0 Comments:

Post a Comment

<< Home