Tuesday, December 15, 2020

அலை-31

 அலை-31

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று சுற்றித் திரிந்த காலங்களில் எதை எதையெல்லாமோ   சாப்பிட்டிருக்கிறோம். அன்று விளையாட்டாக சாப்பிட்ட நிறைய பொருட்கள் இன்று சர்வதேச அளவில் பேசப்படும் பொருட்களாக இருப்பது சிறப்பு. என்னே எங்கள் கிராமங்களின் மண்ணுக்கு வாய்த்த பெருமை! இன்று இளவட்டங்களும் நகர மாந்தரும் தூக்கி எறியும் பொருட்களில் நிறைய ஐட்டம் அன்று எங்களின் நொறுக்குத் தீனியாக இருந்திருக்கிறது.


 ஒவ்வொரு பூவுக்கும் தனித்தனி வாசம் இருப்பதுபோல் ஒவ்வொரு பழக்கொட்டைக்கும், பழத்தின் விதைகளுக்கும் தனித்தன்மையான ருசி இருக்கும். அதன் அருமையெல்லாம் தெரியாமல் இன்றைய தலைமுறை கொட்டைகளற்ற (seedless) பழங்களையே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். நாங்க அந்தக்கால அறிவாளிகள். பழம் தின்று கொட்டை போடுபவர்களுக்கு நடுவே கொட்டைகளையும் கொறித்துக்கொண்டு அலையும் கோமாளிகள்.


 நிறையபேர் மாம்பழம்,நாவல்பழம், நெல்லிக்காய் போன்றவற்றை ருசித்துவிட்டு அதன் கொட்டைகளைக் குப்பையில் போடுவாங்க. ஆனால்அந்தக் கொட்டைகளைக் கல் வைத்து உடைத்து உள்ளே இருக்கும் விதைப்பகுதியைக்கூட வீணாக்காமல் ருசிபார்க்கும் திறமை கொண்டது எங்கள் வானர சேனை. சிறிது கசப்போடு துவர்ப்பாக இருக்கும் கொட்டையின் உள்பகுதியை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் பழரசம் அருந்தியது போன்ற இனிப்பு சுவை வரும்.  


மாம்பழக்கொட்டை ஒருவித ருசி என்றால் நாவல் பழத்தின் கொட்டை வேறேமாதிரி சுவையுடன்  துவர்ப்பாக இருக்கும். அதைக் காயவைத்து எடுக்கும்போது மேல்தோல் அழகாகப்பிரிந்து வரும் அதைப் பொடி செய்து சாப்பிடலாம், அப்படியேவும் சாப்பிடலாம். அதே நாவல்பழக் கொட்டைகள் , இன்று சர்க்கரைவியாதிக்கு வைத்தியமாக பரிந்துரைக்கப்படுகிறது. சர்வதேசஅளவில் அதற்கு ஏக மவுசு.  அதனால் நாவல் பழத்தின் விலையும் உச்சத்துக்குப் போய்விட்டது. எங்கள் பள்ளியின் காம்பவுண்டை அணைத்து நிற்கும் நாவல் மரத்தின் பழங்களைக் கல் கொண்டு அடித்து பொறுக்கி கழுவி சாப்பிட்டது பசுமை நிறைந்த நினைவுகள். மண்ணுலே விழுந்தாலும் கண்டுக்கிறதே கிடையாது, கழுவி சாப்பிட்டுக்குவோம்.


மஞ்சள் பூசணி விதை மிகத் தாராளமாக கிடைக்கும். எல்லோர் வீட்டு புழக்கடையிலும் பூசணிக்காய் உருண்டுகொண்டிருக்கும். சமையலுக்குக் காயை வெட்டியபின், அதன் விதைகளைத் தனியாக எடுத்து காய வைச்சிடுவாங்க. நல்லா காய்ந்தபிறகு உருக்குச்சட்டி(வடைச்சட்டி)யில் போட்டு மிதமான தணலில் வறுத்து உப்பு போட்டு சாப்பிட்டால் இப்போதைய finger-chips எல்லாம் பிச்சை வாங்கணும். சில அவசரக்குடுக்கைகள் பச்சையாகவும் சாப்பிடுவாங்க. ஆனால் ஒவ்வொண்ணா உரித்து உள்ளிருக்கும் பருப்பை சாப்பிடுவது நேர விரயம்.


கொல்லாங்கொட்டை (முந்திரிப் பருப்பு) எங்க ஊர்ப்பக்கம் நாசரேத்தில் அதிகமாகக் கிடைக்கும். செம்மண் தேரியின் சிறந்த பயிர்ப்பாசனம் இந்த முந்திரி மரங்கள். பள்ளிப் பருவத்தில் Drawing Class-ல் கொல்லாம்பழம் கொட்டையுடன் வரைவதுதான் பயிற்சி . பெண்மையின் நளினம்போல் இடை சிறுத்து உடல் பருத்து , உச்சிக் கொண்டையாக கொல்லாங்கொட்டையுடன் காட்சி தரும்போது அவ்ளோ அழகு. அதுவும் சிவப்பு, மஞ்சள் என்று கலர் கலராக வேறு இருக்கும். நல்ல நீர்ச்சத்துடன் தளதளவென்றுவேறே இருக்கும். பழம் ரொம்பத் துவர்ப்பாக இருந்தாலும், துண்டு போட்டு உப்பு தொட்டு சாப்பிடும்போது நல்ல கிக் வரும் .கொல்லாங்கொட்டையைத் தணலில் சுடும்போது மிக ரம்யமான வாசம் வரும். தெருவே மணக்கும். கொட்டையை உடைத்து சாப்பிடும்போது ஆவலை அடக்க முடியாமல் அவசரமாக சாப்பிட்டு நாக்கு சுட்டுக் கொண்ட நாட்கள் நிறைய உண்டு. 


பலாக்கொட்டை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இப்பவும் எல்லாரும் அதை சமையலில் உபயோகிக்கிறாங்க. தனியாகவும் அவித்து (வேகவைத்து) சாப்பிடலாம். புளியங்கொட்டையைக்கூட விட்டு வைத்ததில்லை. எது கிடைச்சாலும் உடனே சுட்டு சாப்பிட்டுவிட வேண்டியதுதான்.


 நெல்லிக்காயின் கொட்டையை அப்படியே பற்களுக்கு இடையில் வைத்து கடித்து உடைத்து சாப்பிடுவோம். எலந்தப்பழ கொட்டைதான் முயற்சி பண்ணிப் பார்க்காத ஒண்ணு.


 ரோட்டோரங்களில் காடுபோல் வளர்ந்து கிடக்கும் குட்டைத் தக்காளி (goose-berry) , அதற்கு ஜோடி போட்டு முளைத்துக் கிடக்கும் சொடுக்கு தக்காளி போன்ற செடிகளின் பழங்கள் வெறும் வாயை மெல்லும் எங்களின் வாய்க்கு அவல்மாதிரி. தக்காளிப்பழ ருசியுடன் மிளகு சைஸில் புறம்போக்கு இடத்திலெல்லாம் வர்ந்து கிடக்கும்.


பனைமரம்தான் எங்களுக்கு எத்தனை விதமான பண்டங்களைத் தந்திருக்கிறது. பனைமரம் என்றதுமே பதனி(பதநீர்)தான் நினைவுக்கு வரும். தெருவோடு பதனி விற்பது அன்றாட நிகழ்வாகவே இருக்கும். மண்பானையைத் தலையில் சுமந்து பதனி விற்கும் பெண்கள் அதிகம்.பனங்காட்டுக்குள் போனால் விடிலிகளில் ஆண்கள் பதனி விற்பார்கள். பதனியில் கருப்பட்டி காய்ச்சுற சமயமாக இருந்தால் சுடச்சுட கிடைக்கும்


 எங்க வீட்டுக்கு பதனி சப்ளை அப்பாவின் நண்பரான PSR தாத்தா வீட்டிலிருந்து கிடைத்துவிடும். தெஷணமாற நாடார் சங்கத்தின் தலைவராக இருந்த தாத்தாவுக்கு சொந்தமான தோப்பில் நிறைய பனைமரங்கள் உண்டு. அதனால் எங்களுக்கு பதனி வேண்டுமென்றால் பெரிய தூக்குச்சட்டியுடன் தாத்தா வீட்டிற்குப் போயிட வேண்டியதுதான். நுரை ததும்ப தெளிவான பதனி கிடைக்கும். அடிக்கடி நான்தான் வாங்கப்போவேன். 

பதனி ரெண்டுவேளையும் இறக்குவாங்க. காலைப் பதனி ஒருவித சுவை என்றால் மாலைப் பதனி வேறு  ஒரு சுவையுடன் இருக்கும். கோடைகாலங்களில்தான் அதிக அளவில் பதனி கிடைக்கும். மாம்பழ சீசனும் அப்போதான் வரும். மாலைப்பதனியில் மாம்பழம் வெட்டிப்போட்டு குடித்தால் சுவையோ சுவைதான். அதுவும் பட்டை(பனை ஓலைக் குடுவை)யில் குடித்தால் பரம சுகம். பனை ஓலையை விசிறி மாதிரி விரித்து சின்னக்குடுவை மாதிரி மடித்து இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் குடிக்க வேண்டும்.


பனங்காய் கருப்புக்கலரில் பச்சை கிரீடம் அணிந்து ராஜா மாதிரி இருக்கும். விறகடுப்பில் பனங்காய் சுடும்போது வரும் வாசனை தூரமா இருக்கிறவங்களையும் இழுத்துட்டு வந்திடும். மஞ்சள் கலரில் நார்நாராக உரித்து சாப்பிட ஆரம்பிச்சா தோல்கூட மிஞ்சாது.. காஞ்ச பனங்காய்களைக் கம்புகளில் இணைத்து கட்டவண்டி ஓட்டியிருக்கோம்.


பனங்காய்  முளைத்து வரும்போது கிடைக்கும் பனங்கிழங்கு தைப்பொங்கலை ஒட்டிதான் நிறைய கிடைக்கும். தணலில் சுட்டு சாப்பிடுவது ஒருவித சுவை. அவிச்சு சாப்பிடும்போது வேறு சுவை. பெரிய மண்பானையில் மூச்சுத்திணறும் அளவுக்கு பனங்கிழங்கு அவிப்பாங்க. தோல் உரிச்சு வேக வைக்கிற அளவுக்கு பொறுமை கிடையாது. ஒரு ஈடு அவிச்சு தட்டிட்டு அண்ணாந்து பார்க்கிறதுக்குள்ளே அபுட்டும் காலி. கிழங்கும் ஒண்ணு ரெண்டுன்னு வாங் மாட்டாங்க, நூத்துக் கணக்குலேதான் பர்ச்சேஸ் இருக்கும்.


அவிச்சு வைச்ச பனங்கிழங்கு மீதமானாலும் வீணாகாது. துண்டுதுண்டா வெட்டி, அதோட பச்சைமிகாய், பூண்டு, தேங்காய் போட்டு உரலில் இடிச்சு ஆளுக்கொரு உருண்டை கிடைக்கும்.. வீணாகுமோன்னு கவலையே வராது.


பனங்கிழங்கை பிரிச்சு எடுத்த பிறகு பனங்கொட்டையை வெட்டிப் பார்த்தால் பளபளனௌனு முத்துப்போல் தவுணு மின்னும். நறுக்குன்னு crunchyஆக மிதமான இனிப்புடன் இருக்கும். பனங்காய் முத்துவதற்கு முன்னால் நொங்கு பறிச்சு போடுவாங்க. விரலால் நோண்டி லாவகமாக எடுத்து வாயில் போடுவது தனி கலை. எனக்கு இன்னமுமம் ஒழுங்கா சாப்பிடத் தெரியாது.


பனைமரத்தின் எந்தப் பாகமும் வீணாகாது. பனை ஓலை,பட்டை,பலகை எல்லாமே உபயோகமான பொருட்கள். ஆனால் நாங்கள் பார்த்து ரசித்து பயனடைந்த பனங்காடு இப்போது ஊராகவும் தெருவாவும் மாறிவிட்டது. பனைஓலைப் பொருட்களை அயல் நாட்டு பயணங்களின் நினைவுப் பொருட்களாக வாங்கி வருகிறோம். 


கருப்பு வண்ணத்தின் இலக்கணம் இக்கணம்

கடந்தகால நினைவுகளின்

கனவுச் சோலையாகிவிட்டதது

0 Comments:

Post a Comment

<< Home