Thursday, December 09, 2021

அலை-58

 அலை-58


"பேர் சொல்லப் பிள்ளை பேர் சொல்லும் பிள்ளை"

அநேக சமயங்களில் பெயர்தான் மனிதனின் அடையாளமாக இருக்கிறது. பெயருக்குப் பின்னால் வால் போல் அடுக்கிக் கொண்டிருக்கும் பட்டங்களோ பதவியோ மனிதனை அடையாளப் படுத்துவதில்லை. முன்னால் நிமிர்ந்து நிற்கும் பெயரைப் பொருத்தே அடையாளம் கிடைக்கிறது. பேர்லே என்ன இருக்கு, நாமளே வைச்சுக்கிறதுதானே என்று வாதிட்டாலும், பெயரில்லாவிட்டால் அடையாளமே இல்லை. அதனால்தான் பிறந்ததைக் கொண்டாடும் அளவுக்கு பெயர் சூட்டும் வைபவங்களும் விமர்சையாகக் கொண்டாடப் படுகின்றன. 


ரொம்ப நாள் கழித்து பார்க்கும் நபரின் பெயரை நினைவு படுத்தி அழைத்துப் பாருங்கள். அந்த முகத்தில் ஒரு ஆச்சரியம் கலந்த அந்நியோன்யம் வந்துவிடும். நம் பெயரை நினைவு படுத்தி அழைக்கும் வாத்தியார்களுடன் நமது நெருக்கமும் அதிகமாகத்தானே இருக்கும். அவ்வளவு முக்கியம் வாய்ந்த பெயர்கள் எப்படியெல்லாம் மருவி திருவி பிய்ந்து வழக்காடப் படுகிறது என்பதைப் பார்த்தால் , உண்மையாகவே பெயர் முக்கியம்தானா என்றும் தோன்றுகிறது. 


கொஞ்ச காலங்களுக்கு முன்பு வரை பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தா பாட்டி அல்லது குடும்பத்தின் மூத்த உறவுகளின் பெரையே வைப்பதுதான் வழக்கம்.  அதனால் ஒரே பெயருடைய நிறைய வாரிசுகள் அங்கங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். அப்பா பெயரை முதல் குழந்தைக்கு வைத்தால் மாமனார் அல்லது மாமியார் பெயரை அடுத்த வாரிசுக்கு வைக்க வேண்டும். அல்லது இரண்டு தாத்தாக்களின் பெயரையும் மிக்ஸிங் செய்து புதுவிதமான பெயரை வைக்க வேண்டும். அதனால் வரும் சின்னச் சின்ன சண்டைகள் கூட உறவும் உணர்வும் கலந்ததாக இருக்கும்.


இப்போது அந்த மாதிரி வழக்கங்களே ஒழிந்து போய்விட்டன. வாஸ்து சரியில்லை பாணியில் ஜோஸியர் சொல்லும் எழுத்தில்தான் பெயர் ஆரம்பிக்க வேண்டும். அவர் ஆயுத எழுத்து கொடுத்தால்கூட அதிலும் ஒரு பெயரைக் கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு நமக்கெல்லாம் அறிவு ஜாஸ்தி ஆகிவிட்டது. அதனால் வாயில் நுழையாத பெயர்கள்தான் நிகழ்கால வருகைப் பதிவேட்டை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பெயரோடு தொடர்புடைய சுவாரஸ்யங்களும் வழக்காடல்களும் மறைந்து போய்விட்டன.


எங்க வீட்டிலும் பெரியவர்களின் பெயரைச் சூட்டுவதுதான் அந்தக்கால வழக்கம். அப்பாவின் பெயர் ஐநூற்று முத்து என்பதால் எட்டு பிள்ளைகளின் வீட்டிலும் முத்து என்ற பெயர் உள்ள பேரப் பிள்ளைகள் அநேகம் உண்டு. அதனால்தான் எங்கள் குடும்பப் பெயர் "முத்துக்கள் குடும்பம்". 


 முத்துராமன், முத்துக் கிருஷ்ணன், முத்துக் குமார் என்ற பெயர்களே திரும்பத் திரும்ப வலம் வந்து கொண்டிருக்கும். அண்ணன்  வீட்டில் ஒரு முத்துராமன் இருந்தால் அக்கா வீட்டிலும் ஒரு முத்துராமன் இருப்பான். பெண்பிள்ளையாக இருந்தால் முத்துச் செல்வியோ முத்துலக்ஷ்மியோ இருப்பார்கள். அவ்வளவு ஆசையாக பெயர் வைத்துவிட்டு அதே பெயரில் கூப்பிட மாட்டார்கள். துணைக்கு ஒரு பட்டப் பெயரும் இருக்கும். 


வீட்டுக்கு வந்த மருமகள்கள் மாமனார் பெயரைச் சொல்லிக் கூப்பிட மாட்டார்கள். மரியாதைக் குறைவாம்.

பெரிய அண்ணனின் மகன் பெயர் முத்துராமன். பெரிய மதினியோ சிவாஜி கணேசனின் ரசிகை. அதனால் அந்த நேரத்தில் வெளிவந்த ”வசந்த மாளிகை” படத்தின் சிவாஜி பெயரான “ஆனந்த்” என்ற புனைபெயரைச் சூட்டி மகனை இன்றளவும் அப்படியே கூப்பிட்டு வருகிறார்கள். இன்னொரு மதினி, அக்கா மகன் முத்துக் கிருஷ்ணன்  என்ற பெயரை ”இஸ்மாயில்” என்றே கூப்பிடுவாங்க. அவன் அவ்வளவு கலராக இருப்பான். நாங்களெல்லாம் கொஞ்சம் பனைமரம் கலரில்தான் இருப்போம். அதனால் அவனுக்கு மதம் மாறாத பெயர் மாற்றம் கிடைத்தது.

அதே பணியில்தான் தாத்தா பாட்டி பெயர் வைக்கப் பட்டவர்களெல்லாம் ரெண்டு பெயருடன் “அந்நியன்” மாதிரி அலைந்து கொண்டிருப்பார்கள்.


 ராம்குமார் “துரை’’ ஆனான். மரகதக்கா “நல்லக்கா” ஆனாள். சிவகாமிநாதன் “செக்கன்” ஆனான். நயினார் அண்ணன்தான் பாவம். அவனுக்கு பெயர் வைக்கப்பட்ட தாத்தா பூந்திக் கடை வைத்திருந்ததால் அவன் “பூந்தி” ஆகிட்டான். சரஸ்வதி ”சச்சு” ஆனாள். நாராயணன் கூட “நானா” ஆகிவிட்டான்.என் பெயர் மட்டும்தான் மாறாமல் சுருங்காமல் ’தாணு” என்றே இருந்தது. 


அம்மாவைப் பெற்ற ஆச்சிக்கு சுசீந்தரம்தான் சொந்த ஊர். அங்குள்ள தாணு மாலையன் சுவாமி பெயரை பிள்ளைகளுக்கு வைப்பார்கள். பொதுவாக ஆண்பிள்ளகள்தான் ”தாணு” என்று பெயரிடப் படுவார்கள். என்ன காரணத்தாலோ எங்க ஆச்சிக்கு அந்தப் பெயரை வைத்துவிட்டார்கள். குடும்ப வழக்கப்படி இறங்கு வரிசையில் 

கடைக்குட்டியான எனக்கு ஆச்சி பெயர் சூட்டப்பட்டது. ஆண் பெயர் சூட்டப்பட்ட பெண்கள் வரிசையில் நானும் இணைந்தேன். எனக்கு முன்னால் அந்தப் பெயர் சூட்டப் பட்டவர்கள் எல்லாம் நாளடைவில் அதைத் தாயம்மாள் என்று மாற்றிக் கொண்டு விட்டதால், நான் மட்டுமே அதே பெயரில் இருந்தேன். அதனால் தாணு ஆச்சிக்கு என் மேல் கொள்ளைப் பிரியம். நிறைய சலுகைகளும் தின்பண்டங்களும் எனக்கு மட்டும் ஸ்பெஷல். என்னை யாரும் திட்டவோ அடிக்கவோ விட மாட்டார்கள். அதனால் நான் கொஞ்சம் அடங்காமலே வளர்ந்துவிட்டேன். 

 இடையிடையே கம்யூனிஸ்ட் வீட்டில் 

கடவுள் பெயர்களும் நடமாடும். சரஸ்வதி பூஜையன்று பிறந்த

அக்கா சரசுவதி ஆனாள். சுதந்திர தினத்தன்று பிறந்தவளுக்கு சுதந்திர தேவி என பெயர் வைக்க முயன்று சூழ்நிலை 

காரணமாக சுடலை வடிவு ஆனாள், வடிவு 

ஆச்சி பெயர் வரிசையில் வெயிட்டிங் போலும்.


எங்க அப்பா பெயரை எல்லா வாரிசுகளின் பெயரிலும் சேர்த்து வைத்தவர்கள், அம்மா பெயரான “நாகம்மாள்” என்ற பெயரை மட்டும் யாருக்குமே வைக்கவில்லை. சித்தி பெயரை வைத்து “ ஜெய பார்வதி” கூட உண்டு. ஆனால் அம்மா பெயரை யாருக்குமே வைக்கவில்லை. ஏனென்று இதுநாள் வரை எனக்கும் புரியவில்லை. ஆணாதிக்க சிந்தனை அவ்வளவாக இல்லாத எங்கள் குடும்பத்தில்கூட பெண்மையைப் போற்றும் பாங்கு தவறியது எப்படி என்று வியந்து கொண்டிருக்கிறேன்.


பெரியவர்களின் பெயர் இல்லாவிட்டால் கடவுள் பெயர்கள் மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த வீட்டில் கொஞ்சம் வித்தியாசமான பெயர்கள் மெதுவாக நுழைந்தன .அதைத் தொடங்கி வைத்தவன் நயினார் அண்ணன்தான் என்று நினைக்கிறேன். 


அண்ணனுக்குக் காண்டேகரின் எழுத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரது  “கிரெளஞ்சவதம்” என்ற படைப்பில் வரும் திலீபன் என்ற கதாபாத்திரத்தின் மீது உள்ள வாஞ்சையால் ,தன் மகனுக்கு “திலீபன்” என்று பெயரிட்டான். அது கொஞ்சம் உருமாறி திலீப் குமார் ஆனது தனிக்கதை. ”முன்னிணையாகிய அன்றிலின் மோகங்கொள் ஆணினைக் கொன்றனை பன்னெடுங்காலம் வாழ்கலை வாழ்கலை வேடனே” என்ற காண்டேகரின் வரிகள் இன்னும் நினைவலைகளில் மிதக்கிறது. பாரதியாரின்பால் கொண்ட காதலால் இரண்டாவது பெண் “கண்ணம்மா” ஆனாள். ”ஜோதி” என்ற மகளின் பெயருக்குக் கூட ஏதாவது காரணம் இருக்கும். தலைவர் ஜோதிபாசு அவர்கள் நினைவாகக்கூட வைத்திருக்கலாம். 


ரொம்ப காலத்துக்குப் பிறகு மதம் மாறி பெயர் மாற்றிக் கொண்டது நானாகத்தான் இருக்கும். திருமணத்தின் பொருட்டு கிறித்துவப் பெயர் ஏதாவது வைக்க வேண்டியிருந்தது. எனக்குப் பிடித்த பெயர் எதையாவது வைத்துக் கொள்ளும்படி எழில் கூறிவிட்டார்கள். எனக்கு நிறைய பெயர்கள் பரிச்சியம் இலாமல் இருந்தது. என்ன பெயர் தேர்வு செய்யலாம் என்று யோசித்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தது “ராஜ பார்வை” திரைப்படத்தின் நாயகி “நான்ஸி” தான். உரிய ஒப்புதலுடன் “நான்சி தாணு” ஆகிவிட்டேன்.  


ஈரோட்டில் நிறைய பேருக்கு என்னை நான்சி என்றுதான் தெரியும். இங்கு வந்த புதிதில் ”தாணு” என்ற பெயர் எனது கணவர் பெயர் என்று நினைத்தவர்கள் ஏராளம். கெஸட்டில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தபோது எப்படியோ இனிசியல் காணாமல் போய்விட்டது. அதனால் பாஸ்போர்ட் பெறுவதில் ஏக சிக்கல் வந்தது. எப்படியோ முதல் பெயர் இல்லாமல் ( First Name Unknown) என்ற பட்டத்துடனேயே பாஸ்போர்ட்டும் வாங்கி , எல்லா நாடுகளையும் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான்சி என்ற பெயர் மிகப் பிரபலமாக இருப்பதால் எல்லா ஏர்போர்ட்டிலும் எனக்கு சிக்கிரம் கிளியரன்ஸ் கிடைத்துவிடும். 


மகளுக்குப் பெயர் வைக்கும்போது ”ஆலீஸ்” என்று மாமியார் பெயரில் ஆரம்பித்தோம். ஒரு பைபிள் பெயர் சேர்க்க வேண்டுமென்று ”மரியா” சேர்த்தோம். ஆசைக்காக  ”ஜாஸ்மிதா” இணைந்து கொண்டது. அம்மாவைப் போலவே மகளுக்கும் இனிசியல் விடுபட்டுப் போனது. எந்த அப்ளிகேஷன் நிரப்பினாலும் , முழுப் பெயரும் கட்டங்களுக்குள் அடங்காமல் போய்விடும். அதனால் மகள் கடுப்பாகிப்போய் “ஜாஸ்மிதா” வை Surname ஆக மாற்றிக் கொண்டுவிட்டாள். ஆனாலும் குடும்பத்தில் எல்லோரும் அவளை அழைப்பது “ குட்டிம்மா”தான். 


இந்தத் தொந்தரவே வேண்டாமென்று மகனுக்கு “தாணு+எழில் சேர்த்து “தானியேல்” என்று ஒற்றைப் பெயராக வைத்தோம். அக்காவுக்கு மட்டும் மூணு பெயர் ,எனக்கு ஒண்ணுதானா என்று கேட்டு “ஜான்” என்ற பெயரை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுவான். 


இங்கு எல்லோரும் என்னை நான்சி என்றே கூப்பிட்டாலும், ஒரு சிலர் மட்டும் இன்னும் “தாணு’ என்றே வாய் நிறைய அழைப்பார்கள். திருமணத்திற்கு முன்பிருந்தே நண்பர்களாகியிருந்த பார்பரா, ராஜன் எல்லோரும் இன்னும் தாணு என்றே கூப்பிடுவாங்க. நெஞ்சில் நீங்கா நினைவுகளுடன் இருக்கும் அமரர்.தோழி நளினா , எப்பவுமே தாணுன்னுதான் கூப்பிடுவாங்க. 


 சமீபத்தில் கன்னியாகுமமரியில் நடந்த TvMC -  1977 Batch meet இல் காது நிறைய பழைய பெயரைக் கேட்டு மகிழ்ந்தாச்சு.  தாணாச்சி என்று எங்க வீட்டு வாண்டுகள் கூப்பிடும்போது நான்சியை விட தாணுவே பொருத்தமாகத் தெரிகிறது. தாணுஅக்கா, தாணுஅத்தை எல்லாம் தினமும் அலைபேசி மூலம் ஒலித்துக் கொண்டே இருக்கும். 


தாணுவிலிருந்து நான்சியாக உருமாற மிக முக்கிய காரணம் அமரர். ராஜீவ் காந்தியின் படுகொலைதான். அதில் முக்கிய கொலையாளியான  ”தனு” அசப்பில் பார்க்க என்னைப்போன்றே இருப்பாள். கேர் கட், பெயர் பொருத்தம், உருவப் பொருத்தம், எல்லாவற்றிற்கும் மேலாக தென் தமிழக பேச்சு வழக்கின் ஒற்றுமை எல்லாம் சேர்ந்து தனுவின் சொந்தக்காரி போலவே இந்த தாணு பார்க்கப் பட்டாள்.  


அந்த சமயத்தில்தான் DGO படிக்க ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்ந்தேன். கேலிக்காக என்னை அருகில் அழைத்து வயிற்றைத் தடவிப் பார்த்து பெல்ட் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதித்த மேடம்கள் கூட உண்டு. அதுவரை பெயர் மாற்றம் கல்யாணத்தின் பொருட்டு மட்டுமே இருந்தது. இந்த வம்பே வேண்டாமென்று

உடனடியாக கெஸட்டில் பதிவு பண்ணி நான்சி தாணுவாக முழுவதுமாக மாறிவிட்டேன். 


என்ன பெயர் வைச்சாலும், எவ்வளவு அழகான பெயராக இருந்தாலும், கூப்பிடுறவங்களைப் பொறுத்துதான் பெயர் விளங்கும். சிவகாமிநாதன் என்பது ரெண்டாவது அண்ணன் பெயர், ஆனால் அது செக்கன் என்ற பட்டப்பெயரால் மறந்தே போகப் பட்டுவிட்டது. அண்ணன் கிராம நிர்வாக அதிகரியாக திருச்செந்தூர் அருகில் வேலை பார்த்து வந்தான். எழிலின் தம்பியும் அவன் மனைவியும் ஒரு மனை பத்திரப் பதிவிற்காக தாலுகா ஆபீஸ் போயிருந்தார்கள். அண்ணன் அங்கு வேலை செய்ததால், அவனின் உதவியைப் பெறத் தேடியிருக்கிறார்கள். 


அங்கு வேலை செய்பவர்களிடம் Mr. செக்கன் VAO , எங்கே இருக்கிறார் எனக் கேட்டிருக்கிறார்கள். அந்த மனிதர் இவர்களை முறைத்துப் பார்க்க, மரியாதையின்றித் தவறுதலாக பெயரைச் சொல்லிவிட்டோம் என்று நினைத்து , ”காதலிக்க நேரமில்லை” சினிமாவில் 'அசோகரு உங்க மகரா' என பாலையா கேட்ட தொணியில் மறுபடியும் Mr. செக்கார் இருக்கிறாரா என்று நீட்டி முழக்கிக் கேட்டு திட்டு வாங்கிட்டு வந்திருக்கிறார்கள். செக்கண்ணன் என்றே அழைக்கக் கேட்டு அதுதான் அண்ணனின் உண்மையான பெயர் என்று நினைத்ததால் வந்த குழப்பம். 


பேச்சுக்குப் பேச்சு வீட்லே, பேரைக் கெடுத்திடாதேன்னு அப்பாக்கள் வசனம் பேசுவாங்க. இந்த மாதிரி பெயர் மாறிப் போறதைத் தான் சொல்லியிருப்பாங்க போலிருக்கு. ஒரு பெயர் படுத்தும் பாடு இவ்வளவு இருக்கு! இந்த வம்பே வேண்டாம்னு அடுத்த நூற்றாண்டில் பெயர்களே அற்றுப் போய் ,சீரியல் நம்பர் கொடுத்து கூப்பிட்டாலும் கூப்பிடலாம்.

0 Comments:

Post a Comment

<< Home