Thursday, December 09, 2021

அலை-56

 அலை-56

”நான் சிரித்தால் தீபாவளி” 

 ஒவ்வொரு வருடமும் தீபாவளியோடு இணைந்த இனிமையான அல்லது மறக்க முடியாத நினைவுகள் ஏதாவது இருக்கும். ஆனால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு வந்த இரண்டாவது தீபாவளியும் மறக்க முடியாத நினைவுகளைத் தந்தது.


எங்கள் வகுப்புத் தோழி (நினைவில் வாழும்) ராமலக்ஷ்மிக்கு முதலாம் ஆண்டு முடியும்போதே திருமணமாகி இருந்தது. அவளது தாய் மாமாவைத்தான் திருமணம் செய்திருந்தார்கள். அவளைப் பார்க்க அவர் வரும்போதெல்லாம் நாங்களும் ஆஜராகி கலாய்ப்பது வழக்கம். நாங்கள் அனைவருமே அவரை மாமான்னுதான் கூப்பிடுவோம். 18 வயது முடிந்த உடனேயே நடந்த திருமணம். அவர் மதுரா கோட்ஸ் கம்பெனியில் மானேஜர் லெவலில் இருந்தார். ஸ்டடி ஹாலிடேஸில் அவள் விடுதியில் தங்கிப் படிக்கும்போதும் தவறாமல் ஆஜராகி விடுவார்.


நாங்கள் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த சமயத்தில் அவர்களது தலை தீபாவளி வந்தது. அவள் வகுப்புக்குள் நுழைந்ததிலிருந்து எல்லாருமாகச் சேர்ந்து கலாய்க்க வேண்டுமென்று ப்ளான் பண்ணி வைச்சிருந்தோம். அனாடமி லெக்சர் ஹாலில் தான் வகுப்புகள் நடக்கும்.  அவள் உள்ளே நுழைந்ததிலிருந்து கேலியும் கிண்டலுமாக களேபரப் படுத்திக் கொண்டு இருந்தோம்.


 எனது சத்தம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். “உன் தலையைப் பார்த்தாலே தெரிகிறது, தலை தீபாவளின்னு” கூவாத குறையாக கேலிகள் பறந்தன. அதற்குள் ஆசிரியர் வந்துவிடவே, மீதியை விடுதியில் வைத்து பார்த்துக்கலாம்னு அடங்கிவிட்டோம். 


வகுப்பு முடிந்ததும் அரட்டைகளுடன் வெளியே வந்தபோது, வகுப்புத் தோழன் தில்லை ”தாணு! இங்கே வா” என்று கூப்பிட்டான். அகர வரிசையில் தாணு, தில்லை இரண்டும் அடுத்தடுத்து வருவதால் எங்களுக்குள் கொஞ்சம் பரிச்சியம் உண்டு. ஏதோ பாடம் சம்பந்தமாகப் பேசப் போவதாக நினைத்து அருகில் சென்றேன். முகமெல்லாம் சிவந்து ருத்ர மூர்த்தியாகப் படபடவென்று பேச ஆரம்பித்துவிட்டான்.   "என்ன நினைச்சுகிட்டு இருக்கே? தலை தீபாவளியா? தலையைப் பார்த்தாலே தெரியுதேன்னு சொல்லுறே. உன் தலையை எடுத்துடுவேன். ஜாக்கிரதை” என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கத்தி திட்டுகிறான். 


எனக்குத் தலையும் புரியலை, காலும் புரியலை. வகுப்புத் தோழர் தோழியர் நிறைபேர் சுத்தி நின்றிருந்தார்கள். ரொம்ப அவமானமாகப் போயிடுச்சு. எங்க வகுப்பு பசங்களை நான் சட்டை பண்ணுவதே கிடையாது.அதுவும் தில்லை மாதிரி படிப்ஸ் கோஷ்டிகள் பக்கம் தலையைக்கூடத் திருப்ப மாட்டேன். அவனைப் பத்தி நான் எப்போ பேசினேன்னு யோசிச்சுப் பார்த்தேன்.


அப்புறம்தான் ராமலக்ஷ்மியை நாங்கள்  கேலி பண்ணிக் கொண்டிருந்ததை, தன்னைப் பண்ணியதாகத் தப்பர்த்தம் எடுத்திருக்கிறான் என்று புரிந்தது. அவனும் அன்றுதான் சலூனுக்குச் சென்று சிகை அலங்காரம் செய்து வந்திருக்கிறான். அதைத்தான் நான் சுட்டிக்காட்டி கேலி பண்ணுவதாகப் புரிந்து கொண்டிருக்கிறான். 

எனக்கும் மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது. யார் சலூனுக்கு போறாங்கன்னு பார்க்குற வேலை எங்களுக்குத் தேவையில்லாதது அது இதுன்னு  பதிலுக்கு நானும் கத்த அங்கே ஒரு பெரிய போர்க்காட்சியே அரங்கேறிவிட்டது.


 அனாடமி ப்ரஃபஸரின் அறை அருகில் நடந்த சண்டை என்பதால் உடனடியாக ஆசிரியர்களுக்கு செய்தி போய்,உடனேயே விசாரணைக் கமிஷன் அமைக்கப் பட்டது. ஹுசைன் சார் தான் எங்களை விசாரித்தார். நாங்களெல்லாம் அப்போது பெண் விடுதலை, புரட்சின்னு ஏகமாகப் பேசிகிட்டு அலையிற ஆட்கள். அதனால் ஒரு ஆண் என்னைத் தவறாகத் திட்டியதற்கு தோழிகளும் சேர்ந்து பொங்கி எழுந்துவிட்டோம். 

ஹுசேன் சார் பாடுதான் ரொம்பத் திண்டாட்டம் ஆகிவிட்டது. தில்லை வகுப்பின் முதல் மாணவன், நன்கு படிக்கக்கூடியவன். எந்த வம்புக்கும் போகாத ஆள். தவறான புரிதலால் என்னைத் திட்டியது அவன் தவறுதான் என்பது தெளிவாகத் தெரிந்ததால் எப்படி சமாளிப்பது என்று குழம்பிவிட்டார்.


நாங்களும் விடுறதா இல்லை. ஆண்பிள்ளை என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? நீ வா போ என்று ஒருமையில் பேசியது எப்படி? பதிலுக்கு நானும் அப்படி பேசியிருந்தால் எப்படி இருக்கும்? இந்த ஆண்களுக்கே ரொம்பத்தான் மிதப்பு. எப்பப் பார்த்தாலும் பெண்களெல்லாம் அவர்களைப் பற்றியே பேசுவதாக நினைப்பு. நாங்களெல்லாம் இவங்களைக் கண்டுக்குறதே இல்லை. எப்படி தலையை எடுத்துடுவேன்னு சொல்லலாம், என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்து போராட்டத்துக்கு ரெடியாகிவிட்டோம். சார்தான் தன்மையாகப் பேசி சமாதானப் படுத்தினார். 


ஆனால் அதன் பிறகு நானும் தில்லையும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். இன்றைக்கு வரை எனது வகுப்புத் தோழர்களில் எனக்கு மிகவும் நெருங்கிய தோழர் தில்லைதான். கலகத்திற்குப் பிறகு வரும் நட்பு நிலையானது. பிரிக்க முடியாதது.


சாதாரண எண்ணெய்க் குளியல் எப்படி ஒரு பிரச்னையை உண்டக்கி விட்டது. அதுக்குப் பிறகு யாருக்குக் கல்யாணம் ஆனாலும் தலை தீபாவளி வாழ்த்துக்கள் சொல்றதே இல்லை. எதுக்கு வம்பு. அன்னைக்கு முழுக்க விடுதியில் அனைவரும் கூடிக்கூடி இது பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். எப்படியாவது அந்த கோஷ்டிகளை மட்டம் தட்டணும்னு முடிவெடுத்துகிட்டோம். பிரசவ வைரக்கியம் மாதிரி கொஞ்ச நாள் கழிச்சு அது மறந்து போய்விட்டது தனிக்கதை. அனாடமி தியேட்டரில் நானும் தில்லையும் ஒரே மேஜையில் எதிர் எதிரே அமர்ந்து உடற்கூறு அறுவை செய்யும் போது இது போன்ற சின்னச் சின்ன சண்டைகளெல்லாம் மறந்தே போய்விட்டது.


அனாடமி தியேட்டரில் கற்றுக் கொண்ட பாடங்கள் அநேகம். முதல் முறை நுழையும் போது மூக்கை துளைத்த பிணவாடை நாட்கள் செல்லச் செல்ல பழகிப் போய்விட்டது. பார்மலின் நிரப்பப்பட்ட தொட்டியிலிருந்து எடுத்து வகுப்புகளுக்காக மேஜைகளில் சாத்தப்பட்டிருக்கும் CADAVERS ஐப் பார்த்து பயந்தவர்களும், வாந்தி எடுத்தவர்களும் பின் நாட்களில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியிருக்கிறார்கள். முதல் முதலில் SCALPEL  எடுத்து போட்ட கீறல் உயிரற்ற உடலின் உள்ளங் கையில்தான்.


 எனக்கு அனாடமி ரொம்ப பிடித்த பாடம். நரம்புகளும் ரத்த நாளங்களும் நமது உடம்பிலும் இப்படித்தானே  வளைந்து பிரிந்து செல்லும் என்பதை உணரும்போது பிரமிப்பாக இருக்கும்.

மொத்த வகுப்பையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்து விடுவார்கள். நாங்கள்  ‘C’ BATCH இல் வருவோம். அனாடமி மட்டும் எல்லோருக்கும் ஒருங்கிணைந்த வகுப்பு. காலையில் முதல் வகுப்பே அதுதான். வெள்ளை கோட் போட்டுக் கொண்டுதான் உள்ளே போக வேண்டும். அதை வாங்குவதற்கும், DISSECTION SET  வாங்குவதற்கும் அலப்பறை பண்ணி பெரிய படம் காட்டுவோம். ஏதோ OPEN HEART SURGERY  பண்ணப் போறது மாதிரி அலட்டல். ஆனால் கோட் போடாமல் போனால் நாமும் பிணவாடை வீசுவோம். முதலில் எல்லாம் தினமும் கோட் துவைக்க வேண்டும் போல் தோணும். அப்புறம் நாட் கணக்கில், வாரக் கணக்கில் துவைக்காமலே அதே கோட் போடப் பழகிவிடும்.


முதலில் உள்ளங் கையிலிருந்துதான் உடற்கூறு தொடங்கும். ஒரே உடம்பின் இரண்டு கைகளில் இரண்டு க்ரூப் இருப்போம். என்னுடன் சூரியகாந்தி, சொர்ணம், விசாலாட்சி ,விஜி, உஷா ஆகியோர் இருந்ததாக நியாபகம். ஒரு குறிப்பிட்ட பகுதியை உடற்கூறு செய்யுமாறு சொல்லியிருப்பார்கள். கன்னிங்காம் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் முறைகளைப் பின்பற்றி செய்து முடித்துவிட்டு ஆசிரியரைக் கூப்பிட வேண்டும். ஹுசேன் சார், மணி சார், காஞ்சனா மேடம் மூவரும் மேற்பார்வை செய்து விளக்கம் சொல்லுவார்கள். 

அப்போதெல்லாம் கையுறை, முகக் கவசம் எதுவும் கிடையாது. வெறும் கையில் அறுக்க வேண்டும். உஷா சரியான கேடி. ஒருநாள் கூட கையால் bodyஐத் தொட்டிருக்க மாட்டாள். ஆனால் DISSECTION முடிந்ததும் சாரைக் கூப்பிட மட்டும் முதல் ஆளாகப் போயிடுவாள். ஹூசைன் சார் வந்தால் திட்டாமல் பொறுமையாகச் சொல்லித் தருவார். மணி சார் வந்தால் தெளிவாக சொல்லித் தருவார். காஞ்சனா மேடத்துக்கு ஏக டிமாண்ட்டாக இருக்கும். பசங்க ஓடி ஓடிப்போய் மேடத்தைக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அனாடமி ப்ரொஃபஸர் எப்போதாவது வந்து மேலோட்டமாக பார்த்து செல்வார். 


அனாடமி தியேட்டர் நல்லா வெளிச்சமாகவும், உயர்ந்த மேற்கூரையுடனும் விசாலமாக இருக்கும். சுமார் ஒன்றரை வருடங்கள் அனாடமி வகுப்புகள் இருந்தது. மருத்துவப் படிப்பில் மிக நீண்ட காலம் தவறாமல் சென்ற ஒரே இடமும் அதுதான். ஒவ்வொரு அவயமாக அறுவை செய்து பார்க்கப் பார்க்க மருத்துவராகும் தகுதியும் கூடிக் கொண்டே வந்தது. இடையிடையே சின்னச் சின்ன குறும்புகளும் கிளு கிளு நிகழ்ச்சிகளும் நடக்கும். மார்பகப் பகுதி, பிறப்பு உறுப்பு பகுதிகளைக் கூறாயும் போது அது சம்பந்தப்பட்ட ஸ்பெஷல் ஜோக்குகளும் சபையில் அரங்கேறும். 


வகுப்பு முடிந்து வெளியில் வந்து கைகழுவும் போது பார்மலின் நாற்றம் கைகளை விட்டுப் போகவே போகாது. எத்தனை முறை சோப்பு போட்டாலும் கைகள் நாறிக் கொண்டே இருக்கும். மதிய சாப்பாடு சாப்பிடும் போது கூட அதன் வாசனைக் குமட்டலைத் தரும். ராகிங் சமயங்களில் அனாடமி தியேட்டரிலிருந்து உடலுறுப்புகள் எடுக்கப்பட்டு பயம் காட்ட உபயோகிக்கப் பட்டதாக சீனியர்கள் நிறைய கதைகள் வேறு சொல்லுவார்கள். அதனால் ஆரம்ப நாட்களில் கெட்ட கனவுகள் வந்து தூங்க விடாமல் பயம் காட்டும். கழிவறை செல்லக்கூட துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லும் அளவுக்கு மன பிராந்தி அதிகம் வரும். 


பயம், நாற்றம், அருவருப்பு எல்லாம் முதலில் இருந்தாலும் போகப் போக பழகிப் போய், கல்லூரி வாழ்க்கையில் மிகவும் பிடித்த இடங்களில் அனாடமி தியேட்டரும் ஒன்றாக மாறிப் போனது.


(வகுப்புத் தோழர்களை ஒருமையில் அழைத்திருப்பதைத் தவறாக நினைக்க வேண்டாம். 44 வருடங்களுக்கு முன்பு அறியாப் பருவத்தின் நிகழ்வுகளை அதே Feel உடன் சொல்லியிருக்கிறேன்)

0 Comments:

Post a Comment

<< Home