Thursday, October 29, 2020

அலை-24

 அலை-24

”ஆறுவது சினம்” பொதுவான தத்துவம்தான் என்றாலும் ”ஆறாது சினம்” என்பதுதான் என்னுடைய  பால்யகாலப் பண்பு. எவ்வளவு முயற்சி பண்ணினாலும் கோபம் வரும்போது கண்ணு மண்ணு தெரியாமல் போவது என் பலவீனமும்கூட.. எங்க அப்பாவுக்கு கோபம் வந்தே பார்த்ததில்லை. எங்க அம்மாவுக்கு கோபபப்டவே நேரம் இருந்ததில்லை. யாரிடமிருந்து அந்த கோபம் என்னைத் தொற்றிக் கொண்டது என்று தெரியவும் இல்லை. 


 ரோஷத்தின் அடிப்படையில்தான் அநேக நேரங்களில் அந்தக் கோபம் இருக்கும். ஒரு புத்தகத்தை லயித்து படித்துக் கொண்டிருக்கும்போது கடைக்குப் போகச் சொன்னால் வருமே ஒரு கோபம். அந்த நேரத்தில் தம்பி தடித் தாண்டவராயன் விளையாடிக்கொண்டு தான் இருப்பான்,ஆனால் கண்ணிலே படமாட்டான். நான்தானே கண்ணெதிரிலே இருப்பேன்.பிறகென்ன ஜிவ்வுன்னு கோபம் தலைக்கேறிவிடும்.


 பெண்பிள்ளைகளை விட ஆம்பிள்ளப் பசங்க மேலே அம்மாக்களுக்கு தனிப் பிரியம்தான். கோபத்தை யாரிடம் காட்ட முடியும். படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை மூலையில் எறிய வேண்டியதுதான். 

இதேமாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் உரசி உரசி கோபம் என்பது தொடர்கதையாகவே வந்து என்னுடைய அடுத்த முகம்  ஆகிவிட்டது. வீட்டிலே உள்ளவங்களுக்கு என் கோபம் உறுத்தத் தொடங்கியபோது நான் “கோவக்காரி” என்ற அடைமொழிக்கு சொந்தக்காரி ஆகியிருந்தேன்.


 கோபம் வரும்போது கையில் இருக்கும் பொருளெல்லாம் ஃப்ளையிங் சாஸர் மாதிரி பறக்கும். எதாவது சொன்னால் கோவப்படுவாள் என்று சொல்லிச் சொல்லியே என் கோபத்தை சாணை தீட்டி விடுட்டாங்க. நானும் விஸ்வாமித்திரர் ரேஞ்சுக்கு மூக்குக்கு மேலே கோபத்தை தூக்கி வைச்சுகிட்டேன். 


ஒருதரம் சின்ன சண்டை எதுக்கோ கோபப்பட்டு முற்றத்தில் இருந்த கிணத்துலே குதிக்கப் போயிட்டேன். பக்கத்தில் நின்றிருந்த சரசக்காதான் பிடித்து இழுத்து வெளியே போட்டாள்(அந்த கிணத்தில் தலை கீழே நின்னாலே கழுத்துவரைதான் தண்ணி இருக்கும் என்பது தனிக்கதை) அதுக்குப்பிறகு நல்ல செமத்தியா அடியும் கிடைச்சுது. என்னோட கோபத்தின் பரிமாணங்களை நல்லா தெரிஞ்சுக்கிட்டவங்கதான் என்னோட நட்பாக இருக்க முடியும். அப்படி நல்ல நட்புகளும் எனக்கு அநேகம்பேர் உண்டு. அதில் ராம்கியின் நட்பு முக்கியமானது.


எங்க 25 வது திருமணநாள் விழாவில் அவன் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது. ”சிவசக்தி தியேட்டர் வாசலில் பார்த்த இவளது கோபம் , வாழ்க்கையில் எவ்வளவு பிரச்னைகளை எதிர் நோக்குமோ என்று பயந்திருந்தேன். வெள்ளிவிழா கொண்டாடும் வகையில் நல்ல வாழ்க்கை அமைந்தது எழில் என்ற மாமனிதரால்தான்” என்று உருக்கமாகச் சொன்னான். உண்மையாகவே கால்கட்டுன்னு திருமணத்திற்கு சொல்வது என்னைப் பொறுத்த மட்டும் கோபத்திற்குப்பூட்டு என்றால் மிகையாகாது. எழிலுக்கு முன்னாடி இந்த பெண்சிங்கம் எலியாகிப் போனது உண்மைதான்.


கோபம்வந்தால்தான் நான் கொஞ்சம் அந்நியன்மாதிரி, மத்த நேரங்களில் காமெடி பீஸ்தான். பிரளயமே வந்தால்கூட என் கண்ணிலிருந்து பொட்டு கண்ணீர் வராது. ஆனால் சினிமாவில் பார்க்கிற மொக்கை செண்டிமெண்டல் சீனுக்கெல்லாம் பொலபொலவென்று கண்ணீர் வந்திடும். அது என்ன லாஜிக் என்று இன்னமும் புரியவில்லை.பக்கத்திலே உக்கார்ந்திருக்கிறவங்களுக்குத் தெரியாமல் நைசா கண்ணீரைத் துடைச்சுக்கிறது அடிக்கடி நடக்கும்.


பாவப்படறது, பச்சாதாபப் படறது போன்ற உணர்ச்சிகளெல்லாம் அப்போ இருந்திச்சான்னே தெரியலை. மாங்கு மாங்குன்னு அம்மா மதினியெல்லாம் வேலை செய்யும்போது காலை ஆட்டிட்டு புத்தகம் வாசித்திருக்கிறேன். அவங்களுக்கு உதவி செய்யணும்னு தோணினதே இல்லை. ஆனால் இப்போ, அதே நிலைமையில் நாம இருக்கிறப்போ “அடுத்த தலைமுறைப் பிள்ளைகளெல்லாம் ரொம்ப மோசம்; வீட்டு வேலையே செய்றதில்லை; காலாட்டிட்டு செல்போனை நோண்டிட்டு இருக்காங்க”ன்னு புரணி பேசறோம். மோசமான பழைய வார்ப்புகள் நாம்தான்.


அலங்காரம் பண்ணிக் கொள்வதில்கூட அத்துணை ஈடுபாடு இருந்ததில்லை. அதற்குரிய வாய்ப்புகளும் கிடைத்ததில்லை. பள்ளிக்குச் செல்லும்போது இரட்டை ஜடை மடிச்சுக் கட்டிட்டு போகணும். சரசக்காதான் எனக்கு மேக்- அப் அம்மிணி. தலையிலே தேங்காய் எண்ணெயை வழியத்தேய்ச்சு இறுக்கமா ரெண்டுஜடை போடுவாள். அங்கே இங்கே திரும்பினால் ரெண்டு குட்டு வேறே வைப்பாள். அந்த பாலியஸ்டர் ரிப்பனில் பூ மாதிரி விரிச்சுவிடறதுதான் பெரிய அலங்காரம். நாலுநாள் ஆனாலும் அந்த ஜடை பிரியாது, அவ்ளோ ஸ்ட்ராங்காக இருக்கும்..


முகத்துக்கு பாண்ட்ஸ் பவுடர்தான் மொத்த குடும்பத்து ஆண் பெண் எல்லா பாலருக்கும். 

முகம் கழுவ, குளிக்க எல்லாத்துக்கும் “ஆரோக்கிய வாழ்வினைக் காக்கும்” லைப்பாய் சோப்புதான். பெண்களுக்கு மட்டும் முகத்துக்கு மெருகூட்ட பச்சை மஞ்சள் உண்டு. துணி துவைக்கிற கல்லில் பச்சை மஞ்சளைத் தேய்க்கும் போது ஒரு சுகந்த மணம் வரும். அந்த மஞ்சள்தான் முகத்துக்கு பூசிக் குளிக்கணும். மஞ்சள் தேய்த்த முகத்தில் பவுடர் பூசினால் பளீரென்று முகம் இருக்கும். அறுபது வயது கடந்த பின்பும் இன்னும் முகத்தில் சுருக்கம் வராமலிருப்பது அன்று செயற்கைப் பூச்சுகளில்லாமல் பேணப்பட்ட முகப்பொலிவினால்தான்.

 பள்ளி நாட்களில் மஞ்சள் பூசவும் தடை இருக்கும். ஸ்கூல் யூனிபார்ம் வெள்ளை சட்டை என்பதால் மஞ்சள் நிறம் அதில் இறங்கி துணி துவைப்பது சிரமமாக இருக்கும். ஆனாலும் அப்பப்போ தெரியாமல் பூசிக்கொள்ளுவேன்.


இரட்டை ஜடையில் வைக்க பூவுக்கு நாங்களே நிறைய திருட்டுத்தனம் பண்ணிக்கொள்வோம். ஸ்கூல் கார்டனில் டிசம்பர் பூக்கள் என்று சொல்லப்படும் வகையில் நிறைய செடி இருக்கும். மஞ்சள் வயலட் என்று கலர் கலராகப் பூக்கும். முந்தின நாள் சாயங்காலமே அதிலுள்ள மொட்டுகளைப் பறிச்சுட்டுபோய் தண்ணீர்த் தொட்டியில் போட்டு வைச்சா மறுநாள் ஜடைக்கு வைக்க பூ ரெடி. சீசன் இல்லாத சமயங்களில் கிணற்றடிக்கு கீழ்ப்புறம் உள்ள அடுக்கு நந்தியாவட்டை செடியிலிருந்து மொட்டுக்கள் அபேஸ்.


காலுக்கு செருப்பு தேவைக்கு மட்டுமே என்றிருந்த காலம் அது. இந்தக்காலம் மாதிரி கலர் கலராகவோ துணிகளுக்கு மேட்சாகவோ இருக்காது. ஒரு செருப்பு வாங்கித் தந்தால் அது தேய்ந்து அற்று விழுந்த பிறகுதான் அடுத்த ஜோடி கிடைக்கும். நல்ல வேளைக்கு, கால் வளர்ந்து செருப்பு சின்னதாகும் முன்பே அத்துப்போயிடும். 


மழைக்குக் குடை எடுத்துப்போன நியாபகமே இல்லை. வீட்லே பெரிய கம்பிக் குடை இருக்கும், நாலைஞ்சுபேர் நனையாமல் போகலாம். மழைக் காலத்தில் யாராவது அந்தக் குடையைக் கொண்டுவந்து கூட்டிப் போவார்கள். யாரும் வராட்டி தற்காலிக மழைக்காகித குடைகளில் வர வேண்டியதுதான். வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலுள்ள சுமார் இரண்டு கிலோமீட்டரையும் நனையாமல் கடக்க முடியாது. இடையிலுள்ள கடைகளிலோ தாழ்வாரங்களிலோ நின்னு நின்னு வந்துடவேண்டியதுதான்.


அடடா! இந்த அலை ஆறாத சினத்தில் ஆரம்பித்து குடைக்குள் மழையில் முடிந்துவிட்டதே!!

0 Comments:

Post a Comment

<< Home