Monday, June 12, 2006

சண்டைக்கு இழுக்கும் ஜாதி

தருமியின் பதிவில் `மதம்’ பற்றி ஆரம்பித்த காரசாரமான சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஜாதி பற்றிய விவாதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்!
ஆனாலும் இந்த ஜாதிச் சண்டை இடைவெளி விட்டு விட்டு தவணை முறையில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு மூலமும் கிடையாது, முடிவும் வராது. ஜாதி வேணுமா வேண்டாமான்னு ஒரு தர்க்கம், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி காட்டமான இன்னொரு தர்க்கம், இடையிடையே என் ஜாதி, உன் ஜாதி என்று தனிப்பட்ட மூர்க்கமான சர்ச்சைகள்- இவர்கள் எல்லோருமே படித்து முடித்து வேலையில் செட்டில் ஆகிவிட்டவர்கள்; அல்லது அடுத்த தலை முறையின் எதிர்காலத்துக்கு வழி வகை செய்து விட்டவர்கள்; அத்தி பூத்தாற் போன்றவர்களே இளைஞர்களாக இருக்கும் வாய்ப்பு. இரண்டும் கெட்டான் தனத்தில் இருக்கும் மத்திய வயதினரின் பார்வையே வேறாகத்தான் இருக்கும். அவர்கள் இந்த சண்டைக்கெல்லாம் வர மாட்டார்கள். ஓரமாக உட்கார்ந்து பிள்ளைகளின் படிப்பில் ஜாதி விஷயம் எத்தனைதூரம் குழப்பம் ஏற்படுத்தும் என்று ஆரய்ந்து கொண்டு இருப்பார்கள். ஜாதி அவர்களின் ஒவ்வொரு நாள் அசைவிலும் அங்கமாகியிருக்கும்.
பிறப்பு பதிவு பண்ண மருத்துவ மனையில் பதிவேடுகளில் முத்திரை பதிக்கும் நாளில் தொடங்கி மக்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் பருவம் வரை இந்த ஜாதி அவர்களின் நிழல் போலத்தானே நடை போடுகிறது. எனக்கு ஜாதி பற்றி பேசுவதே பிடிக்காது என்று புறம்தள்ளி நடக்க முயற்சித்தால் பிறப்புச் சான்றிதழ்கூட வாங்க முடியாமல் தாசில்தார் அலுவலகத்துக்கும் மருத்துவ மனைக்கும் அல்லாட வேண்டியதுதான். இதில் தண்டிக்கப்படுபவர் யார்? எவருடைய பிறப்பு சான்றிதழிலும் ஜாதிக் குறியீடு தேவையில்லை என்று அரசு ஆணை போடப்பட்டால் ஒழிய அந்த கட்டத்தில் ஜாதியை ஒழிக்க முடியாது. பள்ளி இறுதியில் ஜாதிச் சான்றிதழ்கள் பள்ளிக்கூடம் மூலமே வழங்கப்பட வேண்டும் என்று தற்போது ஆணை போடப் பட்டுள்ளது. அது வழங்கப்படும் விதம் பற்றி கேட்டால் இன்னும் கேலிக்குரியது. மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும்போதே அலுவலகத்தில் இருந்து கையெழுத்து வாங்க வருவார்கள். பள்ளியில் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டு பழகிய குழந்தைகள் வாசித்துக் கூடப் பார்க்காமல் கையெழுத்திடுவார்கள். ஜாதிச் சான்றிதழ் வந்த பிறகு பெற்றோர் மண்டையைப் பிய்த்துக் கொள்ள நேரிடும்படி இருக்கும். சுத்த கிறிஸ்தவ பெயர்கள் இந்து மதத்திற்கும், இந்து பெயர்கள் முஸ்லீம் மதத்திற்குமாக மாற்றி எழுதப் பட்டிருக்கும் (ஜாதி ஒருங்கிணைப்பை சிறுவயதில் முறைப்படுத்தும் முகாந்திரமாக இந்த ஏற்பாடு இருக்குமோ என்று சந்தேகப் பட வேண்டாம்) எந்த ஜாதியா வேணா இருந்திட்டுப் போகட்டும்னு வறட்டு வேதாந்தம் பேசிகிட்டு இருக்க முடியுமா? ரிசர்வேஷன் பிரச்னைகள் அடுத்து கல்லூரிப் படிப்பிற்குத் தடைக் கல்லாகி விடுமே! விரும்பாவிட்டாலும் வித்தியாசத்தை நேர் செய்ய வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?
என்னுடைய நெருங்கிய நண்பர் குடும்பத்தில் சமீபத்தில் நடந்தது. அவர்கள் கலப்பு மணம் செய்தவர்கள். இருவரின் ஜாதியோ மதமோ அடுத்தவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாதவாறு இயல்பான வாழ்க்கை நடத்துபவர்கள். ஒருவர் பார்வர்ட் கம்யூனிட்டி, அடுத்தவர் பிற்படுத்தப் பட்டோர் சமூகம். தங்கள் மகனுக்கு எந்த ஜாதியும் தேவையில்லை என்ற உணர்வுடன் ஓப்பன் கோட்டாவில் பதிவு செய்திருக்கிறார்கள். அவனது படிப்புக்கு ஏற்ற கல்வி கிடைக்கட்டும் , வேறெந்த ரிசர்வேஷனும் தேவையில்லை என்பது அவர்களின் ஒருமித்த கருத்து! அவனும் மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவன். ஆனாலும் இந்த ரிசர்வேஷன் பிரச்னையால் நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு தட்டிப் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் ஏனைய நண்பர்கள் அனைவரும், அவனுக்கு நியாயமாக இருக்க வேண்டிய பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் வாங்கும்படி நண்பரை ஒரே நச்சரிப்பு, என்னையும் சேர்த்துதான். `ஆடை அணியா ஊரில் கோவணம் கட்டியவன் ஆண்டி’ என்ற கருத்துதான் என்னுடையதும். ஜாதி அடிப்படையிலேயே கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் ஒரு சமுதாயத்தில், ஜாதியை மறுதலித்தல்கூட தவறான செய்கைதான். நல்ல வேளையாக எங்க எல்லோருக்கும் ஆசுவாசம் கிடைக்கும்படி ஓ.சி. கோட்டாவிலேயே நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிட்டான். ஆனால் எத்தனை பேருக்கு இத்தைகைய வாய்ப்பு கிடைக்கும்? எத்தனை பெற்றோர்களால் புரட்சிகரமான கருத்துகளுக்காக புதல்வர்களைப் பலியிட முடியும்?பாரதியின் கனவுகளைப் பழங்கணக்காகத்தான் பார்க்க முடியும், மேற்கோள்களாக்கத்தான் காட்ட முடியும் இப்போதைக்கு.

எனக்குத் தெரிந்து ஜாதி பார்க்கப்படாத ஒரே ஏரியா காதலர் பூங்காதான். அங்கு ஆண் பெண் என்ற பேதம் தவிர ஜாதி மதம் எல்லாமே புறம் தள்ளப் பட்டவைதான். அங்கு கூட கல்யாணம் என்ற சடங்கு நிகழ்த்தப்பட வேண்டிய நிலையில்தான் ஜாதியும் மதமும் மூக்கை நுழைக்கின்றன. பெரிசுகளின் ஆசியோடு கல்யாணம் நடத்தப்படுமானால் ஏதாவது ஒரு ஜாதியும், மதமும் நசுக்கப்பட்டு dominant person இன் முறைப்படி எல்லாம் நடக்கும். அங்கும் ஜாதி மத பேதம் அழிக்கப்படுவதில்லை, இணைகோடுகள் ஒரே கோட்டில் செலுத்தப் படுகின்றன, அவ்வளவுதான். இதையெல்லாம் மீறி எங்கோ சில இடங்களில் ஜாதி மத பேதங்கள் தவிர்த்த அனுசரணையான திருமணங்களும் நடக்கின்றன. அவையெல்லம் மியூசியத்தில் உள்ள கண்காட்சிப் பொருளாகத்தான் சமுதாயத்தால் பார்க்கப் படுகிறது.
ஜாதியே தேவையில்லை என்று வாழ்வது நமது நாட்டில் சாத்தியமில்லை.
நமது குழந்தைகளுக்கு ஜாதி வேறுபாடுகளற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக் கற்றுத்தருவதுதான் தற்போதைய நிலைமையில் சாத்தியமான ஒன்று. நம்மால் செய்யக்கூடிய ஒன்றும்கூட.
எங்களது பள்ளிப் பருவ காலம் வரையில்கூட ஜாதிய வேறுபாடுகளை உணர்த்தும் உணவுப் பழக்கங்கள் இருந்தன. தயிர் சாதம் vs பழைய கஞ்சி போன்ற பிரிவினைகள் இப்போது பள்ளிகளில் காணப் படுவதில்லை. சைவம் vs அசைவம் கூட இப்போது ஜாதிப் பிரிவுகளைச் சொல்வதில்லை. சின்னச் சின்ன முன்னேற்றங்கள் அடுத்த தலைமுறையில் மெதுவாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை விடாப்பிடியாக கொழுந்துவிட்டு எரிய வைப்பவை அரசியல் ஆதாயங்களும் பதவி வேட்டைகளும்தான்.
எத்தனையோ உப்பு சப்பற்ற விஷயங்களுக்கெல்லாம் சட்டம் இயற்றவும், ஆணை பிறப்பிக்கவும் தெரிந்த அரசு எந்திரத்துக்கு, ஜாதி என்ற வார்த்தையை முக்கியமான பதிவுகளிலிருந்து விலக்க முடியாதா? கண்ணிருக்கும் குருடர்கள்! ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது!!

45 Comments:

At 3:30 AM, Blogger தாணு said...

தருமிக்குக் கொடுத்த புதுப் பட்டம் சரியா தவறா?- அடுத்த விவாதகளம் இதுதான்!!!!

 
At 3:44 AM, Blogger Muthu said...

//தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்!//

இதை கடுமையாக கண்டிக்கிறேன்

 
At 3:44 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

அடுத்த விவாதத்துக்கு இப்போவே பதில் சொல்லிடறேன்.. பட்டம் பர்பெக்ட் :)

 
At 4:53 AM, Blogger G.Ragavan said...

சாதி ஒழிய வேண்டும். நிச்சயமாக. உறுதியாக. மறு கருத்தேயில்லை.

 
At 8:20 AM, Blogger குழலி / Kuzhali said...

//ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில்
//
அரசியலில் சாதி தொடர்பாக பெனாத்தல் சுரேஷ் எழுதியபோதே எழுத வேண்டுமென நினைத்தது நேரமின்மையால் தள்ளி போகின்றது, இதோ இப்போது நீங்களும் இதை பேசியுள்ளீர்கள் பார்ப்போம் எத்தனை சீக்கிரம் எழுத முடியுமென.... ஒரே ஒரு கருத்து இந்த பதிவுக்கு இது ஒரு சமத்துவபுர ஜென்டில் உமேன் பதிவு....

 
At 8:25 AM, Blogger தாணு said...

தமிழினி
உங்கள் கண்டிப்பு பாசத்தால் வந்ததா, சொல்லப்பட்ட கருத்து ஒவ்வாமையால் வந்ததா?

 
At 8:26 AM, Blogger தாணு said...

பொன்ஸ்
நன்றி. தருமி உதைக்க வந்தால் தற்காப்புக்கு துணை இல்லையேன்னு நினைத்திருந்தேன். பலம் கூடியது!

 
At 8:27 AM, Blogger தாணு said...

ராகவன்
ஜாதி ஒழிய வேண்டும் என்பதுதான் சமகாலத்திய நண்பர்கள் அனைவரின் அவாவும். ஆனால் வழியற்றுப் புலம்புவதும் இடையிடையே!

 
At 8:29 AM, Blogger தாணு said...

அனானி,
உங்களது வாதத்தில் தென்பட்ட கருத்து எனக்கு உடன்பாடாக இருந்தது. இடையில் தென்பட்ட சில நாகரீகமற்ற சொற்களால் அதை நீக்க வேண்டியதாயிற்று.

 
At 8:44 AM, Blogger ramachandranusha(உஷா) said...

தாணு, தெரியாமத்தான் கேட்கிறேன். சாதி, மதம் ஆகிய பதிவுகளில் நடைப்பெறும் விவாதங்களில் ஏதாவது உபயோகம் உண்டா? வெறும் வார்த்தைகளால் சிலம்பம் ஆடிக்கொண்டு இருக்கிறோம். அதனாலேயே தருமியின் பதிவில் "வெங்காயம்" என்ற சொல்லைச் சொன்னேன். உரிக்க, உரிக்க ஒண்ணுமே இல்லாமல் போய்விடும்.

இதவிட கொடுமை, மதத்தின் மீது பற்றுடன் எழுதபப்டும் பதிவுகளில் மாற்று மதத்தினர், அதில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டினால், அதற்கு ஒரு சமாளிப்பு. கதை அனுமார் வாலாய் போய் கொண்டே இருக்கும்.
எல்லா மதங்களும் மக்களை நல்வழிப்படுத்த ஆரம்பிக்கப்
பட்டது என்றாலும், அனைத்து மதங்களும் அந்த முக்கிய கோட்பாட்டில் தோல்வியே அடைந்துவிட்டது. அதைத்தவிர, ஒவ்வொரு மதத்தின் உள்ளும் பல பிரிவினைகள், காழ்ப்புணர்ச்சிகள்.
எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வருபவர்களுக்கு அரசு தனி சலுகை தர வேண்டும்.

 
At 8:52 AM, Blogger வஜ்ரா said...

//
கண்ணிருக்கும் குருடர்கள்! ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது!!
//

I completely agree.

We have to think about practical solutions rather than throughing empty rhetorics like ஜாதிகளற்ற சமுதாயம்...etc.,

ஏற்றத்தாழ்வுகள் நீக்குவதைத் தவிர வேறு எந்த வழியும் இப்போது நடக்காது..அதற்காக இருப்பவனிடமிருந்து பிடுங்கி இல்லதவனுக்கு தருவது தான் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் என்று கோஷம் போடும் கோஷ்டியில் நானில்லை என்பதைத் தெளிவுபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

one more solution is making caste irrelevant in many things. This can be achieved by passing a law of not using caste label at all in any government communications. Will it happen?

பாம்பு தன் வாலைக் கடித்து தானே தின்பது போல், ஜாதிகளை வைத்து அரச பதவி பிடிப்பதும், அதே ஜாதிகளை சமன் படுத்துதல் பேர்வழி என்று ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருகிறேன் என்று வோட்டு வங்கி அரசியல் நடத்துவது, its a vicious circle.

 
At 9:05 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

//தருமி உதைக்க வந்தால் தற்காப்புக்கு துணை இல்லையேன்னு நினைத்திருந்தேன். பலம் கூடியது//
யானை பலம்னு சொல்லுங்க.. :))

 
At 10:15 AM, Blogger தாணு said...

உஷா
உபயோகமான முடிவுகள் ஏற்படாவிட்டாலும் நம் வரையிலாவது இந்த மாதிரி பிற்போக்குத்தனங்களை நம் தலைமுறை தொடரக்கூடாது என்ற உணர்வு வரும் இல்லையா? அதனாலேயே வேண்டுமென்று இழுத்துப் பிடித்து எழுதினேன்.

 
At 10:17 AM, Blogger தாணு said...

ஷங்கர்
நான் சொல்ல வந்ததை சரிவர புரிந்து கொண்டதற்கு நன்றி. நம்மால் முடியாவிட்டாலும் நம் சந்ததியினர் வருங்கால அரசியல்வாதியாகவோ அதிகாரியாகவோ வரும் சமயத்தில் தன்னால் ஆன முயற்சிகளைத் தொடர ஊக்குவிக்கலாம் அல்லவா?

 
At 10:18 AM, Blogger தாணு said...

பொன்ஸ்
இப்போதான் உங்க யானை பின்னாடி ஓடிட்டு வர்றேன். பலம் வந்துவிட்டது

 
At 10:21 AM, Blogger தாணு said...

குழலி
உங்க பின்னூட்டம் மாடரேட் பண்ணினேன் ஏனோ வரலை. உங்களோட கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். என் கருத்துக்கள் மட்டுமே சரியென்று பேசவில்லை. என் பார்வையின் கோணம் இது. உங்கள் எண்ணங்கள் என் பார்வையை மாற்றலாம் அல்லது உறுதிப் படுத்தலாம். விரைவில் உங்கள் பதிவு எதிர்பார்க்கிறேன்

 
At 10:40 AM, Blogger erode soms said...

நம் நாட்டில்மட்டுமா ஜாதீக்கொடுமை உலகம்முழுதும் 'பார்த்தீனியம்'போல் பரவிக்கிடக்கிறது.
ஜாதி மட்டுமல்ல மதம்,இனம், மொழி, நிறம் என எல்லாவற்றிலும் மனிதம் கிழிக்கப்பட்டுக்கிடக்கிறது.
மனிதனுக்குள் ஆழ்ந்துகிடக்கும் தற்காப்புவெறி அல்லது தலைமைவேண்டும் குணம்,சுயநலம் சூதாட்ட மனப்பான்மை இவை போன்ற மனிதனின் மிருகவாடைதான் இதற்கெல்லாம் அடிப்படை!
மிருகங்கள் தூங்கிப்போனால் [அ] தூக்கிடப்பட்டால் இவைகள் ஒழியும்!

 
At 11:12 AM, Blogger முகமூடி said...

// தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. அவருக்கு `நாரதர்’ என்ற பெயர் பொருத்தமாக இருந்திருக்கும்! //

இதை வழிமொழிகிறேன் (இது தனிநபர் துவேஷத்தால் வந்ததல்ல, அவரின் கருத்துக்களில் இருக்கும் வேஷத்தால் வந்தது... உதாரணத்தோடு வேண்டுமென்றாலும் விளக்க தயாராகவே இருக்கிறேன்)

 
At 1:43 PM, Anonymous Anonymous said...

//அனானி,
உங்களது வாதத்தில் தென்பட்ட கருத்து எனக்கு உடன்பாடாக இருந்தது. இடையில் தென்பட்ட சில நாகரீகமற்ற சொற்களால் அதை நீக்க வேண்டியதாயிற்று//

அனாகறீக வார்த்தைப்பிரயோகம் செய்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

காந்தியும்,பாரதியும் வர்ண ஏற்றத்தாழ்வு வேண்டும் என்று சொன்னவர்கள் என்பது உங்களுக்கு தெரியாது என்று எண்ணுகிறேன். நீங்களும் நானும் என்ன ஜாதி என்று கடவுள் வந்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒரு பிராமணன் சட்டையை அவிழ்த்தால் தெரிந்துவிடும், அவன் யார் என்று. அனேகமாக இப்போது உங்களுக்கு புரிந்துபோய் இருக்கும் இன்னும் யார் இங்கு ஜாதியை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

Why do India's Dalits hate Gandhi?

Why I Am Not a Hindu


Gandhi's Support of Apartheid
Indeed the practice of untouchability continues today with all its horrors, especially in Aryan Vaishnavite areas [ Pract ]. The great Gandhi, for all the propaganda surrounding his name, did not abolish untouchability. Ambedkar, the `Father of the Indian Constitution' and greatest leader of the Black Untouchables (Dalits and Adivasis), has written about Gandhi's policy of subjugating the Untouchables,

" Hinduism is a veritable chamber of horrors. The sanctity and infallibility of the Vedas, Smritis and Shastras, the iron law of caste, the heartless law of karma and the senseless law of status by birth are to the Untouchables veritable instruments of torture which Hinduism has forged against untouchables. These very instruments which have mutilated; blasted and blighted the lives of the Untouchables are to be found intact and untarnished in the bosom of Gandhism."
-- [ Ambed ] [ Gandhi_U ] [ Fame ]

Gandhi was a staunch follower of the Brahminist caste system :

" Supporting the caste system he [ Gandhi ] said: "I believe that caste has saved Hinduism from disintegration." He also said, "To destroy the caste system and adopt the Western European social system means that Hindus must give up the principle of hereditary occupation, which is the soul of the caste system. The hereditary principle is an eternal principle. To change it is to create disorder." [ Faz, p.68 ]
-- [ Gandhi_U ]

The greatest crime committed by Gandhi against the Black Race was to deny the Black Untouchables of India separate electorates and sabotaging the plan to emancipiate Untouchables :

" In the Round Table Conference held in 1932, the then British Government accepted the demand of the Dalits for separate electorate. The basis of that demand was the fact that the Dalit are not Hindu but a separate nation. Gandhi started his 'fast unto death' against that plan and sabotaged it. It was a thunderous blow to the cause of the emancipation of the Dalit."
-- [ Gandhi_U ]

Indeed, Gandhi displayed a marked bias against the Black Untouchables :

" In 1933, he established Harijan (Dalit) Sevak Sangh for the welfare of the Untouchables (Dalits). But when there was a demand for the representation of the Untouchables on the Governing Board of the institution, he flatly refused it. He disapproved appointment of Mr. Agnibhaj, a distinguished personality, as a minister in the Congress cabinet in the Madhya Pradesh because he was from the Scheduled Caste."
-- [ Gandhi_U ]

He indeed considered the Negroid Dalit to be of an inferior race. Writing about their supposedly lower level of intelligence, he wrote,

"Majority of Harijans (Dalits) can no more understand the presentation of Christianity than my cows."
-- [ Gandhi_C, p.58 ] [ cited in Gandhi_U ]

thereby comparing the IQ of Dalits to cows !

Gandhi also never supported the Black Africans during his stay in Africa. He only stood for the Aryan `Hindus'.
" First, he specifically took up the cause of only Indians in South Africa, never the blacks who formed the overwhelming majority. In fact, during the heroic rebellion waged by the Zulus in 1906 (during which the British carried out unparalleled massacres of the Zulus), he offered his services to the British as the leader of a stretcher-bearer company. "
[ FSB.Ch.3 ]

By a supreme fate of irony, it is the Brahmins the Mahatma so supported that eventually killed him !


Varna And Caste

Politico-Economic Ideas of Mahatma Gandhi

GANDHISM

ஜாதிகள் இல்லையடிப் பாப்பான்னு பாடின பாரதி - 'சதுர் வர்ணம் மாய சிருஷ்டம்' - அதாவது நாலு வர்ணத்தையும் நான் தான் படைத்தேன் அப்படின்னு கண்ணன் சொன்னதாக உள்ள பகவத்கீதைய எப்படி தலமேல தூக்கி வச்சிக்கிட்டு ஆடி அந்த பாப்பாவுக்கு ஆப்பு வைக்கின்றார் என்று பாருங்கள்

 
At 1:48 PM, Anonymous Anonymous said...

//அரசியலில் சாதி தொடர்பாக பெனாத்தல் சுரேஷ் எழுதியபோதே எழுத வேண்டுமென நினைத்தது நேரமின்மையால் தள்ளி போகின்றது, இதோ இப்போது நீங்களும் இதை பேசியுள்ளீர்கள் பார்ப்போம் எத்தனை சீக்கிரம் எழுத முடியுமென.... ஒரே ஒரு கருத்து இந்த பதிவுக்கு இது ஒரு சமத்துவபுர ஜென்டில் உமேன் பதிவு....//

இதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க. ஜாதி கட்சி,அரசியல் பத்தி கேள்வி வர இடத்திலெல்லாம், நம்ம ஆளு வந்து
"இதைப்பற்றிய எனது வரலாற்றுப்பதிவை எழுத வேண்டுமென்று நினைத்து ரொம்ப நாளாய் தள்ளி போகிறது"
அப்படின்னு ஒரு பிட்டை போட்டுட்டு காணாம போயிடுவார். ஆனா போற போக்குல ஜாதி வேண்டாம்னு சொல்றவங்க எல்லாம் சமத்துவபுர ஜென்டில்மேன், புனித பிம்பம்னு சான்றிதழ் வேற குடுத்துட்டு போவார்.

 
At 3:21 PM, Blogger -/சுடலை மாடன்/- said...

அன்புள்ள தாணு அவர்களுக்கு,

வணக்கம். நானும் பிறந்து வளந்ததெல்லாம் உங்க ஊர்ப்பக்கம்தான், உங்களுடைய பல பதிவுகள்ல வந்து மலரும் நினைவுகள்ல மயங்கிருக்கேன்.

ஆனால் பூனை கண்ண மூடிக்கிட்டு உலகம் இருட்டாயிருக்குன்னு சொல்றமாதிரி இருக்கு உங்களின் இந்தப் பதிவு.

சாதிச்சான்றிதழ் வழங்கும் முறை, அரசாங்கத்தின் குளறுபடி போன்றவற்றில் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால் பள்ளிச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் போன்றவற்றால் தான் சாதி இன்னும் உயிரோட இருக்குன்னு சொல்றது நல்லா தமாசுதான். கடந்த நூற்றாண்டில்தான் பிறப்பைப் பதிவதும், சான்றிதழ் வழங்குவதும் ஆரம்பமானது. சாதி ஆயிரம் ஆண்டுகளா இருக்கு. திருமணமும், உறவுகளும் தான் சாதிய வாழ வச்சிக்கிட்டிருக்கு. நீங்க சொல்லுகிற காதல்-கலப்புத் திருமணம்கிறது ஒரு விழுக்காடு கூட இருக்குமாங்கிறது சந்தேகம். அதுவும் சாதி தெரிந்து காதலிக்கிற ஆசாமிங்களும் கூட இருக்காங்க. சாதியில்லை, பொருளாதார அடிப்படைன்னு சொல்லுற ஒருவனாவது சாதி மீறி திருமணம் பண்ணுறானான்னா கிடையாது.

அமெரிக்கா வந்து பல்லின மக்களோட வாழும் போதும், ஊர்ல போய் சாதி, சம்பிரதாயம், சாதகம் எல்லாம் பாத்துதான் கல்யாணம் பண்றானுவ எல்லாப் பயலுவளும். அது மட்டுமல்லாமல் மற்றவங்க என்ன சாதின்னு வெளிப்படையா கேட்கப் பயந்து மறைமுகமாக கேளிவிகள் மூலம் தெரிஞ்சுக்கிறதுல ஆர்வமா இருக்காங்க. அமெரிக்க மண்ணிலும் இப்படிச் சாதிய நினச்சுக்கிட்டு, சங்கம் வச்சிக்கிட்டு இருக்கிறத நினச்சு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கவிதைங்கிற பேர்ல கீழே உள்ளத எழுதினேன். அத எழுதுறதுக்கு உந்துதலே சாதிச்சங்கத்துக்குப் போற ஒருத்தர் பள்ளிச்சான்றிதழால்தான் சாதி இன்னும் அழியலேன்னு சொன்னதுதான்.

தருமியின் பதிவுகளப் பத்தி சொன்னதும் நண்பர்களுக்கிடையேயான கிண்டலா நினைக்கிறேன்.

இறைவா நீ என்ன சாதி ?
-----------------------

மனிதனாய்ப் பிறந்தேன்...
உடையொட்டும் முன்னே
சாதியொட்டிக் கொண்டது !

பள்ளிக்கூடம் சென்றேன்...
பாடம் சொன்னது சாதியில்லையென்று,
படிப்பித்தவர் கேட்டார் நான் என்ன சாதியென்று !

கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்...
படிவம் கேட்டது என்ன சாதியென்று.
கோபம் கொண்டேன் படிவத்தின் மீது !

பின்னால் அறிந்தேன் அது பாவியில்லையென்று.
கோயில் சென்றேன், சொன்னார்கள்
நீதான் படைத்தாய் சாதியையென்று !

மறைந்த பெரியவர்களுக்கும், சாதியை
மறந்த தலைவர்களுக்கும் கூட
அடையாளம் காட்டினார்கள் சாதியுண்டென்று !

பிள்ளைமார் கூடினார்கள் வஊசியைக் கொண்டாட
நாடார்கள் சேர்ந்தார்கள் காமராஜரைப் புகழ்ந்திட
தேவர்கள் குழுமினார்கள் பசும்பொன்னரை வணங்கிட !

முதலியார்கள் உயர்த்திய திருவிகவும்
பிராமணர் உயர்த்திய பாரதியும்
சாதியைய்ச் சாடியதை ஏனோ மறந்தனர் அவர்கள் !

பங்கிட்டனர் மாவட்டங்களை பேருந்துகளை.
படித்தவர் எதிர்த்ததென்னவோ தலித்துகள்
கேட்டுப்போராடிய போது மட்டும் !

பிறந்த நாடுதான் காரணமென்றெண்ணி
பறந்தடைந்தேன் அமெரிக்க நாட்டை
சிறந்து விளங்கினேன் சாதியை மறந்தே !

பாழுமென் நாக்கு பசித்தது தமிழ் பேசாமல்.
தஞ்சம் கொண்டேன் தமிழர் கூட்டங்களில்
தாய்மொழி புசிக்கலாமென்றெண்ணி !

நலமாய்க் கேட்டனர் கேள்விகள்.
புளகாங்கித மடைந்தேன் சாதியில்லையென்று;
பின்னால் உணர்ந்தேன் கேள்வியிலும் சாதியுண்டென்று !

சைவமா அல்லது அசைவமா என்றனர்.
அசைவமென்றால் பிறப்பிலா பழக்கத்திலா ?
டும் கோழியுமா மாடும் சமைப்பேனாவென்று !

கும்பகோணமா கோயம்புத்தூரா ?
திருநெல்வேலியா திருச்சிராப்பள்ளியா ?
புரிந்துகொண்டேன் சாதிக்கூட்டங்கள் பற்றி !

எனக்கு வந்தது கவலை, நான் போற்றத்
தலைவனில்லையென் சாதிக்கு, உடனே சொல்லு
இறைவா உன் சாதியென்னவென்று !

-- சுடலை மாடன்

 
At 9:41 PM, Blogger Muthu said...

தாணு,

பாசமாவது...சாதியை பத்தி பொதுவில் பேசாமல் ஆனால் தேவைப்படற நேரம் சாதியை பாக்கறதை என்றுமே நான் கணடித்துள்ளேன்.

சாதியை பற்றி பேசாமல் எழுதாமல் இருந்து மட்டும் சாதியை ஒழிக்கமுடியாது.

குழலி சொன்ன கருத்துதான் என் கருத்து.

 
At 12:33 AM, Blogger ILA (a) இளா said...

//கண்ணிருக்கும் குருடர்கள்! ஜாதிப் பெயரை வைத்தே அரசியல் நடத்தும் வெறியர்கள் உள்ள நாட்டில் ஜாதி வேணுமா வேண்டாமா என்ற விவாதமே வெட்டியானது!!//
சுதந்திரம் வாங்கி 60 வருடம் கடந்தும் இன்னும் ஜாதிவைத்து அரசியல் நடத்துவதுதான் திறமை. இன்னும் அதை மெருகூட்டி வோட்டு வங்கியை பலப்படுத்தான் இன்னும் நினைக்கிறது அரசியல் வட்டாரம். இன்னும் ஜாதி பெயர் வைத்து அரசு சலுகைகள் பெற நினைக்கும் பணக்காரர்கள் இருக்கும் வரை இது தொடரும்.

 
At 11:42 AM, Blogger erode soms said...

சுடலைமாடன் கவிதை அற்புதம்.

 
At 3:54 AM, Blogger வஜ்ரா said...

//

Why do India's Dalits hate Gandhi?

Why I Am Not a Hindu
//

இந்த அனானியின் அனாமத்துப் பின்னூட்டத்தை வெளியிட்டதன் காரணம் என்ன? இவர் ஏதோ கிறுத்தவ மதப் போதகர் எழுதிய மதமாற்ற புத்தகத்திலிருந்து திரிப்பு வாதங்கள் எழுதிவைத்திருக்கிறார். ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்..!!

 
At 4:54 AM, Blogger Muse (# 01429798200730556938) said...

ஒரு குழுவில் இருப்பதன் மூலம் சமூக, பொருளாதார, கருத்தியல்களில் பெருமையும், வல்லமையும் பெருமையும் பெற முடியுமானால் அந்த குழுவின் உயர்வு அந்த சமுதாயத்தில் திணிக்கப்படும். இது ஜாதி, மத, இன, சமூக எனப் பலவேறாக அழைக்கப்படும் ஒரே மதிரியான நிறுவனப்படுத்தும் முயற்சிகளுக்குப் பொருந்தும். உதாரணமாக தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக தலித்துகள் இருக்கிறார்கள். தாழ்த்தப்படுகிற ஜாதிகளாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். இதில் புத்திசாலித்தனமாக தன் உயர்வை உறுதிப்படுத்திக்கொள்ள இந்த இரு எதிர்த் துருவங்களை உயர்த்தியோ, தாழ்த்தியோ தன் உயர்வை காத்துக்கொள்ளும் குழுக்களாக இடைப்பட்ட ஜாதியினர் இருக்கின்றனர்.

 
At 7:18 AM, Blogger தாணு said...

சித்தன்
கடவுள் பாதி மிருகம் பாதி ஆனவன் தானே மனிதன்

 
At 7:20 AM, Blogger தாணு said...

முகமூடி
உங்க உதாரணங்களை இப்போதுதான் `சர்க்கஸ்' பதிவில் வாசித்துவிட்டு வருகிறேன்

 
At 7:22 AM, Blogger தாணு said...

அனானி
உங்கள் சரித்திர மேற்கோள்கள் பற்றி எனக்கு தீர்க்கமான நாலேட்ஜ் இல்லாததால் அது பற்றி இப்போது விவாதிக்க முடியலை. ஆனால் உங்கள் குறிப்புகளை மேற்கோண்டு அதுபற்றி தெளிவு பெற முயல்கிறேன்

 
At 7:37 AM, Blogger தாணு said...

சுடலைமாடன்
அனுபவம் சார்ந்து அழகான கவிதை புனைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
சான்றிதழ்களால் மட்டும் ஜாதி வாழ்வதாக நான் சொல்லவில்லை. நிழல்போல் அது நம்மைத் துரத்துகிறதுன்னுதான் சொன்னேன். கலப்புத் திருமணங்கள் மூலம்தான் ஜாதியை ஒழிக்க முடியும் என்பதும் ஒரு மாயைதான். நான் சொல்லியிருப்பதுபோல் வலியோரின் ஜாதி கடைக்கப்பட்டு நலிந்தோரின் ஜாதி நசுக்கப்படும். வலியோர் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம், காதலின் தீவிரத்தைப் பொறுத்து.
இந்த பதிவு ஓடிக்கொண்டிருக்கும்போதே `கண்டதேவி தேர் விஷயம்' சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இது மாதிரியெல்லாம் வாசிக்கும் போது ஒருவித depression வந்துவிடுகிறது. வாழ்க்கையின் போராட்டங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அல்லாமல் நசுக்கப்பட வேண்டிய ஜாதிக் கொடுமைகளின் அடிப்படையில் வருகிறதே என்று.
அமெரிக்கா வந்தும் ஜாதி என்னவென்று அறிந்து கொள்ள கேட்கப்படும் நாசூக்கு பேச்சுகள் பற்றிய உங்கள் கவிதை பற்றி கணவரிடம் சொல்லியபோது சிரித்துக் கொண்டோம். உள்ளூரிலேயே எங்கள் இருவரையும் அறிந்துகொள்ளத் தலைப் படுபவர்கள் நாசூக்காக எங்கள் ஜாதி பற்றி விசாரிக்கும் கூத்துகள் அடிக்கடி நடக்கும்.

 
At 7:52 AM, Blogger தாணு said...

தமிழினி
//சாதியை பற்றி பேசாமல் எழுதாமல் இருந்து மட்டும் சாதியை ஒழிக்கமுடியாது//.
உண்மைதான்

 
At 7:54 AM, Blogger தாணு said...

இளா
பெயரை வைத்தே இன்ன ஜாதியாக இருக்குமோ என்றெல்லாம்கூட ஆராய்ச்சி நடக்கிறது!!

 
At 7:58 AM, Blogger தாணு said...

ஷங்கர்
எனக்கு வரும் பின்னூட்டங்கள் அனைத்தையுமே பப்ளிஷ் பண்ணுகிறேன், வரம்பு மீறிய வார்த்தைகள் இருப்பதைத் தவிர. மேலும் ஒத்த கருத்துடைய பின்னூட்டங்களையே பப்ளிஷ் செய்வது எப்படி ஆரோக்கியமான விவாதத்துக்கு அடிகோலும். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளாமல் கருத்துக்களின் பொருட்டு குடுமிப் பிடி சண்டை போடுவது தவறல்ல என்பது என் கருத்து.

 
At 7:59 AM, Blogger தாணு said...

Muse
வருகைக்கு நன்றி. ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறீர்கள்.

 
At 8:02 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

சுடலை மாடன், உங்க 'ஜாதிக்' கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..

நல்லா சொல்லி இருக்கீங்க :)

 
At 11:40 AM, Blogger சன்னாசி said...

//தருமியின் பதிவில் `மதம்’ பற்றி ஆரம்பித்த காரசாரமான சர்ச்சை கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஜாதி பற்றிய விவாதத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது. தருமி அவர்களுக்கு இதுபோல் சிண்டு முடிந்து களேபரத்தை வளர்த்து விடுவதில் ஏக சந்தோஷம் என்று தெரிகிறது.//

தருமியின் இந்தப் பதிவைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஜாதி குறித்த உங்கள் கருத்துக்கள் பலவற்றிலும் ஒப்புதலே. ஆனால், இதுவரையிலான உங்கள் பார்வையைக்கொண்டு இப்பதிவை அளக்கையில், இதை நீங்கள்தான் இதை எழுதியதா என்று நம்பமுடியவில்லை. அது எப்படி சிலர் எழுதினால் மட்டும் அது \'விமர்சனமாக\'ப் படுகிறது, சிலர் எழுதினால் மட்டும் அது \'சிண்டு முடிவதாக\'ப் படுகிறது? நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பதிவுகளை நானும் படித்துள்ளேன் - அதில் சிண்டு முடிவது எங்கே இருக்கிறதென்று சொல்லமுடியுமா? இதுகுறித்த விவாதங்களைப் படித்த அலுப்பில் எழுதியிருக்கிறீர்கள் என்று பார்த்தால், அடுத்து பின்னூட்டத்திலும் இதையே எழுதியுள்ளீர்கள் - ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரையில் தருமி சில பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் தலித்துகள் தங்களது பிரச்னைகளை எப்படி ஆக்கபூர்வமாகக் கையாளவேண்டுமென்று சொன்னதாகத்தான் நினைவு. அது தவிர்த்து, அந்தப் பதிவில் ஜாதி பற்றி எப்படிச் சிண்டு முடிந்திருக்கிறாரென்று சுட்டிக்காட்ட முடியுமா?

ஜாதி குறித்து நீங்கள் எழுதியுள்ளது பெரும்பாலும் சரி; ஒத்துக்கொள்கிறேன், கடைசியில் ஒரு வரியையும் சேர்த்திருக்கலாம். \'நினைத்தால் ஜாதியை மறுத்து வாழமுடியும், ஆனால் தற்போதைய சூழலில் அது என்னால் முடியாதென்று தோன்றுகிறது - இது என் குற்றமில்லை\'. அது உங்கள் குற்றமில்லை என்பதையும் முழு மனதுடன் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஜாதியை மறுத்து வாழத் திராணியில்லாதவர்களின் நழுவல் மனோபாவம், நாம் கீழ்த்தரமாகப் பார்க்கும் அரசியல்வாதிகளின் ஜாதி அரசியலைவிட எந்த விதத்திலும் குறைந்ததாகத் தோன்றாதபோது, சும்மா அரசியல்வாதிகளைமட்டும் குறைசொல்லிக்கொண்டிருப்பது ஏனென்றும்தான் கேட்கத்தோன்றுகிறது. முயற்சி செய்யாமலேயே முனகிக்கொண்டிருப்பதைவிட முயன்று தோற்பது எவ்வளவோ மேல். தோல்வி குறித்த சாத்தியப்பாட்டைத் தவிர்ப்பதும் தவறே இல்லை - ஏனெனில் அனைவரும் வெற்றியை விரும்புபவர்களே - இப்படியிருக்கையில் தவிர்ப்பதற்கு எவ்வளவு தூரம் சாக்குச் சொல்கிறார்களென்பதைவைத்துத்தான் தனிப்பட்டவர்களது கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவோ/நிராகரிக்கவோ ஆலோசிக்கவேண்டியிருக்கிறது. முதலில் தன் ஜாதியை மனத்தளவில் உதறுவதிலிருந்து தொடங்கவேண்டும், நிஜத்தில் உதறியிருந்தால் தன் முகத்துக்கு நேராய்த் தன் ஜாதி நல்லவிதமாகவோ கேவலமாகவோ விமர்சிக்கப்படும்போது அதை அங்கீகரிக்குவோ அல்லது அதற்குப் பதிலாகச் சப்பைக்கட்டு கட்டவோ உந்துதல் வராது. குறைந்தபட்சம் அதைச் செய்யக்கூடத் திராணியில்லாத பல \'அரைவேக்காட்டு ஜாதி எதிர்ப்பாளர்களை\'யும் பார்த்திருக்கிறேன், முழுதாக உதறியவர்களையும் பார்த்திருக்கிறேன் - இந்தமாதிரி \'என்ன நடக்கப்போகிறது என்ன நடக்கப்போகிறது\' என்று ஒரு defeatist attitudeஉடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களைக்குறித்துப் பேசுவது வெட்டியானதுதான், ஒத்துக்கொள்கிறேன் :-). நீங்கள் இப்போது குறைசொல்லும் \"ஜாதிப் பிரச்னைகளால் கல்லூரியில் சேர்ந்து பாதிக்கப்படுபவர்களுக்கு\" குறைந்தபட்சம் இன்னும் ஐம்பது, நூறு வருடம் கழித்தாவது வரக்கூடும் விடிவுகாலம் ஜாதிகளை ஒழித்துக்கட்டுவதைப்பற்றிப் பேசுவதால்தான் வருமே தவிர, ஒழிப்பதைப்பற்றிப் பேசுவதால் எத்தனைபேர் சிண்டு இழுபடுகிறது பார் என்று குறைபட்டுக்கொள்வதால் அல்ல. இம்மாதிரி விவாதங்கள்மூலம் அலுப்படைந்து இதை எழுதியிருக்கிறீர்கள் என்ற கோணத்தில் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் இதுமாதிரியான ஒரு விஷயம்குறித்து உங்களிடம் இதைவிட அதிகப் பக்குவத்தை எதிர்பார்த்ததால் வந்த ஏமாற்றத்தினாலும் இருக்கலாம் இந்தப் பின்னூட்டம். வழக்கம்போல ஜாதி ஒழிப்பு குறித்துப் பேசுவதெல்லாம் ஒரு வெற்று வாதம், வறட்டுக் கூச்சல், ஏட்டுச் சுரைக்காய், hollow rhetoric, என்னைப் போன்று வெளிநாட்டிலிருப்பவர்கள் எழுதினால் \'உள்ளூர் நிலவரம் உனக்கென்ன தெரியும்\' (ஏதோ இதுவரையிலான எங்கள் வாழ்க்கையில் நாங்களெல்லாம் தமிழ்நாட்டில் படித்ததேயில்லை, இட ஒதுக்கீட்டால் சிக்கலோ பயனோ அடைந்ததே இல்லை பாருங்கள் ;-)) போன்ற விமர்சனங்களும் இருந்துகொண்டேதான் இருக்கும் - இருப்பதிலும் தவறில்லை. ஏனெனில் எதிர்வினை இல்லாத எதுவும் கடைசியில் வெறுமனே ஒரு concept cult ஆகத்தான் போய் முடியும்.

என் அமெரிக்க கத்தோலிக்க நண்பனொருவன் தனது குழந்தையை இன்னும் baptize செய்யவில்லை, செய்யப்போவதும் இல்லை என்கிறான். கத்தோலிக்கர்களின் வரலாற்று, மதரீதியான கொலை, அட்டூழியங்களைக் குறித்து அறிந்திருக்கும் காரணத்தால் அவன், அவனது மனைவி இருவருக்கும் மதநம்பிக்கை குறைவு, தமது மகனை baptize செய்வதிலும் விருப்பமில்லை. ஏன் உன் மூதாதையர் அனைவரும் கத்தோலிக்கர், நீயும் கத்தோலிக்கர், உன் மனைவியும் கத்தோலிக்கர் - இப்போது மதநம்பிக்கை இல்லையென்று சொல்கிறாயே என்று குத்தலாகக் கிண்டலாகக் கேட்கலாம் - அக்கேள்வியில் ஏதேனும் குறைந்தபட்ச அடிப்படை இருக்கிறதா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் - நமது ஊரில் ஜாதி இல்லை, அதை ஒழிக்கவேண்டுமென்று நிஜமாகச் சொல்பவர்களைநோக்கியும் இதே கேவலமான அஸ்திரம்தான் வீசப்படும் - உன் அப்பாவும் அம்மாவும் ஒரே ஜாதி, பிறகு என்ன பேச்சு உனக்கு என்று. நம் ஊர் ஜாதி போல அவனுக்கும் அதே சிக்கல். அவன் இருக்கும் ஊரில் இருக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடங்களைவிட கத்தோலிக்கப் பள்ளிக்கூடம் தரத்தில் சிறந்தது. ஆனால் baptize செய்யப்படாத தன் மகனை அங்கே அனுப்பினால் அவன் மட்டும் வித்தியாசமாக உணரக்கூடும் என்பதுதான் அவனது ஒரே கவலை - கடவுள் குறித்து எதுவும் அறியாததால் தன் மகனுக்கு ஏதும் குறைந்துவிடும் என்பதனால் அல்ல. அதனால், சிக்கல் என்பது எல்லா ஊரிலும்தான் இருக்கிறது. அவன் கேட்கும் கேள்விகளைப் பொதுவாகவும் பொருத்திப் பார்க்கிறேன் - what higher grounds of morality a religious guy can have compared to me? I don\'t kill anybody, I don\'t run over animals with my car, and I cannot ape those around me just by blindly following the rituals which I neither understand nor care to understand - half of them don\'t even know why they are doing it என்கிறான். மதம் என்பது ஒரு வைரஸ் போல, தன்னைத்தானே பெருக்கிக்கொள்வதுதான் அதன் ஒரே நோக்கம் என்கிறான் - அவன் கத்தோலிக்கனாயிருக்கக் காரணம் அவனது மூதாதையர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாயிருப்பதுதானென்பதையும் புரிந்து வைத்திருக்கிறான். கருச்சிதைவு செய்துகொள்வதுகுறித்துத் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை, ஓரினச்சேர்க்கையாளர்களை அங்கீகரிக்கிறான், சுருக்கமாகச் சொன்னால் ஒரு extreme left libertarian mindset உள்ள ஒரு கத்தோலிக்கன். இதேபோன்றவர்கள் நம் ஊரிலும் அனைத்து மதங்களிலும் ஜாதிகளிலும் உண்டு - ஜாதி குறித்துப் பேசுபவர்கள், செயல்படுபவர்களும் உண்டு; எங்கே போனாலும் இதுபோன்ற ஆசாமிகள் சிறுபான்மையினரே. கருத்துக்களைச் சொல்வதுமட்டுமன்றி தன் குழப்பங்களையும் வெளிப்படையாக அலசும் எவனொருவனுக்கும் இதே கதிதான் - முதலில் அப்படிப்பட்டவனது \'கருத்து குறித்த திடமின்மை\' கேள்விக்குட்படுத்தப்படும் (இராக் போரில் புஷ்ஷைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அமெரிக்கர்களைப்பற்றிக் கிண்டலாகச் சொன்ன ஒரு கார்ட்டூனில் பார்த்த மாதிரி - I don\'t care where to, but I just want to be led என்று - குறைந்தபட்சம் அது மாதிரி எதையாவது ஒன்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றினாலே போதுமானது இதிலிருந்து தப்பிக்க) - அதுதான் முதல் முழங்கால் வெட்டு, அதன்பிறகு சரமாரியாகப் போட்டுத் தாக்கிவிடலாம். தருமி தனது மதம் குறித்த பதிவுகளில் தனது கருத்துக்கள் உட்படத் தனது சந்தேகங்களையும் குழப்பங்களையும் சேர்த்து முன்வைத்ததுபோலத்தான் எனக்குப் படுகிறது - அவரது பல பதிவுகளின் நோக்கம் வெறுமனே சிண்டு முடிவது மட்டுமே என்று எனக்குத் தோன்றாததற்கு அதுவும் ஒரு காரணம். குறைந்தபட்சம் அதைக்கூடச் செய்யாமல், தமது செதுக்கிச் சீர்மைசெய்யப்பட்ட பிரசங்கங்களின் ஒலிபெருக்கிச் சத்தம் அனைவர் காதையும் செவிடாக்குமாறு உரத்துக் கேட்கவேண்டிய நோக்கமிருப்பின் முதலில் மறைத்தாகவேண்டியது தத்தமது கோணல்களையும் \'நிச்சயமின்மை\'களையும் திராணியின்மைகளையும் பிளவுண்ட நாக்குக்களையுமே என்பதை வெகு தெளிவாக உணர்ந்து செயல்படும் பிரசங்கிகளை (பிறர் பார்வையில் நீங்களும் நானும்கூட இந்த வரையறைக்குள் அடங்கக்கூடும்) அடையாளங்காணுவதில் உங்கள் சக்தியை ஆக்கப்பூர்வமாகச் செலவழிப்பீர்களென்று நம்புகிறேன் - இப்படிப்பட்ட ஒரு வரையறைக்குள்தான் தருமியும் வருகிறார் என்று நீங்கள் நம்புவீர்களானால், அப்போது சரி.

 
At 2:16 AM, Blogger முகமூடி said...

இந்த சுட்டியை பிடித்து சென்றால் வரும் பின்னூட்டத்தில் கடைசி பத்தி சன்னாசி பின்னூட்டத்திற்கு தொடர்ச்சியாகவோ, தொடர்ச்சியில்லாமலோ பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்...

 
At 6:58 AM, Blogger குழலி / Kuzhali said...

இந்த பதிவிற்கு தொடர்பிருப்பதால் என் பதிவின் சுட்டி இங்கே....
http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_16.html

 
At 9:15 AM, Blogger தாணு said...

//நான் இப்பதிவில் கொஞ்சம் passive role மட்டுமே எடுத்துக் கொண்டேன்; பெரும்பான்மையாக வந்த பின்னூட்டங்களுக்கு பொன்ஸ் பதில் தந்துகொண்டிருப்பதால் நான் சைட் லைன்ல உக்காந்து ‘வேடிக்கை’ பார்த்துக் கொண்டிருந்தேன்//- தருமியின் பின்னூட்டம் அவர் பதிவில். இதனால்தான் நாரதர் என்று சொன்னேன்,கிளப்பி விட்டுவிட்டு ஒதுங்கி நின்று நோட்டம் இட்டதால். அவரது கருத்துக்கள் பற்றிய கமெண்ட் அல்ல அது என்பதை அவர் நண்பர்கள் புரிந்து கொண்டால் சரி.

 
At 9:24 AM, Blogger தாணு said...

சன்னாசி
மேலே கூறிய பின்னூட்டம் உங்களுக்காகத்தான். ஜாதியைத் தவிர்த்து வாழ்வதோ அதைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதோ அவரவர் சொந்தப் பிரச்னை. அடுத்தவர்களின் ஜாதி பற்றிய பிரக்ஞை அற்று இருப்பதுதான் தெளிந்த சிந்தனை என்பது என் கருத்து. என் நண்பர்கள் தலித்தோ பார்ப்பனரோ வன்னியரோ இன்ன பிற ஜாதியோ, எனக்கு தேவையற்றது அது. என் நண்பன் என்ற உணர்வு மட்டும்போதும். வலையுலகில் மேலே உள்ள சுட்டிகளில் உள்ள விவாதங்களைப் பார்த்தபோது தனி மனித தாக்குதல்கள் ஜாதியின் அடிப்படையிலேயே போய்க் கொண்டிருப்பது நெருடுகிறது.

 
At 9:45 PM, Blogger Unknown said...

நிஜ உலகை விட வலையுலகில் தான் அதிகம் ஜாதி பற்றி பேசுகிறார்கள்:-(

 
At 4:22 AM, Blogger erode soms said...

ஜாதியில்லா சமுதாயம் சாத்தியமா!

வெளி உலகம் எப்படியோ சுமார் ஆயிரம்பேர் கூடும் ‘தமிழ்மணத்திலாவது’ சண்டையில்லா வாசம் வீசுவோமே!

நிலத்தில் நீர்நிறப்பி வைக்கப்பட்டுள்ள எல்லா தண்ணீர் குடத்திலும் வானத்து சூரியன் தனித்தனியே தெரிந்தாலும் சூரியன் என்னவோ ஒன்றுதான், அதை மூடிவைப்பதனால் ‘அது’அதற்குள் அடங்குமோ!
அதில் என்குடத்துசூரியந்தான்பெரிசு,உயர்ந்தது,தெளிவானது,
ஒளிபொருந்தியது என்று பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கு என்ன நன்மை.
மூடிய குடத்துக்குள் இல்லாதகதிரவன் போல் வறட்டுகெளரவம், வீம்பாகி மூடிய உன் இதயத்துள்ளும் ஒன்றும் இருக்காது.
அணு முதல் அண்டமெங்கும் வியாபித்திருக்கும் ஆற்றலை உனக்கு பிடித்த, நம்பிக்கைகொண்ட பெயரில், உருவத்தில் போற்றுவது,பாடுவது,பேசுவது அடுத்தவனுக்கு இடையூறின்றி
யார் மனசும்நோகாமல் செய்தால் பிரச்சணையில்லை.

மதம் மொழி சாதி எல்லாமே கும்பல்கும்பலாய் வாழ்ந்தமனிதன்
அவன் வாழ்கைவசதிக்காக உருவாக்கிக்கொண்டது.
அந்தநாள் மதம் இன்றும் மாறாமலிருக்கிறதா! பண்டைய மொழிதான் இன்றுநாம் எழுதுகிறோமா!பேசத்தான் செய்கிறோமா! இல்லையல்லவா அதேபோல் சாதியென்ன எல்லாமே மாறிப்போகும்.
அது எப்படிமாறும்- இயற்கையாகவோ, செயற்கையாகவோ மாறும்.
நீ என்னநினைக்கிறாய் உன்மதம் உன்மொழி உன்இனம் எங்கும் பரவிநிழைக்க விரும்புகிறாய்,என் மக்களே சிறந்தோர் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் மற்றவர்கள் எல்லாம்பிறகுதான். இந்த மனிதனின் மாண்புமிகு மனப்பான்மைதான் ஆட்டத்தின் அஸ்திவாரமே! ‘ஆட்டம்முடிவில் அஸ்திக்ளின்சாரம்’

என் மதம் இல்லாமல்போய் விடும்,என் மொழி இல்லாமல் போய்விடும்- விடமாட்டேன் அதற்காக பிரச்சாரம் செய்வேன்,என்சொத்து முழுவது அதற்காக வாரிக்கொடுப்பேன்
என் ஜாதிக்காரன் மட்டும் நன்றாக இருக்க பாடுபடுவேன் என்றால் என்னசெய்ய முடியம். உனக்கு அதனால் கிடைக்கும் நிம்மதி,பேரும் புகழும் குறுகியவட்டமாய் போய்விடும், இதையே நீ பாரபச்சமின்றி எல்லோருக்கும் பயன்பட ஏதேனும்செய்தால் உண்மைஉலகம் உன்னை வாழ்த்தும்.

 
At 8:47 AM, Blogger தாணு said...

உண்மைதான் செல்வன். நானும்கூட நிஜத்தைவிட வலையில் ஜாதி பற்றி அதிகம் பேசுவதாகப் படுகிறது அதனால்தான் விவாதங்களைக் குறைத்துக் கொண்டேன்

 
At 8:48 AM, Blogger தாணு said...

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி சித்தன்

 
At 8:54 PM, Blogger -/சுடலை மாடன்/- said...

//நிஜ உலகை விட வலையுலகில் தான் அதிகம் ஜாதி பற்றி பேசுகிறார்கள்:-(//

//வெளி உலகம் எப்படியோ சுமார் ஆயிரம்பேர் கூடும் ‘தமிழ்மணத்திலாவது’ சண்டையில்லா வாசம் வீசுவோமே//

//நானும்கூட நிஜத்தைவிட வலையில் ஜாதி பற்றி அதிகம் பேசுவதாகப் படுகிறது //

மீண்டும் மீண்டும் இப்படி கேட்கப் படுவதைப் படிக்கும் பொழுதும், அதற்குப் பதில் சொல்லும் பொழுதும் என் போன்றவர்களுக்குக் கூட அலுப்பாகத்தானிருக்கிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களாக இணைய விவாதங்களில் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இருந்தாலும் விடாமல் சாதி பற்றி வெளிப்படையாக விவாதிக்கப் படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, சாதியைப் பற்றி தங்கள் வாழ்க்கையில் பெரிதும் பொருட்படுத்தாவிட்டாலும், திருமணம் செய்யும் போது மட்டும் சாதியடிப்படையில் செல்லும் படித்த நடுத்தர வர்க்கத்தினரால் விவாதிக்கப் படவேண்டும். இவர்களில் பெரும்பாலோர் சாதி பற்றி தங்களுக்கு அக்கறையில்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டே, சாதிகள் இல்லையடி என்ற பாரதி பல்லவியைப் பாடிக்கொண்டே, தங்கள் சாதியை விமர்சிக்கிறார்கள் என்று வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

சாதியைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் இவர்களுக்குச் சாட்டையடி கொடுப்பது போல வந்திருக்கும் இந்தச் செய்திக் கட்டுரையைப் படியுங்கள்.

The return of discrimination - SOME SCENES at a medical college

இதைப் படித்த பிறகும் மாணவர்களுக்கு சாதி நம்பிக்கையெல்லாம் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா என்ன?

சாதி வெளிப்படையாக விவாதிக்கவும், விமர்சிக்கவும் பட வேண்டிய ஒன்று. அது சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புவர்கள் உண்மையிலே செய்ய வேண்டிய ஒன்று. ஆனால் அதன் அடிப்படையில் விவாதம் நடக்கும் பொழுது ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் அநாகரீகமாகத் தாக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப் பட வேண்டும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

 

Post a Comment

<< Home