அலை-5
அலை-5
சந்தைக்கடை: எங்க வீடும் சந்தைக்கடையும் வேறு வேறல்ல. எங்க வீட்டு விலாசமே 49- சந்தைத் தெரு தான். வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ரெண்டு நாள் கூடும் வாரச் சந்தை. இப்போதைய உழவர் சந்தைகள் மாதிரி, அக்கம் பக்கத்து கிராம விவசாயிகளின் விற்பனைக்கு ஏதுவானது. சந்தையின் ஒரு மூலையில் காவல் நிலையம் இருக்கும்.
உங்க வீடு எங்கே இருக்குன்னு கேட்டா சந்தைக்குள்ளேன்னு சொல்லிட்டா, தலமைச்செயலகம் மாதிரியான பிரபலமான இடம் அது. வழி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
வாழுற வீட்டுக்கு வடக்கு வாசலாம். எங்க வீடும் வடக்கு வாசல்தான். அதுக்கு இன்னோரு பெயர் மங்கம்மா சத்திரம். வீட்டுக்கு யார் வந்தாலும் முதல்லே சாப்பிட வைக்கிறதுதான் எங்க வீட்டு பண்பாடு. எந்நேரமும் மண்பானையில் சோறு இருந்துகொண்டே இருக்கும். எங்கள் பள்ளி , கல்லூரித் தோழர் தோழியர் பெரும்பான்மையானவர்களுக்கு மிகப் பரிச்சியமானது இந்த சந்தைக்கடை வீடு.
குச்சி வீடு ( பின் பக்கம்) ஓட்டு வீடு (முன்பக்கம்) உள்ள மிக எளிமையான அரண்மனை அது. குச்சிவீடு ஓலை வேய்ந்து, சாணி மெழுகிய தரையுடன் இருக்கும். ஓட்டு வீடு அங்கங்கே உடைந்த தரையுடன் காரை போட்டு இருக்கும். எங்க வீட்டுக்கு கதவே கிடையாது. உள்ளே வைத்து பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷங்களும் எதுவும் கிடையாது. நாய், பூனை போன்ற நண்பர்கள் வந்து சாப்பாட்டில் வாய் வைத்துவிடாமல் இருக்க மூங்கில்தட்டியால் ஆன கதவு மட்டும் இருக்கும்.
ஓட்டு வீட்டுக் கதவு மட்டும் முன்புறம் பூட்டியே இருக்கும். எங்க வீட்டுக்கு எதிரில்தான் சந்தையின் மீன்கடை இருக்கும். வீட்டில் அனைவரும் சைவம் என்பதால் முன்புறம் வழியாக புழங்குவதே கிடையாது. அந்தக் காலத்தில் மீன்வாசனைக்கு உவ்வே போட்ட நான் இப்போ மீன்தான் சிறந்த அசைவ உணவுன்னு வெளுத்துக் கட்டிகிட்டு இருக்கேன்.
சந்தைக்கடைதான் எங்களுக்கு விளையாட்டு மைதானம். எனக்கு முன்னாடி ரெண்டும் அண்ணன்கள், அடுத்தது தம்பி என்பதால் எனக்கு நண்பர்கள் அனைவரும் ஆண்பிள்ளைகளாகவே இருப்பார்கள். அவங்க கூட கோலி, கட்டகுச்சி (கில்லி), பம்பரம், கொல்லாங்கொட்டை ( முந்திரி பருப்பு) போன்ற வீர விளையாட்டுகள்தான் விளையாட முடியும். பல்லாங்குழி, தாயம் எல்லாம் லீவுக்கு அக்கா பசங்களெல்லாம் வரும்போது மட்டும்தான் விளையாட முடியும்.
வாழைப்பழக் குலைகள் பழுக்க வைக்க நிறைய குழி வெட்டி வைச்சிருப்பாங்க. ஆறடிக்கு ஆறடியாவது இருக்கும். வாழைத்தார்களை உள்ளே வைச்சு களிமண்ணால் மூடி புகை போட்டுப் பழுக்க வைப்பாங்க. அந்த வேலை முடிஞ்சதும், எல்லாக் குழியும் பெப்பரப்பேன்னு திறந்து கிடக்கும். உள்ளே வெளியே விளையாட சூப்பரான இடம். மங்கி விளையாட்டுன்னு சொல்லுவோம்.குழிக்குள்ளே இருக்கிறவங்க வெளியே சுத்தி ஓடறவங்க காலைப் பிடிச்சு இழுத்தால் அவுட். பசங்க எல்லாம் நெட்டைக் கால் ஜாம்பவான்கள், பிடிபடாமல் குறுக்கே தாவிக் தாவிக் குதிச்சுடுவாங்க. கொஞ்ச நாள் ஆனபிறகு மண் சரிந்து குழி சின்னதான பிறகு விளையாட்டு ஈஸி ஆயிடும்.
சந்தையின் கடைகள் ஓலை வேய்ந்து, குறுக்கே பனங்கட்டை கொடுத்திருப்பாங்க. அதிலே தொங்கி ஆடுறதுதான் எங்க ஜிம் வொர்க் அப்! நாலு கட்டையிலும் ஆள் நின்னுகிட்டு நடுவுலே குரங்குன்னு ஒரு ஆளை நிப்பாட்டி ஓடுறது ,சிமெண்ட் மேடையில் ஏறிகிட்டு கல்லா மண்ணா விளையாடுறது. அப்பப்பா! எத்தனை விதமான விளையாட்டுகள் அப்போ இருந்திருக்கு. அதோட அருமை தெரியாமலே அநுபவிச்சு விளையாடியிருக்கோம்.
ஆம்பிளப் பசங்க கூட விளையாடப் போகக் கூடாதுன்னு அடிக்கடி அம்மா கிட்டே அடி வாங்கியிருப்பேன். ஆனாலும் அடங்கினது கிடையாது. எல்லா வீர விளையாட்டுகளும் விழுப்புண்கள் உண்டாக்கும். இரத்தக் கட்டு ஏற்பட்டாலும் சரி, கால் பிசகினாலும் சரி ,வீட்லே சொல்லவே முடியாது. சொன்னா வைத்தியம் கிடைக்குதோ இல்லையோ கண்டிப்பா அடி கிடைக்கும். எதுக்கு வம்பு?
முன்வாசலின் இன்னோரு பக்கம் (மண்) சட்டி பானைக் கடை இருக்கும். சந்தையில் கள்ளப் பண்டங்கள் வாங்க வீட்லே காசு தர மாட்டாங்க. சட்டிப்பானைக் கடை தேவருக்கு அத்தனை மண்பாண்டங்களையும் குடிசைக்குள்ளிருந்து எடுத்து சந்தையில் பரப்பவும், மறுபடி சாயங்காலம் உள்ளே எடுத்து வைக்கவும் ஆள் தேவைப்படும். லீவு நாளெல்லாம் நாங்க உழைப்பாளிகள் ஆயிடுவோம். வீட்லே அம்மா சொன்ன வேலை செய்றோமோ இல்லையோ தேவர் சொல்படி பானைகளை அடுக்கப் போயிடுவோம். அதுலே கிடைக்கிற காசுதான் சந்தைப் பலகாரங்களும் பழங்களும் வாங்கித் தின்பதற்கு பாக்கட் மணி.
எத்தனை விதமான மண் பாண்டங்கள் அப்போ இருந்துச்சு. குழந்தைகளின் சிறுவீட்டு சொப்புப் பானைகள் முதல் சம்சார வீடுகளின் சமையலறை பாத்திரங்கள் வரை அத்தனை விதங்களாக இருக்கும்.எங்க வீட்டில் அநேகமா எல்லாமே மண்பாத்திரங்கள்தான். நல்ல வேளையா காப்பி குடிக்க மட்டும் சில்வர் தம்ளர். இல்லாட்டி தம்ளர் உடைச்சே சொத்தைக் கரைச்சிருப்போம். மண்பானைத் தண்ணீரும், பழைய சோறும் மணக்க மணக்க இருக்கும்.
பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் உண்மையாவே நடக்கும். காக்கா தூக்கிட்டுப் போறதும், பொடிசுங்க துரத்திட்டுப் போறதும் வாடிக்கையாகவே நடக்கும். மாம்பழத்தை வாங்கி, நல்லா கசக்கிட்டு சின்ன ஓட்டை போட்டு அதுவழியா மாம்பழச் சாறு குடிச்சவங்களுக்கு இன்றைய ப்ரூட்டியும் மாசாவும் சுவை குறைந்ததுதான்.
சந்தையின் நடுவில் ஒரு கோணப் பூவரச மரம் இருக்கும். அதுதான் எங்க மீட்டிங் பாயிண்ட். விளையாட்டை நடத்துறவங்க அதுலேதான் லீடர் மாதிரி உக்காந்துகிட்டு ரூல்ஸ் சொல்லுவாங்க. சில நேரங்களில் மொசுக்கட்டை பூச்சி இருக்கிறது தெரியாமல் உக்காந்து அரிப்போட அலைஞ்சதும் உண்டு.
சந்தையின் அடுத்த கோடியில் நெடிது வளர்ந்த அத்தி மரம் இருக்கும். இன்னோரு ஓரத்தில் கொடுக்காப்புளி ( கோணப்புளியங்காய்) மரம் இருக்கும். சீசனுக்குத் தக்க எந்த மரத்திலெல்லாம் காய் இருக்குமோ அங்கெல்லாம் குரங்குமாதிரி ஏறி பழம் பறிச்சுடுவோம். எங்களைப் பார்த்துதான் கண்ணதாசன் “குரங்குகள் போலே மரங்களின் மேலே”ன்னு பாட்டுப் பாடியிருப்பார் போலிருக்கு.
சந்தை கொஞ்சம் தாழ்வான பகுதி. அதனாலே ஐப்பசி கார்த்திகை அடை மழைக் காலங்களில் இடுப்பளவு தண்ணீர் அங்கே தேங்கிடும். நானே கார்த்திகையில் பிறந்த பெண்தான். அம்மாவுக்கு எல்லாமே வீட்லேதான் பிரசவம். நான் பிறந்த போது அடை மழையில் சுவர் நனைந்து ஊறி கீழே விழுதுடுச்சாம். நல்ல வேளையா நாங்க படுத்து இருந்ததற்கு எதிர்ப் புறம் விழுந்திருக்கு. இந்தப்புறம் சரிந்திருந்தால் அன்னைக்கே ஆள் காலி. ஆரம்பமே அட்வென்ச்சருடன் பிறந்த சிங்கப் பெண் நான்!
மழைத் தண்ணீர் காயறதுக்கு சில சமயங்களில் பத்து நாள் கூட ஆயிடும். காகிதக் கப்பல் விட்டு விளையாட சந்தோஷமாகவும் இருக்கும்; முட்டளவு தண்ணீரில் பள்ளிக்கூடம் போவது இம்சையாகவும் இருக்கும். மண்பாண்டங்கள் அந்த தண்ணீரில் மிதக்க மிதக்க வியாபாரமும் நடக்கும். தண்ணீர் காஞ்ச பிறகு சேறு காயும் சமயம்தான் ரொம்ப இம்சை. சொதக் சொதகுன்னு கால் பூட்ஸ் போட்டுக்கும்.
நான் சைக்கிள் ஓட்ட கத்துகிட்டதே சந்தையில்தான். அங்கேதான் இடைவெளி விட்டு விட்டு உயரமான திண்டுகள் இருக்கும். இடைவெளியில் சைக்கிளில் இருந்து இறங்கினால் பெடல் போட்டு ஏறத் தெரியாது. அந்த திண்டுகள்தான் என்னை மறுபடி சைக்கிளில் ஏற்றும் ஆபத்பாந்தவர்கள்.
காலையில் ஒவ்வொரு கடையா கொண்டு வந்து வைச்சு ஒழுங்கு படுத்தும் வியாபாரிகள் சத்தமும் ,வாங்குபவர்கள் சத்தமும், வீட்டு முன்னாடி ஒரு கல்யாணக் களையோடு இருக்கும். சாயங்காலம் எல்லாரும் கடையை மூடிட்டுப் போனபிறகு வரும் நிசப்தமும் வெறுமையும் கொஞ்சம் அமானுஷ்யமாகக் கூட இருக்கும்.
நான் வெட்டிலேதான் சிங்கப்பெண் வேஷம் போடுவேன், உண்மையிலேயே இருட்டுன்னா கொஞ்சம் பயம். எதாவது வேலையா சந்தையைக் கடக்க நேர்ந்தால் சத்தமா சினிமா பாட்டு பாடிட்டு ஓடியே வந்திடுவேன். எதோ சங்கீத ஆசையில் பாடறதா மத்தவங்க நினைச்சிருப்பாங்க. பயத்திலே பாடுறது எனக்கு மட்டும் தெரிந்த ரகசியம்..
பி.கு. என்னோட பதிவுகள் ஒவ்வொண்ணா பதிவேற்றும்போதும் அண்ணன்களும் தம்பியும் என் பதிவு சார்ந்த தகவல்கள் ஏகப்பட்டது பின்னூட்டமாக சொல்லி வருகிறார்கள். எனவே இதே நினைவலைகள் கொஞ்ச நாள் கழித்து மீள்பதிவாகவும் வரலாம். பொருத்தருள்க!!
0 Comments:
Post a Comment
<< Home