Friday, May 19, 2023

அலை-81

 அலை- 81

“சர்வதேச மகளிர் தினம்”
வருடம் தோறும் மகளிர் தினம் கொண்டாடுவது வாடிக்கையாகிவிட்ட ஒன்றுதான். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மகளிர் தின நிகழ்வுகள் ஏதாவது ஒரு செய்தியை மனதில் ஆழமாகப் பதிக்கிறது. இந்த வருடம் CSI மருத்துவமனையும் ஈரோடு மகப்பேறு மருத்துவர்கள் சங்கமும் இணைந்து “புற்றுநோய் கண்டறியும் முகாம்” நடத்தினோம்.
மனிதர்களின் வாழ்வைப் புரட்டிப்போடும் எத்தனையோ நோய்களில் புற்றுநோய் மிகப்பிரதானமான இடத்தில் இருக்கிறது. வீட்டிற்கு ஒரு மரம் வைப்போம் என்று சொல்வதுபோல் வீட்டிற்கு ஒரு புற்றுநோய் நோயாளி உண்டு என்பது வருத்தப்படக்கூடிய செய்தி. பாமர மக்கள் முதல் பகுத்தறிவாளிகள் வரை , நோயாளிகள் முதல் மருத்துவர்கள் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை அந்த நோய். நினைவில் வாழும் உயிர்த் தோழி மரு.நளினாதேவி புற்றுநோய் பாதிப்பால் எங்களை விட்டு பிரிந்ததை இன்னும் கூட எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு, எடை குறைக்க நடைப் பயிற்சி, மாரடைப்பு தடுக்க பத்தியச் சாப்பாடு எனப் பலவிதமான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும் அசால்ட்டாக அட்டாக் பண்ணி ஆறு மாதத்துக்குள் ஆளையே சாய்த்துவிடும் புற்றுநோய்கள் பற்றிய கதைகள் தினசரி நம்மைச் சுற்றி நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும் புற்றுநோய்த் துறையில் தினசரி புதிய கண்டுபிடிப்புகள் பல அதிசயங்களையும் காண்பித்து வருகின்றன.
புற்றுநோய் வருவதைத் தடுக்க முடிகிறதோ இல்லையோ , முற்றிப் போகும் வரை காத்திருக்காமல் ஆரம்ப கட்டங்களிலேயே கண்டுபிடிக்கக் கூடிய எண்ணற்ற பரிசோதனைகளும் பாதுகாப்பு முறைகளும் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. ஆனால் அவையெல்லாம் சாதாரண மக்களைச் சென்றடைகிறதா என்பது கேள்விக் குறிதான்.
பெண்களுக்கான புற்றுநோய்களில் மார்பகம் மற்றும் கர்ப்பவாய்ப் புற்று நோய்கள் முக்கியமாக உள்ளது. ஆனால் அவற்றை ஆரம்பக் கட்டங்களிலேயே கண்டறியக்கூடிய பரிசோதனைகள் பற்றி எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது. நடுத்தர வயது தாண்டிய பெண்கள் மேமோகிராம் , pap smear என்று சொல்லப்படும் கருப்பை வாய் சோதனை போன்றவற்றை செய்து கொள்ள வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரியாது. தெரிந்த சிலரும் அதற்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு நாட்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு வரை மார்பகப் புற்றுநோய் என்பது 40 வயது தாண்டியவர்களுக்கு வரும் நோய் என்றுதான் இருந்தது. திருமண வயதுகூட வராத இளம் பருவத்தினர்கூட தற்போதைய கால கட்டத்தில் பாதிக்கப் படுகிறார்கள். HCG cancer center செவிலியராக இருந்த செல்வா என்ற பெண் மிகக் குறைந்த வயதில் இருபது வயதுகூட நிறையாத பருவத்தில் மார்பக புற்றுநோய்க்கு பலியான சோகம் நீண்ட நாட்களுக்கு எங்கள் மனதில் ஆறாப் புண்ணாக இருந்தது.
குடும்பத்தில் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பது சோகத்திலும் சோகம். எழுபது வயதில் மாமனார், அறுபது வயதில் அம்மா , ஐம்பது வயதில் ராஜம் மதினி, நாற்பது வயதில் தோழி நீலா என வயது வரம்பு குறைந்து கொண்டே வந்ததில் அண்ணன் மகள் ஜோதிக்கு முப்பத்து மூன்று வயதில் தைய்ராய்டில் புற்று நோய் வந்தது குடும்பத்தையே புரட்டிப் போட்டு விட்டது.
மதினியைப் பிரிந்த சோகம் ஆறுவதற்குள் மகளுக்கும் புற்றுநோய் என்ற சோகத்தைத் தாங்க முடியாத அண்ணனுக்குக் குடும்பமே ஆறுதலாக இருந்தது.மறு யோசனை இன்றி ஈரோடுக்குக் கூட்டி வந்து அறுவை சிகிச்சை செய்ததில் இன்றளவும் மருமகள் நலமாக இருக்கிறாள். கருத்துடனும் கனிவுடனும் அறுவை சிகிச்சை செய்து இன்றளவும் தொடர் கவனிப்பில் வைத்திருக்கும் மரு. அருணந்திசெல்வனுக்குக் குடும்பமே நன்றிக் கடன் பட்டுள்ளது.
ராஜம் மதினியின் அம்மா, எனது மூத்த அக்காவுக்கு சினைமுட்டை பையில் புற்றுநோய் வந்து அறுவை சிகிச்சை செய்து பதினைந்து வருடங்களாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். ஆனால் மகளுக்கு வந்த நோயால் அவளைப் பிரிந்து புத்திர சோகத்தில் இன்றளவும் அவதிப் படுகிறாள்.
தகுந்த நேரத்தில் செய்யப்படும் சிகிச்சைகள் புற்றுநோயை வெல்லக்கூடிய சக்தி வாய்ந்ததாக உள்ளது. அறியாமையாலோ பொருளாதார பிரச்னைகளாலோ நேரம் தப்பி செய்யப்படும் சிகிச்சைகள்தான் இழப்புகளை ஏற்படுத்துகிறது.
சிகிச்சை செய்வதில் உள்ள அறிவியல் முன்னேற்றம் , சிகிச்சைக்கு கொண்டு வருவதில் இல்லை.
தனக்கு புற்றுநோய் வந்துவிட்டது என்பதை பிறர் அறிந்தால் அவமானம் என்ற மாயையில் மூடி மறைத்து மறைந்துவிட்ட மருத்துவ தோழிகள் உண்டு. வைத்தியம் பார்க்காமலே வியாதியை வென்றுவிடலாம் என்ற மாயையில் திரியும் நபர்களும் உண்டு. நாட்டு வைத்தியத்தில் கட்டியைக் கரைத்துவிடலாம் என்று திசை மாறிப் போகும் அப்பாவிகளும் உண்டு. புற்றுநோய் வந்துவிட்டாலே இறந்துதான் போய்விடுவோம் என்ற பயத்துடன் ஆன்மீகத்தில் அமுங்கிப் போகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஒருசில புற்றுநோய்கள் தவிர நிறைய நோய்களுக்கு முன்பே செய்துகொள்ளும் பரிசோதனைகள் இருக்கின்றன. பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. புற்றுநோய் வரும் அறிகுறி உள்ளவர்களுக்குக் கூட முறையான வைத்தியம் மூலம் வாழ்நாள் நீட்டிக்கப்படும். கர்ப்பவாய் புற்று நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் வசதி உள்ளது. விரைவில் தமிழக அரசு சார்பில் பத்து வயதுக்கு மேற்பட்ட அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் HPV vaccine இலவசமாக செலுத்த ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மறுபடி மறுபடி இது போன்ற விஷயங்களை விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே செய்ய வேண்டிய பணி அல்ல. நமக்குத் தெரிந்ததை அருகில் உள்ளவர்களுக்கு சொல்லிச் சென்றாலே போதும். அந்த அடிப்படையில்தான் இன்று புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தினோம். முகாமிற்கு வந்த ஐம்பது பெண்களும் ஐநூறு பெண்களுக்காவது நாங்கள் விளக்கிச் சொன்ன விஷயங்களைக் கொண்டு சேர்த்தால் அதுவே முகாமின் வெற்றி.
புற்றுநோயையும் வெல்லலாம்
புதுமைப் பெண்களாய் ஒளிரலாம்.
மகளிர் தின வாழ்த்துகள்.
All reactions:
Baskara Pandian, Alfred Daniel and 16 others

0 Comments:

Post a Comment

<< Home