Friday, September 04, 2020

அலை-8

 அலை-8

உள்ளூர் ரோடும் உட்கார்ந்து படித்த பனைமர நிழலும் நெளிந்து செல்லும் கருவேல மரக்காடுகளும் அன்று எங்களின் குறும்புகளுக்கு சாட்சியாக இருந்தன. மரங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு தெருக்களும் வீடுகளுமாக மாறி நிற்கின்றன. பூர்வீக வாசம் கொஞ்சம் அந்நியப்பட்டது போல் இருக்கிறது


மெயின்ரோடு வழியாகப் பள்ளிக்குப்போவது தூரம் என்பதால் குறுக்குப் பாதை பனங்காடும் ஒடங்காடும்தான். ஆனால் தனியாகப் போக கொஞ்சம் பயம்தான். எப்படியாவது துணை கிடைத்துவிடும். 

அதிலும் ரெட்டைப் பனை மரத்தைத் தாண்டும்போது கொஞ்சம் திக்திக் தான். எல்லாம் இந்த பெருசுங்க சொல்ற கதைகளால்தான். அந்த வயசில் பேய் பயமெல்லாம் நிறையவே இருந்திருக்கு.


பனங்காட்டின் மணல் பரப்பு உதிரி மணலாக இருப்பதால் நடப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். கால் உள்ளே பதியும். பள்ளிக்கு நேரமாகி விட்டதேன்னு ஓடுவதும் முடியாது. 

ஒடங்காட்டுப் பாதை நெளிந்து நெளிந்து போகும். ஒடை மரங்கள் வேறே கோணல் மாணலாக வளர்ந்து கீறல் போடும்.. பள்ளிக்குக் கொஞ்சம் முன்னாடி மெயின் ரோடில் ஏறும்போது அப்பாடான்னு இருக்கும். நமக்குத் துணையாக ஏகப்பட்ட மக்கள் அரக்கப்பரக்க போய்கிட்டு இருப்பாங்க. அசெம்ப்ளி ஆரம்பிக்கிறதுக்குள்ளே போயிடணும்..


பள்ளி முடிந்து திரும்பும் பயணம் மட்டும் களை கட்டிடும்.  எப்படியும் நாலைஞ்சு பேர் சேர்ந்துதான் வருவோம். நேரம் இருப்பதைப் பொறுத்து கபடி,கண்கட்டி விளையாடுவதெல்லாம் சிலநாள் நடக்கும். இடையில் கடக்கும் ரயில்வே தண்டவாளத்தில் கீழே விழாமல்நடக்கும் போட்டியும் உண்டு; கைகோர்த்துகிட்டு ஜோடி போட்டு நடக்கிறதும் உண்டு.


மழைக்காலங்களில் ஈர மண்ணில் சிவப்பு நிற பட்டுப்பூச்சி ஊர்ந்தால் அதைப்பிடித்து தீப்பட்டி பாக்ஸில் போட்டுக்கிறது, புட்டான் (தட்டான் அல்லது தும்பி) பிடிக்கிறது, பட்டாம்பூச்சியைத் துறத்துறது எல்லாம் நடக்கும். அந்தக் காலத்தில் பெரிய வேட்டைக்காரங்களா இருந்திருக்கோம்.


ஒடைமரத்தின் நீளமுட்கள்  அநேகரின் பிய்ந்துபோன பொத்தான்களாக மாறியிருக்கிறது(என்ன தங்கர்பச்சான் படம் மாதிரி இருக்கா?) அதே முள்ளைக் கால் பெருவிரலில் சொருகிக் கொண்டு பக்கத்தில் இருப்பவர்களைக் குத்தி அலறவிடும் ஆசாமிகளும் உண்டுதான். குறும்பு செய்யாத குழந்தைப் பருவம் ஏது? 


நேரம் அதிகமாக இருக்கும்போது மெயின் ரோடு வழியாவே போகலாம். இடையில் என்தோழி வேல்கனி வீட்டுக்குப்போய் அவளுடன் சேர்ந்து போவேன். அவள் வீட்டில் அவல் வியாபாரம். வேல்கனி கிளம்பும் வரை அவல் இடிக்கும் உபகரணங்களையும் அதன் அசைவுகளையும் பார்த்துக் கொண்டிருக்க ரொம்ப பிடிக்கும். வலதுகையால் பலகை மாதிரி லீவரை ஒரு மண் குழியில் மோத வைத்து அவல் பொறி மாதிரி வருவதைப் பார்க்க அதிசயமாக இருக்கும்.


எங்க ஊர் பள்ளிவாசல் பஜார்தான் மெயின் கடைத்தெரு.  பிரதான பேருந்து நிறுத்துமிடமும் அதுதான். எப்போதும் கூட்டமும் சத்தமும் அதிகமாக இருக்கும். அதைக் கடந்துதான் பள்ளி செல்ல வேண்டும். அதனாலேயே காட்டுவழியே போகப் பிடிக்கும்.


தோழிகள் துணை இல்லாதபோது புத்தகம் வாசித்துக் கொண்டே நடப்பது என் வாடிக்கை. பள்ளிப் புத்தகங்களெல்லாம் சுமந்து செல்ல நீள கைப்பிடியுடன் உள்ள தோள்பைதான் (ஜோல்னாப்பை) எல்லாருக்கும். ஆதைத் தலையில் மாட்டி முதுகுப் பக்கம் தொங்க விட்டுக் கொள்ளலாம். கை ரெண்டும் ப்ரீ ஆகி புத்தகத்தைப் பிடிக்க முடியும். சில நேரம் சந்தைக்குப் போகும் மாட்டு வண்டியின் பின் பக்கத்தில் பையைத் தொங்க விட்டுட்டு படிச்சுகிட்டே போவேன்.


புத்தகம் இரவல் கொடுத்த தோழியிடம் மறுநாளே திருப்பித் தரவேண்டும் என்பதால் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன். வீட்டில் மின்சாரம் கிடையாது என்பதால் பொழுது சாயறதுக்குள்ளே படிச்சு முடிக்கணும்.


தலையில் பையை மாட்டிகிட்டு புத்தகம் வாசிச்சுகிட்டே நடந்தால் நாவலின் நாலைந்து அத்தியாயங்கள் படித்துவிடலாம். வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் அளோ தூரம். இப்போது அடுத்த தலைமுறை அதே பள்ளிக்கு வாகனத்தில் செல்லும் சொகுசு வந்விட்டது. நடக்க விடணும்,எடை குறைக்கணும் என்ற வார்த்தைகளும் கூடவே ஒட்டிக்கொண்டுட்டது.


ஆண்பிள்ளைகளுக்கு தோள்பை தூக்கிட்டு வறது கெளரவக் குறைச்சலாகத் தோணும் போலிருக்கு. கல்லூரி மாணவர்கள் போல் ஸ்டைலாக நாலு புத்தகங்களோடு வருவாங்க. கொஞ்சம் சின்சியர் சிகாமணிகள் மட்டும் பிளாஸ்டிக் கூடையுடன் வருவாங்க.


பென்சில் உபயோகித்தபோது, இதுக்குமேலே சீவ முடியாதுங்கிற வரை உபயோகிச்சுடறது. பேனா பிடிக்க ஆரம்பிச்ச பிறகு தினமும் கடையில் போய் மை நிரப்பிக்கிறது எல்லாமே வாடிக்கைதான். 'மூன்றாம்பிறை' ஸ்ரீதேவி மாதிரி மைபாட்டில் உடைப்பதெல்லாம் மிக அபூர்வம். பால்பாயிண்ட் பேனா இருந்ததாக நினைவே இல்லை.


பள்ளிக்கூட நினைவுகள் வாழ்வின் கணிசமான வருடங்களை அசை போட வைக்கிறது.

0 Comments:

Post a Comment

<< Home