Friday, February 26, 2021

அலை-36

 அலை-36

 “விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும், 

விரல்கள் என்னவோ 

ஜன்னல் கம்பிகளோடுதான்” 

எப்போதோ படித்த மு.மேத்தாவின் கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. அறிவியல் முன்னேற்றங்கள் நம்மை செவ்வாய் கிரகத்துக்கே அழைத்துப்போக ரெடியாக இருக்கிறது. மாஸ்க்கோவும் மெல்போர்னும் பக்கத்து வீடுகள் போல் ஆகிவிட்டன. நினைத்தால் பறக்கலாம், நெடும் தூரம் பயணிக்கலாம். ஆனால் இந்தப்பொல்லாத மனசு மட்டும் ஆறுமுகநேரிக்கும் திருநெல்வேலிக்கும்தான் முதல் சாய்ஸ் வைக்குது. என்னே எங்கள் மண்ணின் பெருமை, என்னே எங்கள் வளர்ப்பின் அருமை.


இன்று முகநூலில் கருப்பு வெள்ளை டெலிவிஷன் பற்றி நண்பர் ஒருவர் சிலாக்கியமாக எழுதியிருந்தார். அதைப் பார்த்தவுடன் அந்தக்கால வானொலிப் பெட்டி(Radio) நினைவுக்கு வந்துவிட்டது. இன்றைய சமுதாயம் வானொலிப் பெட்டியைப் பார்த்திருப்பார்களா என்பதுகூட சந்தேகம்தான். எழுபதுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு அலைவரிசையில் வானொலி பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தது. எந்த நாள் எந்த நேரம் என்ன ஒலிபரப்பு வரும் என்பதெல்லாம் எங்களுக்கு மனப்பாடம். 


அநேகமாக சமையலறையை ஒட்டியே எல்லா வீட்டிலும் வானொலிப்பெட்டி கம்பீரமாக உட்கார்ந்திருக்கும். அப்படின்னாதான் சமையல் பண்றவங்களும் கேட்டு ரசிக்கமுடியும். மின்சார வசதி இல்லாத வீடுகளிலும் பேட்டரி செல் மூலம் பயன்படுத்த முடியும் என்பதால் குடிசை முதல் கோபுரம் வரை தெருவிலிருந்து காடுவரை எல்லா இடங்களிலும் நீக்கமற காணப்படும்.


 செல்லமாக ரேடியோபெட்டி என்றுதான் எல்லாரும் கூப்பிடுவோம். கொஞ்சம் ஸ்டைல் கோஷ்டிகள் ட்ரான்சிஸ்டர்ன்னு சொல்லிக்குவாங்க. அந்த ஆங்கில வார்த்தைகளின் அர்த்தமும் தெரியாது, அதிலுள்ள அறிவியலும் தெரியாது. ஆனால் எல்லார் வாயிலும் புகுந்து விளையாடுவது ரேடியோ மட்டுமே.

பொருளாதார வசதிகளைப் பொறுத்து சின்ன சைஸிலிருந்து பெரிய பெட்டிகள் வரை வித விதமாக இருக்கும். ஆனால் எல்லாத்துக்கும் பொதுவானது அலைவரிசைகளை மாற்றும் குமிழ் (knob) அதை வெளிப்படுத்தும் முள்(pointer) ரெண்டும்தான். படிக்காத அம்மாவுக்குக் கூட இலங்கை வானொலி எதில் வரும், தமிழ் வானொலி எந்த இடத்தில் கிடைக்கும் என்பதெல்லாம் அத்துப்படி. பாக்கெட் ட்ரான்சிஸ்டர்ன்னு மிக சின்ன அளவுடையதும் உண்டு. அந்தக்கால ஆம்பிள்ளைப் பசங்க க்ரிக்கெட் ஸ்கோர் கேட்க ரொம்ப உபயோகமா இருந்தது அதுதான். இப்போ மொபைல் போனைக் காதோடு ஒட்டிகிட்டு அலையிற மாதிரி அந்தக் காலத்தில் பாக்கெட் ரேடியோ காதுக்கடியிலேயே ஒட்டிகிட்டு இருந்தது.


காலையில் எங்களையெல்லாம் எழுப்பிவிடும் அலார்ம் ரேடியோதான். ஒவ்வொரு நிகழ்ச்சி நேரத்தைப் பொறுத்து ஆறு மணியா, ஏழா எட்டான்னு கணக்கு வைச்சுகிட்டு பள்ளிக்குக் கிளம்புவோம், சுவர்க்கடிகாரமும் ரேடியோதான். ''நேயர் விருப்பம் முடிஞ்சிட்டு  உலையிலே அரிசி போடு ; செய்தி முடிஞ்சிடுச்சு சாப்பாட்டுக் கடையை மூடு"ன்னு வானொலி நிகழ்ச்சி சார்ந்தே வீட்டின் அன்றாட அலுவல்கள் நடைபெற்ற காலம். 

கோயிலுக்கே போகாமல் கிருபனந்த வாரியார் சொற்பொழிவு மூலமே பக்தியை வீட்டுக்குள் பகிர்ந்து கொண்ட பெண்கள் அநேகம். பொருள் புரியுமோ இல்லையோ கந்த சஷ்டி கவசம் காலையில் எழுப்பிவிடும். மார்கழி மாதம் திருப்பவை திருவெம்பாவை உரத்த குரலில் வீட்டைச் சுற்றி உலா வரும். ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்துவ கீதங்கள் பவனி வரும். அப்பா வீட்டில் இருக்கும் நேரங்களில் செய்திகள் விரிவாக வந்து கொண்டிருக்கும்.


தமிழ் அலைவரிசைகளை விட இலங்கை வானொலி தான் அந்தக் காலங்களில் மிகப் பிரபலமாக இருந்தது. அதன் வர்ணனையாளர்களுக்கு பெரிய ரசிகர் மன்றமே உண்டு. முகம் தெரியாத குரல்களால் வசீகரிக்கப்பட்டு ரேடியோவே கதியென்று கிடந்த நாட்கள் அதிகம். தமிழ் உச்சரிப்பும் தெளிவான வாக்கிய அமைப்புகளும் நம்மைக் கட்டிப்போட்டுவிடும். அப்துல் ஹமீத், ஜாஃபர் போன்றவர்களின் வர்ணனைகள் இன்னும் காதுகளில் ஒலிப்பது போலவே உள்ளது.

தமிழ் வானொலியின் வர்ணனையாளர்களில் மிகவும் பிடித்தது “ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம். செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சாமி” என்ற கம்பீரக் குரல்தான்.


 கிரிக்கெட் என்ற விளையாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதே       வானொலிதான். அந்த வர்ணனைகளுக்கு அடிமையானவர்களுக்கு இன்றைய RJ Balaji  வர்ணனைகள் ”கடி’’யாகத் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை. சென்னை என்பது எந்த திசையில் இருக்கிறது என்று தெரியாத காலத்தில் “வாலாஜா முனையிலிருந்து வீசப்பட்ட பந்து, அதை எதிர்திசையில் அடித்து வீசினார்” என்ற வர்ணனையைக் கேட்கும்போது அந்த இடத்திற்கே போய்விட்டது போல் புளகாங்கிதமாக இருக்கும்.


பெரும் தலைவர்கள் இறந்த செய்திகள், தேர்தல் முடிவுகள், சினிமா செய்திகள் அனைத்தையும் சுடச் சுட தந்தது இத்தினியூண்டு இருந்த ரேடியோ பெட்டிதான். உலகமே அதற்குள் இருப்பது போன்ற மாயத்தைத் தந்ததும் உண்மைதான். இடையிடையே வரும் விளம்பரங்கள் மனப்பாடமே ஆகியிருக்கும். இப்போ கேட்டாக்கூட முழு விளம்பரத்தையும் சொல்லிடுவோம். அதிலும் லைப்பாய் விளம்பரம் ரொம்பப் பிரபலம். எல்லார் வீட்லேயும் அப்போ லைப்பாய் சோப்புதான் இருக்கும்னா பார்த்துக்கோங்க.


அண்ணாதுரை, கருணாநிதி  போன்றவர்களின் பேச்சுக்கள் மணிக்கணக்கில் ஓடிக்கொண்டிருக்கும். அது குறித்து பெருசுகள் மத்தியில் கார சார விவாதங்களும் நடந்துகிட்டிருக்கும். எங்களுக்கு அதிலெல்லாம் ரசனை இருக்காது என்பதால் விளையாடப் போயிடுவோம். எங்களுக்கு பிடிச்ச நிகழ்ச்சிகள் வரும்போது கும்பலா ரேடியோ முன்னாடி உக்காந்துக்குவோம். வினாடி வினா நிகழ்ச்சிகளில் எங்கள் பதில்களும் பக்கவாட்டில் வந்து கொண்டிருக்கும். 


வானொலியை ஒரு பொழுது போக்கு அங்கமாகத்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சத்தமில்லாமல் ஒரு பொது அறிவுப் பெட்டகமாக  இருந்திருக்கிறது. இஷ்டப்பட்டாலும் இல்லாட்டியும் செய்திகள் காதில் விழுந்து கொண்டே இருக்கும். எங்களுக்குப் பள்ளிக்கூடத்தில் ரேடியோ வகுப்புன்னே ஒன்று நடக்கும். ரேடியோ நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பாடம் நடக்கும். அதில் என்ன படிச்சோம்னு நினைவில்லை. ஆனால் தலைமை ஆசிரியர் அறை முன்பு வராண்டாவில் அமர்ந்து வானொலி கேட்டது மங்கலாக நினைவிருக்கிறது.


சினிமா சம்பந்தப்பட்ட ஒலிபரப்புகளுக்குப் பஞ்சமே இருக்காது. பாட்டு, வசனம், திரை ஒலின்னு ஏகப்பட்டது வரும். வீர பாண்டிய கட்டபொம்மனை சிவாஜியின் குரலில் கேட்டு கேட்டு சிவாஜிதான் கட்ட பொம்மன் என்று சொல்லும் அளவுக்கு திரை வசனங்கள் ஒலிபரப்பாகும். ”வசந்த மாளிகை “ திரைப்படம் வந்த புதிதில் “பார் லதா பார், உனக்காக கட்டப்பட்டிருக்கும் தாஜ் மஹாலைப் பார்” என்று சிவாஜி பேசும் முழு வசனமும் மனப்பாடம். பழைய சினிமா எல்லாம் வசனமாக வந்து கொண்டே இருக்கும். ”கந்தன் கருணை” KB சுந்தராம்பாள் “ஞானப்பழத்தைப் பிழிந்து” ன்னு பாட ஆரம்பிச்சா இங்கேயிருந்து கோரஸாக வாண்டுகளெல்லாம் பாட ஆரம்பிச்சுடுவாங்க.


ரேடியோவில் தொடர்கதைகள் கூடஒலிபரப்பாகும்.ஞாயிற்றுக்கிழமை காலையில் வரும் தொடர்கதையைக் கேட்க மொத்த குடும்பமே ரேடியோ முன்னாடி கூடிடுவாங்க. தொய்வு ஏற்படாத மாதிரி நேக்காக தொடரை நடத்திச் செல்வதும் நிகழ்ச்சி தயாரிப்பளரின் திறமைதான். 


ரேடியோ பெட்டி பழசாயிடுச்சுன்னா சில நேரம் ரெண்டு ஸ்டேஷன்கள் ஒரே அலைவரிசையில் வந்துடும். நிகழ்ச்சிகள் குழப்பி வரும்போது கேட்டால் காமெடியாக இருக்கும். அதை சரி பண்ண நம்ம வீட்டு எஞ்சினீயர்கள் பெட்டியை தலையில் தட்டி பக்க வாட்டில் தட்டி ஒருவழியா சரி பண்ணிடுவாங்க.


இன்னும் நிகழ்ழ்ச்சிகளைப் பற்றி சொல்லணும்னா நிறையவே இருக்கு. ஆனாலும் தூங்கப்போகும் போது வரும் “இரவின் மடியில்” எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. அமைதியான ரசனையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே உறங்கும் போது சொர்க்க்கமே அதுதான். ரேடியோவிலிருந்து கறுப்பு வெள்ளை TV வந்தது. பிறகு உருமாறி பெயர்மாறி இப்போ என்னவெல்லாமோ வந்துடுச்சு. ஆனால் இரவின் மடியில் கிடைத்த அந்த சுகம் மட்டும் திரும்பக் கிடைக்கவேயில்லை.

0 Comments:

Post a Comment

<< Home