தற்காலிக விடைபெறல்
எனக்கு முன் எழுதிய `நட்சத்திரங்கள்’ எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தனித் தன்மையுடன் எழுதிச் சென்றார்கள். எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்தாலும் யாரோ எழுதியிருப்பது போன்ற மாயைதான் தெரிகிறது. ஆனாலும் கொடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்து தப்பிக்க முயல்வது, மதியின் விருந்தோம்பலை அவமதிப்பது போலாகிவிடும் என்பதால் என் சிறு பிள்ளைத்தனமான பதிவுகளை உங்கள்முன் சமர்ப்பித்தேன்.. வாதத்துக்குரிய விஷயங்களை அலசி வலைப்பூகளில் செம்பூக்கள் பூக்க விடாமல், மணம் வீசும் வாரமாகவே இருக்கும் பொருட்டு, நிகழ்வுகளையும் நினைவுகளையும் பற்றி மட்டுமே பேசினேன்.
அதற்கு முக்கிய காரணம், கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு சூடான விவாதத்தின் நடுவில் ஒரு பெண் வலைப்பதிவர் சார்பற்ற முறையில் சின்ன கருத்து சொன்னபோது, அவரையெல்லாம் அந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதுபோன்ற பதிலை வாசித்தேன். பெண்களுக்கு ஆழ்ந்து சிந்தித்து விவாதம் செய்யும் அறிவு இருக்கப்போவதில்லை என்ற தொனியில் பதில் சொல்லப்பட்டதாக எனக்குப் பட்டது. அதிகமாக விவாதத்தில் கலந்து கொள்ளாததால் ஒரு விஷயம் குறித்த திறனாய்வு பெண்களுக்கு இருக்காது என்று கருத்து கொள்ளப்பட்டது போலும். நிறைய விவாதங்களின் இடையே ஒரு பார்வையாளினியாக பலமுறை எட்டிப் பார்த்துள்ளேன்.
இந்த ஆண்களின் விவாதமும் அவ்வளவுதான்! எத்தனையோ விஷயங்களில் பிடித்த முயலுக்கு மூணு கால் பாணியில்தான் எல்லா விவாதங்களுமே உள்ளது. தாம் சொன்ன அர்த்தம்தான் சரியென்ற போக்கு ஓரளவு ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான், ஆனால் நியாயமே எதிர்புறம் இருந்தாலும் விதண்டா வாதத்துக்காக நாட்கணக்கில் இழுத்துச் செல்லப்பட்ட பதிவுகளையும் பார்த்தேன். Man is subjected to changes at all ages என்று எங்கேயோ வாசித்த நினைவு. மனிதனே மாறும்போது மனிதனால் கைக்கொள்ளப்படும் கருத்துக்கள் மாறலாகாதா? மாறக்கூடாது என்ற பிடிவாதத்துடனே சிலர் இருப்பதும் தெரிகிறது. சமூகம் பலதரப்பட்ட மனிதர்களின் கலவை, ஆனால் இணையம் படித்தவர்களின் பாசறை. சராசரி மனிதர்களின் பார்வையைவிட நம் பார்வை சற்றே தரம் உயர்ந்து இருக்கவேண்டுமென்பதே என் கருத்து.
என்ன, கருத்து கந்தசாமி மாதிரி உபதேசம் செய்யிறேனா? நிச்சயமா இல்லை. ஒரு புத்தகம் வாசிப்பதை விட, பத்திரிகையை அலசுவதை விட, டிவி பார்ப்பதைவிட வலைத்தளங்களில் பறந்து பறந்து படிப்பது, புது சுவையாக இருக்கிறது. இடையில் கடிபடும் சின்ன கற்கள் சில சமயங்களில் கசப்பு சுவை கூட்டிவிடுகிறதே என்ற ஆதங்கம்தான். அதனால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? (சாப்பாடு என்றவுடன் துளசி நினைவு வந்துவிட்டது. என் வாரத்தில் லீவ் வாங்கிட்டு போயிட்டதால் அவங்ககூட `கா’ விட்டுட்டேன்னு சொல்லீடுங்க புள்ளைங்களா!)
முதல் ரெண்டுமூணு பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என்னால் இயன்றவரை பதில் எழுதிக் கொண்டிருந்தேன். ப்ளாக்கருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை, பின்னூட்டங்களை யெல்லாம் ஒதுக்கி விட்டது. `கமெண்ட் மாட்ரேஷனுக்குள் சென்றால், உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மன்னிக்காவும்’ னு சளைக்காமல் கடுப்பேத்திகிட்டே இருந்தது. அதனால் சின்ன சோர்வு வந்துவிட்டதால் அடுத்த பதிவு எழுதவே மனசில்லாமல் உட்கார்ந்திருந்து, தினமும் கடைசி நிமிடங்களில்தான் போஸ்ட் பண்ணினேன்.
பரவாயில்லை, பின்னூட்டங்களின் எண்ணிக்கையை விட, நண்பர்களின் ரசிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற கவலைதான். இந்த குழப்பத்திலேயே, மற்றவர்களின் பதிவை வாசித்தாலும் பின்னூட்டம் இட முடியாமல் போய்விட்டது. தினமும் வீட்டுக்கு இரவு 12 மணிவாக்கில் போவதால், கணவரும் குழந்தைகளும்வேறு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்கள். `நான் இந்த வார நட்சத்திரமாக்கும், அதனால் கொஞ்சம் வேலை’ ன்னு சொன்னாலும், அந்த நட்சத்திரம் கான்செப்ட் என்னன்னு புரிஞ்சுக்காததால் கொஞ்சம் எரிச்சலுடன் அலைந்தார்கள். ஒருவழியா இன்னைக்கு பிள்ளைகளுக்கு `பீசா’வும், ஆத்துக்காரருக்கு அவிச்ச கடலையும் பரிமாறி ஐஸ் வைச்சாச்சு!
இந்த ஒரு வாரமும் என் அறுவையைத் தாங்கிக் கொண்ட தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி. என்மேல் நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைத்த மதி, காசி அவ்ர்களுக்கும் நன்றி. எதுவுமே எழுதி வைச்சுக்கலைங்கிறதாலே கொஞ்சம் டென்ஷன்தான். ஏதாவது வேலையில் மாட்டிகிட்டு சொதப்பிடக் கூடாதேன்னு! ஒருவழியா நேர்முகத் தேர்வு முடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கு.
மத்தவங்க மாதிரி நட்சத்திர வாரம் முடிஞ்சதும் காணாமப் போயிடுவேன்னு நினைக்காதீங்க! இனிமேல்தானே நம்ம அறுவை முழுவீச்சில் ஆரம்பிக்கப் போகுது!
அடுத்து வரப்போற நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு அறிவுரை
*முதல் பதிவு போட்டவுடனேயே போய், சொக்கார் சொந்தக்காரர், நண்பர் , நண்பரல்லாதோர் எல்லாப் பதிவிலும் போய் ஒரு அட்வர்டைஸ்மெண்ட் குடுத்திடுங்க!
*ரெண்டு நண்பர்களை stand-by ஆக ரெடி பண்ணி வைச்சுக்கோங்க, அடிக்கடி மாடரேஷனை பப்ளிஷ் பண்ண வசதியா இருக்கும்.
*பின்னூட்ட நாயகர்களையும், நாயகிகளையும் கொஞ்சம் நல்லா கவனிச்சுக்கோங்க.
*என்னோட பதிவையும் அப்பப்போ எட்டிப் பார்த்துக்கோங்க!!!!
41 Comments:
அத்தை,
எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் இடலேனாலும், எல்லாத்தியும் படிச்சேன். நல்ல வாரம்.
தாணு! உங்கள் முழு வாரத்தையும் நான் ரொம்பவே ரசித்தேன். உங்கள் பணிகளுக்கு இடையே முடிந்த அளவு கஷ்டப்பட்டு ஒவ்வொரு நாளும் பதிவு போடுவது, நீங்கள் ஒவ்வொரு பதிவை போடும் நேரத்தை பார்த்தே புரிந்து கொண்டேன். எங்களை மாதிரி சாப்ட்வேர் ஆளுங்க என்றால், கணிணியோடு தான் பொழுதே போகிறது. அதனால் எளிது. உங்களை போல டாக்டர்களுக்கு நேரம் கிடைப்பதே அரிது. அதுவும் கம்யூர்டருக்கு நேரம் கிடைப்பது ரொம்பவே கஷ்டம். இதை எல்லாம் தாண்டி, சிறப்பாகவே செய்தீர்கள்.
நான் தினமும் பதிவை படித்ததற்கு இன்னொரு காரணம், நம்ம ஊர் காரங்க என்பதாலும். அது மட்டுமே காரணம் இல்லை. என் சிவபுராணத்தை பார்த்தாலும் நான் பொதுவாக பழைய நினைவுகளை தான் பதிப்பேன். அதுவே உங்கள் பதிவில் பார்த்த போது எனக்கு ரொம்ப பிடித்துப் போனது.
என் வருகை தொடரும், நம்ம ஊர் கதைகளை கேட்பதற்கு. தொடருங்கள்.
அன்புடன்,
சிவா.
நன்றாக இருந்தது உங்களின் நட்சத்திர வாரம். உங்கள் அனுபவத்தில் சொல்ல நிறைய இருக்கிறது என்று புரிகிறது. (தனிப்பட்ட முறையில் உங்களின் கவிதை வடிவங்களை விட கட்டுரை தான் எனக்குப் பிடித்திருக்கிறது, என்னதான் நீங்கள் காவிரியின் மீது பழி போட்டாலும் :-) ).
போனால் போகிறது என்று இன்னும் ஓரிரண்டு நாள் பீட்சா அவிச்ச கடலை சலுகைக்குப் பின் தொடர்ந்து எழுதுங்கள். இந்தக் கதையும் எல்லா வீட்டிலும் இருக்கும் போல் (ஆண் பெண் பேதமின்றி :-) )
ஒவ்வொரு இடுகையும் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க என்று தோன்றுகிறது தாணு. கொஞ்சம் கொசுவத்திச்சுருள், கொஞ்சம் யதார்த்தம், கொஞ்சம் சுற்றுலா, கொஞ்சம் வாழ்க்கை என்று பல கோணங்கள் :-) இன்னும் நிறைய எழுதுங்கள் உங்கள் பதிவில்.
அருணா ஸ்ரீனிவாசன்
//டிவி பார்ப்பதைவிட வலைத்தளங்களில் பறந்து பறந்து படிப்பது, புது சுவையாக இருக்கிறது//
:)
-theevu-
வாரம் முழுதும் ஒரு டாக்டர் அவர் வேலையின் ஊடே என்ன எழுத போகிறார் என காத்திருந்து வாசித்த பதிவுகள்.மனதிற்கு இதமான வாசிப்பு அனுபவம்.உள்ளத்து வார்த்தைகளை பதிவில் பார்க்கும் போது நேரில் பேசிய அனுபவங்கள்.வாழ்த்துக்கள் நட்சத்திரமே!
//அந்த நட்சத்திரம் கான்செப்ட் என்னன்னு புரிஞ்சுக்காததால் கொஞ்சம் எரிச்சலுடன் அலைந்தார்கள்.//
ஆஹா. உங்களுக்கும் அந்த அனுபவமா? எங்கள் வீட்டின் அந்த எரிச்சல் இன்னும் குறையவில்லை. உங்களுக்காவது பீட்சாவும் அவிச்சக் கடலையும் கைக் கொடுக்கும் போல இருக்கு. நானோ இன்னும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்ன்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். :-)
மிக நன்றாய் இருந்தது உங்கள் வாரம் தாணு. எப்படிறா இப்படி எல்லாம் எழுதுறாங்கன்னு அப்பப்ப கொஞ்சம் பொறாமையாவும் இருந்துச்சு. நல்ல வாரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி. நம்ம நண்பர் தான் அடுத்த நட்சத்திரம். வழக்கமா எல்லா நட்சத்திரங்களுக்கும் என்னோட ஆதரவு இருக்கும். இந்த நண்பருக்கு முடிஞ்ச வரைக்கும் ஸ்பெஷல் ஆதரவு கொடுக்கணும். நீங்களும் அவருக்கு நிச்சயமா ஆதரவு கொடுப்பீங்கன்னு தெரியும். நீஙளும் அவரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு.
பிள்ளைகளுக்கு `பீசா’வும், ஆத்துக்காரருக்கு அவிச்ச கடலையும் பரிமாறி ஐஸ் வைச்சாச்சு!//
- so simple? பரவாயில்லையே!
சகோதரி,
உங்க நட்சத்திர பதிவுகள் அனைத்தும் படித்தேன், பின்னோட்டம் இட முடியாமல் இருந்தது. அருமையான நட்சத்திர வாரமாக அமைந்தது என்பதும் உண்மை.
இனிமேல் தொடர்ந்து படிக்க இருக்கிறேன்.
நம்ம ஊர் பதிவுகள் அதிகம் கொடுங்க.
தாணு,
//** அடுத்து வரப்போற நட்சத்திர அன்பர்களுக்கு ஒரு அறிவுரை **//
நன்றி நன்றி :-)). ஏன்னா...அடுத்தது நான் தானே.. :-)
தாமதமாகவே இன்று எல்லா பதிவுகளையும் படித்தேன்.
தாணு,
துரதிஷ்ட வசமாக இந்த வாரம் ப்ளாக்கர் சொதப்பியது .மற்ற படி உங்கள் வாரம் மிக நன்றாக இருந்தது என்பது என் எண்ணம் .உங்கள் சினிமா கிறுக்கர்கள் பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம் கடைசி வரை வரவேயில்லை என நினைக்கிறேன்.
என்ன இருந்தாலும் நம்ம ஊர் வாடை வீசியதால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது..நன்றி!
//சராசரி மனிதர்களின் பார்வையைவிட நம் பார்வை சற்றே தரம் உயர்ந்து இருக்கவேண்டுமென்பதே என் கருத்து.//
ம்ம்ம்ம் :-)))))
தாணு, இந்த வாரம் இனிய வாரமாகவே இருந்தது. உங்கள் பதிவுகளை விரும்பிப் படித்தேன். முடிந்தவரை பின்னூட்டமிட்டேன்.
கடைசி இரண்டு பதிவுகளில் பின்னூட்டம் சதி செய்து விட்டது. இல்லையென்றால் பின்னூட்டமிட்டிருப்பேன். இப்பொழுது பிரச்சனை சரியாகி விட்டது போலத் தெரிகிறது. சென்று இடுகிறேன்.
உங்களுடைய நட்சத்திர வாரத்தில் உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.
ராமநாதன்,
வாசித்திருப்பீர்கள் என்று தெரியும். ப்ளாக்கர் குழப்பத்தால் பின்னூட்டங்கள் சரிவர வராதது சின்ன ஏமாற்றம்தான்.
சிவா,
உண்மையாகவே தினமும் பதிவெழுதி போஸ்ட் பண்ணுவதற்குள் அடுத்த நாள் தொடங்கிவிடும் அபாயத்திலேயே எழுதினேன். அதனாலேயே சில பதிவுகள் சுருக்கெழுத்துப் போட்டி மாதிரி சின்ன விளக்கங்களுடன் இருக்கும்.
உங்கள் பதிவுகளை இப்போதுதான் வாசித்து முடித்தேன். எங்க வீட்டுப் பொங்கல் போலவே இருக்குது, உங்க ஸ்டைல். தேரியையும் கடலையும் விட்டால் நமக்கு வேறென்ன பொழுதுபோக்கு தேவை!
செல்வராஜ்,
கவிதை வடிவில் சொல்வது நேரமின்மையால் சட்டென்று சொல்லிச் செல்வதற்காக. கட்டுரை வடிவம் நான் கனவு கண்டுகொண்டே வடிப்பது. கவிதையில் கொஞ்சம் பொய்மை இருக்கும், எதுகை மோனை கொண்டு வருவதற்காக, கட்டுரையில் உண்மையும் யதார்த்தமும் இருக்கும் உணர்ந்து எழுதுவதால்.
அருணா,
எழுதும்போது, நிறைய விஷயங்கள் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி எழுதினேன். ஆனாலும் நினைவலைகள் கைவிலங்கைத் தகர்த்தெறிந்துவிட்டது!
தீவு,
உண்மையாகவே வலை பதிக்கத் தொடங்கிய பின் திரை நோக்குவது குறைந்து விட்டது
ஜெயக்குமார்,
எனக்குமே நான் என்ன எழுதப் போகிறேன் என்பது எழுத உட்காரும்வரை தோணுவதில்லை. இரவு பத்து மணிக்கு மேல் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துதான் தலைப்பையே யோசித்தேன்.
மதி நீண்ட நாட்களுக்கு முன்னரே கோடி காட்டியிருந்த போதே, பதிவுகளை எழுதி சேமித்து வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் எல்லா நாட்களுமே ஒரே பிரச்னைதானே! எப்படியோ தடையில்லாமல் முடித்தது எனக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது
குமரன்,
அழகா உங்க தமிழ் ஞானத்தைக் கிண்டி ஒரு கவிதை பாடிட வேண்டியதுதானே! பெண்களுக்கு பொருட்களை விடக் கணவரின் புகழ்ச்சிதான் பொக்கிஷம்!!
தருமி,
அவிச்ச கடலையைப் பத்தி அவ்வளவு சாதாரணமாக நினைச்சிடாதீங்க! எங்க கல்லூரியில் கடலை போடுதல்தான் உயர்ந்த விஷயம். கடலை போடத்தெரியாத மண்டுகளை `எண்ணெய்’ என்று சொல்லுவோம்.
பரஞ்சோதி,
பின்னூட்டம் இடாவிட்டாலும் தொடர்ந்து படித்தவர்கள் அதிகம் என்பது தெரிந்தது. நன்றி
சிவா,
நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களைக் `கவனிக்கிறேன்’. குமரன் ஏற்கனவே ரெக்கமெண்ட் பண்ணியாச்சு
ராம்கி,
பின்னூட்டங்களுக்காக இல்லாட்டியும், விமர்சனத்துக்காகவே எதிர் பார்த்தேன். பெண்ணின் சுகவீனம் கொஞ்சம் பிஸியாகி இருக்கும் என்பதால், துருவி துருவிக் கேட்கவில்லை
ஜோ,
மறுபடி ப்ளாக்கர் சரியானதும் அந்த பின்னூட்டத்தை பப்ளிஷ் பண்ணினேன், போகவில்லை, மறுபடி முயற்சிக்கிறேன்.
உங்கள் எல்லோரின் வாழ்த்துக்களும், என்னை மேலும் எழுத வைக்கும் என்று நம்புகிறேன்
உஷா,
அப்படி சொன்னது தவறா? பெண்களைக் கொஞ்சம் யோசிப்பவர்களாக் நிறையப் பேர் ஏற்றுக் கொள்வதில்லை.
என்னோட பின்னூட்டத்தக் காணோம். என்னோட பின்னூட்டத்தக் காணோம். எடுத்தவங்க தயவு செஞ்சி குடுத்துருங்க.
தாணு...என்னோட பின்னூட்டத்த என்ன செஞ்சீங்க? :-((((((((( உங்க கண்ணுலயாவது பட்டுச்சா?
தாணு
எல்லா பதிவுகளையும் படித்தேன். சில கருத்துகளில் எனக்கு மாற்றான எண்ணம் உண்டு. பிறகு எழுதுகிறேன். இன்னும் சில பதிவுகளுக்கு என் பதிவின் சுட்டிதர வேண்டும் என்றும் தோன்றியது. கடலோர பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன் சிறு வயதில். செந்தூரில் இருந்து குமரி வரை- அதை பற்ரியும் எழுத நினைத்தேன். ஆனாலும் முக்கிய வேலைகள் இருந்ததால் இப்போதைக்கு முடியவில்லை. விரிவாக பிறகு. தனி மடல் பார்த்தீர்களா? நன்றாக இருந்தது பதிவுகள் அனைத்தும். அன்புடன்
//குமரன்,
அழகா உங்க தமிழ் ஞானத்தைக் கிண்டி ஒரு கவிதை பாடிட வேண்டியதுதானே! பெண்களுக்கு பொருட்களை விடக் கணவரின் புகழ்ச்சிதான் பொக்கிஷம்!!
//
அதுவும் நடக்குது தாணு. ஆனா இன்னும் கிடைக்கும்ன்னு தெரிஞ்சதாலோ என்னவோ ஒரு கவிதையோட நிக்க மாட்டேங்குது. நாம அடிப்படையில கவிஞர்ன்னு சொல்லிக்கிற அளவுக்கு கவிதை இன்னும் கைவரலை. அதனால கொஞ்சம் இழுத்துக்கிட்டுப் போகுது. பழைய இலக்கியங்கள்ல வர்ற புனைவுகளை இந்தக் காலப் புதுமைப் பெண்கள் கிட்டப் பாட முடியுங்களா? டின்னு கட்டிட மாட்டாங்க. அதனால கொஞ்சம் அவங்களுக்கும் கொஞ்சம் குழந்தைக்குமா ஐஸ் வக்கிறது நடந்துக்கிட்டு இருக்கு. :-)
Hi i enjoyed reading ur blog.
Wld like to ask you how do you blog in tamil?! :)
ராகவன்,
உங்க பின்னூட்டம் முன்னாடியே இருக்குதே, உங்களுக்கு தெரியலையா?
எனக்கு பதில் எழுதத்தான் நேரம் கிடைக்கவில்லை.
பத்மா,
வேலைப் பளு அதிகமிருக்குமென்று நினைத்தேன். ஆனாலும், பெண்சிசுக் கொலை பற்றியும், கடைசி பதிவு பர்றியும் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்குமென்று தெரியும். எனவே ஆழமான பின்னூட்டம் எதிர்பார்த்தேன்.
மெயில் பார்த்தேன். சில பக்கங்கள் மட்டுமே ப்ரவுஸ் பண்ண நேரம் இருந்தது
குமரன்
விக்கிரமாதித்தன் மாதிரி விடாது முயற்சி பண்ணுங்க
tamil girl,
thanks for ur visit. I will send a seperate mail, about opening a blog in tamil
தாணு,
"ஆதலினால் காதல் செய்வீர்" மிகவும் யோசிக்க வைத்த பதிவு!
"சினிமாக் கிறுக்கர்கள் சபை"யில் நானெல்லாம் ஆயுட்கால உறுப்பினர்! :)
ம்ம்ம்.. அந்தக்காலத்துலயே 'கடலை'யெல்லாம் இருந்திருக்கா!!!
நல்ல பதிவுகள்! நல்லதொரு வாரம்!!
இளவஞ்சி,
கடலை எப்போதும் இருக்கும். ஆனால் கடலை வறுப்பது மட்டும் கொஞ்சம் மாடர்ன் ஆகியிருக்காம்!!
ப்லாக்கர் பிரச்சினை பண்ணியும் நாள் தவறாமல் பதிவு பின்னியதற்கு பாராட்டு. அப்புறம் பதிவு பெரிசா இருகேன்னு நெனச்சு படிகாம முதல் நாள் விட்டுடேன் (அப்புறமா படிச்சுட்டேன்). ம்ம் எப்படித்தான் முடியுதோன்னு ஒரு மல்லைப்பு வருது.
உங்க பதிவினை என்னுடைய வலையில் இனைத்து இருக்கிறேன்(கேட்காமலே, திட்டகூடாது(www.ilamurugu.com)
இளா!
போட்டோ பக்கெட் போய்ப் பார்த்தேன். நாளை டவுண்லோட் பண்ணிப் பார்க்கிறேன்.
தந்தை ஆனதற்கு வாழ்த்துக்கள்!
தாணு, உங்கள் எழுத்தும் இயல்பான நடையும் மிகவும் ரசித்தேன். எல்லோரையும் போலவே ப்ளாக்கர் தகறாரினால் முதல் பின்னூட்டம் போகவில்லை யென்றதும் பிறகு முயற்ச்சி செய்யவில்லை.
off-handஆக இத்தனை அழகான இடுகைகளை தரமுடியும் என்றால் நேரம் எடுத்துச் செய்திருந்தால் எத்தனை விதயங்களை அலசியிருப்பீர்கள் :( வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை எந்தவித சார்புமின்றி யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள்.
நீங்கள் பெண்கள் விவாத்தில் பங்கேற்க விடுவதில்லை என்று வருத்தப் பட்டீர்கள். தமிழ்மணதில் எங்கே விவாதம் ? குழாயடிச் சண்டைதான் நடக்கிறது. இங்கு உங்களைப் போன்ற அமைதியான ஆழமான கருத்துக்கள் அந்த சத்தத்தில் காணாமல் போகின்றன.
காலம் மிக தாழ்த்தினாலும் இன்றாவது என்னால் எழுத முடிந்ததே :)
மணியன்,
மிக்க நன்றி. பாராட்டுதல்களையோ பின்னூட்டங்களையோ முன்னிறுத்தி எழுதுவதில்லை என்றாலும், இது போன்ற அன்பான வாழ்த்துதல்கள் மனதுக்குள் சின்ன மத்தாப்புச் சிதறல்களை உண்டாக்குவதும் உண்மை.
Post a Comment
<< Home