அலை-74
அலை-74
மூன்றாம் வருடத்தில் வந்த முக்கியமான நிகழ்ச்சி என்றால் (Inter-medical Sports) மருத்துவக் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள்தான். அந்த வருடம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. எங்கள் கல்லூரியிலிருந்து எல்லா விளையாட்டுகளிலும் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நிறைய பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார்கள்.
விளையாடத் தெரியணும் என்ற அவசியமில்லை. பேட் பிடிக்கத் தெரிந்தால் இறகுப் பந்து, ஓங்கி அடிக்கத் தெரியும் என்றால் வாலிபால், ஓடத்தெரியும் என்பதால் ஓட்டப் பந்தயம். செம ஜாலியான தேர்வுகள்தான். அந்த அடிப்படையில் நானும் இறகுப்பந்து அணியில் சேர்க்கப்பட்டிருந்தேன். சர்வீஸ் போடத் தெரியும். எழிலும் ஜியோவும் கொஞ்சம் பயிற்சி கொடுத்திருந்தார்கள். எங்கள் கல்லூரியின் கால்பந்து அணியும் ஆண்கள் பூப்பந்து அணியும் சிறப்பாக இருக்கும். மற்ற விளையாட்டுகளுக்கும் ஏற்கனவே பயிற்சிகள் ஆரம்பித்திருந்தன.
எங்க வகுப்பிலிருந்து மட்டுமே கணிசமான நபர்கள் அந்தக் குழுவில் இருந்தோம். தடகளப் போட்டிகளில் மரகதமணி மாதிரி திறமை வாய்ந்தவர்கள் வட்டு எறியும் போட்டியில் தயாராக இருந்தார்கள். ரிலே ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து, டென்னிகாய்ட் என எல்லா பிரிவுகளிலும் பெயர் கொடுத்து கும்பலாகக் கிளம்பிவிட்டோம். எந்த விளையாட்டிலும் இல்லாதவர்களை மாற்று பங்கேற்பாளராக (substitute) இணைத்துக் கொண்டோம். பானு, மேகலா போன்ற ஆசாமிகள் அப்படித்தான் உள்ளே சேர்ந்து கொண்டார்கள். தோழியரை விட்டுவிட்டு எங்களாலும் எங்கும் போக முடியாது.
திருநெல்வேலியிலிருந்து புகைவண்டி மார்க்கமாக தஞ்சாவூர் செல்வதாக ஏற்பாடு. பகல் நேர வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கும்பலாக ஏறிக்கொண்டு குதூகலமாகப் போன பிரயாணம் அது. அந்தக் காலத்தில் ஜனதா எக்ஸ்பிரஸ் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட வண்டி அது. எல்லா வருட மருத்துவ மாணவர்களும் இணைந்துகொண்ட கதம்ப மாலை. அதனால் கிடைத்த சுகந்த மணமும் மகிழ்ச்சியும் எல்லோரையும் வசீகரித்துக் கொண்டது. நிறைய பேருக்கு உட்காரக்கூட இடம் கிடைக்கவில்லை. நடக்கும் வழிகளிலும் கதவின் பக்கத்திலுமாக உட்கார்ந்திருந்தோம்.
கல்யாண வீடுபோல் கலகலப்பாக இருந்த அந்த ரயில் பயணம் நிறைய புது உறவுகளை உண்டாக்கியதுன்னு கூடச் சொல்லலாம். கோரஸ் பாடல்கள் ஒருபுறம், கிசுகிசுப்பான கடலைகள் மற்றொருபுறம், சீனியர்களின் அழிச்சாட்டியம் இன்னொருபுறம் என செம ஜாலியாக பயணித்தோம். எனக்கு உட்காரக் கிடைத்த இடமோ கால்பலகை(Foot-board)யில் எழிலுக்கு அடுத்த இருக்கை. எங்களைச் சுற்றி வகுப்புத் தோழர் தோழியர்களும் உட்கார்ந்து செம அரட்டை அடித்துக் கொண்டோம்.
எழிலின் அறைத் தோழர்களில் ஒருவரான கண்ணன் சிலோன் பாய்லா பாடல்கள் நன்றாகப் பாடுவார். அங்கிருந்த காட்சிகளுக்கு ஏதுவாக இட்டுக்கட்டி அழகான பாடலொன்று அரங்கேற்றினார். “கோபமேது மத்தவா” என்ற அந்தப் பாடல் பயங்கர பிரபலமாயிடுச்சு. காதல் அரும்பும் நிலையில் இருந்த நிறைய ஜோடிகளுக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனது. நாங்கள் சென்ற வண்டி ரெகுலர் வழியில் செல்லாமல் கார்டு லைன் எனப்படும் பாதையில் செல்ல இருந்ததால் இடைவெளியில் ஏதோ ஊரில் இறங்கி வண்டி மாற்றிக் கொண்டோம்.
என் வகுப்புத் தோழியர் எல்லாம் “எழில் அண்ணே” என்றுதான் அன்போடு கூப்பிடுவாங்க. அந்த அன்புமழையில் நனைந்து கொண்டதால் திருச்சி புகை வண்டி நிலையத்தில் பிரியாணி வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார்கள். எழில் பெரியப்பா வீடு திருச்சி என்பதால் அடிக்கடி அங்கு சென்று வந்திருந்த அநுபவத்தால் மிக நம்பிக்கையுடன் சொல்லியிருந்தார்கள். திருச்சியில் குறிப்பிட்ட சில நிமிடங்களே வண்டி நிற்கும் என்ற நிலையில் மிகத் துல்லியமாக நேரக் கணக்கீடு செய்து ஓடிப்போய் பிரியாணி வாங்கி வந்து ஹீரோயிஸம் காட்டிகிட்டாங்க. நாங்க எல்லோரும் அவங்களுக்கு ஒரு “ஓ” போட்டுகிட்டோம். ஓசியில் பிரியாணி கிடைக்கும்போது அதைக்கூட பாராட்டாவிட்டால் எப்படி? நான் அப்போது சைவம் என்பதால் பிரியாணி சாப்பிட முடியவில்லை.
பகல் முழுவதும் பிரயாணம் செய்து அதுவரை பார்த்திராத ஊர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு தஞ்சை வந்து சேர்ந்தோம். பெண்கள் விடுதியில் எங்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டோம். மறுநாள் விளையாடப்போகும் அணிகள் குறித்து அலசப்பட்டதைவிட ரயில் பயணத்தில் ஏற்பட்ட கசமுசாக்கள் பற்றியே அதிகம் புரணி பேசப்பட்டது. அங்கங்கே கள்ளச் சிரிப்புகளுடன் கடந்து போன கன்னிகைகளிடம் ஆயிரம் கதைகள் அடக்கம். எனக்கும் அதில் கொஞ்சம் கதைகள் உண்டு.
அடுத்துவந்த இரண்டு நாட்களும் போட்டியில் பங்கேற்பதிலும் விளையாடுபவர்களை உற்சாகப் படுத்துவதுமாக பகல் பொழுதுகள் இறக்கை கட்டிப் பறந்தன. இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடக்கும். சில மேடைகளுக்கருகில் பெண்கள் போகவே கூடாது போன்ற மாதிரி நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கும். தெரியாமல் சில இடங்களில் மூக்கை நுழைத்துவிட்டு புறமுதுகு காட்டி ஓடிவந்தது கூட சுவாரஸ்யமான அநுபவம்தான்.
நான் இறகுப் பந்து ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். பந்து எடுக்க பின்பக்கமாக சென்றபோது சறுக்கி விழுந்து இடது மணிக்கட்டில் சரியான அடி. எங்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்த கூட்டத்தில் எழில் இருந்ததால் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு ஸ்கூட்டரில் கூட்டிச் சென்றார்கள். எழிலின் அண்ணா Dr.கிருபாகரன் அங்கு மருத்துவராக இருந்ததால் வண்டியும் வைத்தியமும் டக் டக்கென்று கிடைத்துவிட்டது. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எலும்பு முறிவும் இருந்ததால் உடனடியாக மாவுக்கட்டும் போட்டு விட்டார்கள்.
எல்லோரும் உற்சாகமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது நான் மட்டும் வெட்டியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
எழிலுக்கு போட்டிகள் இல்லாத தினத்தில் எங்களை முக்கொம்பு அணைக்கட்டுக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார்கள். கைக்கட்டுடன் நான் மற்றும் பானு, ஷுபா, மேகலா,எழில் , தம்பிதுரை , அண்ட்ரூ ஆக ஏழு பேராக ஊர் சுற்றக் கிளம்பி விட்டோம்.
தஞ்சையிலிருந்து பஸ் பிடித்து திருச்சி வந்து அங்கிருந்து இன்னொரு பஸ் எடுத்து முக்கொம்பு சென்றோம். காவிரியின் பிரம்மாண்டம் மனதை கொள்ளை கொண்டது. அருகிலிருந்த பூங்காவையும் சுற்றிப் பார்த்துவிட்டு மலைக்கோட்டை செல்ல கிளம்பினோம்.
நாங்கள் காவிரியில் இறங்கி விளையாடிய இடத்திலிருந்து ஒரு பெண்ணை சுழல் விழுங்கிய அபாயம் பற்றி அப்போதான் எழில் மெதுவாகச் சொன்னாங்க. மனம் திடுக்கிட்டது உண்மைதான் என்றாலும் அடுத்து சுற்றிப்பார்த்த இடங்கள் எல்லாவற்றையும் மறக்க வைத்துவிட்டது. மலைக்கோட்டையின் உச்சி பிள்ளையாரைத் தரிசிக்க அத்தனை படிகள் ஏறியபோதும் அலுப்பே தெரியாத சூழல். கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் நினைவூட்டல் களமாக உள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பார்த்த மகிழந்த கலகலப்பான நிகழ்ச்சிகள் இன்னும் ஏராளம். எங்கள் கல்லூரி ஏதாவது விளையாட்டில் வெற்றி பெற்றார்களா என்பது நினைவில்லை. தோற்கப்போவது போல் தெரிந்துவிட்டால் போட்டியைக் கேலிக் கூத்தாக்கி விடுவார்கள். கூடைப்பந்து மைதானத்துக்குள் கால்பந்து ஷூ போட்டுட்டு போக வேண்டியது. கால்பந்து, கூடைப்பந்து போன்ற போட்டிகளில் வேண்டுமென்றே எதிர் பக்கம் பந்து போட்டுவிடுவாங்க.. இல்லாட்டி திடீர்னு எதிர் டீம் கையில் பந்தைக் குடுத்துட்டு ஜாலி நடை போடுவாங்க. எங்க பெண்கள் டீமுக்கு ஆண்கள் டீம் விளையாட்டைப் பார்ப்பதைவிட இந்த மாதிரி காமெடி காட்சிகள் பார்ப்பதில் அலாதி பிரியம்.
போட்டிகள் இல்லாத நேரங்களில் எங்க மக்கள் அடித்த லூட்டிகள் கொஞ்ச நஞ்சமில்லை. கல்லூரியச் சுற்றிலும் ஏராளமாக முந்திரி மரங்கள் இருக்கும் . அதன் குடை விரித்த கிளைகளின்கீழ் திண்மையான நிழல் படர்ந்திருக்கும். அதில் காதல் ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கலாய்ப்பதே எங்கள் குழுவின் வாடிக்கையாக இருக்கும். பேசிக்கொண்டிருக்கும் ஜோடிகளுக்கு இடையே போய் ரெண்டு மூணுபேர் உட்கார்ந்து கொள்வார்கள். கண் சிமிட்டாமல் அங்கிருக்கும் பெண்ணையே குறுகுறுவென்று பார்ப்பார்கள். தர்ம சங்கடமான நிலைமையிலிருந்து தப்பிக்க விட்டேன் சாமின்னு ஆளுக்கொரு பக்கம் சிட்டாகப் பறந்திடுவாங்க. முந்திரி தோப்பு முழுக்க இப்படியே கும்பலாகப் போய் அத்தனை பேரையும் விரட்டி விட்டுடுவாங்க. கேட்கக் காமெடியாக இருந்தாலும் அந்த பசங்களை நினைச்சா பாவமாகத்தான் இருக்கும்.
எனக்குக் கையில் மாவுக்கட்டு இருந்ததால் எந்த விளையாட்டிலும் சேர முடியாமல் முழு நேர பார்வையாளர் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டேன். அதனால் நிறைய கோமாளித்தனங்களைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குத்தான் அதிகம் கிடைத்தது. எழில் மாதிரி ஒரு உறவு பலப்பட அந்த கைக்கட்டு ஒரு காரணமாக இருந்தது. பிற்காலத்தில் கால்கட்டு போட அதுதான் ஆரம்பப் புள்ளி என்பது அப்போது தெரியாது. அதுவரை எழில் என்றால் ஒரு புத்தகப்புழு, சின்சியர் சிகாமணி என்று ஒதுங்கிப்போனது மாறி எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட அடித்தளமிட்டது தஞ்சை மண்.
கிறிஸ்துவ மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தாலும் எங்களுக்காகத் தஞ்சை பெரியகோயிலைச் சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றார்கள். உச்சிபிள்ளையார் கோவிலுக்கு வரவும் ஆட்சேபமே தெரிவிக்கவில்லை. அவங்களுக்கு மதம் ,மனிதம், நட்பு எல்லாம் பற்றி ஒரு தெளிவான பார்வை இருந்ததால்தான் எங்கள் நட்பு மென்மேலும் வளர்ந்தது.
A woman’s Friendship Always ends in Love
0 Comments:
Post a Comment
<< Home