Thursday, March 31, 2022

அலை-60

 அலை-60

மருத்துவக் கல்லூரி வாழ்க்கையில் இரண்டாவது வருடப் படிப்புதான் நீண்ட மைல்கல் மாதிரி. ஒன்றரை வருடங்கள் படிக்கணும். Second Junior ஒரு வருடமும் second senior ஆறு மாதங்களும் படிக்கணும் . அதே பாடங்கள், அதே வகுப்பறைகள், அதே ஆசிரியர்கள் என நீண்ட பயணம்.
அநேகமாக வகுப்புத் தோழர் தோழியர் பெரும்பாலானோர் சேர்ந்து படித்த வகுப்புகூட அதுதான். அதன் பிறகு மூன்றாம் ஆண்டு மருத்துவமனை பகுதிக்கு சென்ற பிறகு சின்னச் சின்னக் குழுக்களாக பிரிந்துவிடுவார்கள். ரொம்ப கலக்கத்துடனும் கரிசனையோடும் குறிக்கோளுடனும் படித்த வகுப்புன்னும் சொல்லலாம். இரண்டாம் வருட பாடங்களில் பாண்டித்தியம் இருந்தால்தான் மருத்துவப் பாடங்களில் நல்ல தெளிவு கிடைக்கும்.
அனாடமி என்பது கண்முன்னே தெரியும் நரம்பு ,தசை ,எலும்பு என்று வேறுபடுத்தி பகுத்தாய்ந்து தெளிவு பெறலாம். கண் பார்ப்பதை மூளை கிரகித்துக் கொள்ளும். பயோகெமிஸ்ட்ரி முழுவதும் எளிதில் ஆவியாகிவிடும்(volatile) படிப்பு. ஆனால் பிற்காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய மருந்துகளின் மூலம் அதுதான். பிஸியாலஜி முழுவதும் கற்பனையிலேயே படிக்கணும். இப்போ மாதிரி Audio-visual coaching எதுவும் கிடையாது. இரத்த நாளங்களில் தமனி(artery)களில் சுத்த ரத்தமும் சிரை(vein)களில் அசுத்த ரத்தமும் செல்லும் என்று சொன்னால் அதைக் கற்பனையில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது வருடமும் ஐந்தாவது வருடமும்தான் முக்கியமான தேர்ச்சிப் படிக்கட்டுகள். அதனால் தேர்வில் நிறைய கெடுபிடிகளும் இருக்கும். தேர்வுத்தாள் திருத்துவதும் அந்தந்த கல்லூரிப் பேராசிரியர்கள்தான். அவர்களிடம் நல்ல பெயர் வாங்காமல் குறும்பு செய்தால் பாஸ் ஆவது கேள்விக்குறிதான் என்பது எல்லோர் வாயிலிருந்தும் வரும் அறிவுரை.
மும்மூர்த்திகளாக பயோகெமிஸ்ட்ரி பத்மா மேடமும், பிஸியாலஜி தண்டபாணி சாரும், அனாடமி ராமநாதன் சாரும் இருந்தார்கள்.
பத்மா மேடம் ஆஜானுபாகுவாக நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையுமாக பாரதியின் புதுமைப் பெண் மாதிரி இருப்பாங்க. அவங்க வகுப்பறைக்குள் வருவதே அட்டஹாசமாக இருக்கும். எபநேசர் சார் ராமகளஞ்சியம் சாரெல்லாம் அவங்க முன்னாடி பவ்யமாகத் தெரிவாங்க. அனாடமியில் ராமநாதன் சார் எப்போதாவதுதான் வகுப்பெடுக்க வருவார். ஹுசேன்சார், மணிசார், காஞ்சனா மேம், சந்திரா மேம் எல்லாம் அனாடாமி தியேட்டர் பார்த்துக்குவாங்க.
காகாசு (KKS) எனச் செல்லமாக அழைக்கப்படும் கா.கா.சுப்ரமணியம் சார் உயிரணுவியல்(cytology) எடுத்தார். அவர் பேசுறது அவருக்கே கேட்காது. அவர் மைக்ராஸ்கோப்பில் தலைகுனிந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது உச்சந்தலையில் ஒரு கற்றை முடிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்து ராமேஸ்வரி “ கட்டோடு குழலாட ஆட காகாசு தலைமேலே ஆட” என்று பாட்டுப்பாட, சுற்றியிருந்தவர்கள் சிரித்தது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. பெயர்களை நினைவு வைக்க மணி சார் சொல்லித்தரும் சுருக்கெழுத்துகள் (Abbreviations) மிகப் பிரபலம். Cranial Nerves, Lady between two Majors என்று பல விஷயங்கள் உண்டு.
பிஸியாலஜி தண்டபாணி சார் வகுப்புகள் தெளிவான விளக்கங்களுடன் இருக்கும். ஆனால் மிக மென்மையாக பேசுவதால் பாதி வார்த்தைகள் காதில் விழாது. அவருக்கும் சேர்த்து தமிழ்க்கொடி மேடம் உரக்கப் பேசி விளக்குவார்கள். மேடத்தின் சிம்பிள் மஸுல் ட்விட்ச் எல்லோருக்கும் நினைவிருக்கும். அவங்களோட உடையலங்காரமும் தலைஅலங்காரமும் ரொம்ப பேமஸ். சுபான் சார் எதிலும் பட்டுக் கொள்ள மாட்டார். மங்கோலி என செல்லமாக அழைக்கப்பட்ட டெமான்ஸ்ட்ரேட்டரின் உண்மையான பெயர்கூட மறந்தே போய்விட்டது.
எங்களுக்கு முந்தைய வகுப்பு (எழில் batch) மாணவர்களில் நிறைய பேர் பெயிலாகி “C” batch என சொல்லப்படும் additional batch-இல் படித்தது எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினையாக இருந்தது. மிக நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட பெயிலாக்கப் பட்டிருந்தார்கள். Ultra filtration என்றும் அதற்குச் சொல்லப்பட்ட காரணங்களும் கலக்கத்தைத் தருவதாகவே இருந்தது.எங்களைவிட ரெண்டுமடங்கு சேட்டைக்காரங்க உள்ள வகுப்பு அது.
எங்களுக்கோ குறும்பு பண்ணாமல் படிப்பது இயலாத காரியம். அடிக்கடி சேட்டைகள் செய்துவிட்டு , பயத்தில் கொஞ்ச நாள் அடக்கி வாசிப்பதும், மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் சேட்டைகளைத் தொடர்வதுமாகவே அந்த ஒன்றரை வருடங்களும் ஓடியது.
குறும்பு செய்யும் எண்ணம் இல்லாமலேகூட பண்ணும் வேலைகள் தர்மசங்கடத்தில் சிக்க வைத்துவிடுவதும் உண்டு.விடுதி சாப்பாடு போர் அடித்துப் போய்விடும் நேரங்களில் dayscholars-இன் சாப்பாட்டுப் பாத்திரங்கள் அபேஸ் பண்ணப்படும். எப்பவும் ஹேமாவின் சாப்பாட்டு டப்பாதான் இலக்கு. அவங்க அம்மா செய்து அனுப்பும் சாம்பார் சாதம் சூப்பராக இருக்கும்.அவள் சாப்பாட்டை நாங்கள் சாப்பிட்டுவிட்டு அவளுக்கு எங்க மெஸ் சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிடுவோம். சிலநாள் பசிக்காக எடுப்போம், சில நாள் வகுப்பு போரடித்தால் சாப்பாட்டு டப்பாவைத் திறந்துவிடுவோம்.
உஷாவும் நானும் எப்போதும் கடைசி வரிசையில்தான் இருப்போம். அதனால் வகுப்பு நடக்கும்போதே டப்பாவைத் திறந்து சாப்பிடுவது வாடிக்கையாக நடக்கும். சில நாட்கள் நிம்மி, ஷுபாகூட எங்க பந்தியில் சேர்ந்துக்குவாங்க. அப்படி சாப்பிடும்போது ஒருநாள் டப்பா மூடி கையிலிருந்து தவறி உருண்டோடி கரெக்டாக வாத்தியார் காலடிக்கே போயிடுச்சு. அன்று மங்கோலி சார் வகுப்பு என்பதால் சிக்கலில் மாட்டாமல் தப்பினோம். அன்னைக்கு முழுக்க எனக்கும் உஷாவுக்கும் குளிர் காய்ச்சல் வருமளவுக்கு எல்லாரிடமிருந்தும் மண்டகப்படி. இந்த வருஷம் கண்டிப்பாக பாஸ் ஆக மாட்டீங்கன்னு பயம் காட்டவே ஒரு கோஷ்டி சேர்ந்துடுச்சு.
அந்த பயமெல்லாம் போக கொஞ்ச நாள் ஆச்சுது.
மறுபடி ஆய்வக வகுப்புக்குப் போகும்போது மீண்டும் சோதனை வந்தது. ஆய்வகத்தில் ஆசிரியர் செய்து காண்பித்துக் கொண்டிருந்த பயிற்சிமுறை பின்னாடி நின்றவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. சற்று குள்ளமான ஆசாமி ஒருத்தி ( உஷா என்றுதான் நினைக்கிறேன்) எட்டிப் பார்க்க நினைத்து தோழி என்று நினைத்து வாத்தியாரின் ’கோட்’டைப் பிடித்து இழுத்துவிட்டாள். கோபத்துடன் சட்டென்று திரும்பியவரின் கண்ணில் பட்டது நான்தான். இழுத்தவள் தள்ளி நின்றுகொண்டாள்.அவர் முறைத்தாரா புள்ளி வைச்சாரான்னு எல்லாம் தெரியாது.
இதே மாதிரி ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் தெரிந்தும் தெரியாமலும் நடந்துகொண்டேதான் இருந்தது. ஒரு கட்டத்தில் தினமும் பயந்து கொண்டிருப்பதைவிட பரீட்சை அப்போ பார்த்துக்கலாம்னு தெளிவு வந்துடுச்சு. அதற்குப் பிறகு என்ன நடந்தாலும் கண்டுக்காமல்தான் இருந்தோம். ஆனாலும் பிரச்னைகள்தான் எங்களை விடுறதா இல்லை.
விடுமுறை நாட்களில் வீட்டுக்குப் போகாத நேரங்களில் பொழுது போக்க ஏதாவது செய்து கொண்டே இருப்போம். பொழுது போக்கு(Recreation Room) அறையில் கறுப்பு வெள்ளை TV யில் வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும் பார்ப்போம். ரேடியோவில் பாட்டு கேட்போம். கல்லூரிக்கும் விடுதிக்கும் நடுவில் உள்ள இடத்தில் பட்டம் விடுவது, விடுதியின் பக்கவாட்டில் THROW-BALL விளையாடுவது, கல்லூரியைச் சுற்றி சைக்கிள் விடுவது என்றும் நேரத்தைப் போக்குவோம். விடுதி காவலாளிகளின் சைக்கிள்தான் எங்கள் வாகனம்.
ஒருசிலர் தவிர எல்லோரும் அமெச்சூர்தான். சைக்கிளில் யாராவது ஏற்றி விடணும், இடையில் கீழே விழுந்தால் மறுபடி ஏறத் தெரியாது, உருட்டிகிட்டேதான் வரணும். கீழே விழாமல் ஓட்டினால் கல்லூரியை எத்தனை ரவுண்டு வேண்டுமானாலும் சுத்துவோம்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் ரெண்டு மூணுபேர் வாட்ச்மேன்களின் சைக்கிள்களில் இதே மாதிரி சுற்றிக் கொண்டிருந்தோம். கல்லூரியின் முன்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சோதனைமாதிரி எங்களுக்கு எதிரே தண்டபாணி சார் வந்து கொண்டிருந்தார். கல்லூரியை அடுத்திருந்த அலுவலர்கள் குடியிருப்பில் தங்கியிருந்ததால் காலாற நடந்து வந்தார் போலிருக்கு. அவரைப் பார்த்ததும் மரியாதைக்காக கீழே இறங்கியிருக்கணும். ஆனால் இறங்கிவிட்டால் மறுபடி ஏற்றிவிட ஆள் கிடையாது. ஒரு கையைத் தூக்கி வணக்கம் சொல்ல முயற்சித்தால் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழ வேண்டியதுதான். ஆனது ஆகட்டும் என்று அவரைக் கண்டுக்காத மாதிரி சிட்டாகப் பறந்துவிட்டோம். அதன் பின் விளைவுகள் எப்படியிருக்குமென்று தெரியும், ஆனாலும் சூழ்நிலைக் கைதிகளாக கடந்து சென்றோம். கடைசிப் பரீட்சைக்குக் கொஞ்ச நாட்களே இருந்தநிலையில் இப்படியொரு சோதனை.
எல்லா சேட்டைகளும் பிஸியாலஜியைச் சுற்றியே நடந்தது. எங்க scoreஉம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஏற்கனவே Ultra filtration உம் இந்தப் பாடத்தில்தான் நடந்திருந்தது. பரீட்சைக்கு முன்னாடியே பெயிலாக்கப் பட வாய்ப்புள்ளவர்கள் என ஒரு ஹிட் லிஸ்ட் விடுதிக்கு வரும். என் பெயரும் அதில் இருந்தது .
என்ன சேட்டை பண்ணினாலும் பரீட்சைன்னு வரும்போது வைராக்கியமாகப் படிச்சு பாஸாயிடணும். அதுதான் நயினார் அண்ணன் எனக்குக் கொடுத்திருந்த சலுகை. நானும் சீரியஸாகப் படிக்க உட்கார்ந்து விடுவேன். என் தோழியரும் அப்படித்தான். Dayscholars கூட படிப்பு விடுமுறை(study holidays)க்கு விடுதிக்கு வந்துவிடுவார்கள். விடுதியின் தோற்றமே முற்றுமாக மாறிவிடும். அநாவசிய சத்தங்களே இருக்காது. எங்கே பார்த்தாலும் புத்தகமும் கையுமாகத் திரியும் மக்கள்தான் தெரிவார்கள்.
பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிச்சதுமே, ஒரு அட்டவணை போட்டு கப்ஃபோர்ட் கதவில் ஒட்டி வைப்பதுதான் என் முதல் வேலை. அதன் கடைசி கட்டமாக இருக்கும் முடிக்காத பகுதி (left-out portions) இல்லாமல் படிக்க முயற்சிப்பதுதான் அடுத்த குறிக்கோள். தேர்வுக் காய்ச்சல்( Exam Fever) என்று சொல்லுவாங்களே அது மிகச் சரியானது. நேரம் கெட்ட நேரத்தில் விழிப்பதும், தூங்குவதும் மாணவப் பருவத்துக்கே உரித்தானது. சிலர் சத்தமாக, சிலர் அமைதியாக, சிலர் எழுதிப்பார்த்து, சிலர் மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லி - ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாகப் படிப்பாங்க. எல்லோருமே ஏதோ மந்திரிச்சு விட்ட மாதிரி ஒரு மயக்கதிலேயே சுத்திகிட்டு இருப்பாங்க.
எனக்கு கதைப் புத்தகம் வாசிப்பதுபோல் வாசித்துக் கொண்டே இருக்கணும். என்னால் மனப்பாடம் செய்வே முடியாது. ஆனால் நரம்பு மண்டலங்களும், இரத்த நாளங்களும் ஏகப்பட்ட பெயர்களாக இருக்கும். ஒருமுறை படித்தால் மனதில் தங்காது. அதற்குரிய குறியீடுகளை மீனாக்கா சூரி மாதிரி ஆட்களிடம் கேட்டு மனனம் செய்து கொள்வேன். அனாடமி படிக்கப் படிக்க ஆசையாக இருக்கும். சலிப்பே தட்டாது. மத்த ரெண்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிப்பேன்.
சிலசமயம் படிப்பு விடுமுறைக் காலங்களில் விடுதியை மூடிவிடுவார்கள். மெஸ் இருக்காது. எல்லோரும் வீட்டுக்குப் போய்விடுவார்கள். எங்களைப் போல் ஒரு சிலர் மட்டுமே விடுதியில் இருப்போம். நான் எம்.பி.பி.எஸ். முடிக்கும் வரை எங்கள் வீட்டில் மின்சார வசதி கிடையாது. வீட்டிற்குச் சென்றால் இரவு வெகு நேரம் படிக்க முடியாது. அதனால் விடுதியிலேயே தங்கிவிடுவேன். அருகிலுள்ள அசோக் மெஸ்ஸில் அக்கவுண்ட் வைத்து சாப்பிட்டுக் கொண்டு விடுதியிலேயே தங்கிவிடுவோம். படிக்கட்டு, ஜன்னல் கைப்பிடி, மொட்டை மாடி, தண்ணீர்த் தொட்டியின் அடிப்பாகம் என்று வித விதமான இடங்களில் அமர்ந்து படிப்பது சுகமான அநுபவம். Dejavu வாக சில இடங்களும் அதன் தொடர்பான நினைவுகளும் பசுமையாக உள்ளன.
நாங்க படிச்ச காலத்தில் மதுரையும் திருநெல்வேலியும் மட்டும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் (MKU) இணைந்திருந்தது. மற்ற மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் இருந்தன. இந்த ரெண்டு கல்லூரியும் சேர்ந்து ‘ஆ ஊ ’- ன்னா ஏதாச்சும் ஸ்ட்ரைக் பண்ணி பரீட்சையைத் தள்ளி வைச்சிடுவாங்க. ஒரு வருஷம் கூட நாங்க சொன்ன தேதியில் பரீட்சை எழுதினது இல்லை.
இரண்டாம் ஆண்டு பரீட்சையில் தேர்வு பெறுவது ரொம்ப முக்கியமானது. அதுவரையில் கல்லூரிக்கு உள்ளேயேதான் சுற்றிக் கொண்டிருந்தோம். மூன்றாம் ஆண்டில்தான் மருத்துவ மனைக்குள் செல்ல முடியும். உண்மையான மருத்துவப் படிப்பும் நோயாளிகளுடன் பரிச்சயமும் அப்போதுதான் ஆரம்பிக்கும். அதனால் எல்லோருமே ஒருவித
எதிர்பார்ப்புடன் வெறியுடன் படித்துக் கொண்டிருந்தோம்.
எவ்வளவு படித்தாலும் எல்லாமே மறந்து போவதுபோன்ற மாயை இருந்துகொண்டே இருக்கும். அதனால் வரும் மன அழுத்தம் சில சமயங்களில் படிக்கவே முடியாமல் செய்துவிடும்.
அதுபோன்ற ஒரு நாளில் எனது நிலைமையைப் பார்த்த சூரி என்னைத் தேற்றும் விதமாக ,கொஞ்ச நேரம் ஏதாவது சொல்லித் தருவதாக அழைத்துப் போனாள். நாங்கள் இருவரும் விடுதியின் மூன்றாம் தளத்தில் அடுத்தடுத்த அறைகளில் இருந்ததால் அவ்வப்போது இதே மாதிரி சந்தித்துக் கொள்ளுவோம்.
நான் படித்திராத சில சிறு குறிப்புகள் சொல்லித் தந்தாள். உணவுப் பொருட்களைப் பார்த்தவுடன் நாயின் வாயில் எச்சில் சுரப்பது 'நிபந்தனைக்குட்பட்ட அனிச்சை செயல்' (Conditioned Reflex) என்று அழைக்கப்படும். அதற்குரிய நரம்புமண்டல எதிர்வினைகள்
பற்றியும் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தாள். நாய் ஒன்று ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கும் படம் ஒன்றும் காண்பித்தாள்.
அவள் சொல்லித் தரத்தர எனக்குள்ளும் கொஞ்சம் புத்துணர்ச்சி தோன்றியதால் இன்னும் ஏதாவது ஒரு சிறு குறிப்பு சொல்லிக் கொடு எனக் கேட்டேன்.
சூரி நல்லா சொல்லியும் கொடுப்பாள், கொஞ்சம் பயமும் காட்டுவாள். முதல் பக்கத்திலிருந்து
கடைசி பக்கம் வரை ஒரு வரி விடாமல் படித்திருப்பாள். அதனால் பாடப் புத்தகத்தில் நரம்புமண்டலத்தின் கடைசி பத்தியில் இருந்த Decerebrate Rigidity என்ற வரியைக் காண்பித்து ஏதாவது தெரியுமா எனக் கேட்டாள். எனக்குச் சுத்தமா எதுவும் தெரியவில்லை. எனக்குத் தெரியாத ஒன்றைக் கண்டுபிடித்து சொல்ல ஆரம்பித்ததில் அவளுக்கு ரொம்ப சந்தோஷம். மிகுந்த ஆர்வத்தோடு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
நடுமூளையின் நரம்புமண்டலம் பாதிக்கப்படும்போது ஏற்படும் விறைப்புத் தன்மை பற்றியது. சிறு குறிப்பாகக் கேட்கப்படலாம். அந்த விறைப்புத் தன்மை Opisthotonos என்று அழைக்கப்படும். கைகால்களை விறைப்பாக நீட்டி உடம்பை வில் போன்று வளைத்துக் கொள்ளும் நிலைமைக்கு Opisthotonos என்று பெயர் என விளக்கி, ஒரு மிருகத்தை வில்லாக வளைத்து படம் வரைந்து
அருமையாக
விளக்கிக் கூறினாள். எந்தெந்த பிரச்னைகளால் அந்த விளைவுகள் ஏற்படும், மனித உடம்பில் அது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதெல்லாம் மனதில் ஆணி அடித்து பதியும் வண்ணமாகச் சொல்லிக் கொடுத்தாள்.
எனது நல்ல நேரமோ அல்லது நிறைய பேரோட கெட்ட நேரமோ அந்த வருடம் Decerebrate Rigidity பெரிய கேள்வியாகவும், conditioned Reflex சிறு குறிப்பாகவும் வந்தது. சின்ன கோடு போட்டாலே ரோடு போடற ஆளாச்சே நான். பெரிய கேள்விக்கு படம் வரைந்து பாகங்கள் குறித்து அட்டகாசமாக எழுதிவிட்டேன். பாடத்தின் கடைசி ரெண்டுவரியாக இருந்ததை நிறையபேர் சரிவர படிக்காததால் அந்த வருட தேர்வு முடிவுகள் ரொம்ப மோசமாக இருந்தது. ஹிட் லிஸ்ட்டில் இருந்த என்னைப்போல் சிலர் தேர்வாகி மிக நன்றாகப் படிக்கக்கூடிய நிறைய பேர் தேர்வாகாமல் போய்விட்டார்கள்.
எழுபத்தைந்து பேர் கொண்ட வகுப்பில் 35 பேர் மட்டுமே மூன்றாம் ஆண்டில் நுழைந்தோம். C Batch தான் மெயின் வகுப்புபோல் இருந்தது. நாங்கள் சொற்ப என்ணிக்கையில்தான் மருத்துவமனை வளாகத்தில் அடியெடுத்து வைத்தோம். உற்ற தோழியர் பலரை பின்னால் விட்டுவிட்டுச் சென்ற அந்த ஆறு மாதங்களும், எங்களுக்கு அவ்வளவாக மகிழ்ச்சியூட்டவில்லை. தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி அவர்களெல்லாம் எங்களுடன் இணைந்த பிறகுதான் இழந்த சந்தோஷம் மீண்டு வந்தது.
Dhanu Ezhil

0 Comments:

Post a Comment

<< Home