Saturday, September 19, 2020

அலை-15

 அலை-15

நிலாச்சோறு சாப்பிட்டு இருக்கீங்களான்னு கேட்டால் நிலாவில் போய் சாப்பிடுவதா என்று இன்றைய தலைமுறை கேலியாகக் கேட்கும். அமுதைப் பொழியும் நிலவில் தரையில் அமர்ந்து தலையை நிமிர்த்தி வான் நோக்கி உண்ட சாப்பாடு அமிர்தம் இளவல்களே!!


இப்போதெல்லாம் வருஷத்துக்கு ஒன்றிரண்டு முறைகள் கூட நிலவைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நிலா அப்படியேதான் இருக்கிறது. நாம்தான் மாறிப்போனோம். கார் கூரையும் கான்க்ரீட் தளங்களும் நம்மை நிலவுக்கு அந்நியமாக்கிவிட்டது. அதனால் “அற்றைத் திங்கள் அந்நிலவில்” என்று பாட்டுமட்டும் பாடிக் கொண்டு  இருக்கிறோம். 


எங்கள் வீட்டில் மின்சாரமே இல்லாதபோது மின்விசிறி மட்டும் எங்கிருந்து வரும். கோடைக்காலங்களில் வீட்டினுள் படுக்க முடியாது,  அவிஞ்சி போயிடுவோம். அதனால் வெளிவாசலில் தான் படுக்கை.தரையில் படுக்க பாயோ போர்வையோ சரியா வராது.  கீழே விரிக்க   தென்னந் தட்டிகள் எப்பொழுதும் தயாராக இருக்கும். 


இரட்டைத் தென்னங் கீற்றுகளை இணைத்து அழகான தட்டி செய்திருப்பாங்க. ஏழெட்டு எண்ணம் எப்போதும் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். மழைக்காலங்களில் அதே தட்டிகள் கூரைமேல் ஒய்யாரமாகப் படுத்து மழைக்குக் காவல் காக்கும்.

 குடும்ப அங்கத்தினர்களின் உயரத்திற்கேற்ப பெரிசும் சிறுசுமாக வாங்கி வைத்திருப்பாங்க.


இரவு மெல்லக் கவிழும்போதே “ மூந்தி கருத்திருச்சு, தட்டியை எடுத்துப் போடுங்க”ன்னு சத்தம் கேட்டவுடனேயே நொடிப்பொழுதில் தரையை அடைத்து பரப்பிவிடுவோம். கடைசியாக விரிக்கிறவங்க நடைபாதையை ஒட்டி படுக்கணும். அங்கே படுத்தால் நாலுகால் நண்பர்கள் சிலர் ( நாய், ஆடு, மாடு, சில சமயங்களில் பன்றிகள்கூட- கிராமங்களில் இதெல்லாம் சகஜமப்பா) நம்மீது ஏறி பச்சைக் குதிரை விளையாடி விடுவார்கள். அலெர்ட் ஆறுமுகமாயிருந்தால்தான் வசதியா இடம் பிடிச்சு நிம்மதியாகத் தூங்கலாம்.


 குறுக்கும் நெருக்குமாக விரிக்கப்பட்ட தட்டிகளில் அவரவர் உடைமைகளைப் ( தலையணை, பெட்ஷீட்) போட்டு ரிசர்வ் செய்து கொள்வோம். நிறைய பேருக்குத் தலையணை கிடைக்காது. சுருட்டி வைக்கப்பட்ட துணிமூட்டைதான் தலையணை. 


காலையில் எழுந்ததும்  அவரவர் தட்டிகளைத் தூக்கி சுவரில் சாத்த வேண்டும். வெயில் பட்டு ஓலை கெட்டுப்போகாமல் இருக்க சில நேரங்களில் தண்ணீர் தெளிக்க வேண்டும். சாயங்காலமே தட்டி விரிக்க வேண்டிய இடங்களில் தண்ணீர் தெளித்து தரையின் சூடு தணிக்க வேண்டும். 

அப்பாவுக்கு ஒற்றை பெஞ்சும் பெரியண்ணனுக்கு சட்டம் வைத்த மரக்கட்டிலும் ரெடியாக போடப்பட்டிருக்கும். அம்மா மதினியெல்லாம் சிறுசுங்க பக்கத்தில் இருக்கும் இடங்களில் ஒண்டிக்குவாங்க.

ரொம்ப வெயில் அதிகமாகும் காலங்களில் ஓலை விசிறி ஒவ்வொருத்தர் கையில் இருக்கும்.


பெளர்ணமி அன்று தென்னந் தட்டியில் மல்லாக்க படுத்து வானத்தைப் பார்க்கிற சுகம் வேறு எந்த இயற்கைக் காட்சியிலும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.


 கவிஞர்களின் வர்ணனை மாதிரி ”நட்சத்திரங்களை எண்ணினாள் கதாநாயகி” எல்லாம் எங்களைப் பார்த்து எழுதியதுதான். வானத்தில் குவிந்து கிடக்கும் நட்சத்திரங்களின் பிரயாணம் ஒவ்வொரு சீசனுக்கும் இடம் மாறுவதை தினம் பார்த்துக் களித்தது எங்கள் தலைமுறை.

மூன்று நட்சத்திரங்கள்  ஒரே கோட்டில் இருக்கும், அதற்குப் பெயர் உலக்கை. நட்சத்திரக் கூட்டத்திற்கு அவ்வப்போது அவரவர் ரசனைக்கேற்ப பெயர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். மேகக் கூட்டங்களிடையே நட்சத்திரம் மறைவதை ஒட்டி போட்டிகளெல்லாம் கூட நடக்கும். காற்றின் திசை மாறும்போது நாம் கணித்த திசையில் செல்லாமல் மேகம் இடம் மாறிவிட்டால் தோற்றுப் போய்விடுவோம். 


நிலவில் பாட்டி வடை சுட்ட கதை காலம் காலமாக சொல்லப்பட்டது போலவே எங்களுக்கும் சொல்லப்பட்டது. அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டே நிலவைப் பார்க்கும் போது, உண்மையாகவே ஒரு பாட்டி காலை நீட்டி உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியிருக்கிறது. பாட்டி வடை சுட்டது பற்றி ஆச்சி சுவாரஸ்யமாக பீலாவிட்டு அதையே தொடர்கதையாக நீட்டி சொல்லுவாங்க. தினசரி கதை சொல்லும் நேரம் நிலாவிலிருந்தே ஆரம்பிக்கும். அதன் தொடர்ச்சியாக ஏதோ ராஜா ராணி கதையெல்லாம் கூட ஓடும். 


சாப்பிடுவது,கதை சொல்வது, வானத்தை ரசிப்பது எல்லாமே அந்தத் தென்னந் தட்டியில்தான். சில நேரங்களில் சீட்டு விளையாடுவதும் அங்கேதான். அதற்கு வெளிச்சம் பத்தாது என்பதால் தீப்பந்தம் வைத்து விளையாடுவோம். பழைய டானிக் பாட்டில்களின் அலுமினிய மூடியில் ஓட்டைபோட்டு பழைய துணியைத் திரியாக்கி அதில் சொறுகி பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றினால் பந்தம் ரெடி. ஒரு பந்தம் வைத்தாலே முற்றம் முழுதும் வெளிச்சம் கிடைக்கும். 


நான் கல்லூரி செல்லும் வரை அந்தமாதிரி பந்தத்தில்தான் நிறைய படித்திருக்கிறேன். ஒரு முறை லயித்து வாசிச்சப்போ பந்தத்தின் அருகில் தலை குனிந்ததால் முன் தலையின் முடி கருகி பாரிதாபமாக அலைந்திருக்கிறேன். யாரோ பார்த்து தீயை அணைத்ததால் முகம் கருகாமல் தப்பினேன். 


வானத்தில் உலவும் மேகக்கூட்டங்களை அவரவர் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவகப்படுத்தி கதை பின்னுவதில் நாங்கள் சமர்த்தர்கள். கற்பனைத் திறனற்ற  அடாவடிகளுக்கு எங்கள் கற்பனையைக் கேலி செய்து வெறுப்பேற்றுவதும் ஒரு பொழுதுபோக்கு. இன்றும் கூட வானத்தில் மேகக் கூட்டங்களைப் பார்த்தால் வித விதமான உருவங்களைக் கற்பனை செய்து மகிழ்வது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. 


கதை சொல்லி ஓய்ந்து தூங்கும் நேரம் வரும்போது வீட்டிலுள்ள ட்ரான்சிஸ்டரிலிருந்து ஏதாவது சினிமா பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும். இசையும் நிலவும் கூட இனிமையான இரவுகளைத் தந்திருக்கிறது.


”வானம் எனக்கொரு போதிமரம்” என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. வானம் எங்களின் நாடக மேடை.  அதற்குள் எத்தனை காட்சிகள், கவிதைகள், கற்பனைகள். வீனஸும், ப்ளூட்டோவும், வான சாஸ்திரமும் விஞ்ஞானமும் எங்கள் மண்டைக்குள் புகுவதற்கு முன் வானம் எங்கள் விளையாட்டு மைதானம். 


வெண்ணிலா எங்கள் தோழி , கதாநாயகி.  அவள் நடையழகும், சுருங்கி விரியும் இடையழகும் எங்களுக்கு ஆச்சரியம். அமாவாசையன்று முழுதாக மறையும் போது கவலை கொள்ளும் எங்கள் கூட்டம். பிறை கண்டு பித்துப்பிடித்து மகிழும் மனங்கள். 


விடி வெள்ளியும், வானவில்லும் எங்கள் விளையாட்டுத் தோழர்கள். வானத்து நட்சத்திரங்கள் சினிமா நட்சத்திரங்களைப் போலவே எங்களை மகிழ்விக்கும் கலைஞர் கூட்டம். வடை சுட்ட பாட்டியும் வழி மாறும் மேகங்களும் எங்கள் உறவினர்கள். கிரகணமும் , வால் நட்சத்திரமும் , கார்கால மேகங்களும் எங்களைக் கடுப்பேத்தும் வில்லன்கள்.


வானத்தையும் நிலவையும்

 வேறுபடுத்தி பார்க்க முடியாது

நினைவலைகளையும்

நிலவையும்கூட

வேறுபடுத்தி பார்க்க முடியாது.

0 Comments:

Post a Comment

<< Home