அலை-30
அலை-30
”தீராத விளையாட்டுப் பிள்ளைகள்” நாங்கள். ஆனால் அந்த விளையாட்டுப் பிள்ளைகள் வில்லாதி வில்லர்களாகும் நாட்களும் உண்டு. ஒத்த கருத்துக்களுடன் விளையாடும்போது ஏக குழைவும் கொஞ்சலுமாக இருப்பாங்க. சண்டைன்னு வந்துவிட்டால் குடுமிப்பிடியும் உண்டு, குள்ளநரித்தனமும் உண்டு. நிறைய சில்மிஷங்கள் அரங்கேறும்.
வீட்டுக்குள் வைத்து விளையாடும் (in-door games) விளையாட்டுகளில் சண்டை வந்தால் , ஆட்டத்தைக் கலைத்துவிட்டு ஆளுக்கொரு மூலையில் ஒதுங்கிக் கொள்ளலாம். சீட்டுக்கட்டுகள் பறக்கும், பல்லாங்குழி, தாயம் எல்லாவற்றின் காய்களும் வீடுமுழுக்க சிதறி பாதி ஐட்டம் காணாமல் போகும். ஆனால் மறுபடியும் எல்லாரும் சமாதானம் ஆனதும் கலெக்ட் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் வீதியில் விளையாடும் வீர விளையாட்டுகளில் சண்டை வந்தால் வெட்டுப்பழி குத்துப் பழிதான். அடிதடி, கைகலப்பு எல்லாம் வந்துவிடும். அதிலும் அடுத்த தெருவரைக்கும் தொடர்புள்ள விளையாட்டுகளில் வீம்பும் வீரமும் ஜாஸ்தி.
எங்க வீடு சந்தையை ஒட்டி இருந்ததால் வீட்டைசுத்தி நிறைய இடவசதி இருக்கும். நிறைய விளையாட்டுகளுக்கு போதுமான ஆடுகளமும் உண்டு. எனக்கு முன்னாடியும் அடுத்ததும் சகோதரர்களாகவே இருந்ததால் நானும் ஆம்பிள்ளைப் பையன் (tomboy) மாதிரியே வளர்ந்திட்டேன். சந்தையை ஒட்டி வீடுகளே இல்லாதிருந்ததால் மருந்துக்குக் கூட பெண்பிள்ளைத் தோழிகள் கிடைக்கலை. வீடு தங்காமல் ஆம்பிள்ளைப் பசங்ககூட விளையாடுவதற்கு அப்பப்போ அடியும் வாங்கிக்குவேன்.
நானாவின் நண்பர்களுடன்தான் அதிகம் விளையாடியதாக ஞாபகம். அந்தப் பசங்கதான் என்னை விட சின்னப் பசங்களாக இருப்பானுக, கொஞ்சம் அதட்டிக்கிடலாம். அண்ணன்களோட நண்பர்களெல்லாம் ரொம்ப பெரியவங்களா இருப்பாங்க, என்னையெல்லாம் சேர்த்துக்கவும் மாட்டாங்க.
பம்பரம்,கட்டைக்குச்சி,கோலி எல்லாம் விளையாடுவோம்.
பம்பரம் விளையாட கொஞ்சம் திறமை வேணும். பம்பரக் கயிற்றை சுத்துறதே தனி டெக்னிக்தான். அப்போதான் குறிபார்த்து குத்துறது சரியாக இருக்கும். ஓங்கி குத்துறதுலே உள்ளே வைச்சிருக்கிற பம்பரம் துண்டாகத் தெரிச்சிடும். எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் எனக்கு ஒருநாளும் ஒழுங்காக பம்பரம் விடத் தெரியாது. சுத்தும்போதே பாதி நேரம் கயிறு உருவிட்டு வந்திடும். அதையும் மீறி சுத்தி விட்டேன்னாலும் விடும்போது ஒழுங்காக சுத்தாது. ஆனாலும் மறுபடியும் அந்தப் பசங்ககூடத்தான் விளையாடணும், வேறே கம்பெனியே கிடையாது. என்னை ஒப்புக்குச் சப்பாணியாகவே வைச்சிருப்பானுக. என் தம்பிக்கு என்னைவிட திறமைசாலி என்ற பெருமை பீத்தல்வேறே இருக்கும்.
குலை குலையா முந்திரிக்கா, பச்சக்குதிரை தாண்டுறது , கோகோ, திருடன் – போலீஸ், கண்ணாமூச்சி, கிச்சுகிச்சு தாம்பாளம் எல்லாம் மூந்தி கருக்குற (அந்தி சாயும் நேரம்- dusk) நேரத்திலேதான் விளையாடுவோம். வெளிச்சம் தேவையில்லாத விளையாட்டுகளில் இதெல்லாம் உண்டு. பெரியவங்க, குழந்தைகள் எல்லாரும் சேர்ந்துகூட சில விளையாட்டுகள் விளையாடலாம்.
எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து உள்புறமாகத் திரும்பியிருக்கணும். ஆட்டத்தை ஆரம்பிக்கிறவங்க ஒரு துண்டு அல்லது கைக்குட்டையைக் கையிலெடுத்துகிட்டு வெளிப்புறமாக சுத்தி வரணும். அதுக்கு இசைவாக உள்ள பாட்டைப் பாடிகிட்டு சுத்தி வரணும்- ”குலை குலையா முந்திரிக்கா நிறைய நிறைய சுத்திவா; கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான், கூட்டத்திலே பார் கண்டுபிடி” ன்னு பாடிகிட்டே சுத்தணும். யாரை மாட்டிவிடணும்னு தோணுதோ அவங்க முதுகுக்குப் பின்னாடி துண்டைப் போட்டுவிட்டு ஓடணும். அவங்க அந்த துண்டை எடுத்துகிட்டு துரத்துவாங்க. அதுக்குள்ளே அவங்க எந்திரிச்ச காலி இடத்தில் போய் உட்கார்ந்திட்டா துண்டு வைச்சிருக்கிறவங்க திருடன். அவங்க மறுபடி பாடிகிட்டே அடுத்த திருடனைத் தேடுவாங்க. ஓடுவதும் துரத்துவதுமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விளையாடலாம். போரடிக்காத விளையாட்டு.
பச்சக்குதிரை தாண்டுவதற்குக் கொஞ்சம் பயிற்சி வேணும். முதலில் நீட்டி வைத்திருக்கும் கால்களைத் தாண்டணும், அப்புறம் காலுக்கு மேலே ஒரு கை, பிறகு ரெண்டாவது கை என்று உயரம் கூடிகிட்டே இருக்கும். அப்புறம் முட்டிபோட்டு குனிந்து உட்காரணும், பிறகு முட்டியை நேர் செய்து வில் மாதிரி போஸ் வரும்போது தாண்டுவது கொஞ்சம் கஷ்டம். ஒவ்வொரு கட்டத்துக்கும் (POSE) ஒவ்வொரு பெயர் இருக்கும்- “ஆவியம், மணியாவியம், லக்குதிரை, லக்குதிரை கொக்கு,லக்குதிரை மண்ணு” என்று ஸ்பெஷல் பெயர்கள் வேறு உண்டு. ஒன்றிரண்டு பெயர்கள் மறந்த மாதிரி இருக்கு. எப்படியும் பின்னூட்டமிடும் போது என் தம்பி நினைவு படுத்திவிடுவான்.
கோகோ விளையாடும்போது பிடிக்காத ஆசாமிகளைத் தொட்டுவிட்டு செல்லுவதற்குப் பதிலாக தள்ளிவிட்டுக் குப்புற விழ வைக்கும் அழிச்சாட்டியங்களும் நடக்கும். அதுக்குத் தனி பஞ்சாயத்தும் நடக்கும். திருடன் - போலீஸ் விளையாட நிறைய வங்குகளும் மறைவிடங்களும் உண்டு. தேடிக் கண்டுபிடிப்பதற்கு உண்மையான ஸ்காட்லாந்து யார்ட் வந்தால்கூட கஷ்டம். பாவம் எங்க போலீஸ், திருடன் தான் கடைசியில் ஜெயிப்பான். அதனாலே நம்பர் எண்ணும்போதே ஓட்டைக் கண்ணு போட்டு ஒரு திருடனையாவது நோட்டம் விட்டுக்குவாங்க.
கண்ணைக் கட்டி காட்டிலேயெல்லாம் விட வேண்டாம், எங்க சந்தைக்கடையில் விட்டால் போதும் , சுத்திகிட்டே இருக்க வேண்டியதுதான். பெரிய இடம் என்பதால் ஊளையிடுவதும் பின்னாடி இருந்து கிச்சுகிச்சு மூட்டுவதுமாக ஏக ரகளையாக இருக்கும். கண்ணைக் கட்டி விடுறவங்க சமாதான விரும்பிகளாக இருக்கும் நாட்களில் லேசா இடைவெளி விட்டு கட்டி விட்டுடுவாங்க. செக் பண்ணுவதற்காக இது எத்தனை என்று விரல்களைக் காட்டும்போது வேண்டுமென்றே தப்பாகச் சொல்லி , கண்கட்டு சரியாக இருப்பதாகப் பாவலா காட்டிக்குவாங்க. பிடிக்காத ஆசாமிகளாப் பார்த்து கண்ணுவைச்சு முதலில் பிடிச்சுடுவாங்க.
கிச்சுகிச்சு தாம்பாளம் ரொம்ப சின்னப் பசங்கதான் விளையாடுவாங்க. மணல் மேடுகள் பாத்திபோல் நீளமாக பிடித்துவைக்கணும் அதனுள் ஏதேனும் சின்ன பொருளை , அநேகமாக சிலேட்டுக் குச்சி (பல்பம்) ஒளித்து வைக்க வேண்டும். ஒளித்து வைக்கும் செயலைச் செய்யும் போது “கிச்சுகிச்சு தாம்பாளம், கீயாக் கீயாத் தாம்பாளம்” என்று பாடிக்கொண்டு செய்யணும், எதிராளியைத் திசை திருப்ப. ஆட்காட்டி விரல் மற்றும் மோதிரவிரல்களுக்கு இடையில் குச்சியைப் பிடித்துக்கொண்டு மணல்மேட்டில் பாம்புபோல் நெளிந்து சென்று ஏதோ ஒரு இடத்தில் போட்டுவிட வேண்டும். எதிராளிக்கு எந்த இடத்தில் குச்சி விழுந்தது என்று தெரியக்கூடாது. எதிராளி உத்தேசமாக ஒரு இடத்தை தெரிவு செய்து இணைந்த உள்ளங்கைகளால் அந்த இடத்தை மூடவேண்டும். குச்சி வைச்சவங்க மறுபடியும் பாடிக்கொண்டே விரல்களை நுழைத்து மறைத்து வைத்த பொருளை எடுக்கணும். இணைந்த கைகளுக்குள் குச்சி இருந்தால் எதிராளி வென்றவர். இல்லாட்டி ஒளிச்சு வைச்சவங்க ஜெயிச்சுடுவாங்க.
சில சமயங்களில் அண்ணன்களும் எங்களுடன் விளையாட்டுகளில் இணைவதுண்டு. நயினார் அண்ணன் அந்தக்காலத்திலேயே புதையல் வேட்டை (Treasure Hunt) நன்றாகச் செய்வான். அம்மியின் அடியில் பார்க்கவும் என்று நேராக எழுதமாட்டான்; அரைக்கும் இயந்திரத்தின் அடியில் உள்ளது என்பதுபோல் சிலேடையாக எழுதுவான். கொஞ்சம் பேர் அம்மியை நோக்கி ஓடுவாங்க, சிலர் ஆட்டு உரலைத் தேடிப் போவாங்க. புதையலை முதலில் கண்டு பிடிக்கும்போது தங்கப்புதையலே (Mackenna’s Gold) கிடைச்ச மாதிரி ஏகப் பெருமையாக இருக்கும்.
ஆட்டத்தின் இடைச் சொறுகலாக சின்னச் சின்ன சில்மிஷங்களும் உண்டு. பல்லாங்குழி விளையாட்டு முடிந்ததும் அதில் உபயோகித்த புளியங் கொட்டைகளைத் தரையில் உரசி சூடேற்றி பக்கத்தில் உள்ளவர்களின் தோலைப் பதம் பார்க்கும் வில்லன்களும் உண்டு. சுள்ளுன்னு சூடேறும், நல்லா வலிக்கும்.
கருவேல மரத்திலுள்ள முட்கள் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். அதைக் கால் பெருவிரலில் பொருத்திக்கொண்டு அன்புடன் அருகில் வருவதுபோல் வந்து ஊசிகுத்திவிடும் அமெச்சூர் டாக்டர்களும் உண்டு.
விடலைப்பருவ விளையாட்டுகள்
மீள்பதிவுகளாக
மறுபடி எழுதவைக்கின்றன
மறந்துபோன நினைவுகளாக இருந்தவை
விளையாடச் சொல்லி
மறுபடியும் அழைக்கின்றன.
0 Comments:
Post a Comment
<< Home