Thursday, March 31, 2022

அலை-67

 அலை-67

“பணிமூப்பு ஓய்வு”- 31.03.2018
இன்றோடு அரசு மருத்துவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஈரோடு தலைமை மருத்துவமனை போன்ற பிஸியான இடத்திலிருந்து ஓய்வு பெறும்போது அதன் பின் வரக்கூடிய நாட்களை நினைத்து மலைப்பாகவே இருந்தது. சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்கலாம் ஏழரை மணிக்கு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது தவிர்க்க முடியாதது. மந்திரிச்சு விட்ட மாதிரி தினமும் எழுந்து அரக்கப் பரக்க ஓடிய கால்கள் மறுநாள் முதல் என்ன செய்யப்போகிறது என குழப்பம் ஏற்படுத்திய நாள் இது. உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் திரண்டு வந்து விழாக்கோலம் கொண்ட நாளும் கூட.
எங்கள் வகுப்பிலேயே முதல் முதலில் அரசுப்பணியில் சேர்ந்தது நானாகத்தான் இருக்கும். 1986 ஆம் வருடம் வட ஆற்காடு மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரம்பித்த பயணம் ஈரோட்டில் வந்து நிலை கொண்டுவிட்டது. போகாத ஊரில்லை சுற்றாத அரசு மருத்துவ மனைகள் இல்லை என்பதுபோல் பல ஊர் தண்ணி குடிச்சாச்சு. உதவி மருத்துவர் முதல் துணை இயக்குநர் (பொ) வரை எத்தனையோ பதவிகளில் குப்பை கொட்டியாச்சு. அரசுப் பணியில் கற்றதும் பெற்றதும் இழந்ததும்கூட ஏராளம். கிட்டத்தட்ட பத்துவருடங்கள் தொடர் விடுப்பில் இருந்ததால் இயக்குநர் (DMS) ஆகியிருக்க வேண்டியதையும் இழந்தது தனி சோகக் கதை. ஆனாலும் அடிச்சுப் பிடிச்சு மறுபடி பணியில் இணைந்து ஓய்வூதியம் (Pension) பெறுவது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசாச்சே!
பணி ஓய்வு பெற்ற அன்று எதிர்காலத்தைப் பற்றி ஏகப்பட்ட அறிவுரைகள் ஆலோசனைகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. தொடர்ச்சியா ஒருவாரம் காலை பத்து மணிக்கு முன்னாடி படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூடாது என்பதுதான் மனதுக்குள் ஓடிய முதல் தீர்மானம். அடுத்ததாக நர்ஸிங் ஹோம் நேரத்தை மாற்றியமைத்து ப்ராக்டீஸில் முழுமையாக ஈடுபடணும். வெளிநாட்டுப் பயணங்கள் இனிமேல் தடையின்றி செல்லலாம். இப்படி ஏகப்பட்ட தீர்மானங்களோடு ஏப்ரல் மாதம் முதல் தேதி விடிந்தது.
அதன்பின் வந்த எதுவுமே நான் நினைத்தபடி நடக்கவே இல்லை. வேலைக்கு சென்ற நாட்களை விட ஓய்வு பெற்றபின் நாட்கள் ரெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. வேலைக்குப் போகும்போது குடும்பத்தில் ஏதாவது விசேஷம் வந்தால் விடுப்பு கிடைக்கவில்லை என்ற சாக்கு போக்குடன் பத்துலே நாலு விசேஷத்துக்குப் போகாமல் இருந்துவிடலாம். இப்போ அதெல்லாம் சொல்ல முடியாது. நீ ஃப்ரீயாகத்தானே இருப்பாய், கண்டிப்பாக வந்துவிடு என்ற மிரட்டலுடன் கூடிய அழைப்புகளுக்கு கண்டிப்பாக செவி சாய்க்க வேண்டும். உறவுகளெல்லாம் தொலை தூரத்தில் இருப்பதால் சென்னைக்கும் நெல்லைக்கும் கூடுதலாக மகள் வீட்டுக்கு பெங்களூருவுக்குமாக பறந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது.
இப்படி இலக்கே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தபோதுதான் நண்பன் அஸ்வதரன், முகநூலில் இலக்கின்றி செலவழிக்கும் நேரத்தில் பெண்கள் நலம் குறித்து எழுதலாமே என கேட்ட கேள்வியின் வெளிப்பாடாக குமுதம் ஹெல்த் இதழில் சில மருத்துவக் கட்டுரைகள் தமிழில் எழுத ஆரம்பித்தேன். கொரோனா காரணமாக பத்திரிக்கை வருவது தடைப்பட்டதால் மருத்துவக் கட்டுரைகள் எழுதுவதும் நின்றுபோனது.
அப்போழுதுதான் என் எண்ண அலைகளைப் புரட்டிப்பார்க்கும் “அலை” கள் மீது தவழ ஆரம்பித்தேன். முதலில் ஒரு பொழுது போக்குபோல் எழுத ஆரம்பித்தது தொடர் அலைகளாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
முதலில் எனது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் “அலை’விடு தூது அனுப்பிப் பார்த்தேன். ஓரளவு ரசிக்கக்கூடிய தன்மையில் இருப்பதைப் புரிந்து கொண்டேன். அதனடிப்படையில் இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இது ஒரு தனிமனித அநுபவங்கள் மட்டுமே, அதை எல்லோராலும் எப்படி ரசிக்க முடியும் என்ற தயக்கம் இருந்துகொண்டே இருக்கும்.ஆனால் எனது எழுத்துக்களின் ஊர்வலத்தில் வாசிப்பவர்களின் அநுபவங்களின் சாயலும் ஆங்காங்கே தென்படக் கூடிய வாய்ப்புகளும் உண்டு என்பதைத் தெரிந்து கொண்டேன்.
எனது வயதைஒத்த நண்பர்களுக்கு பரிச்சயமான நிகழ்ச்சிகள் “அலை”யில் தென்படலாம், ஆனால் இளைய தலைமுறைக்கு போரடிக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெறும் உரையாடல்களின் இடையில் “மேடம்! உங்க அலை சூப்பராக இருக்குது” என்ற விமர்சனங்கள் நிஜமாகவே என்னை அசைத்துப் போட்டிருக்கின்றன. சமீபத்தில் ஒரு பள்ளி செல்லும் சிறுவன் என் “அலை”யின் இணைப்பு (Link) கேட்டபோது ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாய்போல் ஆகிவிட்டேன்.
அவ்வப்போது தலைகாட்டும் தங்க்லீஷ் வார்த்தைகள், பேச்சு வழக்கு சொற்கள், கொடுந்தமிழ் வார்த்தைகள் என்ற கதம்பத்தை எனது எழுத்துக்களில் அங்கங்கே படர விட்டிருப்பேன். என்மேல் அக்கறை உள்ள சில நண்பர்கள் இன்னும் நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தலாமே என்று அன்புடன் கேட்டிருக்கிறார்கள். எனது ரசிகர்கூட்டம் 12 வயதுமுதல் 85 வயதுவரை , தமிழே தெரியாத பிற மொழியினரையும் உள்ளடக்கியது. Google Translate இல் போட்டு வாசித்து ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் சென்றடையும் போது சில சமரசங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வார்த்தைகளின் வீரியம் வாசிப்பவர்களை பயந்து ஓட வைத்துவிடக் கூடாது என்பதும் ஒரு காரணம்.உண்மையாகவே என் நண்பன் ஒருவன் ஃபோன் செய்து “அக்கா! நல்லா எழுதுறீங்க, ஆனால் இடையிடையே புரியாத பாஷை எல்லாம் எழுதுறீங்க. ‘பதின்ம வயது’ன்னா என்ன?” என்று கேட்டான்.
தினசரி எழுதும் வழக்கமும் எனக்குள் இல்லை. சில சமயம் வெட்டியாக கம்ப்யூட்டரில் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன், ஆனால் எழுதத் தோன்றாது. சில சமயம் சமையல் செய்யும்போது கவிதைபோன்ற வார்த்தைகள் அடுக்கடுக்காகத் தோன்றும். வேலைகளை முடித்துவிட்டு எழுத உட்கார்ந்தால் எதுவுமே சரியாக வராது. ஒரு மூடு வந்து எழுதிக் கொண்டிருக்கும்போது நோயாளி வந்திருப்பதாக கதவை மெதுவாகத் திறந்து சேதி வரும். எப்படியோ திக்கித் திணறி நினைப்பதை வார்த்தை வடிவத்தில் கொண்டுவருகிறேன்.
நான் தமிழில் எழுதுவதைப் பார்த்து என் தோழர்களும் உறவினர்களும் ஆச்சரியப் படுகிறார்கள். தமிழில் இப்படி எழுதுவாய்
என்றே தெரியாதே என்று
அதிசயித்துக் கேட்டிருக்கிறார்கள். தமிழ் ஐயா மறைதிரு. குழைக்காதன்
அவர்களையே இந்தப் பெருமை சாரும்.
இதுபோல் எழுதி அரங்கேற்ற சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்கள் வந்த பிறகுதான் நிறையபேரின் திறமைகள் வெளிக் கொணரப் படுகின்றன. தோழி பானுவின் பாடும் திறமை குடத்திலிட்ட விளக்காக இருந்தது. SMULE வந்த பிறகு அவளின் பாடல்கள் எங்கெங்கெல்லாமோ ஒலித்துக் கொண்டிருக்கிறது. சுபாவின் Relax Please, ராம்கியின் ஜென்ராம் மீடியா எல்லாமே ஊடகங்களின் வளர்ச்சியால் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைகிறது.
ஊடக வளர்ச்சி தனிமனித சலிப்புகளை ஓரம்கட்டிவிடுகிறது.எனது எழுத்துக்கள்
ஏற்றம் பெற்றிருப்பதும் வாட்ஸ்
ஆப் மூலமாகத்தான். பணி ஓய்வுக்குப்பின் என்ன செய்வது என்ற கவலையே இல்லாமல் அனைவருடனும் தொடர்பில் இருக்கும் செளகரியத்தைத் தந்திருக்கிறது. அதனால்தான் நாலு ஆண்டுகள் கழிந்த பின்னரும் அதே உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நான் நினைத்தபடியே நடந்து கொண்டிருக்கிறது. தொலைதூர பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் நிறைய போக ஆரம்பிச்சாச்சு.
பழைய வழக்கப்படி காடாறுமாசம் நாடாறுமாசம் எல்லாம் இப்போ கிடையாது. மூணுமாசம்தான் முறிவுப்புள்ளி. சைனா, ரஷ்யா போன்ற நாடுகளை பூகோள புத்தகத்தில் பார்த்திருந்த காலம் போய் மாஸ்கோவிலும் பீஜிங்கிலும் ஃபோட்டோ எடுக்கும் அளவுக்கு ஊர் சுத்தியாச்சு. கொரோனா காலத்தில்கூட தொலை தூரம் போக முடியாட்டியும் பக்கத்திலே சத்தியமங்கலம் காடுகளில் ஹாஸனுர், கடம்பூர்னு குட்டிகுட்டி பிக்னிக் போய்க்கொள்ள வேண்டியதுதான். ஒன்றுக்கும் வழியில்லாட்டி இருக்கவே இருக்குது சித்தோட்டில் உள்ள தோட்டமும் தண்ணீர்த் தொட்டியும்.
பணிஓய்வு என்பது அரசு வேலையில் இருந்து மட்டும்தான். மருத்துவராக இல்லாமல் ஆசிரியையாகவோ கிளார்க்காகவோ இருந்தால்கூட இப்படித்தான் வாழ்க்கை செல்லவேண்டும். வயது மூப்பு வந்துவிட்டதாக நினைக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்க்கையே சூனியமாகிவிடும். மனதின் இளமை வாழ்க்கையை ரசிக்க வைக்கும்.
4

0 Comments:

Post a Comment

<< Home