சிசுக்கொலையும் கருக்கொலையும்
``மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’’
ஏட்டுசுரைக்காய்க் கவிக்குதவாது, எழுதப்படும் போற்றுரைகள் பெண்களுக்குதவாது. மாதவம் செய்து பெற்றிட்ட கண்மணிகள் இன்று மண்ணுக்குள் புதையுண்டு அழிந்து கொண்டிருக்கும் காலம். `சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப் படும் வேளையில் அவலப் பட்டு அழிந்துகொண்டிருக்கும் பெண்ணினம் பற்றித் தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
உலக அளவில் ஆண்களைவிட பெண்களின் ஜனத்தொகை 200 மில்லியன்கள் குறைவாக உள்ளதாக ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது. புள்ளி விபரங்களை கோர்வைப்படுத்திக்கொண்டு வந்தால் இது எவ்வளவு வேகமாக குறைந்து வருகிறது என்பது புரியும்..1991 ஜனத்தொகை கணக்கின்படி 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் என்றிருந்த சதவீதம், 2001 கணக்கெடுப்பில் 927/1000 என்று குறைந்துள்ளது. கணக்கெடுப்புகளையும் சதவீதங்களையும் தவிர்த்துப் பார்க்கும் போதும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வெளிப்படையாக்வே தெரிகிறது. UNICEF நிறுவனத்தின் கணக்கெடுப்பின் படி இந்திய ஜனத்தொகையில் 50 மில்லியன் பெண்கள் காணாமல் போனவர்கள் வரிசையில் உள்ளனர். பாலின அடிப்படையிலான கருக்கலைப்புகள்,பெண் சிசுக் கொலைகள் போன்றவையே பெண்களின் ஜனத்தொகையைக் கணிசமாகக் குறைக்கும் முக்கியமான காரணமாகக் கருதப் படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணங்களாக வரதட்சணை, பெண்குழந்தை குறித்த சமுதாயப் பார்வை, சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆகியவை சொல்லப் படுகின்றன.
பெருவாரியான குடும்பங்களில் ஆண்குழந்தைகளையே விரும்புகின்றனர்.
· ஆண்கள் குடும்ப பாரம்பரியத்தை நிலை நிறுத்தும் அடையாளங்களாகக் கொள்ளப்படுகிறார்கள். வாரிசு உரிமை, ஈமக் கிரியை செய்யும் உரிமை போன்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் சார்ந்த கடைபிடித்தல்கள் ஆண்களுக்கே உரியதாகக் கருதப் படுகிறது.
· வீட்டைப் பராமரிக்க உடலுழைப்பு; பொருள் ஈட்டும் திறைமை, குடும்பத் தலைமை என்ற பொறுப்பு எல்லாமே ஆண்களின் தனித்துவமாகக் கொள்ளப் படுகிறது.
· திருமண பந்தங்களில் வரவுகளை வரதட்சணையாகப் பெறும் பேறும் ஆண்களுக்கே உரித்தானது. மனைவி என்ற பந்தத்தை குடும்பத்துடன் இணைத்து மேலும் ஒரு நபரை உழைப்பில் சேர்த்துக் கொள்வதும் ஆண்களின் சிறப்பாகக் கருதுகின்றனர்.
பெண்குழந்தைகள் பலவீனமானவர்களாகவும், திறைமையற்றவர்களாகவும், செலவு செய்யப்பட வேண்டியவர்களாகவுமே சித்தரிக்கப்படுகிறார்கள்.
``பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்’’ கூட ஏதோ அரிய நிகழ்வுகளாகவே கருதப் படுகிறதே அன்றி பெண்களின் முன்னேற்றமாகக் கொள்ளப்படுவதில்லை.
இதுபோன்ற எண்ணற்ற ஆணாதிக்க சிந்தனைகளின் தாக்கமே மறைமுகமாக பெண்ணினத்தை நலிவுறச் செய்கிறது என்பதுதான் உண்மை. அதை விடுத்து, `எய்தவன் இருக்க அம்பை நோகும்’ தன்மையதாக பெண் சிசுக் கொலைக்கும் கருக்கலைப்புக்கும் பெண்களே காரணமென்ற மாயத்தோற்றத்தை ஊடகங்களும் அரசும் உண்டாக்கி வருகின்றன.
குழந்தையைக் கருத்தரித்து அதனால் வரும் மசக்கை, வாந்தி போன்ற சுகவீனங்களால் கஷ்டப்பட்டும் அதைத் தாங்கி, உடலில் ஒரு அங்கமாக வளரும் குழந்தையை அழிப்பதை ஒரு தாயால் சந்தோஷமாக செய்ய முடியுமா? அதை அழிக்கும் முகாந்திரங்களில் அவளது ஆரோக்கிய சீர்கேட்டிற்கு வரும் பிரச்னைகளை விரும்பி வரவேற்பாளா?பெண் சிசுக்கொலையை முன்னின்று செய்வதே முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பாட்டிகள்தான் என்றாலும், அதைச் செய்யத்தூண்டுவது எது? பெண்ணுக்குப் பெண்ணே எதிரி ஆவது யாரால், எதனால்?
பிறந்திருக்கும் பெண்குழந்தையால் , வாழ்ந்து கொண்டிருக்கும் பேத்தியின்/மகளின் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடக் கூடாதென்ற எண்ணத்தாலேயே பிறந்திருக்கும் பெண்மகவை அழிக்கத் துணிகிறார்கள் முந்தைய தலைமுறையினர். அழிக்கும்செயலை நியாயப்படுத்த முடியாதுதான்.ஆனாலும் புரையோடிப் போயிருக்கும் பிரச்னையின் வேர்களைப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமான கருத்துக் கணிப்புகளும், தடுப்பு முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீராகத்தான் போய்க் கொண்டிருக்கின்றன; ஆனாலும் பெண்குழந்தைகளின் சதவிகிதம் அதிகரிக்கவில்லை இன்னும்!
மனிதர்களின் மனநிலை மாற வேண்டும்; அதற்கு சமுதாய மாற்றம் அவசியம் தேவை. வரதட்சணைக் கொடுமையால் எத்தனையோ மரணங்களும் விவாகரத்துகளும் அன்றாடம் நடந்துகொண்டிருந்தாலும் , வரதட்சணையை அடியோடு அழிக்க முடியவில்லை இன்னமும். அதன் தாக்கத்தால் பெண்குழந்தையைப் பெற்றவர்கள் படும் அவதியும் சொல்லி மாளாது. அதிலும் சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடமும், சில குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்களிடமும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. உதாரணத்துக்கு மதுரை மாவட்டத்தின் உசிலம் பட்டி, சேலம், ஈரோடு, தர்மபுரி போன்ற இடங்களில் பெண்குழந்தைகளை அதிகமாக வெறுக்கும் தன்மை உள்ளது.
இவர்களில் எத்தனை விதமான தம்பதியர்?!
· ஆண்குழந்தை வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக ஆறு முறை கருக்கலைப்பு செய்தும் , மறுபடியும் சோதனைக்குழாய் மூலம் ஆண்குழந்தையே பெற வைக்க முடியுமா என்று யோசனை கேட்க வந்த தம்பதி; மனைவியை மட்டும் தனிப்பட விசாரித்த போது தன்னால் நடப்பது எதையும் தடுக்க முடியாததைச் சொல்லி, ஏதாவது நோவென்று சொல்லி கர்ப்பபையையே எடுத்துவிடுங்கள் என்று காலில் விழுந்த 45 வயது பெண்மணி;
· முதல் மனைவிக்கு மூணும் பெண்ணாகிவிட்டதால் 15 வயது வித்தியாசத்தில் சின்னப் பெண்ணைத் திருமணம் செய்து, அவளுக்கும் பெண் பிறந்ததும் விவாகரத்துப் பெற முயற்சி செய்யும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்;
· விந்தணுவே இல்லாத நிலையில் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிக்க வந்த சமயத்திலும் , ஆண்குழந்தையாக இல்லாவிட்டால் கருக்கலைப்பு செய்துகொள்ள தயார் நிலையில் உள்ள கணவன்;
· மறுபடி மறுபடி கருக்கலைப்பு செய்ய உடன்பாடில்லாததால் வருடக் கணக்கில் கணவருக்குத் தெரியாமல் கருத்தடை மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மனைவி;
இன்னும் எத்தனையோ விதங்கள். தனக்கு நேரும் ஒவ்வொரு வடுவும் காயமும் தன் பெண்குழந்தைக்கு வரக்கூடாது என்ற வைராக்கியமே மனதை இரும்பாக்கிவிடும் போலும்.
ஊடகங்களின் அடுத்த இலக்கு மருத்துவத் துறை! கருக்கலைப்பும் சிசுக்கொலையும் மருத்துவர்களின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் முனைந்து செய்யப்படுவதாக வாய்ப்புக் கிடைக்கும் வேளைகளிலெல்லாம் வாய் கிழியப் பேசுவது இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு.
சில பாலினம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை செய்ய ஏதுவாகக் கண்டுபிடிக்கப்பட்ட பரிசோதனை முறைகள் ( ஸ்கேன் போன்றவை) ஆரம்ப காலங்களில்,பெண்குழந்தைகளைக் கருவிலேயே கலைத்துக் கொள்ள உபயோகிக்கப் பட்டது உண்மைதான். மூன்று முதல் நான்கு மாதங்கள் தாண்டிய நிலையில் , கருவிலிருக்கும் குழந்தைக்கு பிறவிக் குறைபாடு இருப்பது அறியப்படும் போது, அக்குழந்தை மற்றும் தாயின் நிலை கருதி மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யப்படுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட பரிசோதனை முறைகள் பாலினம் சார்ந்த கருக்கலைப்புக்கும் அடித்தளமாகிவிட்டது.
அதே கால கட்டங்களில் அரசாங்க மருத்துவ மனைகளிலும் நான்குமாத கருக்கலைப்பு மிகுந்த அங்கீகரிப்புடன் செய்யப்பட்டுதான் வந்தது. குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு கருக்கலைப்பு செய்து அறுவை சிகிச்சை செய்வதும் வாடிக்கையாக இருந்தது. ஜனத்தொகை கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஐந்தாண்டு/பத்தாண்டு திட்டங்களுடன் கருக்கலைப்பும் அங்கீகரிக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் தனியார் என்ற பாகுபாடின்றி கருக்கலைப்பு பிரச்னைகளின்றி கடைப்பிடிக்கப் பட்டு வந்தது. அதனால் பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்துகொள்ளும் சதவீகிதத்தினரும் இந்த கும்பலுடன் சேர்ந்து கொண்டார்கள்.
சமீப காலக் கணக்கெடுப்புகள் பெண்குழந்தைகளின் பிறப்பு விகித குறைவைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்த பிறகுதான் ஸ்கேன் பண்ணிப் பார்த்து கருக்கலைப்பு செய்யப்படுவது தவறு என்று எல்லா மட்டத்திலும் உணரப்பட்டுள்ளது. அதன் பிறகு இது போன்ற கருக்கலைப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பதும் தெரிகிறது; ஆனால் அவை எல்லாம் மேல்மட்டமாகத் தெரியும் உண்மைகளே. அதன் பின்னரும் பெண்குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்காதது எதனால் ?
சட்டதிட்டங்களும் கட்டுப்பாடுகளும் மருத்துவர்களையும் பரிசோதனைக் கூடங்களையும் ஒழுங்கு படுத்தலாம். ஆனால் அடிப்படைக் காரணமான ``பெண்குழந்தை தேவையற்றது’’ என்ற மனப்பக்குவத்தை மாற்ற என்ன முயற்சி எடுக்கப் பட்டுள்ளது? அதை நிறைவேற்றிக் கொள்ள அலையும் தம்பதியரைக் கட்டுப் படுத்துவது எங்ஙனம்?
ஆட்சி மாறும்போது அறிவிக்கப்படும் கவர்ச்சிகரமான திட்டங்களோ, பெண்குழந்தைகள் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களோ சரிவர சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. அடிப்படை பிரச்னை சரி செய்யப்படாததால் இன்னும் கருக்கலைப்பும் சிசுக்கொலையும் அதே முனைப்புடன் நடந்து கொண்டுதான் இருக்கிறன, வெவ்வேறு முறைகளில், மாறுபட்ட கோணங்களில்.
ஸ்கென் செய்து பாலினம் சொல்லப்படுவதில்லை என்பதால், மறுபடியும் சிசுக்கொலையின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. `பிறந்து சில மணிநேரமே ஆன குழந்தை குப்பைத் தொட்டியில் கண்டெடுப்பு’’; ``தொப்புள்கொடி கட்டப்படாமல் புதரில் வீசியெறியப்பட்ட பிஞ்சுக் குழந்தை’’- இப்படி ஏகப்பட்ட மனதை உருக்கும் நிகழ்வுகள் அன்றாடம் தினசரிகளில். இத்தகைய இறப்புகளின் புள்ளிவிபரங்களுக்கும் உண்மையான இறப்புக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள். பெரும்பாலானவை வெளியில் சொல்லப் படுவதே இல்லை. மீறிக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதை சமாளிக்க ஏகப்பட்ட வழிமுறைகள்.பெண்சிசுக்கொலையை காவல்துறை கூர்ந்து கவனிப்பது தெளிவானதால் கொல்ல உபயோகிக்கும் முறைகளையும் நவீனப்படுத்திக் கொள்கிறார்கள்.
சேலம் அருகில் ஒரு கிராமத்தில் பெண்சிசுக்கொலை செய்யப்படும் முறைகளை தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர் ஒருவர் அழாத குறையாகச் சொன்னது மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது.
பாலில் நெல்மணிகளைப் போட்டுப் புகட்டுவதும், கள்ளிப்பால் கொடுப்பதும்தான் பழைய முறைகள். ஆனால் இப்போது ரொம்பக் கொடூரம். பிறந்த உடன் பாலுக்குப் பதிலாக கெட்டியான சூடான கோழி சூப் அல்லது புகையிலைச் சாறு கொடுப்பது. ஜீரணிக்க முடியாமல் வயிறு உப்பலெடுத்து குழந்தை மரிக்கும் கொடூரம்; வயிறு முட்ட முட்ட பால் கொடுத்து ஈரத்துணியில் இறுக்கமாக சுற்றி வைத்துவிடுவது, மூச்சுத் திணறல் எடுத்து குழந்தை இறந்துவிடும்; தொப்புள் கொடியைக் கட்டாமல் விட்டுவிடுதல், அதிகமான இரத்த விரையத்தில் இறப்பது; வேகமாகச் சுழலும் பெடெஸ்டல் மின்விசிறியின் முன் படுக்கவைத்து மூச்சுத்திணறல் ஏற்படுத்துவது; இன்னும் எத்தனை விதங்களோ, நினைப்பதற்கே கஷ்டமாக உள்ளது.
இது குறித்து அந்த மனிதர்களிடம் விசாரித்தாலும் பதில் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. பெண்ணாக வளர்ந்து நான் படும் பாட்டைவிட முளையிலேயே உயிரை விடுவது மேல் என்பது போல்தான் பேசுகிறார்கள். பெண்சிசுக்கொலை பற்றிய குற்ற உணர்ச்சியே அவர்களிடம் இருப்பதில்லை. தங்கள் குழந்தைக்கு நல்லது செய்துவிட்டதாகவே நம்புகிறார்கள். இந்த மன நிலை மாறாதவரை கருக்கலைப்பும் பெண்சிசுக்கொலையும் திரை மறைவில் நடந்துகொண்டேதான் இருக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களும் மருத்துவ மனைகளும்தான் கருக்கலைப்பு செய்வதில்லையே தவிர முறையற்ற மருத்துவ தொழில் செய்துவரும் தாதியர், ஆயாக்கள் போன்றோர் அதைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்கேன் உபகரணத்தை பதிவு பெறாத போலி மருத்துவர்கள்கூட உபயோகிக்கும் நிலைமைதான் நம் நாட்டில் உள்ளது. அவர்கள் மூலம் பாலினம் பற்றி அறிந்துகொண்டு ஆயாக்களிடம் கருக்கலைப்பு செய்துவரும் பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். கொஞ்சம் கல்வி அறிவு உள்ளவர்களும் பாலினம் பற்றி அறிந்து கொண்டு சுய மருத்துவம் (self-medication) மூலம் கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள். மருத்துவர்களையும் ஸ்கேன் செண்ட்டர்களையும் கட்டுப்படுத்தும் அரசு இயந்திரத்தால் இவர்களை எதுவும் செய்ய முடிவதில்லை. நான்கு மாத கருவைக் கூடக் கலைத்துக் கொள்ள ஏதுவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீரியமான மாத்திரைகள் மருந்துக் கடைகளில் மிக இலகுவாகக் கிடைக்கிறது. அந்த மருந்துகள் மருத்துவரின் பரிந்துரையின்றி கொடுக்கப்படக் கூடாது என்ற கட்டுப்பாடு எங்கும் இல்லை.
முறை தவறிய வழிகள் மூலம் கருச்சிதைவுக்கு உட்படுத்திக்கொண்டு, பின்விளைவுகள் (complications) எல்லை மீறும்போது மட்டுமே மருத்துவரை அணுகும் கும்பல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அநேகமாக அவர்களில் அதிகம்பேர் உயிருக்கு ஆபத்தான நிலைமையிலேயே அழைத்துவரப் படுகிறார்கள். உதிரப் போக்கும் சீழ்பிடித்தலுமே இவற்றில் முக்கிய பிரச்னைகளாக இருக்கும். ரத்த வங்கிகள் இல்லாத இடங்களிலும், தரமான தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாத இடங்களிலும் உயிரைக் காப்பாற்றுவது இயலாமல் போகிறது.
இங்கு பரிமாறிக்கொள்ளப்பட்ட விஷயங்கள் ஒரு சின்ன நூலிழையே( an iceberg only) மறைந்து கிடக்கும் அவலங்களும் அழிவுகளும் நம் முன் பெரும் பூதமாக நிற்கிறது. இதன் தாக்கம் அறிந்த ஒவ்வொருவரும் தங்கள் வரையில் இந்த உண்மைகளை உற்றார் உறவினர் வரை கொண்டு செல்லலாம்;மலடு நீக்கும் மருத்துவத்திற்காக லட்சங்களில் செலவு செய்பவர்களை பெண்குழந்தைகளித் தத்தெடுத்துக்கொள்ள அறிவுரை கூறுகிறோம்;நமது குழந்தைகளுக்கு வரதட்சணை தருவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; நமது சக்திக்கு உட்பட்ட இடங்களில் பெண்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்; இப்படி நம்மால் இயன்ற சிறு சிறு விஷயங்களை சோர்வுறாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
சமீபத்திய ஊடக புள்ளிவிபரங்களின்படி திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைய சமுதாயம் ``சேர்ந்து வாழும் ‘’(living together) கலாச்சாரத்துக்கு மாறி வருவது புலனாகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல் வரதட்சணைக் கொடுமைகளை அழிக்க இது ஒரு புரட்சியாகக் கூட மாறலாம். பெண்களில்லாத உலகத்திலே ஆண்களினாலே என்ன பயன் என்று உணரும்போது
``பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்’’ என்ற சுலோகம் உயிர் பெறும். அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் என் கருத்துக்களை முடிக்கிறேன்.
18 Comments:
மகளிர் தினத்துக்காக அடிச்சுப் பிடிச்சு அவசரமா பதிவு போட்டேன். ஆனால் பழைய அறிமுகம் முதலில் வந்து இதை மறைத்தது எப்படி?
ஈரோடிலெல்லாம் இந்த மாதிரி கதைகளே நடக்க முடியாமல் ஏகக் கெடுபுடிங்க!
உருவாகிய கருவானது, பிறந்து முதல் சுவாசத்துடன் தான்
உயிர் வருகிறதாகவும், தாயின் கருப்பையில் இருக்கும் போது
அந்த்தக்கருவும் தாயின் இருதயம், சிறுநீரகம் போல் ஒரு
உறுப்புதான் எனவும் குமுதத்தில் சுவாமிகள் கூறியுள்ளாரே.
அது பற்றி உங்கள் கருத்து என்ன?
சத்தியத்தை கைவிட்டதால் தான் இவ்வளவு அலங்கோலங்களும்,
சத்தியத்துக்கு உயிர் கொடுக்க சக்தி இனம் தானே உயர்வுகாணும்.
அநானிமஸ்
மத ரீதியான வியாக்கியானங்கலும் தர்க்கங்களும் என்றுமே அறிவியலுடன் ஒத்துப் போவதில்லை.
*குழந்தையைக் கருத்தரித்த நாளிலிருந்து கருவாகக் கொள்ளப்பட்டாலும் கிட்டத்தட்ட 7-8 வாரங்கள் முடிந்த சமயத்தில் குழந்தையின் இருதயத் துடிப்பு ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்ட பின்னரே உயிருள்ள கருவாக(viable fetus)ஆகக் கொள்ளப்படும்.
*சில காரணங்களால் வயிர்றுக்குள்ளேயே குழந்தை இறந்துவிடும் சமயங்களில் (Intra Uterine Death)அதை வெளிக் கொணர்வதும் உண்டு. உயிரில்லாத ஒன்றுக்கு எப்படி இறப்பு வரும்.
*கருவிலிருக்கும்போதே அதன் இத்ஹயத் துடிப்பு, சுவாசம் , இரத்த ஓட்டம் எல்லாவற்றையும் தவறாது கண்காணிப்போம். இதயம் துடிப்பதும், சுவாசம் உள்ளதும் உயிரில்லாத குழந்தைக்கா வரும்?
அறிவியல் வேறு, ஆன்மீகம் வேறு!!
சித்தன்
கெடுபிடிக்கு இடையிலும் இந்த மாதிரி நடப்பதும் உண்மை
தாணு, சொல்லுவதை கொஞ்சம் சுருங்க சொல்லியிருந்தால் நிறைய பேருக்கு சென்றடைந்திருக்க்கும் உங்கள் கருத்து என்பது என் கருத்து. என்ன மாதிரி நிறைய சோம்பேறிங்க படிக்க உள்ள வந்துட்டு பெரிசா இருப்பதால் படிக்காமலேயே அப்படியே ஆற போட்ட பதிவுகள் நிறைய. பெண்கள் தினத்திற்காக மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இது போன்ற நல்ல கட்டுரை தாருங்கள்.
//ஈரோடிலெல்லாம் இந்த மாதிரி கதைகளே நடக்க முடியாமல் ஏகக் கெடுபுடிங்க! // சோமசுந்தரம், ரொம்ப அலுத்துக்கிட்டு கவலயா சொல்றாப்புல தெரியுது!?
பதிவு படித்தேன் தாணு
நீங்கள் சொல்லுவது போலப் பலரை நானும் சந்தித்திருக்கிறேன்.நான் சொவதெல்லாம் ஒரு குழந்தையும் இல்லாமல் ஒன்றாவது பெற்றுக் கொள்ள நினைக்கும் தம்பதிகளுக்கே.
//``பெண்மையைப் போற்றுதும் பெண்மையைப் போற்றுதும்’’ என்ற சுலோகம் உயிர் பெறும். அந்த நாள் விரைவில் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் என் கருத்துக்களை முடிக்கிறேன்.//
அந்நாள் விரைவில் வர பிரார்த்திப்போம்.
ரொம்பா நாள் ஆளை கானோம் .. கலக்குங்க
டைம் இருந்தா
நம்ம பக்கத்துக்கு வாங்க ஒரு தபா
hello akka vanakam.
hope my scriblings in tamil wont be that much good.moreover i dont know tamil typing.
(dont let it this out as i am a computer engg).
i am from the same place where you reside and nice to hear that lots of people contribute in blogs from erode.
let me also start one but it requires some time.
what else...
is everyone in good health there in erode(doctorkitta thane katkanum)
i am in delhi rite now.
coninue on with mam......
தாணு, ரொம்ப நாள் கழிச்சு, சே சே மாசம் கழிச்சு ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. அதென்ன நம்ம ஊர்ல எல்லாருக்கும் உடம்பு சரியா இல்லியா? அதனாலதானே ரொம்ப பிஸியா இருக்கீங்க.
உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். முடிந்தபோது ஜோதியில் சேருங்கள் :-)
http://aruna52.blogspot.com/2007/07/8.html
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
many more happy returns of the wedding anniversary ( 08 apr )
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
இனிய மண நாள் வாழ்த்துகள்
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Post a Comment
<< Home