Friday, August 27, 2021

அலை-51

 அலை-51

‘‘ பிரண்டை துவையல் ” செய்வது பற்றி நண்பர்கள் குழுமத்தில் அடிக்கடி குறுஞ்செய்திகள் வந்து கொண்டே  இருக்கும். எல்லோரும் நள மஹராஜா மாதிரி சமையல் கலை வல்லுநர்கள் ஆகிவிட்டதாக நினைக்க வேண்டாம். குழுமத்தில் காணப்பெறாத நண்பரையோ அல்லது வாய் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்பவரையோ துவைத்து எடுத்து குமைப்பதற்குப் பெயர்தான் பிரண்ட்(ஐ)துவையல். அதற்கென்றே எங்களை மாதிரி சில ஆடுகளும் மந்திரித்துவிடப் பட்டிருப்போம்.


குமைப்பது என்ற குறும்புத்தனமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் சூடு பிடித்தது. யாரிடமும் நேரிடையான பேச்சு வார்த்தை என்பதே கிடையாது. குமைச்சு எடுப்பதுதான் எங்கள் தலையாய தொழில். வகுப்புத் தோழர்கள் தொடங்கி வாத்தியார்கள் வரை யாரையும் விட்டு வைச்சதில்லை.


 யாரைப்பற்றியாவது குமைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்றால் அவர்களை “எண்ணெய்” லிஸ்ட்டில் சேர்த்துவிடுவோம். வழவழா கொழகொழா டைப் என்று அர்த்தம். எங்களுக்கு செட் ஆகாது. ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் கூட எங்களுக்குக் கிடையாது. 


எதிரில் உள்ளவர்கள் என்ன பேசினாலும் அதிலிருந்தே வார்த்தைப் பிரயோகங்களை உருவாக்கி கேலிபேசி கலகலப்பூட்டுவதுதான்  எங்கள் பொழுதுபோக்கு. யாரையும் மனம் நோகவோ இழிவு படுத்தியோ குமைப்பது இல்லை. அதனால் எங்களது அரட்டைகள் அநேகமாக எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டே வளர்ந்தது. 


அதிலும் வகுப்புத் தோழியரை சீண்டுவதில் உள்ள சுகமே தனிதான். அந்த சீண்டல்களும் கேலிப் பேச்சுகளும்தான் எங்களிடையே இணைபிரியா நட்பு வளையத்தை உருவாக்கி இருக்கிறது என்றும் கூட சொல்லலாம். சீண்டுபவர்களும் சீண்டப்படுபவர்களும் அப்பப்போ மாறிக்கொண்டே இருப்போம். 


நாங்கள் விரிக்கும் வலையில் அடிக்கடி மாட்டுவது உஷாவும் சுப்புவும்தான். இரண்டுபேரிடமும்  வெகுளித் தனமான குழந்தைத்தனம் இருக்கும். உலக மஹா பொய்யைக்கூட ஆணித்தரமாகச் சொன்னால் அப்படியே நம்பிவிடக் கூடியவர்கள். அதிலும் சுப்புலக்ஷ்மிதான் ரொம்ப குட்டிப் பிள்ளை. என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவாள். 


அவளிடம் ஆங்கிலத்தில் வேகமாக ஏதாவது சொன்னால் மறுபடி விளக்கமாகக் கேட்டு தெரிந்து கொள்வாள். ஒருநாள் ஏதோ பேச்சு வாக்கில் “Do or Die” என்று பேசிக் கொண்டிருந்தோம். வேகமான தொனியில் இருந்ததால் அதை அவளால் புரிந்து கொள்ள முடியாமல் மறுபடியும் கேட்டாள். நாங்க பதில் சொல்றதுக்கு முன்னாடி உஷா இடையில் புகுந்து தமிழில் அதற்கு “முத்தம் தரவும்” என்று அர்த்தம் என்று கூறிவிட்டாள். 


எங்ளுக்கோ சிரிப்பு தாங்க முடியலை. ஆனால் சுப்பு அதை அப்படியே நம்பிவிட்டாள். அன்றிலிருந்து சுப்புவை பார்க்கும் போதெல்லாம் உஷா Do or die என்று சொல்லுவாள். முத்தம் தரச்  சொல்லுவதாக நம்பி பயந்து சுப்பு தெறித்து ஓடுவாள். இது கொஞ்ச காலம் விடுதியில் களேபரமாக ஓடிக் கொண்டிருந்தது.கடைசியில் சுப்புவைக் காப்பாற்ற யாரோ உண்மையைச் சொல்லிட்டாங்க. அப்போ கூட சுப்பு கோபப்படாமல் உஷாவை செல்லமாகக் கடிந்து கொண்ட பாங்கு நட்புக்கு இலக்கணம்.


ஒவ்வொருத்தரையும் குமைப்பதற்கு என்றே தனித்தனி ட்ராக் வைச்சிருப்போம். பானு , நளினி மாதிரி ஆளுங்க இங்கிலீஷ் மீடியம் பள்ளியிலிருந்து வந்தவங்க. என்னைக்காவது  இங்கிலீஷில் பேசிட்டாங்கன்னா அன்னைக்கு முழுவதும் அவங்க தான் இலக்கு. குமைச்சுத் தள்ளிடுவோம். அதனாலேயே விடுதியில் ஆங்கிலத்தில் பேசுவதையே தவிர்த்து விடுவாங்க. எங்க வகுப்பில் நிறைய பேர் தமிழ் மீடியத்திலிருந்து வந்தவர்கள். அதனால் ஆங்கிலத்தில் பேசுபவர்களைக் குமைப்பது ஒரு ஜாலி. 


ராமேஸ்வரிதான் கலாய்ப்பதில் கில்லாடி. விஷயமே இல்லாமல் மூணு மணி நேரம் சிரிக்கணும்னு நினைச்சா அவளோட ஜோடி போட்டுக்கலாம்.  ‘‘ மொழி ” படத்தில் ப்ரித்விராஜ்&ப்ரகாஷ்ராஜ் லிப்ட்டில் சிரிக்கிற ரேஞ்சுக்கு நினைச்சு நினைச்சு சிரிக்கிற மாதிரி ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் உண்டு. அவள் இலங்கையிலிருந்து வந்திருந்ததால் நடை உடை பேச்சு எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ரொம்ப தைரியமாகவும் இருப்பாள். ராகிங் மாதிரி விஷயங்கள் அவளை அசைக்கவே முடியாது.  ஒரு வார்த்தை சொல்லிட்டான்னா விடுதியே அதிரும் அளவுக்கு சிரிக்க வேண்டியிருக்கும்.


அடுத்து மாட்டுவது நாகர்கோவில் ஆசாமிங்கதான். அவங்களோட உச்சரிப்பும் வார்த்தைகளும் மலையாள வாடையுடன் இருக்கும். எங்களுக்கு அது கொஞ்சம் காமெடியாகத் தெரியும். தமிழுக்கே தனி அராதி தேவைப்படும். அதிலும் நண்பர்களை அவர்கள் அழைக்கும் “ மக்ளே ” என்ற வார்த்தைதான் எங்கள் முதல் இலக்கு.அவங்க கொன்னு களையும்ன்னு சீரியசாகச் சொல்லும்போது , எதைக் களையணும்னு கேலி செய்து குமைப்பது செம ஜாலி.


நாங்க குமைக்க ஆரம்பிக்கும் முன்பே முறைத்துப் பார்த்து அடக்கிவிடும் ஆட்களும் உண்டு. அதிலும் லோகாவின் அனல் பார்வையில் மாட்டினால் அத்தனைபேரும் அம்பேல். அப்படியே பம்மிப் போய் அடுத்த தளத்துக்குப் பறந்துவிடுவோம். அதனாலேயே அவங்களோட இரண்டாம் தளத்துக்கு அடிக்கடி போறதில்லை. சில கோஷ்டிகள் அவளோட பாதுகாப்பில் தப்பிச்சுக்குவாங்க. நாங்க சீண்ட முடியாது.


சில மக்கள் எங்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. என்ன சொன்னாலும் எப்படி குமைச்சாலும்  சின்ன சிரிப்புதான். அவங்ககிட்டேயெல்லாம் எங்க பருப்பு வேகாது.கொஞ்சம் அதிகமா குமைக்க ஆரம்பிச்சா நம்மளை உட்கார வைச்சு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் எங்களோட “புளி” ஜோக்குகளுக்கு சிரிக்கவும் கொஞ்சம் பேர் உண்டு. சஹாயமேரி, ராமலட்சுமி(நினைவில் வாழும்), ஸ்டெல்லாவெல்லாம் தங்கமான பிள்ளைகள்.

 நாங்க என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க, நிரந்தர ரசிகைகள். 


ஜெயாதான் சூப்பர் வேதாந்த வாதி.  “என்னடா பொல்லாத வாழ்க்கை’’தான் அவளோட ட்ரேட் மார்க் பாட்டு. எதுக்கும் அசைய மாட்டாள். குமைக்கிறதைக்கூட ரொம்ப ஜாலியாக எடுத்துக்குவாள். எங்க எல்லாருக்கும் சட்டாம்பிள்ளை மீனாக்காதான். அவங்களை மட்டும் குமைக்கவே முடியாது. மத்தவங்களையும் குமைக்க விடமாட்டாங்க. நல்லா திட்டு கிடைக்கும். அவங்க படிக்கப் போன பிறகு ஒரு மூலையில்தான் எங்க அரட்டை அரங்கம் நடக்கும். ஆனால் சூரியகாந்தி சத்தமா சிரிச்சு காட்டிக் கொடுத்திடுவாள். துரோகி.


ரோட்டை ஒட்டிய அறைகளில்தான் அடிக்கடி இந்த மாதிரி கூடுகைகள் நடக்கும். அந்த சமயத்தில் யாராவது ஆண்கள் சைக்கிளில் கடந்து போனால் அன்றைக்கு அவர்களைப் பற்றிய கதா காலட்சேபமாகத்தான் இருக்கும். விடுதி வாசலில் ஜோடியாகப் பேசிக்கொண்டிருப்பவர்களும் எங்கள் அரட்டையிலிருந்து தப்புவதில்லை. தினம் தினம் வெவ்வேறு ஜோடிகள் நிற்பதால், புதுப்புது புரணிகள் பேசுவோம். 


இப்படியெல்லாம் பில்ட்அப் கொடுக்கிறதாலே பெரிய ரவுடிக் கூட்டம்னு நினைச்சுடக் கூடாது. பரிதாபமாகத்தான் சுத்திகிட்டு இருப்போம். எல்லாம் உள்வீட்டு  அட்டகாசம் மட்டும்தான். எங்களையும் குமைக்க ஒரு சீனியர்ஸ் கோஷ்டி உண்டு. ஜாலியாக ஓட்டுபவர்களுடன் , நாங்களும் சேர்ந்து கொண்டு ப்ரண்ட்ஸ் ஆயிடுவோம். கொஞ்சம் கடுப்பேத்துற ஆட்களை ஒதுக்கி வைச்சிடுவோம். 


வகுப்புத் தோழர்களைக் குமைப்பது வேறுவிதமாக ஜாலியாக இருக்கும். ஆனால் நேரடியாக பண்ண மாட்டோம். எங்களுக்குள்ளேயே ஒவ்வொருத்தரைப் பற்றியும் புரணி பேசி பட்டப் பெயர் வைத்து குமைச்சுக்குவோம். வாத்தியார்கள் பாடும் அதே மாதிரிதான். 


சாயங்காலம் ஏதாவது ஒரு வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு வகுப்பில் நடந்த விஷயங்களை அலசி, அதில் சம்பந்தப்பட்ட மாணவன், வாத்தியார் எல்லாரையும் ஒருபாடு விமர்சித்து கேலி பண்ணி முடிப்பதுதான் அன்றைய ஹோம்வொர்க். அதிலே மட்டும் எல்லா பெண்களும் சேர்ந்துடுவோம்


ஒருத்தருக்கு பிடிச்ச வாத்தியாரை அடுத்தவங்க குமைக்கும்போதும், அவங்களுக்குப் பிடித்த நண்பர்களைக் கேலி பண்ணும்போதும் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கிடுவாங்க. அதைத் தொடர்ந்து வரும் விவாதங்கள் சில சமயங்களில் சண்டைகளில் முடியும். நல்லா படிக்கிற பிள்ளைங்க எல்லாம் வாத்தியார்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு சண்டைக்கு வந்திடுவாங்க. எங்களை மாதிரி கடைசி பெஞ்ச் ஆட்கள் எஸ்கேப்.


சில சமயங்களில் எங்களுக்குள் பேசப்படும் கேலிப் பேச்சுகள் சம்பந்தப்பட்ட நபர்களையே போய்ச் சேர்ந்திடும். ஏகப்பட்ட பிரச்னைகளும் பின்னாடியே வந்திடும். சில உளறல் வாய்கள் இந்தமாதிரி அடிக்கடி பிரச்னைகளில் மாட்டி விட்டுடுவாங்க. நாங்களும் அடிக்கடி அசடு வழிஞ்சுக்குவோம்.


குமைப்பதும் அசடு வழிவதும் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. வயதும் பருவமும்தான் மாறியிருக்கிறது. குறும்பு அப்படியே இருக்கிறது. அடுத்த பிரரண்டை துவையலுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறோம்.

0 Comments:

Post a Comment

<< Home