அலை-13
அலை-13
வாசிக்கும் பழக்கம் எப்போதிருந்து தொடங்கியது என நினைவில்லை. ஆரம்பக் கல்வியின் அகர முதல புரிந்த காலத்தில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும். ஆனாலும் முனைப்போடு வாசிக்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்புக்குப் பின்புதான். அதற்கு வித்திட்டவர்கள் சந்தையின் முனையில் இருந்த ஹோட்டல் கடையும், அன்புத் தோழி அமராவதியும்தான்.
கையில் எந்த பேப்பர் கிடைத்தாலும் எனக்கு அதை வாசித்துவிட வேண்டும். பலசரக்கு சுற்றித்தரும் பேப்பர்கூட தப்பாது. அதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரிதான்.
எங்க வீட்டில் தினசரி பத்திரிக்கைகளோ வாரமலர்களோ வாங்கினதெல்லாம் கிடையாது. எல்லாமே இரவல் புத்தகங்கள்தான்.
அந்த வயதில், கண்டதையும் படித்தால் கெட்டுப் போய்விடுவீங்கன்னு யாருமே சொன்னதில்லை. அம்மா கைநாட்டு, அப்பா அறிவு ஜீவி. அன்று கண்ணில் கண்டதையெல்லாம் படித்ததால் வந்த அறிவுதான் இன்று எழுதிக் கொண்டிருக்கும் அலை ஓட்டத்தின் அடிப்படை.
சந்தையின் முகப்பில் ஒரு ஹோட்டல் கடை உண்டு, இப்போ அதன் பெயர் கூட மறந்துவிட்டது. அதன் வெளி வராந்தாவில் கம்பி வைத்த ஜன்னல் உண்டு. அன்றைய நாளிதழ்களை அந்தக் கம்பிகளில் சொருகி வைத்திருப்பார்கள். யார்வேண்டுமென்றாலும் வந்து படித்துக்கொள்ளலாம். எடுத்துட்டு போகக்கூடாது. உட்கார்ந்து படிக்க தோதாக சிமெண்ட் தரையும் இருக்கும். பள்ளிக்கு செல்லும் முன்போ திரும்பி வரும்போதோ அந்தத் திண்ணைதான் எனது முதல் நூலகம்.
தினத்தந்தியில் “சிந்துபாத்” என்ற படக்கதை தொடராக வந்து கொண்டிருந்த காலம். எனது முதல் தொடர்கதை அநுபவமும் அந்த சிந்துபாத்துடன் தான். ஒருநாள்கூடத் தவறாமல் வாசித்துவிடுவேன். அதை விடுத்து வேறு ஏதும் அந்த நாளிதழில் சுவாரஸ்யம் தந்ததாக இப்போது நினைவில்லை.அந்தத் தொடர் என் பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரி சென்றபிறகும் கூட தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
மேல்நிலைப்பள்ளியில் அறிமுகமான தோழி அமராவதி வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கும். பள்ளிக்கு அருகிலேயே அவள் வீடு. சக தோழிகள் எலந்தைப்பழம் பறிக்க அங்கு போகும்போது புத்தங்களை மேய்வது என் வாடிக்கை. சோளப்பொறிக்குப் பதிலாக சொர்க்கபுரியைக் கண்டது அங்கேதான்.
விதவிதமான புத்தகங்கள் இருக்கும். முகமூடி என்ற படக்கதைதான் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது. அதில் "இரும்புக் கை மாயாவி" என்ற கதாபாத்திரத்தின் அட்வென்சர்ஸ் என்னை ஆட்கொண்ட பொழுதுகள். அதுவே வெவ்வேறு புதினங்களாக இருக்கும் ( இந்தக்கால ஜேம்ஸ்பாண்ட் சீரியல் மாதிரி) .
முத்து காமிக்ஸ் புத்தகங்கள் அதிகமாக இருக்கும். புத்தகங்களை இரவல் வாங்கிட்டுப்போய் திரும்பக் கொடுத்து மறுபடியும் வேறு புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். படக்கதையிலிருந்து நாவல்கள் பக்கம் மனது திரும்பியதும் அங்கேதான்.
வார இதழ்களில் வரும் தொடர் கதைகளை பிரித்து எடுத்து பைண்ட் பண்ணி வைத்திருப்பார்கள். நாவல் புதிதாக வாங்கினால் விலை அதிகமாக இருக்கும். வார இதழ் வாங்குபவர்கள் வீட்டில் இதே மாதிரி பைண்ட் பண்ணப்பட்ட நாவல்கள் நிறைய இருக்கும். ஒருவருக்கொருவர் மாற்றிக் கொடுத்து வாசித்துக் கொள்ளலாம். இருக்கிறவங்களுக்கு ஒரு புத்தகம், எங்களைப்போல் இல்லாதவங்களுக்கு எல்லோருடைய புத்தகமும் எங்க புத்தகம்தான். சில நேரம் நாவலின் கடைசி பக்கம் கிழிந்து போயிருக்கும் . முடிவு தெரியாமல் முட்டி மோதி அதே புத்தகம் வேறு யாரிடமாவது கிடைக்குமான்னு அலைந்து முடிவு தெரியும் வரை மிகப் பெரிய போராட்டமாக இருக்கும்.
அந்த கால கட்டத்தில் குமுதம், கல்கி, விகடன், ராணி போன்ற புத்தகங்களில் வந்த தொடர்கதைகளெல்லாம் கண்டிப்பாகப் படித்திருப்பேன். சாண்டில்யனையும், அகிலனையும், நா.பாவையும், கல்கியையும் அறிமுகப்படுத்திய அரிய பொக்கிஷங்கள் அவை. பாக்கட் டைரி அளவில் முத்து காமிக்ஸில் தொடங்கிய வாசிப்பு, பெரிய பெரிய பைண்டு புத்தகங்களுடன் தொடர்ந்தது. தீபாவளி பொங்கல் மலரெல்லாம் விசேஷ பதிவுகள். சுடச்சுட கிடைக்காது, சில நாட்கள் கழித்தே கிடைக்கும். அதற்காகக் காத்திருக்கும் தருணங்கள் இம்சையுடன் கூடிய இனிய பொழுதுகள்.
பள்ளியிலும் ஒரு நூலகம் உண்டு. சில ஆங்கில நாவல்களெல்லாம் அங்கே எடுத்து படித்த நினைவு மங்கலாகத் தெரிகிறது. இடைப்பட்ட காலங்களில் அண்ணன்கள் வாசித்த புத்தகங்களின் பரிச்சியம் தொடங்கியது. ஜெயகாந்தன், காண்டேகர் போன்றோரின் எழுத்துக்கள் மெது மெதுவாகப் பரிச்சியமானது. ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் புரிந்து உள்வாங்கும் வயதும் மனமுதிர்ச்சியும் இல்லாதிருந்த போதும் அவற்றை வாசிக்கும் லயிப்பு அப்போதே வந்துவிட்டது.
சரசக்கா படித்து முடித்து வந்த சமயத்திலிருந்து எங்கள் வீட்டிலும் குமுதம் , விகடன் வாங்க ஆரம்பித்தார்கள். அந்தப் புத்தகம் வரும் நாட்களில் மிகத் த்ரில்லாக இருக்கும். யார் முதலில் அதைப் படிப்பது என்பதில் போட்டி வரும். சுஜாதாவின் "கணேஷ்-வசந்த்" உடன் பயணம் செய்து துப்பு துலக்கின பிறகுதான் வாரமலரை அடுத்தவங்க கையில் கொடுப்பேன். சரித்திரத் தொடர்கதையின் அடுத்த வாரம் என்னவாக இருக்கும் என கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டுக் கனவு காண்பது பிடித்தமான பொழுது போக்கு.(இந்தக்கால சீரியல் ஆண்ட்டீஸ் மாதிரி).
அதன்பிறகுதான் சிரிப்புத் துணுக்குகள், சிறுகதைகள் எல்லாம் வரிசை கட்டும். பாக்கியம் ராமசாமியின் “அப்புசாமித் தாத்தா”, ராணிபத்திரிக்கையின் “ குரங்குக் குசலா” போன்ற நகைச்சுவைத் தொடர்கள் ரொம்பப் பிரபலம். பொக்குவாய் அப்புசாமித் தாத்தா இன்னும் மனசுக்குள் குழந்தைபோல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
மர்மத் தொடர்கள், அமானுஷ்யக் கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. எண்டமூரி வீரேந்திரநாத் என்று ஒருவர் எழுதும் அமானுஷ்யக் கதையின் ஓஷோ தாத்தாவை நினைத்து நிறைய ராத்திரிகள் பயந்திருக்கிறேன். மனதுக்குள் காதலை உணர வைத்தது கூட தொடர்கதையின் கதாநாயகர்களும் நாயகிகளும்தான்.அவர்களின் ஊடல் மனதுக்குள் கவலையையும் , அவர்களின் களிப்பு சந்தோஷத்தையும் தந்தது கதாசிரியர்களின் திறமையும் கதை சொல்லும் நேர்த்தியும்தான்.
எப்போது பார்த்தாலும் கதை புத்தகத்துடனேயே இருப்பதற்கு அம்மா திட்டினாலும், அடுத்தவர்களிடம் சொல்லும்போது பெருமை பிடிபடாது. ”தூங்குற நேரம் போக எப்போ பார்த்தாலும் எதையாவது படிச்சுகிட்டே இருப்பா, கழிவறைக்குக் கூடப் புத்தகத்துடன்தான் போவாள்” என்று திட்டுவது போல் சொல்லி மகளின் அறிவுத் திறனை வெளிச்சம் போட்டு காட்டுவதில் அம்மா கில்லாடி. அன்றைய பழக்கம்தான் இன்றும்கூட கழிவறை வரை புத்தகங்களைத் தூக்கிச் செல்ல வைக்கிறது.
அப்பா படிக்கும் ஆங்கில பத்திரிக்கையில் ஒன்றும் புரியாது. அதிலிருந்த அரசியலோ நாட்டு நடப்போ , வேலை சார்ந்த செய்திகளோ அதிகம் ஈர்க்கவில்லை. ஆனால் நயினார் அண்ணன் வாங்கி வரும் ஆங்கிலப் பத்திரிக்கையில் செவ்வாய் தோறும் “Know your English” என்றொரு காலம் வரும். ஒரு ஆங்கிலச் சொல்லின் பிரயோகம் மற்றும் உச்சரிப்பைப் பொறுத்து அநுமானிக்கப்படும் பதில்கள் பலவிதமாக வரும். எனக்கு அந்தப் பகுதிதான் மிகவும் பிடித்தது. பள்ளி இறுதி ஆண்டுகளைத் தொட்ட போதுதான் சிறிது சிறிதாக ஆங்கில நாவல்கள் படிக்கக் கிடைத்தது.
பள்ளியில் நாண்டிட்டெயில் (non-detail) வகுப்பு ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் படக்கதை எல்லாம் சொல்லித் தருவார்கள். அதற்கென்று தனி ஆசிரியரும் இருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக பள்ளி நூலகத்தில் புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதெல்லாம் ஒரு கடமைக்குத்தான். ஊர்ப்பள்ளிவாசலில் ஒரு பொது நூலகம் உண்டு. பொதுவாக பெண்பிள்ளைகள் அங்கு செல்வதில்லை. ஒன்றிரண்டு முறை அன்ணனுடன் சென்றிருக்கிறேன். இவை எதுவுமே அமராவதி வீடுபோல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கவில்லை.
வாழ்க்கையே ஒரு நூலகம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
எத்தனை விதமான கதைகள்
எத்தனை புத்தகங்களின் ஒருங்கிணைப்பு
எவ்வளவு படித்தாலும் முடிக்க முடியாமல்
எப்போதும் ஏங்க வைக்கும் தொடர் சித்திரம் வாழ்க்கை.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
கிண்டில் (kindle) கதைகள்
கிழிந்த புத்தகங்களில்
எங்கள் கதைகள்.
0 Comments:
Post a Comment
<< Home