அலை-18
அலை-18
நினைவலைகளைப் புரட்டிப்
போட்ட சுனாமியாக SPB யின் இழப்பு. அதிலிருந்து மீண்டெழவாவது அலைகளில் மீண்டும் பயணிக்க
வேண்டியிருக்கிறது.
வீட்டுக்குள் நிலவியது
கம்யூனிசமா கடவுளிசமான்னு அப்போதெல்லாம் தெரியாது. ஆனால் வீட்டை சுற்றி மூணு திக்குகளிலும்
இருந்த கோவில்கள் குதூகலத்தையும் கும்மாளத்தையும் அள்ளித் தந்த பிக்னிக் ஸ்பாட்ஸ்.
வீட்டுக்கு மேற்குப் புறமாகவே எல்லா கோவில்களும் இருந்தன. வடக்குப் பக்கம் சிவன் கோவில்,
தெற்குப் பக்கம் மாரியம்மன் கோவில். இரண்டு கோவில்களும் ஒரே தெருவின் இரண்டு எல்லைகள்.
இரண்டுக்கும் மேற்காக அம்மன் கோவிலும் சர்ச்சும்.
காயல்பட்டினம் 3 கி.மீ தொலைவுக்குள் இருந்ததால் மசூதி மட்டும் வீட்டுக்கு அருகில் இல்லை.
ஒவ்வொரு சீசனுக்கும்
ஒவ்வொரு கோவிலில் விசேஷங்கள் நடக்கும். சினிமாவுக்குப் போகாத நாட்களில் “உன்னைச் சரணடைந்தேன்”னு
கோவிலுக்குப் போயிட வேண்டியதுதான். சினிமாவும் சுவாமி தரிசனமும் ஒண்ணான்னு விதண்டா
வாதம் பண்ணக்கூடாது. இரண்டுக்கும் வேறுபாடுகள் தெரியாத விகல்பமில்லாத விடலைப் பருவம்,
மறுபடி வரவே வராது.
வீட்லேயிருந்து
நாலு எட்டுலே போயிடும் தூரத்தில் சிவன் கோவில். அங்கே பூஜையின் போது மணி அடிக்க குழந்தைகள்தான்
முண்டியடித்து ஓடுவார்கள். தீப ஆராதனை, அபிஷெகம், பூஜை என்று கரெக்டாக நேரம் பார்த்து
மணி அடிக்கணும். ஓதுவார் தாத்தா கணீர்க் குரலில் பாட்டு பாடுவார். புரியாத பாஷையில்
இருக்கும் ஆனாலும் கேட்க நன்றாக இருக்கும். சிவன் கோயிலுக்கு போவதன் முக்கிய காரணமே
சுண்டல் வாங்கத்தான். ஆனால் எங்க சிவன் கோவில் பூசாரி மாதிரி யாரும் சுண்டல் தர முடியாது.
உள்ளங்கையை அகலமா விரிச்சு சுண்டலை அவர் அள்ளுவதைப் பார்த்தால், நம்ம கை நிறைஞ்சிடும்
போலத் தோணும். ஆனால் கரெக்டா அஞ்சு சுண்டல்தான் நம்ம கையில் விழும். எப்படித்தான் கச்சிதமாக
அதே மாதிரி அத்தனை பேருக்கும் தினமும் தருவாரோ தெரியாது.
கோவிலின் வலது
பக்கம் “செவிட்டு சாமி” இருப்பார் . எல்லாரும் முன்னாடி நின்று கைதட்டி சப்தமெழுப்பி
கும்பிடுவாங்க. எங்களுக்கு அவர் முன்னாடி நின்று கைதட்டுவது ஒரு விளையாட்டு. யாராவது
அதட்டல் போட்டால் சிட்டாய் பறந்திடுவோம். அவர் பெயர் சண்டிகேஸ்வரர் என்று பின்னாளில்
தெரிந்து கொண்டேன். வெளிப் பிரகாரத்தில் இருந்த சாமிகள் பெயர் தெரிந்ததோ இல்லையோ, எந்தந்த
சீசனில் எந்த சாமிக்கு விசேஷித்த பிரசாதம் கிடைக்கும் என்பது மட்டும் தெளிவாகத் தெரியும்.
“பாய்ஸ்” செந்தில் மாதிரி நோட் போட்டெல்லாம் எழுத வேண்டியதில்லை, எல்லாமே மனக்கணக்குதான்.
சிவராத்திரியும், திருக்கார்த்திகையும், விநாயகர் சதுர்த்தியும் மாசம் மாசம் வரக்கூடாதா
என்று நினைச்சுக்குவோம்.
திருக்கார்த்திகையின்
போது கோவிலின் வாசலுக்கு எதிரிலுள்ள தெருவில் கோபுரம் மாதிரி பெரிய பந்தல் மாதிரி போடுவாங்க,
அதுக்குப் பெயர் “சொக்கப் பனை”.(சொர்க்கப் பனைதான் மறுவியிருக்குமோ, தெரியாது.) ராத்திரி
அதை கொளுத்துவாங்க, ஊரே அங்கேதான் இருக்கும்.தீ நாக்குகள் சுருண்டு எழுந்து வானம் முட்டும்
வகையில் பறப்பது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். நாங்களும் எங்க பங்குக்கு தேங்காய்
மட்டையில் தீ பற்ற வைத்து குச்சியால் தட்டி தீப்பந்தம் கொழுத்துவோம். கார்த்திகைக்
கொழுக்கட்டை சூப்பர் டேஸ்டாக இருக்கும்.
ஒவ்வொரு பண்டிகைக்கும்
அதற்குரிய பலகாரம்தான் செய்வாங்க. கார்த்திகைக்குப் பிடிகொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்திக்கு
மோதகம், சரஸ்வதி பூஜைக்கு சுண்டலும் அவல் பொறியும், திருவாதிரைக்குக் கழி, தைப்பொங்கலுக்கு
சர்க்கரைப் பொங்கல். தீபாவளிக்கு மட்டும் “ஆல் இன் ஆல்” அத்தனை பலகாரங்களும்.
கார்த்திகைக் கொழுக்கட்டை
எங்க வீட்லே எக்ஸ்பிரஸ் தினுசில் ரெடியாகும். மாவு பிசைந்து கையில் எடுத்து ஒரு பிடி
பிடித்து இட்லி தட்டில் வைச்சு வேக வைப்பாங்க, சீக்கிரம் ஆகிவிடும். அம்மாவின் விரல்
அச்சுடன் இருக்கும். நண்பர்கள் வீட்டில் பனை ஓலையில் செய்வார்கள். நேரமும் வேலையும்
கொஞ்சம் அதிகம், ஆனால் சுவையாக இருக்கும்.நிறைய நாள் கெட்டுப் போகாமல் இருக்கும். பள்ளியில்
பலகாரங்களின் பண்டமாற்று நடக்கும். ( அவ்வப்போது எழில் எனக்காக மெனக்கெட்டு ஓலைக் கொழுக்கட்டை
செய்து கொடுக்கிறாங்க.)
சரஸ்வதி பூஜை அப்போ
ஏடுகட்டணும்னு எல்லா புத்தகங்களையும் குத்துவிளக்கு முன்னாடி வைச்சிடுவாங்க. ஏடு பிரிக்கிற
வரை படிக்க வேண்டாம், எங்களுக்கெல்லாம் ரொம்ப குஷியா இருக்கும். எங்க சரசக்கா சரஸ்வதி
பூஜை அன்னைக்குதான் பிறந்தாளாம். பெயருக்குப் பொருத்தமாக தமிழ் பண்டிட் ஆகிவிட்டாள்.
என் தமிழ் அறிவெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அவளிடமிருந்து வந்ததுதான்.
சிவன் கோவிலில்
ஒரு பண்டிகை முடியிறதுக்குள்ளே மாரியம்மன் கோவில் திருவிழா வந்திடும். வெளியூர் போன
சொந்தங்களெல்லாம் கோயில் கொடைக்கு வந்திடுவாங்க. ஊரே களை கட்டும். பத்து நாள்போல் பண்டிகை நடக்கும். ஒவ்வொரு நாளைக்கும் வித விதமான
கலை நிகழ்ச்சிகள் நடக்கும் வில்லுப்பாட்டு, கரகாட்டம், பாட்டுக் கச்சேரி, நாடகம் எல்லாம்
நடக்கும்.
எனக்கு ரொம்ப பிடிச்சது
வில்லுப் பாட்டுதான். விடிய விடிய கதை சொல்லுவாங்க. தெரு பைப்புக்கு பின்னாடி உள்ள
காலி இடத்தில்தான் மேடை போட்டு நடக்கும். மகாபாரதமும், ராமாயணமும் புத்தக வடிவில் வாசிக்க
ஆரம்பிக்கும் முன்பே ராமனையும், கண்ணனையும், கம்சனையும் அறிமுகப் படுத்தியது வில்லுப்
பாட்டுதான். கதைக்கு நடுவில் பாட்டுப் பாடி வில்லில் ஓங்கி ஒரு தட்டு தட்டி சொன்ன கதைகள்
இன்னும் பசுமையாக மனதில் இருக்கின்றன. (அழிந்தே போய்விட்டன இது போன்ற நாட்டுபுறக் கலைகள்)
அடுத்தபடி பிடித்தது
பாட்டுக் கச்சேரிதான். இட வசதி பற்றாத காலங்களில் சர்ச்சுக்கு எதிரிலுள்ள இடங்களில்
மேடை போட்டு பாடுவார்கள். ஒருமுறை பாட வந்த பாடகி எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள்
எங்களுக்கு தூரத்து சொந்தமாம். கமல் ரஜினியைப் பார்த்த மாதிரி வாய்மூடாமல் அதிசயத்துடன்
பார்த்தேன். அந்தக் காலத்திலேயே மேடைக் கவர்ச்சி மனதை கவர்ந்து இழுத்திருக்கிறது. கரகாட்டக்காரர்கள்
வீதி வீதியாக நடனமாடி எல்லாரையும் மகிழ்விப்பார்கள்
கும்பம் ஏந்தி
வீதி தோறும் வருபவர்களுக்கு காலில் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவோம். கோயில் கொடை எப்போதும்
அக்கினி நட்சத்திரத்தை ஒட்டி வரும் என்பதால் கால் சூடு தணிக்க தண்ணீர் ஊற்றுவது நம்பிக்கை
சார்ந்த விஞ்ஞானம். தெருவெல்லாம் தண்ணீர் கரைந்து ஓடி தரையின் சூடும் குறையும்.
நேர்த்திக் கடன்
செலுத்தும் சடங்காக கோவிலின் முன்புறம் முழுதும் வாழைக் குலைகளைக் கட்டி தொங்க விட்டிருப்பார்கள்.
டெருவின் இரு புறங்களிலும் தொங்கும் வாழைக் குலைகளில் நம்ம வீட்டு குலை எது என்பதற்கு
தண்டில் எழுத்துக்கள் வேறு கீறப்படிருக்கும். தினமும் போய் நம்ம வீட்டுக் குலை பழுத்துவிட்டதா
என்று நோட்டம் விடுவது எங்கள் வேலை. எல்லா பழங்களும் பழுத்து தொங்கும்போது பார்ப்பது
அழகிய அற்புதக் காட்சி.
விளையாட்டுகளுக்கும்
பஞ்சம் இருக்காது. சிறு சிறு போட்டிகள் அங்கங்கே நடக்கும். பலூன் விடுவது, கலர் கலர் ப்ளாஸ்டிக் கண்ணாடிகளை
வாங்கி மாட்டிக் கொள்வது, வளையல் க்ளிப் எல்லாம்
வாங்குவது என்று பண்டிகை முடியும் வரை கோலாகலமாக இருக்கும்.
மதங்களின் பரிச்சியம்
அன்று
பண்டிகைகளும் திருவிழாக்களும்
அவதாரங்கள் என்பது
பலகாரங்களின் பெயர்களே!
மதமோ சாமியோ மிரட்டவில்லை
அன்று
மனதுக்குப் பிடித்தபடி
வாழ்ந்தோம்.
மனிதர்களைத் துண்டு
போடும்
மாயாவியாய் மதங்கள்
இன்று!!
0 Comments:
Post a Comment
<< Home