அலை-44
அலை-44
நிகழ்வலைகள்.
சுகமான நினைவலைகளைப் புரட்டிக்கூடப் பார்க்க முடியாமல் அலைக்கழிக்கும் நிகழ்வலைகள்-- கொரோனாவின் கோர அலைகள்.
”சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது” என்று இறுமாப்புடன் இருந்த காலம் போய், கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர் நம்மை வீட்டுச் சிறையிலும் தனிமைச் சிறையிலும் பூட்டி வைத்திருக்கும் அவலம் இன்று.
சில வருடங்களுக்கு முன்பு நான் டெங்கு காய்ச்சல் வந்து சாவின் விளிம்பைத் தொட்டுவிட்டு வந்தவள். நான் அப்போதிருந்த நிலைமையை நேரில் கண்ட மருத்துவ நண்பர்களில் நிறையபேர் கண்ணீர் சிந்தி பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது யாருக்காக யார் வருந்துவது என்ற நிலையே இல்லாமல் எல்லோருமே கடினமான சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
அன்றைய கால கட்டத்தில் ஒரே ஒரு சிந்தனைதான் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. கருத்தரித்த காலம் தொடங்கி தடுப்பூசிகள், மருத்துவ பரிசோதனைகள் என்று தீவிர கண்காணிப்பில் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறோம். அந்த மழலைகள் நோயற்ற வாழ்வு பெறவேண்டி மாதம் மாதம் தடுப்பூசிகள் தவணை முறையில் போட்டு சிறப்பாக வளர்ப்பதாக பெருமை பட்டுக் கொள்கிறோம். அத்தனை கவனிப்பையும் ஒன்றுமில்லாததாக்கிவிட்டு, இத்துனூண்டு கொசு கடிச்சு அந்த உயிரே தங்குமா இல்லையா என்ற அவலம் ஏற்படும் போது படித்த படிப்பெல்லாம் பயனற்றதுபோல் தோன்றும். அந்த உணர்விலிருந்து வெளியே வரவே ரொம்ப நாள் ஆச்சுது.
அந்த கண்ணுக்குத் தெரியும் கொசுவிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள எத்தனை உத்திகள் மேற்கொண்டோம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, வீடு முழுக்க கொசுவலை அடிப்பது, இருபத்துநாலு மணிநேரமும் கொசுவத்தி எரிந்து கொண்டே இருப்பது, அப்பப்பா எவ்வளவு பாதுகாப்பு முயற்சிகள். அதையும் மீறி ஒரு கொசு வீட்டுக்குள்ளே வந்துவிட்டால் சைனாக்காரனை இந்தியன் தாத்தா விரட்டுவது போல் கொசு மட்டையைச் சுழற்றிச் சுழற்றி அடிப்பது . எப்படியோ டெங்கு வராமல் இருந்தால் சரிதான் என்ற பாதுகாப்பு உணர்வு.
ஒரு கொசுவும், டெங்கு காய்ச்சலும் படுத்திய பாட்டை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது கண்ணுக்குத் தெரியாத கொரோனா. இதுதான் இருகோடுகள் படத்தின் தத்துவம் போலும். பெரிய துன்பம் வரும்போது அதற்கு முந்தைய கஷ்டங்கள் ஒன்றுமில்லாததாக ஆகிவிடும். பெரியவர் –சிறியவர், ஏழை – பணக்காரர், மருத்துவர்- சாதாரண மக்கள் என, எந்த பாகுபாடுமின்றி எல்லைகளற்றுப் பல்கிப் பெருகிப் பந்தாடிக் கொண்டிருக்கிறது பின்னாடி வந்த கொரோனா. தேசங்கள் விதிவிலக்கல்ல; எல்லைகள் தடைபோட முடியவில்லை. ”ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி”- கதைக்கு அன்று சொன்ன காட்சிகள் வாழ்க்கையின் இன்றைய நிஜமாகிப் போனது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை குழந்தைகளைத் திட்டிக் கொண்டிருந்தோம். எப்போ பாரு இந்த செல்போனும் கம்ப்யூட்டரும் நோண்டிகிட்டே இருக்கிறாயே, வெளியிலே போய் நண்பர்கள்கூட விளையாட வேண்டியதுதானே என்று கடுப்பேத்திக் கொண்டிருந்தோம். இப்போ அவங்களே எழுந்து வாசல் பக்கம் போனால் கூட தரதரன்னு இழுத்துட்டு வந்து அறையில் அடைச்சிடறோம். எந்த தொலைக்காட்சியைத் திறந்தாலும், சமூக ஊடகங்களில் நுழைந்தாலும் எங்கெங்கும் நீக்கமற நிறைந்த நித்தியப் பொருள் நிலைகுலைக்கும் கொரோனாதான்.
அரசு வேலையிலிருந்து ரிட்டையர் ஆன போது வாழ்க்கை வட்டம் மிகவும் சுருங்கியதுபோல் தெரிந்தது. வேடிக்கையாக “ரெண்டு ரோடு நாலு சுவர்”- இதுதான் இப்போதைய வாழ்க்கைன்னு சொல்லுவேன். வீடு மற்றும் க்ளினிக், அதற்கு செல்லக்கூடிய இரண்டு ரோடுகள். வண்டிக்கு டீசல் போட்டால் ஒரு மாதமானாலும் காலியாகாது. ஆனால் இப்போது எல்லோருடைய வாழ்க்கையும் நாலு சுவற்றுக்குள் அடங்கிவிட்டது. ரோடில் நடந்து போவதுகூட அரிதாகிவிட்டது.
ஆனால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கைக்கொண்டு தேவை நிமித்தம் மட்டும் வெளியில் செல்பவர்களில் மருத்துவர்களாகிய நாமும் உண்டு. கொரோனாவே வந்த நோயாளிக்குக் கூட நாம் மருத்துவம் செய்வது தவிர்க்க முடியாததுதான். அதன் சாதக பாதகங்களை தெரிந்துகொண்டு அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம். பிரசவங்களையோ அறுவை சிகிச்சைகளையோ தள்ளிப்போட முடியாது. நாலு சுவருக்குள்ளும் நாலைந்து செயற்கை உபகரணங்கள் அணிந்து பூச்சாண்டி போலவே நடை பயில வேண்டியிருக்கிறது. ரொம்ப தெரிந்தவர்கள் எதிரில் வந்தால்கூட அடையாளம் தெரியாமல் கடந்து போகும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கிறது.
காலங்கள் இப்படியே போகுமா, நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து மகிழும் சந்தோஷ நாட்கள் வருமா என்று ஏகப்பட்ட கேள்விக் குறிகள். கொஞ்சம் கொஞ்சமாக வாட்சஸ்-அப் மெசெஞ்சர், பேஸ்டைம் வீடியோ என்று திரைகளில் உரையாடவும் கற்றுக் கொண்டோம். ”நிழல் நிஜமாகிறது” என்றிருந்த காலம் போய் இப்போது நிழல் தான் நிரந்தரம் என்பதுபோல் ஆகிவிட்டோம். நேரில் பார்த்தாலும் கைகுலுக்க முடியாது, கட்டிப்பிடிக்க முடியாது, அதைவிட திரை வடிவத்துடன் கதைப்பதே சாலச் சிறந்தது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த மாதிரி தனிமைப் படுத்துதல், வீடியோ மூலம் பேசுதல் பொன்ற நடப்புகளுக்குப் பழகிவிட்டதால், அதுவே நன்றாக இருப்பதுபோல் மனசு நம்ப ஆரம்பித்துவிடும். அதிலும் எழில் மாதிரி தனிமை விரும்பிகளுக்கு இந்த நிலைமையே பொருத்தமானதாகவும் இருக்கிறது. என்னை மாதிரி லொட லொட ஆட்களுக்குத்தான் மனுஷங்களைப் பார்த்து பேசாட்டி சார்ஜ் எறங்கிடும்.
எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. கொரோனாவுக்கும் அப்படித்தான். உயிர் காக்கும் போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும், புதுசு புதுசா கற்றுக் கொள்ளும் திறமைகளும் அதிகரித்திருக்கிறது.
க்ளினிக்கல் மீட்டிங் போன்றவற்றில் கலந்து கொள்வது முன்பெல்லாம் நிறைய சந்தர்ப்பங்களில் மூடியாமல் போய்விடும். ஆனால் இப்போது கைபேசி மூலம் எந்த இடத்தில் இருந்தாலும் எல்லா கூட்டங்களிலும் இலகுவாகக் கலந்து கொள்ள முடிகிறது. வெளிநாட்டு பேச்சாளர்கள் தொடங்கி பக்கத்து வீட்டு பேச்சாளர்கள் வரை அனைவரையும் ஒரே திரையில் சந்தித்து அளவளாவுவது இலகுவாக நடக்கிறது.மீட்டிங்குகளுக்கு செய்யப்படும் செலவினங்கள் வெகுவாகக் குறைந்தும் உள்ளது.
வீட்டைப் பொறுத்தவரை அடுப்பு பற்ற வைச்சு சுடுதண்ணீர் மட்டும் போட்டுக் கொண்டிருந்தவர்கள் சமையற்கலை வல்லுநர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். எங்க வீட்டு ஆம்பிள்ளைப் பசங்க ரொம்ப சுகவாசிங்க, சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவிவிட்டு எழுந்துபோவாங்க. அதை தப்புன்னு கூட உணராத ஆசாமிங்க. என் தம்பி நானாவும் அந்த க்ரூப்புலே உள்ள ஆள்தான். ஆனால் இப்போ லாக்டவுண் வந்தபிறகு யூட்யூப் பார்த்து வித விதமாக சமைக்கிறான். பொங்கலுக்கு கடம்பூர் சென்றபோது விதவிதமான சாலட்கள் செய்து அசத்திட்டான்.
உண்மையிலேயே ஆறுமுகநேரி சரித்திரத்தில் இது உலக அதிசயமாகத்தான் பொறிக்கப்படும். நிறைய வீடுகளில் ஆண்கள் சமைப்பது இயல்பாக நடக்கும். ஆனால் எங்க ஆறுமுகநேரி கதைகளில் இப்போதான் அது ஆரம்பிச்சிருக்குது. இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கொரோனா வந்தது நல்லதா கெட்டதா என்ற பட்டிமன்றம் வைத்தால் நான் நல்லது என்ற தலைப்பில் வாதிட தயார், நிறைய டிப்ஸ் இருக்குது. ஒரு சமையல் பண்றதுக்காக கொரோனா மாதிரி கொடுந்தொற்று வரணுமான்னு கேட்கக் கூடாது.
நோய்த்தொற்று நம்மை சுற்றிக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க முகக்கவசம், தனிமனித இடைவெளி, கிருமிநாசினி கொண்ட கை கழுவுதல் போன்றவை இருக்கும் போது அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அப்பப்போ ப்ரேக் எடுத்துகிட்டு வெளியில் சுற்றுபவர்களே அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் நமது நண்பர்களாகவும் உறவினர்களாகவும் இருக்கும்போது அந்த சோகம் நம்மளையும் தாக்குகிறது. வரப்பிரசாதமாக வந்த தடுப்பூசி பற்றிய சரியான புரிதல் இல்லாமலும், தேவையற்ற சந்தேகம் மற்றும் பயத்தாலும் இன்னும்நமக்கு நெருக்கமானவர்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது இன்னும் கவலையாகவே இருக்கிறது.
கொரோனா நோய் வந்து , படுக்கைகள் கிடைக்காமல், வீதிகளிலும் ஆம்புலன்ஸிலும் காத்திருக்கும் நிலையில் பிரிந்த உயிர்கள் அநேகம். அதை மனதில் கொண்டு தடுப்பூசி போட்டு வரும் சின்ன ஒவ்வாமைகள் வைத்தியம் செய்து சரிபண்ணக்கூடியது என்பதை உணர்ந்து உங்களைச் சுற்றி இருப்பவர்களை உடனடியாக தடுப்பூசி போட அறிவுறுத்துங்கள். தனித்திருந்தாலும் தொடர்பில் இருங்கள். நேரத்தை வீணாக்காமல் புதுப்புது விஷயங்களை பரீட்சார்த்தமாக முயற்சி செய்யுங்கள். எங்களைப்போன்ற அரைவேக்காடுகளின் எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து உற்சாகப் படுத்துங்கள்.
0 Comments:
Post a Comment
<< Home